கண்ணன் வந்தான்...

"ருக்மிணி வா, பூலோகம் சென்று என் பிறந்த நாள் கொண்டாட்டங்களைக் கண்டு, உண்டு வருவோம்,"  மயில் பீலியை சரி செய்த படியே சொன்னான் கண்ணன்.

மஞ்சள் பட்டு பீதாம்பரமும், கழத்து கொள்ளா மாலைகளும், காதில் பெரிய குண்டலங்களும், எல்லாவற்றிற்கு மேலாக தோள்கள் வரை தழைந்திருக்கும் அலையான குழலும்...

"கண்ணா, உன் அலங்காரத்தைப் பார்த்தால் பிறந்த நாள் கொண்டாட்டங்களைக் காண செல்பவன் போல் இல்லையே, ஏதோ ஒரு பெண்ணை...."

"ருக்மிணி...." இடைமறித்தான் கண்ணன்.  "உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை நான் ஏறெடுத்தும் பார்ப்பேனா?  நம் திருமங்கையாழ்வார் பாட்டு உனக்கு நினைவில் இல்லையா?

"மைவண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ,
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கியாட....  "

அவர் பாடியது போல் அலங்கரித்துக் கொண்டேன். அவ்வளேவே."

"ம்..ம்...ஏதோ சொல்கிறாய். வா போவோம்,"  ருக்மிணி சொல்ல அடுத்த நிமிடம் அவர்கள் பூலோகத்தில் கால் பதித்தார்கள்.

சூரியன் மறைந்து இருட்டு பரவ தொடங்கியிருந்தது.  கடை வீதி எங்கும் கிருஷ்ணர் பொம்மைகள் விற்கப் பட்டுக் கொண்டிருந்தன.  சந்தையில் மாவிலைகளும், தோரணங்களும், நாவல் பழங்களும் கொட்டிக் கிடந்தன.  வீட்டு வாசல்களில் பெரிதாய் கோலங்களும், சின்ன சின்ன கண்ணன் பாதமும் போடப்படிருந்தன.

"பெண்களுக்கு சம உரிமை இல்லவே இல்லை,"  பெருமூச்சு விட்ட படியே சொன்னாள் ருக்மிணி.

பக்கத்தில் நின்றிருந்த ருக்மிணியைப் பார்த்தான் கண்ணன்.

"பூலோகத்தில் கால் பட்டவுடன் இங்குள்ள பெண்களைப் போல் சுதந்திரம், சம உரிமை என்று பேசுகிறாய்.  உனக்கு எதில் நான் சம உரிமை குடுக்கவில்லை?"

"பார்த்தால் தெரியவில்லை?  எல்லோரும் "கிருஷ்ண ஜெயந்தி" என்று உன் பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.  ஒரு முறையாவது  "ருக்மிணி ஜெயந்தி" என்று என் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களா?"

"ஹ..ஹ.ஹா...." கண்ணன் வாய் விட்டுச் சிரித்தான். காதின் குண்டலங்கள் முன்னும் பின்னும்  ஆடின.  கிரீடத்தில் இருந்த கற்கள் அவன் பற்களின் வெண்மை நிறத்தில் பட்டு பிரதிபலித்தது.  சில்லென்று ஒரு காத்து மக்களைத் தழுவிச் சென்றது.  எல்லோர் மனமும் ஒரு நிமிடம் துள்ளிக் குதித்தது.

"ருக்மிணி..."சிரிப்பதை நிறுத்திவிட்டு கண்ணன் பேசினான்.  "யோசித்துப் பார். கிருஷ்ண ஜெயந்தி...அருமையாய் இருக்கிறது. ஒன்றும் ப்ரச்சனை இல்லை.  ஆனால்  ருக்மிணி ஜெயந்தி...  இரு பெண்களின் பெயர்கள்.....ஒரேவாக்கியத்தில்.....இரு பெண்கள் ஒரே இடத்தில் இருப்பதே சாத்தியமில்லை எனும் போது...ஒரே வாக்கியத்தில் இரு பெண்களின் பெயர்கள். .சாத்தியமில்லை ருக்மிணி. மற்றபடி நான் உனக்கு சொந்தம். என் பிறந்த நாள் உன் பிறந்த நாள் போல்...."

கண்ணனை முறைத்தாள் ருக்மிணி.

"முறைக்காமல் என்னுடன் வா ருக்மிணி," அவள் கையைப் பற்றிக் கொண்டு நடந்தான் கண்ணன்.


சிறிது தூரம் நடப்பதற்குள் ருக்மிணி கூப்பிட்டாள்.

"கண்ணா, கீழே பார்."  கண்ணனும் பார்த்தான்.  வட்ட வடிவத்தில் மிகப் பெரிய பூ கோலம் தெருவை அடைத்துப் போடப் பட்டிருந்தது.  உலகத்தில் இருக்கு எல்லா வண்ணங்களும் அந்த கோலத்தில் காட்சியளித்தது.  அந்த கோலத்தின் ஒரு பக்கத்தில் குட்டிக் கண்ணனின் பாதங்கள் ஆரம்பித்து ஒரு வீட்டில் சென்று முடிந்தது.

"ருக்மிணி வா, இந்த வீட்டிற்கு போவோம்.  என் பிறந்த நாளை இவர்க்ள் வீட்டில் கொண்டாடுவோம்."  உள்ளே காற்றாய் நுழைந்தார்கள்

அந்த வீட்டு பூஜையறை ஊதுபத்தியின் புகையால் நிரப்பட்டிருந்தது.  ஊதுபத்தியின் சந்தன மணம் காற்றில் கலந்திருந்தது.  அந்த அறையில் மரத்தால் ஆன கோவில் மண்டபம்தரையின் மேல் வைக்கப் பட்டிருந்தது.  அந்த அலமாரியில் வெள்ளியால் ஆன குட்டி கிருஷ்ணர் தவழந்த நிலையில் வெள்ளி ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார்.  அந்த ஊஞ்சலைச் சுற்றி பூக்கள் தூவப்பட்டிருந்தன. அந்த அலமாரியின் இரண்டு புறமும் நான்கடி உயரமுள்ள இரண்டு வெள்ளி விளக்குகள் அமைதியாய் ஒளி வீசிக் கொண்டிருந்தன்.  அந்த கிருஷ்ணரின் முன், தரையில் வித விதமான தட்டுகளில், பதினொரு வகை பட்சணங்கள், ஏழு வகை பழங்கள், வெண்ணை, பால், தயிர், அவல், தண்ணீர், அக்கார அடிசில், அப்பம், வடை என எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.  அங்கே நின்றபடி அந்த வீட்டின் தலைவர் ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் மனைவியும் பக்தியுடன் அங்கே நின்று கொண்டிருந்தாள்.

"கண்ணா, எப்படி இருக்கிறது உன் பிறந்த நாள் கொண்டாட்டம்? " ருக்மிணி கேட்டாள்.

"மிக அருமை, மிக அருமை," சந்தோஷமாகக் கூறினான் கண்ணன்.  "இங்கே தான்...."

திடீரென்று வாசலில் கூச்சல். அந்த சத்தம் பூஜையறை வரை மிகத் துல்லியமாகக் கேட்டது.  என்ன வென்று பார் என்று தன் மனைவியிடம் கண்களால் ஜாடை காமித்தார் வீட்டின் தலைவர். அவர் மனைவியும் விரைந்து சென்று சிறிது நேரத்தில் வேகவேகமாக திரும்பினார். மூச்சிரைக்க பேசினாள்

" நம்ம பக்கத்தாத்து சேகர் இருக்கானே அவன போட்டு யாரோ அடிச்சுண்டுருக்கா.  நேத்துக்கி கோவில்ல யாரோ தேவையில்லாதது எல்லாம் பேசிண்டு இருந்தாளாம் சந்நிதில.  இது மாதிரிலாம் கோவில்ல  பேசக்கூடாதுனு சொன்னதுக்கு,  ஆள கூட்டிண்டு  அவன் வீடு தேடிண்டு வந்து அடிச்சுண்டுருக்கா.  கொஞ்சம் என்னனு போய் பாருங்கோ."

அவருக்கு முகம் சிவந்தது.

"சேகருக்கு எதுக்கு இந்த வேண்டாது வேலை. என்னால இப்ப போக முடியாது.  என் பூஜை முக்கியம்.   என்னவோ பண்ணிக்கட்டும். நமக்கு என்ன."

"கோவிந்தாய் நம: கேசவாய நம:...." விட்ட இடத்திலிருந்து ஸ்லோகத்தை ஆரம்பித்தார்.

கண்ணன் அந்த வீட்டை விட்டு வெளியே வர, ருக்மிணியும் கண்ணனை தொடர்ந்தாள்.  அடிபட்ட அந்த சேகரை யாரோ மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்றார்கள்.

"கண்ணா...." என்றழைத்தவளை கண்ணன் இடைமறித்தான்.

"ருக்மணி, வைஷ்ணவ ஜனதோ பாட்டு கேட்டிருக்காயா? வைஷ்ணவன் என்பவர் பிறர் துன்பங்களை தன் துன்பம் போல் நினைத்து எல்லோருக்கும் நன்மை செய்பவன்.  அப்படிப்பட்ட வைஷ்ணவன் வீட்டிலும், மனதிலும் நான் எப்பொழுதும் இருக்கிறேன் ருக்மிணி.  இப்பொழுது பார்த்தவன் போல்  பிறர் துன்பம்  கண்டு இறங்காதவன் வீட்டிலும். மனதிலும் நான் ஒரு நாளும் இருப்பதில்லை ருக்மிணி."

சொல்லிவிட்டு கிடு கிடு வென்று நடந்தான் கண்ணன்.  செய்வதறியாது அவனைத் தொடர்ந்தாள் ருக்மிணி.  அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே வந்தவள் திடீரென்று நின்றாள்.

"கண்ணா, இங்கே வா," முன்னால் சென்று கொண்டிருந்த கண்ணனைக் கூப்பிட்டாள். "அங்கே பார்.."

ஓரு கடையில் சின்னதும் பெரிதுமாய் வண்ண வண்ணமாய் காது ஜிமிக்கிகள்  கண்ணாடி பெட்டிக்குள் தொங்கிக் கொண்டிருந்தன.

"கண்ணா, உன் திருமங்கையாழ்வாரின் பாடல் இவர்களுக்கும் தெரிந்திருக்கும் போல் இருக்கிறது.   எத்தனை வித விதமான குண்டலங்கள்,"  ஆச்சரியித்துப் போனாள் ருக்மிணி.

கண்ணன் அந்த கண்ணாடி பெட்டி அருகே வந்தான்.  ஜிமிக்கிகளைப் பார்த்தான். பின் தன் குண்டலங்களைத் தொட்டுப் பார்த்தான்.

"ருக்மிணி, என் குண்டலங்களை விட இவை பெரிதாக உள்ளன. எத்தனை வண்ணங்கள். இரண்டு அடுக்கு குண்டலங்கள், மூன்று அடுக்கு குண்டலங்கள்.....அப்பப்பா..... இங்கு இருப்பவர்கள் எல்லாம் கலா ரசிகர்கள்."

ருக்மிணியின் பக்கத்தில் வந்தான்.  தன் குழலால் ருக்மிணியின் தோடுகளைத் தட்டிவிட்டான்.

"ஏன் ருக்மிணி, நீ இது போல் இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு குண்டலங்கள் போட்டுக் கொள்வதில்லை?"

"திருமங்ககையாழ்வார் கண்களுக்கு  உன் குண்டலங்கள் மட்டுமே தெரிகின்றன.  நான் போட்டுக் கொண்டாலும் என்னைப் பற்றிப் பாடுவதில்லை. அதனால் தான்......"

அந்த கடையில் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது.

"கண்ணா இந்த வீட்டிற்கு செல்வோம் வா.  இங்காவது உனக்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்போம்."  கண்ணனை இழுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றாள்.

அந்த வீட்டிலும் கிருஷ்ணர் விக்கிரகம் அலங்கரிக்பட்டிருந்தது. நிவேதனங்களும் எக்கச்சக்கமாக இருந்தது.  கூச்சலும் கூடவே இருந்தது.

"ஏங்க இந்த முறுக்க ஃபோட்டோ எடுங்க. யாருமே முறுக்கு பண்ணமாட்டா. நான் பண்ணிருக்கேன். வெல்ல சீடைய  ஃபோட்டோ எடுங்க. கலையாம எவ்வளவு சூப்பரா வந்திருக்கு பாருங்க."

அந்த மனைவி சொல்ல சொல்ல கணவன் ஃபோனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

"எல்லாரும்  போடறதுக்கு முன்னாடி ஃபேஸ்புக்குலயும், வாட்ஸ் அப்லயும் நான்  ஃபோட்டோ போட்டுடணும்.  அதுக்கப்புறம் தான் எல்லாம்." கணவரிடமிருந்த  ஃபோனை வாங்கிக் கொண்டாள்.

"ருக்மிணி போகலாம் வா," அந்த வீட்டை விட்டு வெளியே வந்தார்கள்.  "ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பிற்கு பிறகு தான் நான்.   இந்த வீட்டில் எனக்கு இடம் இல்லை."

வீட்டை விட்டு வெளியே வரவும், யாரோ ஒருவன் "நெருப்புடா" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து "நீடுழி வாழ்க" என்று செய்கை செய்தான்.

"கண்ணா, என்ன இது?"  ருக்மிணி கேட்டாள்.  "அவன் நெருப்புடா என்கிறான், நீ அவனை வாழ்த்துகிறாய்."

"ருக்மிணி, அவன் என்னை தான் கூப்பிட்டான்.  பாரதியார் பாடியிருக்காரே...
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.
அந்த தீண்டும் இனபம் தரும் நெருப்பு அடியேன் தான், ருக்மிணி."

"அடடா... மிக அருமை உன் விளக்கம்" என்று கேலி செய்தாள் ருக்மிணி.

சிறிது தூரம் நடந்த பின் ஒரு வீட்டின் முன் நின்றாள் ருக்மிணி.

"ருக்மிணி, இந்த வீடு வேண்டாம்."

"ஏன் கண்ணா?"

"இந்த வீட்டு பெண்மணி பட்சணங்கள் செய்யும் போது அவள் பிள்ளைகளையும், அவள் கணவரையும், மாமியாரையும் திட்டிக் கொண்டே பண்ணியிருக்கிறாள். அந்த திட்டு வாங்கிய பட்சணங்கள் எனக்கு வேண்டாம்."

"ஏன் திட்டமாட்டாள்?" கண்ணனைப் பார்த்தாள்.  "ஏதோ ஒன்று இரண்டு பட்சணங்கள் என்றால் பரவாயில்லை.  இத்தனை பட்சணங்கள் பண்ணால் நானும் தான் அலுப்பில் திட்டுவேன்."

"பண்ணிட்டாலும்...."

"கண்ணா...."

"மன்னித்துக் கொள் ருக்மிணி."  ருக்மிணியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.  " இங்கு வந்ததிலிருந்து வந்துட்டாலும், சொல்லிட்டாலும்...போன்ற வார்த்தைளைக் கேட்டு கேட்டு எனக்கும் அது போல் வந்துவிட்டது."

ருக்மிணி கையை விடு விடுத்துக் கொண்டாள்.

"என்ன சொல்ல வந்தேன் என்றால் வீடு நிறைய பட்சணங்கள் எனக்கு தேவையில்லை ருக்மிணி. ஒன்று செய்தாலும் என் நினைவோடு, எனக்குக் கொடுப்பதற்காக சந்தோஷமாக செய்தால் நானும் சந்தோஷப் படுகிறேன் ருக்மிணி."

"உனக்கான வீடு எங்கு இருக்கிறது என்று தெரியவில்லையே கண்ணா."

"ருக்மிணி, இந்த வீட்டிற்குச் செல்லலாம் வா," ஒரு வீட்டைக் காண்பித்துச் சொன்னான் கண்ணன். அந்த வீட்டில் விளக்குகள் எறியவில்லை. வாசலில் கோலங்கள் இல்லை.

"கண்ணா, ஒளி மயமாய் இருந்த வீடுகளிலேயே உனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இருட்டு பரவியிருக்கும் இந்த வீட்டில் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது. ஆசை யாரை விட்டது. போவோம் வா."

உள்ளே ஒரு இளம் பெண் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

"அம்மா, சும்மா அறுக்காத.  நான் இப்ப தான் ஆஃபிஸ்லேந்து வந்தேன். ஒரே டையர்டா இருக்கு. இப்ப எந்த ஸ்வீட்டும் என்னால பண்ண முடியாது.."

அந்த பக்கம் இருப்பவர் ஏதோ பேச மீண்டும் இளம் பெண் பேசினாள்.

"எங்க மாமியார் எல்லாம் பண்ணிக் குடுப்பா.  நீ இப்ப ஃபோன வை," பட்டென்று ஃபோனை வைத்துவிட்டு சோஃபாவில் படுத்துக் கொண்டாள்.

தொங்கிய முகத்துடன் கண்ணன் வெளியே வந்தான்.

"நான் தான் அப்பொழுதே  சொன்னேனே."  ருக்மிணி தன் கையால் கண்ணனின் முகத்தை நிமிரித்தினாள்.  " உனக்கு இது தேவை தான்."

"என் முகத்தை நிமிர்த்தி இதை நீ அவசியம் சொல்ல வேண்டுமா?"

"கண்ணா, நீ பிறந்து, வளர்ந்து விளையாடியது எல்லாம் எங்கோ வட தேசத்தில். உன் அவதாரம் ஒன்று கூட தெற்கில் கிடையாது.  அப்படி இருக்கையில் இங்கு உன் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவார்கள்?"

"ருக்மிணி,  நான் அவதரித்தது மட்டும் தான் வட நாட்டில்.  என்னைப் பாடிய ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் பிறந்தது இங்கே தெற்கில். மிக முக்கியமாக இராமனுஜர் பிறந்தது இங்கே தான். அவர்...." திடீரென்று பேசுவதை நிறுத்தினான்.

"ருக்மிணி, என்னை யாரோ கூப்பிடுகிறார்கள். வா யாரென்று பார்ப்போம்."

கண்ணனும், ருக்மிணியும்  குரல் வந்த வீட்டை அடைந்தார்கள். அந்த வீட்டில் சமையல் அறையில், அறுபது வயது பெண்மணி அடுப்பில் ஏதோ கிளறிக் கொண்டிருந்தாள்.

"கண்ணா,  என் பையன பாத்தயா, எப்படி கத்திட்டு போறான் பாரு," பாத்திரத்தில் பொங்கி வந்த பாலைல் கிளறிக் கொண்டே மனதில் பேசினார்.  "அவருக்கு எக்கசக்க ஷூகராம், உலகத்துலயே எனக்கு தான் பி.பீ ஜாஸ்தியாம்.  நேத்து ராத்திரி எனக்கு ஜூரம் ரொம்ப ஜாஸ்தியாயி அனத்திண்டு இருந்தேனாம்.  உடம்புல இவ்ளோ ப்ரச்சனைய வச்சுண்டு பட்சணம் பண்றேனு  உன்னையும் கஷ்ட்டப் படுத்திண்டு எங்களையும் கஷ்ட்டப் படுத்தாதேனு கத்திட்டு போயிருக்கான்." மீண்டும் பால் பொங்கி வர, கிளறினாள்.  "அவனுக்கு உடம்பு சரியாயிருக்கோ இல்லையோ, அவன் பையன் பொறந்த நாளைக்கு வீட்ட டெகரெட் பண்றது என்ன, கேக் வெட்டறது என்னனு ஒரே அமக்களப் படுத்துவான்.உன் பிறந்த நாளுக்கு எதுவும் பண்ண கூடாதாம்.   இது என்ன நியாயம்?"  மீண்டும் பொங்கிய பாலைக் கிளறினாள். " மனசு முழுக்க, பெரியாழ்வார் பாடின மாதிரி அப்பம் கலந்த சிற்றுண்டி, அக்கார அடிசில், சீடை, கருப்பு எள் உருண்டை எல்லாம் பண்ணனும்னு ஆசையிருக்கு.  உடம்பால முடியலை.  என்னால முடிஞ்சது சுண்ட காய்ச்சின பால் தான்.   நான் வேற என்ன பண்றது சொல்லு? பட்சணம் வாங்க எல்லாரும் கடைக்கு போயிருக்கா.  அவா வரதுக்குள்ள நான் பண்ணி முடிக்கணும்.  நானும் அடுப்புல் ஏதோ பண்ணேனு தெரிஞ்சுது , நீ வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா மாதிரி அவனும் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான். "  அடுப்பை அணைத்தார்.  சர்க்கரையை சேர்த்து கிளறினார்.  பாலில் கரைத்த குங்குமப்பூவையும், எலக்காய் பொடியையும்  சேர்த்து கலந்து ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் கொட்டி ஆற வைத்தார்.  "சூட, சூட நீ சாப்டுவயா? கொஞ்சம் ஆறட்டும்."  பால் ஆறுவதற்குள் பாத்திரத்தை அலம்பி, அடுப்படி மேடையை சுத்தம் செய்தார்.  விளக்கு ஏற்றி, பால் இருந்த பாத்திரத்தைக்  கையில் எடுக்கும் சமயம், "குக்க்க்குக்க்க்குக்க்கு" என்று வாசல் மணி அடித்தது.

"பகவானே, வெளில போனவா அதுக்குள்ளயுமா வந்துட்டா?" பதட்டத்துடன் எடுத்த பாத்திரத்தை அடுப்பு மேடையில் வைத்தார்.

  'யாரு?" என்று கேட்டுக் கொண்டே வாசல் கதவை திறந்தார்.

"ஐயன் மாமி, " கலைந்த தலையும், பழைய சட்டையுமாக இஸ்த்திரி செய்பவன் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் இஸ்த்திரி செய்யப்ப்டட துணிகள் அழகாய் கட்டப்பட்டு இருந்தது.

"நீ தானா?" போன உயிர் அவருக்கு திரும்பி வந்தது.  "என்னப்பா, இவ்வளவு லேட்டு?" சொல்லிக் கொண்டே துணிகளை வாங்கி சோஃபாவில் வைத்தார்.  அங்கே மேசையில் இருந்த பர்ஸ்ஸை எடுத்தாள்.

"நிறைய துணி மாமி இன்னிக்கு,"  சட்டைப் பையில்  இருந்த செல் ஃபோனை எடுத்து ஏதேதோ பட்டன்களை தட்டிக் கொண்டே பேசினான்.  "இன்னா மாமி, கிருஷ்ண ஜெயந்தி இல்ல உனக்கு?

பர்ஸ்ஸில் பணத்தைத் தேடினாள்.

"மாமி, என் பொண்ணு கூடோ கிருஷ்ண ஜயந்திக்கு என் செல் ஃபோன்ல கிருஷ்ணர் பாட்டு போட்டு குடுத்துருக்கு. யார் எனக்கு ஃபோன் பண்ணாலும் அந்த பாட்டுதான் பாடுது," பெண்ணைப் பற்றிய பெருமையை அவன் எங்கே சென்றாலும் சொல்லத் தவறுவதில்லை.

"நாளைக்கு வந்து பணம் வாங்கிக்கோ பா." பணத்தை தேடி எடுப்பதற்குள் அவர்கள் வந்துவிட்டால்....அவர்கள் வருவதற்குள் பாலை கண்ணனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும் .


"சரி தான் மாமி," செல் ஃபோனை சட்டைப் பையில் வைத்தபடியே கிளம்பினான். அவன் இரண்டு அடி வைப்பதற்குள் மாமி கூப்பிட்டார்.

"இந்தாப்பா, ஐயன். ஒரு நிமிஷம் நில்லு," சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றாள்.

"மாமி, நாளைக்கு பணம் கூடு.  ஒண்ணையும் அவசரமில்லை."

உள்ளே சென்றவள் சுண்ட காய்ச்சிய பாலைக் கண்ணன் படத்திற்கு  கை காமித்துவிட்டு, ஒரு டம்பளரில் கொட்டி கொண்டு வந்தாள்.

"இந்தாப்பா, உள்ள வா."

அவன் உள்ளே வந்தான்.

"கிருஷ்ண ஜயந்திக்கு பால் நைவேத்தியம் பண்ணேன். சாப்டுவயா?"  டம்பளரை நீட்டிய படியே கேட்டாள்.


"குடு மாமி," அவள் கையிலிருந்து டம்பளரை வாங்கிக் கொண்டான். குனிந்து அதில் இருந்த பாலை பார்த்தான்.

"இன்னா மாமி, பாலு மஞ்ச கலர்ல இருக்கு?"  தலையை உயர்த்தி வாயில் விட்டுக் கொண்டான். "மாமி சூப்பரா இருக்கு,"  மளமளவென்று மொத்த பாலையும் ஒரே மடக்கில் குடித்தான்.

"மாமி, நானும் எவ்ளோ வீட்டுக்கு போனேன். யாருமே எதுவுமே குடுக்கல. நீ தான் மாமி குடுத்த.  டேங்க்ஸ் மாமி,"  டம்பளரை தரையில் வைத்தான்.  "போய் வரேன் மாமி"

வீட்டை விட்டு வெளியில் கால் வைக்க  அவன் சட்டைப் பையில் இருந்த ஃபோன் பாடியது. "கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான்...."






8 comments:

  1. Awesome manni...oru skit eh panidalam pongo!! Happy Janmashtami.. 😊 - Jananigr

    ReplyDelete
  2. Nice one. Happy writing. This is Kumar, cousin of Ramesh (Krithiga)

    ReplyDelete
  3. Super Suja. Very humorous and msg conveyed

    ReplyDelete
  4. Wonderful Suja! Numerous and heartwarming!
    Happy Krishna Jayanthi!

    ReplyDelete
  5. tho a bit long the ending is superb nJAI SRI KRISHNAAAA

    ReplyDelete
  6. Oooh cool, watsup lady and working women r very much realistic. Expecting more such scripts.

    ReplyDelete