இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

அறுபது வயதில் ஜானகி  முதல் முறையாக அமெரிக்கா போனாள்.  மகனின் வற்புறுத்தல் தாங்காமலும், பேத்தியுடன் கூட இருக்க வேண்டும் என்ற ஆசையினாலும் நிபந்தனைகளுடன் அமெரிக்கா போனாள்.

அமெரிக்காவின்  பெரிய பெரிய கட்டிடங்கள் முதல், பெரிது பெரிதாய் இருக்கும் கறிகாய்கள் வரை எல்லாம் ஜானகிக்கு வியப்பாய் இருந்தது.  சர் சர் என்று பறக்கும் கார்களும், நடமாட்டம் அதிகமில்லாத சாலைகளும்  புதிதாய் இருந்தது.

அன்று மாலில் வழிந்த கூட்டம் ஜானகிக்குச் சென்னையை நினைவு படுத்தியது.

 "மெட்ராஸ்லயும் சரி, இங்க அமெரிக்காலயும் சரி  மால்ல கூட்டம் ரொம்பி வழியறது.  என்ன தான் அப்படி வாங்குவாளோ?"  என்றாள்.   அடர் நீல நிறத்தில் சிகப்பு கரை  புடவை.  நெற்றியில்
.  முக்கால் வாசி நரையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் கருப்பு .  காதுகளிலும், மூக்கிலும் சிகப்பு கல் .

"சும்மாவே கூட்டம் .  இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற.  வீக் எண்டு.  கூட்டத்துக்கு கேக்கணுமா..." என்றாள் அமிர்தா-ஜானகியின் மருமகள்.

"பாட்டி.... " ஒன்பது வயது பேத்தி அனன்யா ஜானகியின் கையைப் பிடித்து இழுத்தது.  "அங்க பாரு பாட்டி..."

 பேத்தி காட்டிய திசையில் பார்த்தாள் ஜானகி.  உயரமான அமெரிக்கர் ஒருவர் பெரிய கருப்பு கண்ணாடி அணிந்தபடி நின்றிருந்தார்.  கடலுக்கு அடியில் செல்பவர்கள் அணியும் கண்ணாடி போல் இருந்தது அவர் அணிந்திருந்த கருப்பு  கண்ணாடி .  ஆனால் அந்தக் கண்ணாடி முற்றிலும் மூடப்பட்டிருந்தது.  தலையை எல்லாக் கோணங்களிலும் அசைத்துக் கொண்டிருந்தார்.  அவருக்குப் பின்னால் மக்கள் வரிசையாக நின்றிருந்தனர்.

"என்னதுடா அருண் அங்க?"  மகனைக் கேட்டாள் ஜானகி.

அருண் திரும்பி அந்த இடத்தைப் பார்த்தான்.

"அதுவா....விர்ச்சுவல் ரியாலிட்டி.  நீ பாத்ததில்லையே.  நன்னா இருக்கும்.  அங்க போலாம் ...."

அங்கு வரிசையில் போய் நின்றார்கள்.

"இது ஒரு ஷோ மாதிரிம்மா. கண்ல போட்டுக்க ஒரு 3D கண்ணாடி குடுப்பா.....அவர் போட்டுண்டு இருக்கார் பார்..."

"கண்ணாடியா அது? கண்ணாடி கூண்டை தான் மாட்டிண்டு இருக்காரோனு நினைச்சேன்."

 "அப்டி தான் இருக்கு பாத்தா... அந்த கண்ணாடிக்குள்ளயே ஒரு சின்ன ஷோ வரும்.  நம்ம கடலுக்கு அடில மீன்களோட இருக்கற மாதிரி, இல்லாட்டா ஹிமாலயாஸ்ல இருக்கற மாதிரி, ப்ளேன் ஒட்டற மாதிரி,   நம்ம உடம்புக்குள்ள போற மாதிரி...  நீ நம்ம உடம்புக்குள்ள இருக்குற மாதிரி ஃபீல் பண்ணுவ. தலைய தூக்கி மேல பாத்தா  நம்ம ப்ரெயின் தெரியும்.  கீழ பாத்தா  கால் நரம்பு எல்லாம் தெரியும்.  லெஃப்ட்ல  நம்ம ஹார்ட் தெரியும்.  நீயும் அந்த விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிய போட்டுப் பாரு..."

"அதெல்லாம் எனக்கு பாக்கத் தெரியாதுடா....அனன்யாவ பாக்க சொல்லு."

"பாட்டி, நான் நிறைய பாத்துருக்கேன்.  நீ பாரு பாட்டி."

வரிசை முன்னேறி அவர்களுக்கான வாய்ப்பு வந்தது.   பணம் செலுத்திவிட்டு கண்ணாடியைப் பெற்றுக் கொண்டான்.

"இந்தாமா போட்டுக்கோ...." ஜானகியின் தலை வழியாகக்  கண்ணாடியை மாட்டிவிட்டான்.


இரண்டு வினாடிகளுக்குப் பிறகு ஜானகி தலையைத் தூக்கி மேலே பார்த்தாள்.  கீழே பார்த்தாள். தலையை வலப் பக்கம் திருப்பிப் பார்த்தாள். இடப் பக்கம் திருப்பிப் பார்த்தாள்.  பத்து  நிமிடங்களுக்குப் பிறகு   கண்ணாடியை தலைவழியாக கழட்டி அருணிடம் கொடுத்தாள்.  கலைந்த தலையை சரி செய்து கொண்டாள்.

"எப்படி இருந்தது பாட்டி?"

"ரொம்பப் பிரமாதமா இருந்தது அனன்யா.  முதல்ல  என்ன சுத்தி வெள்ள வெள்ளேரனு ஸ்னோ.  என் காலுக்குகீழ எல்லாம் ஸ்னோ.  தலைய தூக்கி பாத்தா மேல சூரியன். அந்த ஸ்னோல வண்டிலாம் போறது.  என் பக்கத்துல வருது.  அப்புறம் என்ன தாண்டிண்டு போறது. மனுஷா எல்லாம் இருக்கா.  ஏதோ இங்கிலிஷ்ல பேசினா. எனக்கு புரியல.  அப்புறம் திடீருனு ஒரு பெரிய ஊரு.  அங்க பெரிய பெரிய கட்டிடம்.  அந்த கட்டிடத்துக்கு மேல ஸ்னோல வந்த மனுஷா எல்லாம் நின்னுண்டு இருந்தா. எனக்கும் கட்டிடம் மேல இருக்கற மாதிரி தான் இருந்தது.  தலைய மேல தூக்கி பாத்தா கைக்கு எட்ற தூரத்துல ஏரோப்ளேன்.  கீழே பாத்தா ரோட்டுல கார் எல்லாம் போறது சின்ன சின்னதா தெரியறது.  எங்கயாவது கீழ விழுந்துடுவோம்னு பயமா கூட இருந்தது.  அப்புறம் பெரிய பாலைவனம்.  நிறைய ஒட்டகம்.  கைய நீட்டினா அந்த ஒட்டகத்த எல்லாம் பிடிக்கலாம் போல இருந்தது.  என் காலுக்கு கீழ ஒரே மணல்.  திடீர்னு காத்து அடிச்ச மாதிரி மணல் எல்லாம் பறந்தது. அப்புறம் அங்கேயும் அதே மனுஷா.  ஏதோ இங்கிலிஷ்ல பேசறா.  ஒண்ணும் புரியல.  ஆனாலும் ஒரு பத்து நிமிஷத்துல எல்லா இடத்துக்கும்...."

"டிங்டிங்டிங்...."அருணின் ஃபோன் சிணுங்கியது.  எடுத்துப் பார்த்தான்.

"அப்பா தான் மெஸேஜ்.  ஶ்ரீபெரும்புதூர் கிளம்பிண்டு இருக்காளாம்...."

"கார்த்தால ஆயிடுத்தா அங்க....நாளைக்கு உடையவர் திரு நட்சத்திரம் அதுக்கு தான் போறா.  அங்க போகாம நான் இங்க வந்து உக்கந்துண்டு இருக்கேன் பார்..." .  என்றாள்.   சற்று முன் பார்த்த காட்சிகள் அனைத்தும் மறந்து போனாள்.

"ஏம்மா கவலப் படறே? இங்க  கோவில்ல  ராமானுஜர் ஜெயந்தி க்ராண்டா பண்ணுவா.  நாளைக்கு போலாம் ."

"பாட்டி, இதுல டைனோசர் கூட இருக்கு பாட்டி.  நம்மள சுத்தி  டைனோசர்ஸ் வாக் பண்ணும். டி-ரெக்ஸ் லெளடா கத்தும்.  பாக்கறயா பாட்டி..."

"இன்னொரு நாளைக்கு பாக்கலாம் அனன்யா...." ஜானகியின் மனம் ஶ்ரீபெரும்புதூரில் இருந்தது.

அடுத்த நாள்  சனிக்கிழமை கோவிலில் இராமானுஜர் ஜயந்தி விமர்சையாக நடந்து முடிந்தது.  அங்கு வந்திருந்த ஒருவர் இராமானுஜரைப் பற்றியும், அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பற்றியும்  ஆங்கிலத்தில் பேச, மற்றொரு பெண்மணி இராமானுஜரின் வாழ்வில் இடம்பெற்ற பெண்மணிகளைப் பற்றி தமிழில் பேசினார்.

ஞாயிற்றுக் கிழமை  அருண், " அம்மா, இங்க பக்கத்துல  போட்டானிக்கல் கார்டன் இருக்கு. ஒன் அவர் தான் ஆகும் இங்கேந்து.  இன்னிக்கு அங்க போலாம்," என்றான்.

காரில் போகும் போது அனன்யா , "பாட்டி, அங்க கூட  விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ இருக்கு.  அந்தக் கண்ணாடியா போட்டுண்டா நம்ம பெரிய கார்டன்க்கு நடுல இருப்போம். நிறைய ஃப்ளவர்ஸ் இருக்கும்.  ஹனி பீஸ், பட்டர்ஃபிளைஸ் எல்லாம் நம்மள சுத்தி ஃபளை பண்ணும்...."  என்றாள்

போட்டானிக்கல் கார்டனில்  விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை மாட்டிக்கொண்டாள் ஜானகி.  பூக்களையும், தேனீக்களையும் எதிர்பார்த்திருந்தாள் .  ஆனால் அந்த கண்ணாடி திரையில் அவள் கணடது ஸ்வாமி ராமானுஜரை.    கையில் திரிதண்டம், உடம்பைச் சுற்றி முப்புரி நூல் , இடுப்பில் காஷாயம்,  அதன் மேல் உத்தரியம், பின்னால் சிகை, கண்களில் கருணை, சுற்றிலும் சிஷ்யர்கள்.....ஜானகி ஒரு  நிமிடம் ஆடிப் போனாள். கைக்கு எட்டும் தூரத்தில் ராமானுஜர்.  இத்தனை அருகில் ராமனுஜரை அவள் கண்டதில்லை.  உடம்பு சிலிர்த்தது.  கீழே விழுந்து சேவிக்காமல் இருக்கிறோமே என்று நினைத்த நேரத்தில், திரை பக்கவாட்டில் திரும்பியது.  ராமானுஜரும்,சீடர்களும். பக்கவாட்டில் தெரிந்தார்கள்.  ஜானகி வலப் பக்கம் தலையைத் திருப்ப, அங்கே ஒரு குடிசை வீடு.  கதவு இல்லை.  உள்ளே இருளாக இருந்தது.

 "இந்த வீடு ஏழை வைஷ்ணவரான வரதராஜரின் வீடு.  அவரும் அவர் மனைவி பருத்தி கொல்லை அம்மாளும் ஸ்வாமி ராமானுஜரின் பரம சிஷ்யர்கள்.  வரதராஜர்  வீட்டில் இல்லை போல் இருக்கிறது.  இருந்திருந்தால் ஸ்வாமியைக் கண்டது ஓடோடி வந்திருப்பார்.  அவர் மனைவி பருத்தி கொல்லை அம்மாள் வீட்டில் இருக்கிறாரா என்று தெரியவில்லை," என்று ஒரு சிஷ்யர் கூறிக் கொண்டிருக்க...

ராமானுஜர் "அம்மா, வரதராஜர் எங்கிருக்கிறார்?"  என்றார்.  பதில் இல்லை.

இப்பொழுது அந்தக்  குடிசை வீட்டிற்குள்  நின்று கொண்டிருந்தாள் ஜானகி.  தலையைத் தூக்கி மேலே பார்த்தாள்.  ஓலை வேய்ந்த வீடு.  காலுக்குக் கீழே மண் தரை.  அந்த அறையின் பிறை ஒன்றில் அகல் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.   பக்கத்தில் இருந்த சமையல் அறையில்  பருத்தி கொல்லை அம்மாளின் முகம் மட்டும் தெரிந்தது.  அவள் கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர்.

பருத்தி கொல்லை அம்மாள், " நம் ஆச்சார்யன் வீடு தேடி வந்திருக்கிறார். உடுத்துவதற்கு நல்ல மேல் துணி இல்லாமல் கிழிந்த மேலாடையுடன் இருக்கிறேனே.  அவரை எப்படிச் சென்று தரிசிப்பேன்?" என்றாள்.  தலையைக் குனிந்தபடி அழுதாள்.  "நான் பேசாமல் இருந்தால் நம் ஆச்சார்யன் இங்கிருந்து சென்று விடுவாரே.." யோசித்தாள்.  வேறு வழி தெரியாமல் கையைத் தட்டி ஒலி எழுப்பினாள்.

ஜானகி இப்பொழுது வெளியில் இராமானுஜர் எதிரில்  நின்று கொண்டிருந்தாள்.  பருத்தி கொல்லை அம்மாளின் கைத் தட்டல் அங்குக் கேட்டது.  ராமானுஜர் கண்களை மூடிக் கொண்டார்.  ஒரு  நிமிடம் மொளனமாய் இருந்தார்.  பின்னர் அணிந்திருத்த உத்தரியத்தைக் கழற்றினார்.  அந்த உத்தரியத்தைப் பந்தாய் சுழற்றி வீட்டிற்குள் வீசினார்.

ஜானகி இப்பொழுது குடிசை வீட்டிற்குள் நின்று கொண்டிருந்தாள்.  ராமானுஜரி உத்தரியம்  பறந்து வந்தது.  பறந்து வந்த  உத்தரியத்தை   "ஸ்வாமி" என்று கண்ணீர் விட்டபடியே பருத்தி கொல்லை அம்மாள்  பிடித்தாள். கண்ணில் ஒற்றிக் கொண்டாள். இராமானுஜர் இருக்கும் திசையைப் பார்த்து கைகூப்பினாள். உத்தரியத்தை உடுத்திக் கொண்டு வெளியில் வந்தாள்.

 பார்த்துக் கொண்டிருந்த ஜானகிக்குக்கு, திரெளபதியின்  நினைவு வந்தது.  கண்ணன் கூட திரெளபதி பல முறை கதறிய பின் தான் அவள் மானத்தைக் காத்தான்.  ஆனால் இராமானுஜரோ அந்தப் பெண் ஒன்றும் கூறாமலே அவளது மானத்தைக் காத்தார். ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பது எவ்வளவு பெரிய செயல்.  ஜானகியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

ஜானகி இப்பொழுது வெளியில் நின்று கொண்டிருந்தாள்.  பருத்தி கொல்லை அம்மாள் இராமானுஜரைக் கீழே விழுந்து சேவித்தாள்.

"ஸ்வாமி, தாங்கள் எங்கள் வீட்டிற்கு எழுந்தருள முற்பிறவியில் நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று தெரியவில்லை.  என் கணவர் வெளியில் சென்றிருக்கிறார்.  சற்று நேரத்தில் வந்து விடுவார். .  தாங்களும் தங்கள் சிஷ்யர்களும் இந்த ஏழையின் வீட்டில் அமுது செய்ய வேண்டும்."  கை கூப்பினாள்.

இராமானுஜர் தலை அசைத்துச் சம்மதித்தார்.

ஜானகி இப்பொழுது பருத்தி கொல்லை அம்மாளின் சமையல் அறையில் நின்றிருந்தாள்.  சமையல் அறை மூளியாக இருந்தது.  பாத்திரம் பண்டம் ஏதும் காணவில்லை.  பருத்தி கொல்லை அம்மாள் கவலையாய் இருந்தாள்.

"வீட்டில் ஒரு குந்துமணி நெல் கிடையாது.  அவர் உஞ்சவிருத்தி செய்து கொண்டு வரும் தானியம் இவர்களுக்கு எப்படி போதும்?  திருடுவது தகாத காரியம் என்று தெரிந்தும் திருமங்கையாழ்வார் திருடி தான் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவு அளித்தார்.  அதே போல் நானும் என் மேல் காம வசப்பட்டிருக்கும் வைசியனின்  ஆசைக்கு இசைந்து,  அவனிடமிருந்து எல்லாத் திரவியங்களையும், சமையல் பாத்திரங்களையும் பெற்று என் ஆச்சாரியனுக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் உணவளிப்பேன்."

ஜானகி இப்பொழுது வைசியன் வீட்டில் நின்று கொண்டிருந்தாள்.  பெரிய மாளிகை போல் இருந்தது வீடு.   வைசியனுக்கு எதிரில் பருத்தி கொல்லை அம்மாள் நின்று கொண்டிருந்தாள்.

வைசியன் முகத்தில் சந்தோஷத்துடன், " இது வரையில் நீ என் வீட்டிற்கு வந்ததில்லை.  என்னுடன் பேசியதில்லை.  நான் அனுப்பிய வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நீயே வந்து என் இச்சைக்குச் சம்மதித்து விட்டாய்.  நீ வேண்டியவற்றை உனக்குத் தருகிறேன்.  அவர்களுக்கு உணவளித்த பிறகு நீ இங்கு வர வேண்டும்.  உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன்."

ஜானகி இப்பொழுது பருத்தி கொல்லை அம்மாள் வீட்டில்  இருந்தாள்.  இராமானுஜர் நின்று கொண்டிருக்க அவருக்கு எதிரில் பருத்தி கொல்லை அம்மாளும், அவள் கணவரும்,  நின்று கொண்டிருக்க, அந்த வைசியன் இராமானுஜரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தான்.

திடீரென்று "அம்மா...அம்மா...."அருணும், அமிர்தாவும் கூப்பிடுவது போல் இருந்தது.  "வரேன், வரேன்..." என்றாள் ஜானகி மெள்ளமாக.

வைசியன் பேசிக் கொண்டிருந்தான்.  "ஸ்வாமி, இந்தப் பெண்ணின் மேல் ஆசைப்பட்டு பெரிய பாவம் செய்ய துணிந்தேன்.  நீங்கள் உண்ட பிறகு அந்த  மிச்சலையும், உங்கள் பாத தீர்த்தையும் இந்தப் பெண் என் வீட்டிற்கு வந்து எனக்கு அளித்தாள்.  அறிவுகெட்டுக் கிடந்த எனக்கு உங்கள் பிரஸாதத்தை உண்டதால் நல்லறிவு ஏற்பட்டுவிட்டது.  இந்த நொடி முதல் இந்தப் பெண்ணை நான் என் தாயாகவும் தந்தையாகவும் ஸ்வீகரித்துக் கொண்டு விட்டேன்.  நான் செய்த பாபங்களை மன்னித்து என்னை நல்வழிப் படுத்த வேண்டும்.  என்னை தங்களின் சிஷ்யராக ஸ்வீகரித்துக் கொள்ள வேண்டும்..."

இராமானுஜர், " உன் பாபங்களை எப்பொழுது உணர்ந்தாயோ அப்பொழுதே நீ நல்வழியில் செல்லத் தொடங்கிவிட்டாய்.  பஞ்ச சமஸ்காரங்கள் செய்து உன்னை என் சிஷ்யனாய் ஏற்றுக் கொள்கிறேன் அப்பா...." என்றார்.

அந்த வைசியன் மீண்டும் இராமானுஜரை சேவித்தான்.

"பாட்டி...." என்றது அனன்யா.  ஜானகி "ஷ்ஷ்" என்றாள்.

பின் கீழே நெடுஞ்சாண்கிடையாக சேவித்துக் கொண்டிருக்கும்  வைசியனைப் பார்த்தாள் ஜானகி.  இந்த வைசியன் இராமானுஜரின் சிஷ்யன் ஆவதற்கு எவ்வளவு பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.  தலையை நிமிர்த்தி இராமானுஜரைப் பார்த்தாள்.    காமத்திற்கு வசப்பட்டிருந்த அந்த வைசியனைத் திருத்தி, தன் சிஷ்யனாய் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றால் இராமானுஜர் எவ்வளவு கருணை உள்ளம் கொண்டவர். கண்களில் நீர் திரையிட கைகளைக் கூப்பினாள்.

"அம்மா, அம்மா..."  யாரோ அவளை அழைத்தார்கள். கண்களில் இருந்த கண்ணாடியைக் கழட்ட   நினைத்தாள்.  ஆனால் கண்களில் கண்ணாடி இல்லை.  கண்களைத் திறந்தாள்.  சுற்று முற்றும் பார்த்தாள்.  காரில் இருப்பது புரிந்தது. கார் பெரிய பார்க்கிங் லாட்டில் நின்று கொண்டிருந்தது.  டிரைவர் சீட்டில் அருண் அமர்ந்திருந்தான்.  அவளின் வலப் பக்கம் காரின் கதவைத் திறந்தபடி அமிர்தா நின்று கொண்டிருந்தாள்.  இடப் பக்கம் அனன்யா  உட்கார்ந்து கொண்டிருந்தது.

"தூங்கிட்டேங்களா அம்மா?" அமிர்தா கேட்டாள்.  கண்ணாடி போட்டுக் கொண்டு இராமானுஜரைப் பார்த்தது அனைத்தும் கனவா....ஜானகி யோசித்தாள்.

"பாட்டி....போட்டானிக்கல் கார்டன் வந்துடுத்து. வா போலாம்.." பெல்ட்டைக் கழட்டிவிட்டு அனன்யா காரிலி இருந்து இறங்கியது.  ஜானகியும் இறங்க, அவர்கள் எல்லோரும் போட்டானிக்கல் காட்டன்க்குள்  நுழைந்தார்கள்.

"பாட்டி...இங்க வா..." அனன்யா ஒரு சின்ன அறைக்குக் கூட்டிப் போனது.  அந்த அறையில் ஒரு மேஜையில் விஷுவர் ரியாலிட்டி கண்ணாடிகள் இரண்டு மூன்று இருந்தது. அந்த மேஜையின் அருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்மணியிடம் அருண் ஏதோ பேசினான்.  பின் அதிலிருந்த ஒரு கண்ணாடியை எடுத்து ஜானகியின் கண்களில் மாட்டி விட்டான்.

ஜானகிக்குக் கனவு நினைவில் வந்தது.  அந்தக் கனவை நினைத்தபடி கண்ணாடிக்குள் பார்த்தாள். பெரிய பெரிய பூக்கள் நடுவில் ஜானகி நின்றிருந்தாள் . ஆனால் இராமானுஜர் அவள் எதிரே இல்லை.  தலையைத் திருப்பி எல்லா இடங்களிலும் பார்த்தாள்.  இராமானுஜர் எங்கேயும் இல்லை. கையில் திரிதண்டம், உடம்பைச் சுற்றி முப்புரி நூல் , இடுப்பில் காஷாயம்,  அதன் மேல் உத்தரியம், பின்னால் சிகை, கண்களில் கருணையும் கூடிய இராமானுஜர் இல்லை எனக்கெதிர்,  இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிரே....ஜானகியின் கண்களில் வழிந்த  நீரை அந்தப் பெரிய கண்ணாடி மறைத்தது.