சித்தி.....

(அன்னையர் தினம் அன்று சித்தியைப் பற்றி ஏன் எழுத வேண்டும்.  இது இரண்டாவது மனைவி சித்தியைப் பற்றி அல்ல.  சித்தப்பாவின் மனைவி சித்தி பற்றியது அல்ல.  அம்மாவின் தங்கையான சித்தியைப் பற்றியது.  ஒரு பெண்ணாய் நான் பல அவதாரங்கள்(மகள், தங்கை, மனைவி, அம்மா, மருமகள், அத்தை, மாமி, சித்தி(சித்தப்பாவின் மனைவி சித்தி), பெரியம்மா...)எடுத்தாலும், என் அக்காக்களின் குழந்தைகளுக்கு சித்தியாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறேன்.  என் குழந்தைகளை தூக்கி கொஞ்சுவதற்கு முன் என் அக்காக்களின் குழந்தைகளை தூக்கி கொஞ்சி விளையாடி களித்து இருக்கிறேன், (குழந்தை வளர்ப்பை பற்றி) கற்றும் இருக்கிறேன்.  இன்று அந்த குழந்தைகள் பெரிது பெரிதாய் வளர்ந்தன் பின்னும், "சித்தி" யாய் அவர்களுடன்  களித்த நினைவுகள் இன்றும் பசுமையாய் படர்ந்திருக்கிறது.  சித்தி என்பவள் இரண்டாவது அன்னையைப் போன்றவள். எல்லா உறவுகள் இருந்தாலும் என் குழந்தைகளுக்கு ஒரு சித்தி இல்லையே என்ற வருத்தம் எனக்கு மிக உண்டு..அதன் விளைவு தானே என்னவோ இந்த பதிவு.)

லண்டன் ஏர்ப்போர்ட்.   சென்னை செல்லும் விமானத்துக்கான"கேட்"டில் என் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தேன்.  அதே விமானத்தில் செல்வதற்காக அங்கே பல பேர் என்னைப் போல் காத்திருந்தார்கள்.  தமிழும், தெலுங்கும் மாறி மாறி என் காதில் விழுந்து கொண்டிருந்தது.  ஊர் விட்டு ஊரில், காதில் விழும் தமிழை ஆனந்தமாய் கேட்டுக் கொண்டிருக்கையில், என் பக்கத்து நாற்காலியில் ஒரு பெண் கையில் (பெண்) குழந்தையுடனும், முதுகில் பேக்பக்டுனும் வந்து அமர்ந்தாள்.  அவள் முகத்தை வைத்து தமிழா, தெலுங்கா என்று கண்டு பிடிக்க முடியவில்லை.  அந்த குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கலாம்.  அந்த பெணைப் பார்த்து புன்னகைக்க நினைக்கையில், அவள் பேக்பாகில் மும்மரமாய் எதோ தேடிக் கொண்டிருந்தாள்.  பிறகு புன்னகைத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்ட நொடியில் ,"எக்ஸ்க்யூஸ் மி..." என்று என்னை ஆங்கிலத்தில் அழைத்தாள்.  அவள் ரெஸ்ட் ரூம் போய் விட்டு வரும் வரையில் அவள் பேக்பாக்கை பார்த்துக் கொள்ள ஆங்கிலத்தினல் வேண்டினாள் .  நானும் சரி என்று தலையசைத்தேன்.  அவள் இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு அவளின் பேக்பாக்கை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.   அவள் சிறிது நேரத்தில் வந்தாள். "தேங்க் யூ..." என்றாள்.  நான் சிரித்து அந்த "தேங்யூ"வை ஏற்றுக் கொண்டேன்.  சிறிது நேரத்தில் என் மகன் என்னிடம் ஏதோ கேட்க, அதற்கு நான் பதிலளித்தேன்.

"நீங்க தமிழா..." என்றாள் அவள்.
 "ஆமாம்..."என்பது போல் தலையாட்டினேன்.
"சென்னை போறீங்களா...." என்றாள்.
 "ஆமாம்...நீங்களும் சென்னையா...." என்றேன்.
"ஆமாம்..." என்றாள்.   "சென்னைல எங்க இருக்கீங்க?"
சென்னையில் என் வீடு இருக்கும் இடத்தை சொன்னேன்.
"அங்கயா இருக்கீங்க.  என் தங்கை அங்க தான் காலேஜ் படிக்கறா..." என் வீட்டின் அருகில் இருக்கும் பிரபல கல்லூரியின் பேரை சொன்னாள்.

அதற்கு பின் ஏதோதோ பேசினோம். என் பெண் அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தது.  எங்கள் விமானத்திற்கான அழைப்பு வர, எல்லோரும் எழுந்து கொண்டோம்.  விமானத்தை அடைந்தோம்.  எங்கள் இருக்கையில் உட்கார்ந்த பிறகு அந்த பெண் எங்கிருக்கிறாள் என்று தேடினேன்.  கண்ணில் புலப்படவில்லை.  விமானம் புறப்பட்டது.  சற்று நேரத்திற்கெல்லாம் குளிர் பானம் வந்தது.  பின் உணவு வந்தது.  உணவு உண்டபின் விமானத்தின் விளக்குகள் அணைக்கபபட்டது.  என் பெண்ணும், பிள்ளையும் காதில் "ஹெட்ஃபோனை" பொறுத்திக் கொண்டு சீட்டுடன் இணைந்த டி.வி.யில் அவர்களுக்குப் பிடித்த படத்தை பார்க்க நானும் "ஹெட்ஃபோனை"பொறுத்திக் கொண்டேன்.  தமிழ் படம் ஒன்றை ஒடவிட்டேன்.  என் கண்கள் அதை பார்த்தது.  மனம் அந்த பெண்ணையும், அந்த குழந்தையையும், கல்லூரியில் படிக்கும் அந்த குழந்தையின் சித்தியையும் நினைக்கத் தொடங்கியது.

ஏனோ தெரியவில்லை, அம்மாவின் தங்கையான "சித்தி" என்கிற அழகான உறவைப் பற்றி பெரிய ப்ரஸ்தாபம் எங்கும் இல்லை.  பாட்டியையும், தாத்தாவையும், மாமாவையும், அத்தையையும் கொண்டாடும் தமிழ் உலகம் "சித்தி"யைக் கொண்டாடுவதில்லை.  இரண்டாம் தாரமான "சித்தி"யை கொடுமையாக சித்தரிக்கும் கதைகளும், நிஜங்களும், அம்மாவின் தங்கையான "சித்தி"யைப் பற்றி பேசுவது இல்லை.

ஒரு பெண்ணிற்கு  குழந்தை பிறந்து, அவள் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள்.  புதிதாய் பிறந்த குழந்தைக்கு அந்த வீட்டில் எத்தனை உறவுகள்..பாட்டி, தாத்தா, மாமா, மாமி, பெரியம்மா, பெரியப்பா,சித்தி.....அப்பப்பா.....இது அந்த குழந்தையின் அம்மா வழி சொந்தம் என்றால், அந்த குழந்தையின் அப்பா வழியிலும் அனேக சொந்தங்கள்....பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி.......

இதில் என்ன வேடிக்கை என்றால், குழந்தை பேச தொடங்கும் போது "அம்மா சொல்லு...", "அப்பா சொல்லு...." "அத்தை சொல்லு...." "மாமா சொல்லு....." "பாட்டி சொல்லு..." "தாத்தா சொல்லு....." என்று எல்லா உறவுகளையும் சொல்லித் தருவார்களே தவிர, "சித்தி சொல்லு...." என்று யாரும் சொல்லி தருவதில்லை.  அந்த "சித்தி" என்பவள் தான் அந்த குழந்தையின் உற்ற துணையாய் இருப்பவள்.

பாட்டி என்பவள் பத்திய சாப்பாட்டிலும், குழந்தை குளியலிலும் தன்னை தொலைத்திருப்பாள்.   தாத்தா அலுவலக வேலையிலும், அரசியலிலும் கவனம் செலுத்திய பின் கிடைக்கும் நேரத்தில் குழந்தையை கொஞ்சுவார்.  பெரியம்மா வேறு ஒரு வீட்டில் தன் குடும்பத்தை கவனித்த நேரம் போக இந்த குழந்தையை பார்த்து விட்டு செல்வார்.  மாமா என்பவர் சிறுவனாய் இருந்தால் தன் நண்பர்களுடன் கழித்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் குழந்தையை எட்டிப் பார்ப்பான்.  இதுவே மாமா பெரியவராக இருந்தால் குழந்தையை கொஞ்ச மாமியின் அனுமதிக்காக காத்திருப்பார்.  மாமி என்பவள் அடுத்த வீட்டு பெண்.  ஒன்றும் சொல்வதற்கில்லை.  குழந்தையின் அம்மாவோ சதா சர்வ காலமும் பாலூட்டுவதும், துணி(டயாபர்) மாற்றுவதும், தூங்குவதுமாய் இருப்பாள். இதில் குழந்தைக்கு மற்றுமொரு தாயாய், தோழியாய் இருப்பவள் சித்தி தான்.  அந்த "சித்தி" பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்துக் கொண்டிருப்பாள்.  இல்லை என்றால் வேலைக்கு செல்பவளாய் இருப்பாள்.  அழகான பருவம்.  வீட்டில் பெரியதாக வேலையோ பொறுப்போ இருக்கப் போவதில்லை அவளுக்கு.  அப்படியே இருந்தாலும் அக்காவிற்கு குழந்தை பிறந்த பிறகு அவள் உலகம் மாறி போகும்.  அவள் உலகத்தில் அந்த குழந்தைக்கு தான் முதல் இடம்.  ஏதோ அவள் அக்கா அவளுக்காகவே குழந்தை பெற்றது போல் அந்த குழந்தையை கொஞ்சுவதும், அந்த குழந்தையுடன் விளையாடுவதிலும் அவள் மனம் மகிழ்ந்து போகும்.  அவள் மனம் மட்டுமா மகிழும்? அம்மாவைப் போல் இன்னொருவர் நம் மேல் அன்பை பொழிந்து,  அரவணைத்து விளையாடுவதற்கு இருக்கிறாள்  என்று குழந்தையும் மகிழந்து போகலாம்.  ஏன் குழந்தையின் அம்மாவிற்கும் மனம் மகிழும் தான்.  தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக தன்னைப் போலவே குழந்தையைப் பார்த்துக் கொள்ள தங்கை இருக்கிறாள் என்பது பெரிய வரம்.


இந்த சித்திக்கு போட்டியாக வருபவர் குழந்தையின் தாய் மாமாவும், அத்தையும் தான்.  மாமாவின் நிலையை முன்னரே பார்த்தோம்.  அத்தையைப் பார்ப்போம்.  குழந்தையின் அப்பாவின் அக்கா/தங்கையான அத்தை என்பவளுக்கு அனேகமாக திருமணம் முடிந்து குடும்பத்துடன் இருப்பாள்.  திருமணம் ஆகவில்லை என்றால் முதலில் அண்ணன் அவர்களுடன் இருக்கவேண்டும்.  அண்ணிக்கும் அவளுக்கும் உறவு முறை நன்றாய் இருத்தல் வேண்டும்.  இதெல்லாம் சரியாக இருந்தால் அந்த குழந்தையுடன் அத்தை ஒட்டிக் கொள்வாள்.  இல்லை என்றால் அந்த குழந்தைக்கு அத்தை என்பவள் தொலை தூர தொடர்பு தான்.  எந்த வித தொடர்பாக இருந்தாலும், சித்தி வளர்த்த குழந்தையை தான் அத்தை வளர்ப்பாள்.

இந்த நினைவுகள் சென்னை வரை துணை வந்தது.  சென்னையில் தரை இறங்கி, "கஸ்ட்ம்ஸ்" "இமிக்ரேஷன்"எல்லாவற்றையும் முடித்து, பெட்டிகளை"கன்வெயர் பேல்ட்"  லிருந்து எடுத்துக் கொண்டிருக்கையில் அந்த பெண் கையில் குழந்தையுடன் பெட்டிகளை எடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது தெரிந்தது.  அவளுடைய பெட்டிகளை என் மகன் எடுத்துக் கொடுத்தான்.  பின்னர், என் "கார்ட்"டை மகனிடம் தள்ள சொல்லிவிட்டு, அவள் "கார்ட்"டை நான் தள்ளிக் கொண்டு வெளியில் வந்தேன்.

 வெளியே வந்தோம். இருள் பிரியாத விடியற் காலை நேரம். கூட்டமாய் மக்கள் தங்கள் உறவுகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருந்தனர்.

"உங்க வீட்டுலேந்து யாராவது வந்திருக்காங்களா?" அவளை கேட்டேன்.

"அதோ எங்க அப்பாவும், தங்கையும் வந்திருக்காங்க,"  என்று அவர்கள் நின்று கொண்டிருந்த திசையில் கை காட்டினாள்.  எங்களைப் பார்த்தற்கு அடையாளமாக அவள் அப்பா கையசைத்தார். இதற்குள் என் மகன், கார்ட்டுடனும் என் மகளுடனும் எங்களுக்காக வந்திருந்த எங்கள் குடும்ப்பத்தினரிடம் சென்றுவிட்டான்.

அவள் அப்பாவும், தங்கையும் இருக்கும் இடம் நோக்கி நாங்கள் செல்ல, அவள் குழந்தை திடீரென்று சந்தோஷ கூச்சலிட்டு அவள் கையிலேயே குதிக்க  தொடங்கியது.  நான் அந்த குழந்தையைப் பார்க்க,

"என் தங்கைய பாத்து தான் கத்தறா," என்று முகத்தில் பெருமை பொங்க கூறினாள் அந்த பெண்.  அவர்கள் பக்கத்தில் சென்றவுடன்  குழந்தை பெரிதாய் சிரித்துக் கொண்டு  ஒரே தாவலாய் அந்த தங்கையிடம்  தாவியது.  தாவிய குழந்தைக்கு ஆயிரம் முத்தங்களை அந்த பெண் கொடுக்க, அந்த காட்சியை நானும், அந்த குழந்தையின் அம்மாவும், குழந்தையின் தாத்தாவும் மெய் மறந்து ரசித்தோம்.  அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு என் குடும்பத்தை நோக்கி நடந்தேன்.   ஏதோ ஒரு உந்துதலின் பின்னால் திரும்பி பார்க்க, அந்த குழந்தை அதன் அம்மாவிடமும் , தாத்தாவிடமும் போக மறுத்து, "சித்தி"யை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது.

சித்தி இருக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். அக்கா இருக்கும் தங்கைகளும் தான்.

3 comments:

 1. Well said it suits me too 😊👍🏼

  ReplyDelete
 2. 100% agree....Diyah is super lucky too. Lovely post. I loved this the second most, first being Bheeshmar in ambu padukai.

  ReplyDelete
 3. இந்த பதிவை படித்து முடிக்கையில்...
  பல வருடங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியிலிருந்து வரும் "சித்தீ....." என்று சொல்லும் அன்பான குழந்தையின் சப்தம் அசரீரியாய் வந்து போகிறது...😊 😊 😊

  இப்போது புரிகிறது என் மனைவிக்கு அவளின் அக்கா குழந்தைகளின்மீது அவ்வளவு பாசம் ஏன் என்று....

  உங்களது உணர்வுகளின் தொகுப்பை எழுத்துக்களாக வடிப்பது தொடரட்டும்...

  அன்புடன்
  ஒரு ரசிகன்..😄

  ReplyDelete