நானும் என் எம்.பி.ஏவும்.....

(அசாதாரண நேரத்தில் தோன்றிய சாதாரன மினி கதை)


இந்த உலகத்தில் யாருடன் வேண்டுமானாலும் குடும்பம் நடத்திவிடலாம், ஆனால் என் மனைவியுடன் குடும்பம் நடத்துவது என்பது மிக மிக மிக .....

"என்னங்க?"   சமையல் அறையிலிருந்து கூப்பிட்டாள் என் மனைவி.  யாருடனும் இரண்டு வினாடிகளுக்கு மேல் பேச அனுமதிக்கமாட்டாள்.

"என்ன?"  சோஃபாவிலிருந்து  குரல் கொடுத்தேன்.  ஞாயிறு காலை நிம்மதியாக செய்திதாள் படிப்பது அவளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

"வாசல்ல கறிகாய் வண்டி வருது பாருங்க.  அவன கொஞ்சம் நிக்க சொல்லுங்க."

 இக்கட்டான கட்டம். நான் செய்திதாளை அப்படியே போட்டுவிட்டு, காய்கறி விற்கும் நபரைக் கூப்பிட வேண்டுமா, இல்லை செய்த்திதாளை மூடி வைத்துவிட்டு போக வேண்டுமா...தெரியவில்லை.  இரண்டில் எது செய்தாலும், வாங்கிக் கட்டிக் கொள்ள போகிறேன், என்பது உறுதியாகிவிட்டது. ஏதோ ஒன்றை செய்வோம் என, செய்திதாளை மூடி வைத்துவிட்டு, சோபாவிலிருந்து எழுந்தேன்.  தபதபவென்று சமையல் அறையிலிருந்து ஓடி வந்தாள் என் தர்மபத்தினி.

"நீங்க பேப்பர மூடி வைச்சுட்டு, ஆடி அசைஞ்சு போறதுக்குள்ள அவன் பக்கத்து தெருவுக்கு போயிடுவான்.  உங்ககிட்ட ஒரு வேலை சொன்னேன் பாருங்க, என்ன சொல்லணும்."  
தபதபவென வாசலுக்கு விரைந்தாள்.

இதுவே நான் செய்த்திதாளை திறந்து வைத்துவிட்டு போயிருந்தால்.......வேண்டாம், இப்பொழுது எதற்கு சுய பச்சாதாபம்.  வேலையைப் பார்ப்போம்.  மூடிய செய்திதாளை மீண்டும் திறந்தேன்.  சிறிது நிமிடத்தில்  மீண்டும் புயல் தாக்கியது.  

"எம்.பி.ஏ படிச்சிருந்தா மட்டும் போறாது." 

இப்பொழுது எதற்கு  நான் படித்த எம்.பி.ஏவை இழுக்கிறாள் என்று  எனக்கு புரியவில்லை. 

"குக்கர்ல புஸ் புஸ்னு புகை வருதே,  வெயிட் போடணும்னு தெரியவேண்டாம்.  நீங்க எல்லாம் எப்படி தான் ஆபிஸ்ல வேலை செய்யறீங்களோ."  பதிலுக்குக் காத்திருக்காமல் மறைந்து விட்டாள்.

சமையல் அறையில் குக்கரில் சாதம் வைத்ததும் எனக்கு தெரியாது.  அந்த குக்கர் புஸ் புஸ் என்று புகை விட்டதும் எனக்கு தெரியாது.  இப்படி இருக்கையில், எப்படி நான் வெயிட்....சரி விடுங்கள்.  மற்றபடி என் ஆபிசில் எனக்குக் கீழே இருபது நபர்கள் வேலை செய்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைபடுகிறேன்.

ஆனால் சும்மா சொல்லக் கூடாது.  என் மனைவிக்கு வாய் மட்டும் அல்ல, கையும் பேசும். அருமையாக சமைத்திருந்தாள்.  வயிறு முட்ட உண்டு, உறங்கி, எழுந்து, சிறிது அலுவலக வேலைகளை முடிப்பதற்குள்  மணி இரவு ஏழாகிவிட்டது.   வீட்டில் மனைவி இல்லை.  அவள் வருவதற்குள் ஃபேஸ்புக்கை நோட்டம் விடலாம் என்று கணிணியை திறந்தேன்.

சமையல் அறையிலிருந்து புஸ் புஸ் என்று சத்தம் வந்தது. காலை சம்பவம் நினைவில் நிழலாடியது.  அடுத்த கணம் கணினியை மூடினேன்.  வாழ்க்கையில் வெயிட் போடுவதை விட முக்கியமான வேலைகள் எதுவுமே இல்லை என்று முடிவுக்கு வந்தேன். சமையல் அறைக்குள் புகுந்தேன்.  குக்கர் பலமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.  ஒளிந்து கொண்டிருருந்த  வெயிட்டை எடுத்தேன்.  குக்கரில் மிக சரியாக பொருத்தினேன்.  ஏதோ சாதித்து விட்டது போல் மகிழ்ச்சி கொண்டேன்.  சந்தோஷத்துடன் சமையல் அறையை விட்டு வெளியே வந்தேன்.

 கணினியை மீண்டும் திறந்தேன்.  சிறிது நேரத்தில் "உஸ்....." என்று குக்கர் கத்தியது.  கூடவே என் மனைவியும் கத்திய படியே என் மனைவியும் வீட்டிற்குள் வந்தாள்.

"எதுக்கு குக்கர்ல வெயிட் போட்டீங்க? நான் போட சொன்னேனா? எம்.பி.ஏ படிச்சு என்ன யூஸூ? "  மீண்டும் என் எம்.பி.ஏ இழுக்கப் பட்டது.  

"இட்லி வைக்கும் போது புகை வந்தா வெயிட் போடக்கூடாதுனு தெரியாது? நீங்க எல்லாம் எப்படி தான் ஆபிஸ்ல வேலை செய்யறீங்களோ."  பதிலுக்குக் காத்திருக்காமல் மறைந்து விட்டாள்.

சத்தியமாக எம்.பி.ஏ பாடத்திட்டத்தில், குக்கரில் சாதம் வைக்கும் போது புகை வந்தால் வெயிட் போட வேண்டும் என்றும்,  இட்லி வைக்கும் போது புகை வந்தால் வெயிட் போடக் கூடாது என்றும், பாடங்கள் இல்லை.  நம்புங்கள்.

இந்த உலகத்தில் யாருடன் வேண்டுமானாலும் குடும்பம் நடத்திவிடலாம், ஆனால் என் மனைவியுடன் குடும்பம் நடத்துவது என்பது மிக மிக மிக .....No comments:

Post a Comment