அந்த நான்கு நிமிடங்கள்

வாழ்க்கையில் எத்தனையோ நிமிடங்களை தவற விட்டிருந்தாலும் நேற்று நான் தவற விட்ட நான்கு நிமிடங்கள்…..அந்த நான்கு நிமிடங்கள் மீண்டும் வரப் போவதில்லை.   இதை எங்கே போய் சொல்வது, யாரிடம் சொல்வது.  

விடுமுறைக்காக சென்னை வந்து ஒரு மாதம் முடிந்த நிலையில்,  நேற்று என் கணவரும், மகனும் அமெரிக்கா திரும்பிச் சென்றனர்.  அவர்களை வழியனுப்புவதற்காக சென்னை விமான நிலையம் சென்ற பொழுது தான்,  அந்த நான்கு நிமிடங்களைத் தவற விட்டேன்.

விமான நிலையத்தை அடைந்த பொழது மாலை ஆறரை மணி.  பேச வேண்டியதைப் பேசி விட்டு கணவரும், மகனும் உள்ளே செல்ல, கலங்கிய கண்களுடன் நானும் என் மகளும் நின்று கொண்டிருந்தோம்.  கணவருக்காக சிறிது கலங்கினாலும்,  நெஞ்சு விம்மியது என் மகனுக்காக.  என்னை விட்டுப் போகிறான் என்று வருத்தம்.  அவன் அப்பாவுடன் சென்றாலும், அவன் பசியறிந்து அவர் உணவு தருவாரா என்ற கலக்கம்…இன்னும் ஆயிரம் வருத்தம்.  இவை எல்லாம் சேர்ந்து கண்ணீர் பொங்கியது.  நான் அழுவதைப் பார்த்து என் மகனும் கண் கலங்க….விமான நிலையத்தில் நாடகம் ஏதும் அறங்கேற்ற வேண்டாம் என்ற நினைப்புடன் அழுகையை குறைத்துக் கொண்டு அவர்களுக்கு கை அசைத்து விடைக் கொடுத்த பிறகு, நானும் என் மகளும்  லிப்ட்டை நோக்கி  நடந்தோம்.  

“இன்னிக்கு அப்பாவ ட்ராப் பண்ண வந்த மாதிரி, நம்ம யாராவையாது பிக்கப் பண்ணிருக்கோமா சென்னை ஏர்போர்ட்லேந்து ?”  கேட்டாள் என் மகள்.

“போனதில்லை….” 

அது வரையில் உறங்கிக் கொண்டிருந்த “கபாலி” நினைவு மீண்டும் துளிர்விட்டது.  “கபாலில சென்னை ஏர்போர்ட் வருமே…ரஜினிகாந்த் கூட அவர் டாட்டரோட வருவாரே. ஆனா அது சென்னை ஏர்போர்ட் மாதிரியே இல்லை.”

லிப்ட் இருக்கும் இடம் வந்தது.  

“நம்ம போய் பாக்கலாமா கபாலில அந்த ஏர்போர்ட் தானா வந்ததுனு?” 

“ரொம்ப லேட்டாயிடுத்து. இன்னிக்கு வேண்டாம்,”  லிப்டில் இறங்கிய படியே பதில் சொன்னேன்.

தப்பு செய்து விட்டேன்.  சென்றிருக்க வேண்டும்.  சென்றிருந்தால்…

லிப்டிருந்து இறங்கிய பின் காரின் டிரைவருக்கு ஃபோன் செய்து விட்டு காத்திருந்தேன்.  காத்திருக்கும் நேரத்திற்குள் “அரைவல்” இடத்திற்கு சென்று கபாலியில் வந்த இடம் இது தானா என்று பார்க்கலாமா என்று மனம் பரபரத்தது.  பரபரத்த மனதை அடக்கினேன். பரபரத்த மனதுடன் “அரைவல்” இடத்திற்கு சென்றிருந்தால்…….

கார் வந்தது.  காரில் ஏறினேன்.  கார் புறப்பட்டது.  இரவு மணி 7.26. வண்டி விமான நிலையத்தை விட்டு வெளியேறியது. அடுத்த  நான்கு நிமிடத்தில்…சரியாக இரவு மணி 7.30க்கு தரையிறங்கிய விமானத்தில் வந்தார்…….”கபாலி”.  என் பெண்ணின் பேச்சைக் கேட்டு “அரைவல்” இடத்திற்கு சென்றிருந்தால் அவரைக் கண்டிருக்கலாம். தூரத்திலிருந்து கண்டு மகிழ்ந்து இருக்கலாம். பக்கம் நெருங்கி இருக்க முடியாது.  பேசுவதற்கும்…..பக்கதிலே போக முடியாத போது எப்படி பேசியிருக்க முடியும்?   ஒரு வேளை வாய்ப்புக் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பேன்? பேசுவதற்கு வாயைத் திறந்திருப்பேன்.  வெறும் காற்று மட்டுமே வந்திருக்கும். வந்த காற்றை வெளியேற்றிவிட்டு,  “கபாலி”யாய் வாழந்ததற்காக கைப் பிடித்து வாழ்த்துக் கூறியிருப்பேன்.  அமைதியாய் ஆராவாரமில்லாமல், அழுத்தமாய், அபாரமாய் நடித்ததைப் பற்றி கூறி மகிழ்ந்திருப்பேன்.  கபாலி திரைக்கு வருவதற்கு முதல் நாள் சென்னை முழுக்க “கபாலி” ஜுரம் பரவியிருந்ததைக் கூறியிருப்பேன்.  “கபாலி” தவிர வேறு ஏதும் மக்கள் நினைவில் இல்லை என்றிருப்பேன்.  “கபாலி”  திரையில் தோன்றிய பொழுது அரங்கமே அதிர்ந்த ஆச்சரியத்தை எடுத்துரைத்திருப்பேன்.  கபாலியின் “மகிழ்ச்சி”  தான் இப்பொழுது “ட்ரெண்டிங்” என்று கூறியிருபேன்.  சாலையில் கூட்டம் இருந்தால் "மக்கள் கபாலி பார்க்க செல்கிறார்கள் என்றும். கூட்டம் இல்லை என்றால் “மக்கள் கபாலி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றும், ஊர் பேசுவதைக் கூறியிருப்பேன்.  இத்துடன் நிறுத்தி இருக்க மாட்டேன். ரஜினிகாந்த் படம் என்றால்  குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும் என்று நினைத்து சின்னஞ் சிறுசுகளை அழைத்து வந்து ஏமாந்து போன பெற்றோர்களைப் பற்றி கூறியிருப்பேன்.  அரிவாளும், துப்பாக்கியும் ஏந்தி சுட்டுத் தள்ள இங்கு பல கத்துக்குட்டி நடிகர்கள் இருக்க, உச்ச நடிகரான அவர் வன்முறையை நாடியது ஏன் என்று கேட்டிருப்பேன்?  “நல்ல வேளை படம் பாக்க வந்தவங்கள சுட்டுத் தள்ளாம இருந்தாங்களே” என்று என்னைப் போல் பலர் எண்ணுவதைக் கூறியிருப்பேன்.  சொத்தப்பலான “க்ளைமாக்ஸ்”  ற்கு ஏன் சம்மதித்தீர்கள் என்று கேட்டிருப்பேன்.  “நெருப்புடா” …அந்த நெருப்பை ஊர் எறிப்பதற்கும் பயன்படுத்தலாம், சுகமாய் குளிர் காய்வதற்கும்  பயன்படுத்தலாம்.  ரஞ்சித் அவர்கள் எறிப்பதற்கு உங்களைப் பயன்படுத்தியிருக்கிறார், பலருக்கு அதில் ஆனந்தம்.  என்னைப் போல் சிலருக்கு வருத்தம் என்பேன்.  வருங்காலத்தில் நீங்கள் நடிப்பதாயிருந்தால் ரஞ்சித் அவர்களின் படத்தில் தயவு செய்து நடிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்வேன். 

இன்னும் ஆயிரம் சொல்ல ஆசை.  ஆனால் நான்கு நிமிடத்தில் அவரை தவற விட்டேன்.

வாழ்க்கையில் எத்தனையோ நிமிடங்களை தவற விட்டிருந்தாலும் நேற்று நான் தவற விட்ட நான்கு நிமிடங்கள்…..அந்த நான்கு நிமிடங்கள் மீண்டும் வரப் போவதில்லை

1 comment: