கத்தி (no spoilers)

"கத்தி"  படத்திற்கு போவோம் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை.  காரணம் ஒன்று படத்தின் பெயர்.   பெயரிலேயே "கத்தி" இருந்தால், உள்ளே படம் ரத்தக் களரியாக தான் இருக்கும் என்று ஒரு அசாத்தியமான நம்பிக்கை.  இரண்டாவது காரணம்,  படத்தைச் சுற்றின தகராறு .  சினிமா தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய படம் அல்ல இது,  டி.வி.டியில் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கழித்துக் கட்டியது நினைவில் இருக்கிறது.  ஆனால்,  எப்ப்டி மனம் மாறி இந்த படத்திற்கு சென்றோம் என்பது நினைவில் இல்லை.

"ரஜினி" அவர்களின் படத்திற்கு மட்டுமே, படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் செல்ல வேண்டும்.  கூட்டம் அலைமோதும், அடித்து,  பிடித்து, உட்கார இடம் பிடிக்க வேண்டும்.  மற்ற எந்த நடிகர் நடித்த படத்திற்கும் படம் ஆரம்பிப்பதற்கு பத்து நிமிடம் முன் சென்றால் போதும்.  அப்படி நினைத்து தான், இந்த படத்திற்கும் பத்து நிமிடம் முன் சென்றோம்.  தியேட்டர் வெளியில் பெயருக்குக் கூட யாரும் இல்லை.  டிக்கெட் வாங்கிக் கொண்டு,  படம் திரையிடப்படும் அரங்கத்தை நெருங்க,  அங்கேயும் யாரும் இல்லை.  "அடடா,  இந்த படத்தைப் பத்தி ஒரு ரெவியூ கூட படிக்காம வந்துட்டோமே, படம் மொக்கையா,  ஒரு தமிழ் பேசற ஆளக் கூட காணும்," என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அரங்கத்திற்குள் சென்றால், அரங்கம் "jam packed".  ஆ…..வியப்பு.  படத்தின் பெயர் தராத நம்பிக்கை,  நிரம்பி வழிந்த கூட்டம் தந்தது.  உட்கார இடம் இல்லை.  ஒரு வழியாக இடம் கண்டுபிடித்து உட்காரவும், விளக்குகள் அணைக்கப்பட்டு, படம் ஆரம்பமாவதற்கும் சரியாக இருந்தது.
விஜயின் அறிமுகக் காட்சியில் கைத்தட்டலும், விசிலும், ஏ..ஏ…..என்ற சத்தமும் தியேட்டரை அதிரச் செய்தது.  இதில்  ஏ..ஏ..விலும், கைத்தட்டலிலும் என் பங்கு கணிசமாக இருந்தது.

முதலில் மைனஸ் :  படம் முழுவதும்  தெரியும் "loop holes".   "எப்பயா படத்தைப் போடப் போறீங்க," என்று கேட்டக வைக்கும்  ஆரம்ப காட்சிகளின்  தொய்வு.

இப்பொழுது ப்ளஸ்:   நீண்ட இடைவெளிக்குப் பிறகு  அருமையான படம்.  விவசாயத்துடன் கூட பல இடங்களைத் தொட்டுச் செல்கிறது. ஏ.ஆர். முருகாதாசிற்கு ஒரு "ஓ"!!

விஜய்:  அமைதியாய், ஆரவாரமில்லாத ஆக்ரோஷத்துடன் நடித்து இருக்கிறார்.  நடிப்பை விட நடனக் காட்சிகளில் பின்னி பெடலத்து இருக்கிறார்.  ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார்.

சதீஷ்:   காமெடியனாக சந்தானமோ, சூரியோ இருப்பார்கள் என்று நினைத்துப் போனால், "சதீஷ்" என்ற பெயரைப் பார்த்ததும் திகைப்பு.  சரி, இந்த படத்தில் காமெடி எதுவும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தற்கு மாறாக, சதீஷின் காமெடி, படத்தின் தேவைக்கேற்ப அடக்கமாய், கட்டுக்கோபாய் இருந்தது.  நல்ல வேளை சந்தானம் இந்த படத்தில் இல்லை என்று நினைக்கவும் செய்தது.

இசை:  BGM எனப்படும் படத்தின் பிண்ணனி இசை அபாரம்.  அதிலும் "காசு" வைத்து அடிக்கும் சண்டைக் காட்சியின் பிண்ணணி இசை ஆஹா…ஒஹோ…..சண்டைக் காட்சி என்றாலே காத தூரம் ஒடிச் செல்லும் நான், அந்த காட்சியில் மட்டும் மனம் லயித்துப் போனேன்.  அனால் "யேசுதாஸ்" பாடிய ஒரு பாட்டைத் தவிர வேறு எந்த பாட்டும் மனதில் நிற்கவில்லை.  'யேசுதாஸ்" அவர்களின் பாட்டு மனதை விட்டு போகவில்லை.

இவை எல்லாம் தவிர, ஒரு படத்தின் வெற்றிக்கு சான்று எது தெரியுமா?    படம் முடிந்து வெளியில் வரும்பொழுது, அந்த படத்தின் தாக்கமும் நம்முடனே ஒட்டிக் கொண்டு வருவது தான்.  அந்த தாக்கம் என் வீடு வரும் வரை இருந்தது.  வீட்டிற்கு வந்த பின், சுவர் ஒரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த  அரிசியும், கோதுமையும் கண்ணில் பட்டது.   உண்பதற்கு உணவை அளித்த கடவுளுக்கு பல முறை நன்றி சொல்லி இருந்தாலும், அந்த உணவை பயிரிட்டு வளர்த்த விவசாயிகளுக்கு ஒரு முறை கூட நன்றி சொல்லியது கிடையாது.  "கத்தி" என்ற இந்த  படம் என்னை விவசாயிகளுக்கு இன்றும் என்றென்றும் நன்றியுடன் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கத்தி -  ரத்தம் சிந்தும் கதையல்ல.  நமக்காக ரத்தம் சிந்துபவர்களைப் பற்றிய கதை.






No comments:

Post a Comment