என் அப்பாவும் மூன்று ஆட்டோவும்

ஏன் என்று தெரியாது, ஆனால் Ubiquitous என்ற ஆங்கில வாத்தையின் மீது ஒரு மோகம் உண்டு எனக்கு.   என் அப்பாவும், என் அப்பாவின் நினைவும் Ubiquitous ஆகவே இருக்கிறது. என் அப்பாவிற்கும் ஆட்டோவிற்கும் ஒன்று சம்பந்தம் இல்லை என்றாலும்,  சென்னையில் Ubiquitous ஆக இருக்கும் ஆட்டோக்களில் செல்லும் போது கூட என் அப்பாவின் நினைவு வந்துவிடுகிறது.

அப்படி தான் பாருங்கள், ஒரு ஞாயிறு இரவு 9.30 மணி.  வேளச்சேரி பீனிக்ஸ் மாலிலிருந்து திருவல்லிக்கேணிக்கு ஆட்டோவில் பயணம்.  ஆட்டோ டிரைவர் போதையில் இல்லாமல் இருக்கிறாரா என்று உறுதிப் படுத்திக்கொண்டு ஏறினோமே தவிர, ஆட்டோ போதையில் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்கத் தவறிவிட்டோம்.  டாஸ்மார்க் சரக்கு மட்டும் அல்லாமல் ஓட்டப் பந்தைய வீரர்கள் ஊக்கத்துக்காக எடுத்துக் கொள்ளும் போதை மருந்தையும் சேரத்து அந்த ஆட்டோ எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.  அந்த போதை மருந்துகளின் விளைவு ஆட்டோ ஓடிய விதத்தில் தெரிந்தது. வேகம் என்றால் அசுர வேகம்.  வேகத்துடன் கூட வளைவு, நெளிவு.   சாலை நேராக இருக்க, இந்த ஆட்டோ மட்டும் வலதும், இடதுமாக சாய்ந்து சாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.  இந்த ஆட்டோவைப் பார்த்து தான் அந்த பாட்டு பாடினார்களோ என்னவோ.  என்ன பாட்டு தெரியுமா?

"சாய்ந்து சாய்ந்து நீ போகும் போது, அடடடா….."

மெளண்ட் ரோட் அருகில் இடது பக்கம் அதிகம் சாய்ந்ததால், பக்கத்தில் வந்த காரில் மோத போக, பயம் பிய்த்துக் கொண்டது.

"ஏங்க இப்படி போறீங்க?" 

"மேடம், ரோடெல்லாம் பள்ளம் மேடம். அதான் மேடம் ."

"கொஞ்சம் மெதுவா நேரா பாத்து போங்க. ஒண்ணும் அவசரமில்லை"

"சரி மேடம்" என்று சொன்னாரே தவிர, வேகத்தை குறைக்கவில்லை.

பீட்டர்ஸ் ரோடு மேம்பாலத்தில் மீண்டும் சாய்ந்து, சாய்ந்து…..இவரிடம் பேச்சுக் கொடுத்தாலாவது வண்டியை ஒழுங்காக ஓட்டுவாரா என்று நினைத்து, பேசலாம் என்று நினைக்கையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை.  ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியில் உருதுவில் ஏதோ எழுதியிருப்பது தெரிந்தது.  ஆடற மாட்ட ஆடிக் கறக்கணும்.

"ஏங்க fasting முடிச்சுட்டீங்களா?" (9.30 மணிக்கு என்ன fasting?)

"முடிச்சுட்டேன் மேடம்."

அதற்கு மேல் ரம்சானைப் பற்றி என்ன கேட்பது என்று தெரியவில்லை.  வாய்க்கு வந்ததைக் கேட்போம் என்ற நினைத்த நொடியில், அவரின் செல் போன் சிணுங்கிற்று.  இது வேறயா?

எதிர் முனையில் என்ன பேசினார் என்று தெரியவில்லை. இவர் சொன்ன பதிலால் அரண்டு போனேன்.

"சவாரி போயிட்ருக்கேன்.  இவங்கள இறக்கிவிட்டுட்டு அஞ்சு நிமிஷத்துல நுங்கம்பாக்கம் வரேன்.  நீயும் அங்க வந்துடு."

போனை வைத்தார்.

"ஏங்க, இங்கேந்து ட்ரிப்ளிக்கேன் போறதுக்கே பத்து நிமிஷத்துக்கு மேல ஆகும், இதுல நுங்கம்பாக்கதுக்கு எப்படி அஞ்சு நிமிஷத்துல போ போறீங்க"?  என் பயம் எனக்கு.

"சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன், மேடம்," என்று திரும்பி பார்த்து சிரித்தார். அவர் திரும்பி பார்த்ததில் ஆட்டோ இன்னும் கோணல் மாணாலாய் போனது.  வீடு வரும் வரை எக்காரணம் கொண்டும் வாயைத் திறப்பதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டேன்.

வீடும் வந்தது. ஆட்டோவும் ஒரு வழியாய் நின்றது.

" இருபது ரூபா மேல போட்டு குடுங்க, மேடம்."  திரும்பிப் பார்த்து கேட்டார்.

"ஏறும் போது ஒண்ணும் சொல்லல."

"இந்த மீட்டர் காசுல ஒண்ணும் லாபம் இல்ல மேடம்.  உங்கள மாதிரி இருக்கிறவங்க குடுக்கற பைசால என் பசங்களுக்கு ஏதுனா வாங்கிக் குடுப்பேன்."

"எவ்வளவு பசங்க உங்களுக்கு?"  பணத்தைக் குடுத்து விட்டு கீழே இறங்கினேன்.

"ரெண்டு பையன் மேடம். பெரிய பையன் ஒண்ணாவது படிக்கறான், ரெண்டாவதுக்கு இப்ப தான் ஒரு வயசு ஆவுது."

அடுத்து வந்த என் சொற்களின் ரிஷிமூலமும், நதிமுலமூம் நான் அறியேன். இங்கு நான் உபயோகித்திருக்கும் வார்த்தைகள் அன்று சொன்னவையா என்று தெரியாது.  ஆனால் சொன்னதின் கருத்து இந்த வார்த்தைகளில் மாறவில்லை.

"எனக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க.  எங்க அப்பா இப்ப தான் மூணு மாசம் முன்னாடி தவறிப் போயிட்டாரு.  இந்த வயசுலயும் எங்க அப்பா இல்லாம இருக்கறது ரொம்ப கஷ்ட்டமா இருக்கு.  உங்க பசங்க ரொம்ப சின்னது.  நீங்க இப்டி கன்னா பின்னானு வண்டிய ஓட்டி உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா, உங்க பசங்க என்ன பண்ணுவாங்க?உங்க மனைவி என்ன பண்ணுவாங்க?அப்பா இல்லாம இருக்கறது எவ்வளவு கஷ்ட்டம் தெரியுமா?"

அதற்கு  மேல் வார்த்தை வரவில்லை.  முட்டி மோதிக் கொண்டு கண்ணீர் தான் வந்தது.  அவர் முன் அழுதுவிடுவேனோ என்று பயந்து, பதிலுக்குக் காத்திராமல் என் வீட்டை நோக்கி நடந்தேன்.

"மேடம்" அழைத்தார் அவர்.  திரும்பிப் பார்த்தேன்.

"ரொம்ப சாரி மேடம். இனிமே மெதுவா போறேன்." ஆட்டோ நகர்ந்தது.

முன்னது அதீ வேக பயணம். அடுத்தது ரோலர் கோஸ்ட்டர் நடுக்கம்.  இந்த முறை எக்ஸ்பிரஸ் அவென்யூவிலிருந்து திருவல்லிக்கேணி.  ஜாம் பஸார் வரை ஒழுங்காக வந்து கொண்டிருந்த வண்டி, திடீரென்று வலது பக்கத்தில் உள்ள சந்து ஒன்றில் நுழைந்தது.  திடுக்கிட்டேன்.  நேரே போய் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் திரும்புவதற்கு பதிலாக இங்கே தேவையில்லாமல் ஏன் திரும்பியது என்று புரியவில்லை.  மனதிற்குள் கன்னா பின்னாவென்று எண்ண அலைகள்.  ஆட்டோ நம்பரை பார்க்காமல் போனோமே, நெற்றியில் குங்குமமம் வைத்திருந்தாரே டிரைவர், அதை பார்த்து அவர் நல்லவர் என்று நம்பி ஏறிவிட்டோமே.  அடடா... இவர் நல்லவரா, கெட்டவரா. மண்டையை பிய்த்துக் கொண்டிருந்த நேரத்தில்,  வலது பக்கம் ஒரு தெருவும், இடது பக்கம் ஒரு தெருவும் வந்தது.  ஆட்டோஇடது  பக்கம் சென்றால் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஆட்டோ டிரைவர் நல்லவர்.  வலது பக்கம் சென்றால்…….மிக சரியாக ஆட்டோ வலது பக்கம் திரும்ப ஆயூத்தமானது.

"ஏங்க, ரைட்ல திரும்பறீங்க?லெப்ட்ல திரும்பி ட்ரிப்ளிகேன் ஹை ரோடு பக்கம் போங்க," என்றேன்.

நான் சொன்னதைக் கேட்டு இடது பக்கம் திரும்பினார்.

"மேடம்,   ட்ரிப்ளிகேன் ஹை ரோடுல ஒரே ட்ராபிக்.  அதான் ரைட்ல  "வல்லபன் ஸ்ட்ரீட்" வழியா வலிச்சிகினு போலாம்னு நினைச்சேன்," என்றார்.

வல்லபன் ஸ்ட்ரீடா…...நெற்றியில் இருந்த குங்குமம் தராத நம்பிக்கை, "வல்லபன் ஸ்ட்ரீட்" என்ற இரண்டு வார்த்தை தந்தது.

"வல்லபன் ஸ்ட்ரீட் தெரியுமா உங்களுக்கு?" என்றேன்.

"மேடம். என் வீடு இங்க தான் இருக்கு. நான் பொறந்து வளந்ததுலாம் ட்ரிப்ளிக்கேன் தான் மேடம்."

அவர் சொல்லி முடிக்கவும் ட்ரிப்ளிக்கேன் ஹை ரோடை அடையவும் சரியாக இருந்தது.  டிரைவர் சொன்னது போல் சரியான ட்ராபிக்.  பஸ், கார், ஆட்டோ ,பைக் என சகல வண்டிகளும் நகர முடியாமல் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருந்தன. அந்த வண்டிகளுக்கு நடுவில் நுழைந்து ஆட்டோ வலது புறம் திரும்ப வேண்டும்.  நுழைவதற்கு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"என்னா கூட்டம் பாருங்க மேடம்.  அதான் வல்லபன் ஸ்ட்ரீட் வழியா போலாம்னு சொன்னேன்."

"இப்ப எப்டி போறது?ஆட்டோ போறதுக்கு இடமே இல்லையே."

"இதோ போயிடலாம்," என்று சொன்னபடியே அவர் செய்த செயல் இருக்கிறதே……ஒரு பஸ்ஸூக்கும், காருக்கும் நடுவில் சைக்கிள் மட்டுமே செல்லக் கூடிய இடைவெளியில், ஆட்டோவை நுழைத்து…….இன்று வரை  அந்த ஆட்டோ எவ்வாறு வெளியில் வந்து வலது புறம் திரும்பிற்று என்று எனக்குத் தெரியாது.  ஆனால் வலது புறம் திரும்பும் சமயம்,  ஆட்டோ  மேலே எழும்பி கீழே வந்தது.  அதுவரை ஆட்டோவில் எங்கோ இருந்த நான், சீட்டில் வந்து அமர்ந்தேன்.  சுற்றிக் கொண்டிருந்த என் தலை நிலைக்கு வந்தது.   அப்படியே வாயை முடிக் கொண்டு பயணம் செய்திருக்கலாம். செய்யவில்லை.

எங்கு ஒய்வு எடுக்கலாம் என்று சுற்றிக் கொண்டிருந்த சனி பகவான் என் நாக்கில் வந்து தங்கினார்.

"இந்த ரோடு தான் ஒரே கூட்டமா இருக்கே, லெப்ட்ல திரும்பி மார்க்கெட் வழியா போயிடலாமே?"  சனி பகவான் வேலையை துவங்கி விட்டார்.

"மேடம், இன்னிக்கு வியாழக்கிழமை.  ராகாவேந்திரா கோவிலாண்ட ஒரே ஜனமா இருக்கும்," என்று சொல்லியபடியே இடது பக்கம் திரும்பினார்.

அடடா….வியாழக்கிழமை என்பதை மறந்து போனோமே.

"அப்ப ஏங்க திரும்பினீங்க?நேரவே போயிருக்கலாம் இல்ல?"

"நீங்க திரும்ப சொன்னதால, திரும்பினேன் மேடம்."

சனி பகவான் வந்த வேலை முடிந்தது என்று திருப்தி அடைந்திருப்பார்.

ராகவேந்திரா கோவிலாண்டை ஜனம் இருந்திருந்தால் பரவாயில்லை, வித விதமாய் வண்டிகள் இருந்திருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால்…..திருவல்லிக்கேணியில் உள்ள பெருமாள் யார் என்று தெரியுமா உங்களுக்கு?     "கிருஷ்ணர்".  அவருக்கு இன்னும் ஒரு பெயர் உண்டு.  "கோவிந்தன்". மாடுகளின் பின்னே போனவன் என்று அந்த பெயருக்கு அர்த்தம்.  அன்று  மாடுகளின் பின்னே அவர் போனார்.  இன்று உலகத்து  மாடுகள் எல்லாம் அவரின் பின்னால் இங்கே வந்துவிட்டது போலும்.…….எங்கேங்கு நோக்கினும் மாடுகள், மாடுகள், மாடுகள்.  கன்றுக் குட்டியிலிருந்து, காளை மாடு வரை வித விதமாய் மாடுகள்.  இந்த பக்கம் வந்தது முட்டாள்தனம் என்று அப்பொழுது தான் உரைத்தது.

கூட்டத்தின் நடுவே மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்த ஆட்டோ மொத்தமாய் நின்றது.  எங்களுக்கு முன்னே ஒரு ஆட்டோ.  அந்த ஆட்டோவின் முன்னே ஒரு பெரிய கருப்பு மாடு ஆடாமல் அசையாமல் சிலை போல் நின்று கொண்டிருந்தது.  வலது புறம் பழங்கள் விற்கும் வண்டி, இடது புறம் ஆள் இல்லாத வெள்ளை நிற கார்.

"அண்ணே, மாட்ட விரட்டிட்டு போண்ணே," என்று நம் ஆட்டோ டிரைவர் கத்த, அந்த கத்தல் முன்னால் இருப்பவருக்கு காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை.

"இதோ போயிடலாம் மேடம்," என்று டிரைவர் சொல்ல, ஆஹா….இதே வார்த்தைய  சிறிது நேரத்திற்கு முன் அவர் சொன்னதும், அதற்கு பின் ஆட்டோவின் ஆட்டமும் நினைவிற்கு வந்தது.

மற்றுமொரு ரோலர் கோஸ்ட்டர் ரைடிற்கு நான் தயாராக இல்லை.

"ஏங்க நான் இங்கயே இறங்கிக்கறேன்," என்று என் மூட்டை முடிச்சுகளை தூக்கித் தயாரானேன்.

அந்த நேரம் பார்த்து, டைனோசர் சினிமாவில் டைனோசர் காருக்குள் எட்டிப் பார்ப்பது போல், நடுத்தர உயர மாடு ஒன்று, ஆட்டோவிற்குள் எட்டி என்னை பார்த்தது.

"ஐயோ" என்று நான் கத்த, டிரைவர் திரும்பி பார்த்துவிட்டு "குபுக்" என்றோ, "களுக்" என்றோ எப்படியோ சிரித்தார்.

"அது ஒண்ணுயும் பண்ணாது, மேடம். பயப்டாதீங்க," என்று சொல்லிக் கொண்டே இறங்கி அந்த மாட்டை விரட்டி விட்டார்.

"மேடம், இந்த பையெல்லாம்  தூக்கிக்கினு நீங்க நடந்து போவே முடியாது.  ஒரே நெரிசலு.  உக்காருங்க,  போலாம்," என்று ஆட்டோவை மீண்டும் கிளப்பினார்.

நடக்கவே முடியாத நெரிசலில் இந்த ஆட்டோ போக போகிறது. தெய்வமே…..

"ஏங்க, இந்த ஆட்டோக்கு சீட் பெல்ட்லாம் கிடையாதா?"

திரும்பி பார்த்து மீண்டும் "களுக்"கினார்.

"போண்ணே, போண்ணே," என்று முன்னால் நின்ற ஆட்டோவை விரட்டி, கிடைத்த சிறு இடைவெளியில் சென்று, அந்த கருப்பு நிற மாட்டின் வாலால் முன் கண்ணாடியில் அடி வாங்கி, இடது பக்கம் ஆட்டோவை மேலே தூக்கி,  வலது பக்கம் கீழே இறக்கி, ஜனக் கூட்டத்தின் நடுவே புகுந்து புறப்பட்டு, ஒரு வழியாக வீடு இருக்கும் தெருவின் பக்கத்தில் வந்தது.

"ஏங்க இந்த சந்துக்குள்ள தான் என் வீடு இருக்கு.  இங்கேயே நிறுத்திடுங்க நான் போறேன்." விட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தேன்.

"இந்த சந்துக்குள்ள போனா என்ன வரும், மேடம்?"

"எனக்கு ஹார்ட் அட்டாக் வரும்." சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.

"ஹைஸ் ஹவுஸ் வரும்," என்றேன்.

"உங்கள வீட்டாண்ட இறக்கிட்டு, நான் ஹைஸ் ஹவுஸ் வழியா போறேன், மேடம்.  சவாரி எதுனா கிடைக்கும்," என்றார்.

என் பதிலுக்குக் காத்திராமல் தெருவிற்குள் நுழைந்தார்.  என் வீடு ஒரு வழியாய் வந்தது.

"ஏங்க இப்டி ஒட்றீங்க?"  ரூபாய் நோட்டுகளை எண்ணியபடியே கேட்டேன்.

"மேடம், தில், தில், தில் ப்ரொக்ரம் பாத்துருக்கீங்களா?" ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டே கேட்டார்.

"எது, இந்த மூஞ்சில பாம்பு, தேளு, பல்லியெல்லாம் ஒடவிட்டு, எங்கேந்தோ மேலேந்து குதிக்கறாங்களே, அந்த புரோக்ரமா? அஞ்சு நிமிஷம் பாக்கறதுக்குள்ளயே பயமா இருக்கு, நான் பாத்ததில்ல."  வெளியே இறங்கத் தயாரானேன்.

"அந்த ப்ரொக்ராம்ல  கலந்துகிட்டு ஆட்டோ ஒட்டிருக்கேன் மேடம்."

என்னது, என்னது….என் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.  கண் இமைக்காமல் நின்றது.  அந்த பயங்கரமான நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆட்டோவிலா நான் ஏறி வந்தேன்? ரோலர் கோஸ்ட்டருக்கான காரணம் இப்பொது புரிந்தது.  "பிரசவத்திற்கு இலவசம்" என்ற எழுதியிருப்பது போல், "இந்த ஆட்டோ தில் தில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றது" என்று எழுதியிருந்தால்,  ஏறாமல் இருந்திருப்பேனே.

ஸ்ட்ரீட் லைட்டின் வெளிச்சத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் இருக்க, நானோ  ஸ்ட்ரீட் லைட்டின் வெளிச்சத்தில் அந்த டிரைவரின் முகத்தைப் படித்தேன்.  இருப்பத்தைந்து வயதிலிருந்து இருபத்திஎட்டு வயதுக்குள் தான் இருக்கும் என்று அந்த முகம் சொல்லியது.

"என்ன மேடம் பாக்கறீங்க?"

"கல்யாணம் ஆயிடுத்தா?"

(மீண்டும்  தந்தை பற்றி அறிவுரையா?மத போதகர் போல் தந்தை போதகராய் மாறிவிட்டேனா தெரியவில்லை.)

"இன்னும் இல்ல மேடம்.  ஆனா ரெண்டு அக்காக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன்."

"பாத்து ஒட்டுங்க வண்டிய."

"பயப்டாதீங்க மேடம். எனக்கு ஒண்ணுயும் ஆவாது," என்று சொல்லிவிட்டு காற்றாய் மறைந்து போனார்.

இந்த ஊரை விட்டு கிளம்புவதற்குள், இந்த இரண்டு ஆட்டோ டிரைவர்களில் ஒருவரையாவது மீண்டும் சந்திப்பேன் என்றும், அவர்கள் திருந்திவிட்டதாக என்னிடம் கூறுவார்கள் என்றும் சினிமாத்தனமாகக் கனவுக் கொண்டிருந்தேன். கனவு மெய்ப்படவில்லை.  ஆனால் நான் சற்றும் எதிர்பாராத வகையில் மிகவும் நெகிழ்வான சம்பவம் ஒன்று நடந்தேறியது.

சென்னையை விட்டு கிளம்பும் நாள்.  விமான நிலையம் செல்வதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த "கால் டாக்ஸி"  வீட்டிற்கு வந்துவிட்டது.  அக்கம் பக்கம் இருக்கும் உற்றார் உறவுகளிடம் விடைப் பெற்றுக் கொண்டு, நானும் என் மகளும் ஒட்டமும் நடையுமாக வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைய, அங்கு கூர்மையான கொம்புடன் கூடிய இரண்டு பெரிய மாடுகள் எதிரும் புதிருமாக பாதையை மறைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தன.   இரண்டு மாடுகளுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியில் புகுந்து போய்விடலாம் என்று என் மகளின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நகர, அவள் பயத்துடன் பின் வாங்கினாள்.

"வாடி ஒண்ணும் பண்ணாது.  எத்தனை மாடு நம்ம பாத்துருக்கோம்," என்று அவளை சமாதானப்படுத்தி அழைத்து போக யத்தனிக்க,

"கண்ணு, போவாத் கண்ணு," என்று என் பின்னால் ஒரு குரல் கேட்டது. குரலுக்கு சொந்தகாரர் ஒரு 55-60 வயது மதிக்கத்தக்க பெண்மணி.

"அது கொம்ப பாரு கண்ணு.  சாமிக்கு நேந்து விட்ட மாடு.  குத்தி கிழிச்சுரும்," என்றாள்.

(சாமிக்கு நேர்ந்துவிட்ட மாடு ஏன் குத்தி கிழிக்கும், அமைதியாய் தானே இருக்க வேண்டும்).

"இல்லீங்க. போணும், டைம் ஆச்சு," என்றேன்.

"இதுங்க போற வரைக்கும், நீ போ முடியாது. அந்தாண்ட போய் சுத்தி போ," என்று மற்றுமொரு தெருவைக் காட்டினாள். காட்டி விட்டு அங்கு பக்கத்தில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்.

இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் என் வீட்டிற்கு,  ஊரைச் சுற்றி செல்வதில் எனக்கு உடன்பாடில்லை.  அதற்குள் அந்த இரண்டு மாடுகளும் சற்று முன்னேறியிருந்தது.  அதை பின் தொடர்ந்து நானும் இரண்டு அடி வைக்க, எனக்கு எதிர்புறம் தெருவின் அந்த பக்கம் நின்றிருந்தவர்கள் "வராதே, வராதே" என்று சைகை காமித்தார்கள்.   நான் இருக்கும் பக்கம் என்னையும், என் மகளையும் தவிர்த்து யாரும் இல்லை.  யாரேனும் வந்தால் அவர்களுடன் சென்றுவிடலாம் என்றால் ஒருவர் கூட இல்லை.  ஆனால் எனக்கு எதிர்பக்கம் ஆண்களும், பெண்களுமாக பத்து பன்னிரெண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.  ஒருவர் கூட அந்த மாடுகளை கடந்து வர முயற்சி செய்யவில்லை.  மாறாக மாடுகளுக்காக வழிவிட்டு ஒரு ஓரமாய் நின்றிருந்தார்கள்.  வினாடிகள் கறைந்து கொண்டிருக்க, அந்த மாடுகள் இருந்த இடத்தை விட்டு நகருவதாய் தெரியவில்லை.  இப்படி நின்று கொண்டிருப்பது முட்டாள் தனமாக தோன்றியது.  என்ன ஆனாலும் சரி, இந்த மாடுகளைக் கடந்து போவோம் என்று துணிந்தேன். துணைக்கு என் அப்பாவை அழைத்துக் கொண்டேன்.

"அப்பா, நான் இந்த ரெண்டு மாடையும் தாண்டி  போக போறேன்.  துணைக்கு என் கூட வாப்பா."

(கடவுளைக் கூப்பிடுவதை நிறுத்தி நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.  அவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்.  நான் கூப்பிட்டால் உடனே வருவாரா? என் அப்பா அப்படி இல்லை.  இருக்கும் போது எங்களைக் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்.  இல்லாத போதும் எங்களைப் பார்த்துக் கொள்வார் என்ற அசாத்திய நம்பிக்கை இருக்கிறது).

மகளின் கையைப் பிடித்துக் கொண்டு இரண்டு அடி முன்னே வைக்க, பத்து அடி தூரத்தில் இருந்த இரண்டு மாடுகளில் ஒன்றான அந்த ப்ரொளன் நிற மாடு , மொத்த உடம்பையும் ஒரு முறை சிலிர்த்து,  தன் வாலை பலமாக அசைத்து, எங்களை நோக்கி ஓடி வரத் தொடங்கியது.  பயத்தில் ஒரு வினாடி உறைந்து போனேன்.  இதயம் வேகமாக அடிக்க, என் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு திரும்பி பார்க்காமல் ஒடினேன்.  இருபது ஓடி  வந்த பிறகு, மெள்ள திரும்பி பார்த்தேன்.  அந்த மாடு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தது.  மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.  இதயம் முன்னைக் காட்டிலும் வேகமாக அடிக்கத் துவங்கியது.  என் மகளின் கண்களில் பயமும் கண்ணீரும் சேர்ந்து வழிந்து கொண்டிருந்தது.  அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக எங்கள் அருகில்  ஆட்டோ  ஒன்று வந்து நின்றது.  அந்த ஆட்டோ டிரைவர் வெளியில் எட்டிப் பார்த்து எங்களைக் கூப்பிட்டார்.

"உள்ள ஏறி உக்காருங்க.  நான் கொண்டு விடறேன்."

இதற்கு தான் காத்திருந்தது போல் என் மகள் உள்ளே தாவி ஏறினாள்.   நானும் உள்ளே ஏற ஆட்டோ மெதுவாய் நகர்ந்தது.  ஆட்டோ சத்தத்தை கேட்டோ என்னவோ மாடுகள் இரண்டும் நகர்ந்து ஆட்டோ செல்ல வழி வகுத்தது.  அவற்றைக் கடந்து(பக்பக் இதயத்துடன்), அங்கு நிற்கும் மனிதர்களைக் கடந்து, என் வீடு வர, ஆட்டோவை நிறுத்தினேன்.  இறங்கி அவருக்கு நன்றி சொன்னேன்.

"ரொம்ப தேங்க்ஸ்ங்க.  நீங்க இல்லாட்டி நாங்க எப்டி வந்திருப்போம்னு தெரியல"

அவர் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு, பதில் ஏதும் சொல்லாமல், ஆட்டோவைக் கிளப்பிச் சென்றார்.

அந்த ஆட்டோ டிரைவர் எங்கிருந்து வந்தார் என்று தெரியாது,  நான் தவித்துக் கொண்டிருப்பது அவருக்கு எப்படி தெரிந்தது என்றும் தெரியாது.  ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது.

                                       நன்றும் வரலாம் தீதும் வரலாம்
                                       நண்பன் போலே தந்தை வருவார்.

                                       வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
                                       வருடும் விரலாய் தந்தை வருவார்.

                                               


1 comment:

  1. எழுத்தில் அருமை! கருத்தில் நெகிழ்வு!

    ReplyDelete