அறியாத பிள்ளைகள்....

திருப்பாவை இருபத்தி எட்டாவது பாசுரத்தில் ஒரு வரி வரும்:

"அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை 
 சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே..."

கண்ணனை ஏதோதோ பேர் சொல்லி கூப்பிட்டு விட்டாளாம் ஆண்டாள். ஆதலால் அவனிடம் கோவித்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறாள்.  அதுவும் எப்படி....அறியாமல் கூப்பிட்டு விட்டாளாம்...ஆண்டாளா அறியாமல் கூப்பிட்டாள்? இல்லை கண்ணன் தான் ஆண்டாளைக் கோவித்துக் கொள்வானா?  பூமி தேவியின் அம்சமான ஆண்டாளே, கண்ணனிடம் தவறுக்கு இறைஞ்சும் போது...... சாதாரண மனிதர்களாகிய நாம், அறிந்தோ அறியாமலோ மற்றவர்களைக் காயப் படுத்திவிட்டால்,  தவறுக்கு வருந்துவது தானே முறை?

நான் வருந்தினேன்.  ஒரு முறை அல்ல...பல முறை.....போன வருடம் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டேன்.  நானாக போய் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைத்து மாட்டிக் கொண்டது போக, என்  வீடு தேடி வந்த பிரச்சனைகளிலும் (விலகத் தெரியாமல்) மாட்டிக் கொண்டேன். வெற்று மொழி காரர்களோடு வேறு.   எழுத்து என்பது என் பலம், அதுவே பல சமயங்களில் என் பலவீனம்.  அடடா....நான்கு பேர் நம் எழுத்தை புகழ்கிறார்களே என்று என் கைக்கு வந்ததை...(மற்றவர்கள் மனம் புண்படுமே என்று யோசிக்காமல்)  வந்தபடி எழுதி....அந்த பக்கத்தில் இருப்பவருக்கு மனம் புண்பட்டு போயிருக்கும்......... பின் மெதுவாய் தோன்றும் "ஐயோ...தப்பா எழுதிட்டோமே....."  தோன்றிய அடுத்த வினாடி...மனம் மன்னிப்பு கேட்பதற்கு தயாராகிவிடும்.....யார் மனதை புண்படுத்தினேனோ அவரிடம் தொலைபேசியிலோ, இல்லை மெஸேஜ் வாயிலாகவோ நான் செய்த தவறுக்கு வருந்தி....மன்னிப்பு கேட்டு....முன் இருந்தது போல் ஆகும் வரை நான் ஓயமாட்டேன்.  ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எனக்கு சண்டை போடவும், மன்னிப்பு கேட்கவுமே சரியாக இருந்தது...இதிலிருந்து "யாரிடமும் இனி சண்டை போடக் கூடாது, எக்கு தப்பாய் பேசக் கூடாது" என்ற  பாடம் நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.  மாறாக  "நாம எவ்ளோ great...ஒருத்தர்கிட்ட sorry சொல்றதே எவ்ளோ கஷ்ட்டம். நம்ம  யார் மேல தப்புனு பாக்காம, எவ்ளோ பேர் கிட்ட sorry சொன்னோம்....நம்மள போல இந்த உலகத்துல யாராவது உண்டா..." என் தலை கணம் அதிகமாகி விட்டது.   மன்னிப்பு கேட்பது எவ்வளவு கஷ்ட்டமோ, அதை விட மன்னிப்பது எவ்வளவு கஷ்ட்டம் என்று அப்பொழுது நான் உணர்ந்திருக்கவில்லை.

உணர்ந்தேன்...சீக்கிரமே உணர்ந்தேன்....அப்பொழுது தான் அணைத்த குக்கரில் முழுங்கை பட்டு பலமாய் சுட்டுக் கொண்டேன்...எதற்கோ சமையல் அறையில் வந்த கணவர் தெரியாமல் என் மீது மோதி விட சுட்டுக் கொண்டேன்....கையில் நெருப்புப் பற்றிக் கொண்டது போல் பயங்கரமான எரிச்சல்....கணவர் "ஸாரி, தெரியாம இடிச்சுட்டேன்..." என்று உடனே சொல்ல...."ஸாரி சொன்னா எரிச்சல் சரியா போயிடுமா..." என்று கோவத்தில் கத்தினேன்....அடுத்த வினாடி மனசாட்சி உயிர் பெற்றது..."சும்மா சும்மா சண்டை போட்டுட்டு எல்லார்கிட்டயும் ஸாரி சொல்றேயே...நீ ஸாரி சொல்றதனால நீ காயப் படுத்தினது எல்லாம் சரியா போயிடுமா...."  அப்பொழுது உரைத்தது....மன்னிப்பு கேட்பது விஷயமே இல்லை....பட்ட காயத்தை மறந்து, மன்னித்து மற்றவரகளை ஏற்றுக் கொள்வது தான் பெரிய விஷயம்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சொன்னார் "மன்னிப்பு கேட்கறவன் மனுஷன், மன்னிக்கறவன் பெரிய மனுஷன்...."   என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் பெரிய மனிதர்கள்...

ஆண்டாளைப் போல் நாம் தெய்வ ஸ்வரூபம் கிடையாது.  மனிதர்கள். தவறு செய்யும் மனிதர்கள்.  இயற்கையில் இருக்கும் மரங்களே நான்கு மாதங்கள் தான் குளிரில் காய்ந்து இருக்கின்றன.  வசந்த காலம்  மீண்டும் வந்ததும் துளிர் விடத் தொடங்கிவிடுகின்றன.   நம் மனமும் அப்படிதான்.  சண்டையிடும் சமயங்களில் காய்ந்து போய்விடுகிறது.  சிறிது நாட்களில்/வாரங்களில்/மாதங்களில்/வருடங்களில் எல்லாம் மறந்து  துளிர் விடத்தானே செய்கிறது.  துளிர் விடும் சமயம் சீறியதற்கு மனம் வருந்தி/ சீறியதை மன்னித்து....கூடுவோம்.

Happy Pongal.

No comments:

Post a Comment