நீயா நானா

 இந்தப் புகைப்படம், இந்த பதிவின் தலைப்பு எல்லாவற்றையும் பார்த்ததுமே உங்களுக்கு தெரிந்திருக்கும்....திரு. கோபிநாத் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்தார் என்றும்,  இங்கு "நீயா, நானா" நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் என்றும்.....ஆனால் அதில் நான் கலந்து கொண்டேன் (அஹம்.....அஹம்....).என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
என் வாழ்க்கையில் மைக் பிடித்து பேசிய அனுபவம் இருந்தாலும், பட்டிமன்றம் போன்று ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.  அப்படி இருக்கையில் நீயா நானாவில் எந்த தைரியத்தில் கலந்து கொண்டேன் என்று கேட்பவர்களுக்கு.....நீயா நானா அடிக்கடி பார்த்ததில்,  திரு. கோபிநாத் அவர்கள் மிகவும் தெரிந்தவர் ஆகிவிட்ட படியால், தெரிந்தவருடன் பேச என்ன தயக்கம் என்று முன் பின் யோசிக்காமல் கலந்து கொண்டு விட்டேன்.

முதல் படி கலந்து கொள்வது.  இரண்டாவது படி- கொடுத்த தலைப்பிற்கு  (தலைப்பு:  அமெரிக்க வாழ்க்கையில் அதிகம் அவதிப்படுவது பெற்றோர்களா? பிள்ளைகளா?  நான் பெற்றோர் பக்கம் எடுத்துக் கொண்டேன்) நம்மை தயார் செய்து கொள்வது.  ஆறறிவு உள்ள எவரும் செய்யும் செயல் இது.  எனக்கு கூடுதலாய் ஒரு அறிவு இருக்கிறது. ஏழாம் அறிவு....யூஸ்லெஸ் அறிவு.  அது என்னை தயார் செய்ய விடாமல் தாறுமாறாய் கேலி செய்து கொண்டிருந்தது.."நீயா நானாக்கு ப்ரிப்பேர் பண்ணிண்டு போற.  இவ்ளோ நாளா எழுதற உனக்கு பேச தெரியாதா...." எழுதுகிற பலருக்கு பேச தெரிந்திருக்கும்.  எனக்கு பேச தெரியாது என்று என் ஏழாம் அறிவுக்கு தெரியவில்லை.  அது சீண்டியதின் பெயரில், கொடுத்த தலைப்பைப் பற்றி சிந்திக்காமல் இருந்துவிட்டேன். 

அந்த நாளும் வந்தது.  வாஷிங்க்டன் டி.சி. தமிழ் சங்கம் நடத்திய் சித்திரை திருவிழாவின் ஒரு அங்கம்  "நீயா, நானா."   தோழிகளுடன் backstageஇல் உட்கார்ந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, திரு.கோபிநாத் அவர்கள் எந்த வித ஆராவரமும் இல்லாமல் மிக அமைதியாக வந்தார்.  "கேக்கறவன் கேனையா இருந்தா கோட்டு போட்டவன் எல்லாம் கோபிநாத்துனு சொல்லிடுவீங்க" என்ற சொல்லை பொய்யாக்கும் வகையில் அவரின் அடையாளமான "கோட்" இல்லாமல் வந்தார். "celebrity" என்ற பந்தா இல்லாமல்,   ஏதோ ரொம்ப நாள் பழகிய மனிதர் போல் சகஜமாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.  அங்கிருந்தவர்கள் திரு.கோபிநாத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க நான் மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை.  காரணம்...கொழுப்பு, திமிர், அகங்காரம்....என்ன வேண்டுமானாலும் பெயர் சூட்டிக் கொள்ளலாம்.  நாம் என்ன அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்வது, அவர் நம்மை தேடி வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காலம் விரைவில் வரும்.....(அதான் சொன்னேனே......கொழுப்பு, திமிர், அகங்காரம்) என்று விட்டுவிட்டேன்.  பின் ஒவ்வொருவராய் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் பற்றி சொல்ல, peer pressure ஆகிவிட்டது.  எனக்கு தோதாக திரு. கோபிநாத் அவர்களும் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க,  புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.  எடுத்த புகைப்படம் வெளிச்சம் இல்லாமல் கருப்பாய் இருப்பதைப் பற்றி கவலைப் படாமல் இருந்த நான், facebookல் மற்றவர்கள் திரு. கோபிநாத்துடன் எடுத்த புகைப்படத்தைப் பார்த்து டென்ஷன் ஆகிவிட்டேன்.  அவர்கள் புகைப்படங்கள் எல்லாம் பளிச்சென்று இருக்க, என் புகைப்படம் மட்டும் கருப்பாய்.... நமக்கு புகைப்படம் எடுக்க கிடைத்தது ஒரு celebrity....அதுவும் இப்படி....சரி விடுங்கள்....அடுத்த முறை திரு. கோபிநாத் வரும் பொழுது ஆயிரம் வாட்ஸ் விளக்கு வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்வோம்.  கதைக்கு வருவோம்.  

மேடை நீயா நானவிற்கு தயாராகிக் கொண்டிருந்ததது.  இரண்டு பக்கமும் நாற்காலிகள் போடப்பட்டு இரண்டு அணியில் பங்கு பெறுபவர்களும் உட்கார்ந்து  பேசிக் கொண்டிருக்க, திரு. கோபிநாத் அவர்கள் backstageஇல் அமைதியாய் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  இந்த புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்று அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.  ஒரு வழியாக மேடை தயாராக, திரு. கோபிநாத் அவர்கள் மேடைக்கு வந்தார். திரை மெல்ல விலக, திரு. கோபிநாத்தைக் கண்டவுடன், மேடையில் கீழ் அமர்ந்திருந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைத்தட்டி ஆரவாரக் கூச்சலிட்டனர்.  அவர்கள் அமைதியான பின் திரு. கோபிநாத் அவர்கள் பேச தொடங்கினார்.  அவர் பேசிய ஒவ்வொரு சொல்லுக்கும் சிரிப்பொலி காதை பிளந்தது.  அன்று  மக்களை சிரிக்க வைப்பதையே அவர் நோக்கமாக கொண்டிருந்தார் போலும்.  அதுவும் சரிதான்.  எல்லா வேலையும் விட்டுவிட்டு ஒரு ஞாயிறு மாலைப் பொழதை கழிக்க மக்கள் வந்திருக்கும் போது அவர்களை சிரிக்க வைப்பதை விட வேறு  எது செய்தாலும் அது சரியாக இருந்திருக்காது.  

சந்திரமுகி படத்தில்   "கங்கா சந்திரமுகியாக மாறினாள்" என்று ஒரு வசனம் வரும்.  அதே போல் அமைதியாக இருந்த திரு. கோபிநாத் "நீயா நானா" கோபிநாத் ஆக மாறியதை நாங்கள் எல்லாம் கண்டோம்.   என்ன பேச்சு, என்ன பேச்சு.....கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவராய் பேச, அவர்களின் பேச்சை பொய்யாக்கும் விதத்தில், நகைச்சுவை கலந்து திரு. கோபிநாத்  எதிர்த்துப் பேச, வந்திருந்த மக்களுக்கு சிரிப்போ சிரிப்பு....கலந்து கொண்டவர்களுக்கு சிரிப்புடன் கூட  பல்போ...பல்பு... தட்டுத் தடுமாறி எனக்கு பேச வாய்ப்புக் கிடைத்தபோது, மைக் ஒழுங்காக பிடித்துக் கொள்ளாமல் இருந்ததற்கு ஒரு கிண்டல்....பிறகு நான் பேசி முடித்ததும்.....மொத்தமாக whack-a-mole போல் அடித்து நொறுக்கி விட்டார்.   அதை நினைத்து மனதிற்குள் விழுந்து விழுந்து சிரித்தது வேறு விஷயம்.  இப்படியாக எல்லோரையும் அவர் counter attack பண்ணிக் கொண்டிருக்க, நான் என் பக்கத்தில் இருப்பவருடன் பேசிக் கொண்டிருக்க....திடீரென்று "சுஜாதா..." என்று அவர் சொல்ல....என்னை அவருக்கு தெரிந்திருக்கிறதே என்று சந்தோஷமாக வானில் இறக்கை விரித்துப் பறக்க நினைக்கையில் தான் தெரிந்தது, அவர் எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி ஏதோ கூறினார் என்று....கவுத்துட்டியே தலைவா....

இந்த முறை பல்பு வாங்கினோம், இரண்டாவது முறை பல்பு வாங்கக் கூடாது என்று தீவிரமாக நான் தீர்மானித்த நிலையில், நேரமின்மை காரணமாக நீயா நானா அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டது.   ஆக நான் பேசினது ஒரு நிமிடமோ இரண்டு நிமிடமோ மட்டும் தான்.  இப்படி இருக்கையில் நான் என்ன செய்து இருக்க வேண்டும்...இந்த (வெளிச்சமில்லா) புகைப்படத்தை யாருக்கும் அனுப்பி இருக்கக் கூடாது.  அப்படி செய்யாமல் என் உறவுக்கும், நட்புக்கும் அனுப்ப....அவர்கள் எல்லோரும் நீயா, நானாவில் நான் பேசி கலக்கியதாய் நினைத்துக் கொண்டு....வீடியோ ரெக்கார்ட்டிங் கேட்க....சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டேன்.....இந்த ஒரு நிமிடம் பேசியதற்கு இவ்வளவு பெரிய பதிவா....என்று கேட்பார்களுக்கு....ஹி.....ஹி.....ஹி.......

இந்த வாரம் ஞாயிறு அன்று தொலைக்காட்சியில்  நடைப்பெற்ற நீயா நானாவைப் பார்க்கலாம் என்று நேற்று ,தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, திரு. கோபிநாத் அவர்களைப் பார்த்ததும் நான் வாயடைத்துப் போனேன்.  இவரையா நாம் பார்த்தோம், இவருடனா பேசினோம்,  இவருடனா நீயா நானாவில் கலந்து கொண்டு பல்பு வாங்கினோம்.......மகிழ்ச்சி பிரவாகமாக ஓட......இதில் ஒரு நொடி பேசினால் என்ன, ஒரு நிமிடம் பேசினால் என்ன, ஒரு மணி நேரம் பேசினால் என்ன....கேட்டவர்களுக்கு விரைவில் வீடியோ அனுப்பி வைக்கப்படும்.

2 comments:

  1. சுஜி.நீ இவ்வளவு அழகாக எழுதுவாய் என்று எனக்குத் தெரியாது.Wow, keep it up...Viji Chiththappa...Jamshedpur

    ReplyDelete
  2. Sujata bulb vangitiye.... Lol....good one.... But anda dark pic layum ni bright a iruke un blog Madri...semma

    ReplyDelete