ஹிந்தீ.....

 நாம் ஒன்று நினைத்தால்,  நம் நினைப்பை போலவே சம்பவங்கள் ஏற்பட்டால் அதற்கு பெயர்
"Law of Attractionஆ?"  எனக்கு தெரியவில்லை.  ஆனால் மே மாதம் இருபத்தி மூன்றாம் தேதி,   ஒன்றை நினைத்து மனம் வருந்தினேன்.  என் மனதில் அந்த வருத்தம் புதைந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் தான், என் நினைவை ஒத்தாற் போல் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

மே 23 - பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அபார வெற்றி பெற்ற நாள்.  அவர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி மிக உண்டு எனக்கு.  அந்த வெற்றியின் தொடர்சியாக மோடி அவர்கள் பி.ஜே.பி தலைமையகத்தில் நிகழித்திய வெற்றி உரையை ட்விட்டரில் பார்க்க  நேர்ந்திட்டது.   என் மன வருத்தித்திற்குக் காரணம் அந்த உரை.....சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் உரையின் மொழி...ஹிந்தி. எனக்கு ஹிந்தி சுமாராக தெரியும். 

  (என் ஹிந்தி அறிவிற்குக் காரணம் என் அம்மா.  விடாப்படியாக ஹிந்தி வகுப்பில் சேர்த்து விட்டது மட்டுமல்லாமல், தினமும்  தலை வாரிப் பின்னும் சமயம் ஹிந்தி சொல்லிக் கொடுப்பாள்.  அப்படி என் அம்மா கற்றுக் கொடுத்ததின் விளைவு ஹிந்தி சினிமா பார்க்கவும், ஒரளவு ஹிந்தியில் பேசி சமாளிக்கவும் என்னால் முடியும்).  

ஆனால் பிரதமர் மோடி அவர்களின் உரையின் பல இடங்களில் ஹிந்தி வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை.  சப்-டைட்டில் இருந்தால் நன்றாய் இருக்குமே என்று தோன்றியது. அதே அதிபர் ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்ற பின் நிகழ்த்திய ஆங்கில உரையை என்னால் சுலபமாய் புரிந்து கொள்ள முடிந்தது.  ஒவ்வொரு வார்த்தையும் புரிந்தது.  அந்த புரிதலால் தான் வருத்தம் ஏற்பட்டது. 

ஆங்கிலம் என்ற அன்னிய மொழியை நன்றாக கற்றுக் கொண்டு விட்டோம்.  ஹிந்தி என்ற இந்திய மொழியை கற்றுக் கொள்ள தவறிவிட்டோம்...இல்லை...தவறவில்லை. ஹிந்தி என்ற மொழியைக் கற்றுக் கொள்ள நமக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுவிட்டது. 

இந்தியாவில் இருக்கும் வரை ஹிந்தியைப் பற்றி தெரியவில்லை.  அமெரிக்கா வந்த பிறகு தான் தெரிந்தது....குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள்.  பஞ்சாபியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள்.  ஓரிய மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள்....இவ்வளவு ஏன்....நமக்கு பக்கத்தில் இருக்கும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் கூட ஹிந்தி பேசுகிறார்கள்.  தமிழர்களாகிய நாம்.....  நாம் ஆங்கிலத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம்.  ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாய் பேசினால் வெட்கப்படுவோம்,  தமிழ் எழுத படிக்கத் தெரியவைல்லை என்றால் பெருமை படுவோம்....ஹிந்தி.....ஹிந்தி கற்றுக் கொண்டால்/கற்றுக் கொடுக்கப்பட்டால் தமிழ் அழிந்து போய் விடும் என்று கூச்சலிடுவோம். 

ஹிந்தி கற்றுக் கொடுக்கப்பட்டால் தமிழ் அழிந்துவிடுமா என்ன? ஆந்திராவில் ஹிந்தி பேசுவதால் தெலுங்கு அழிந்ததா, கர்னாடகாவில் கன்னடம் அழிந்ததா? ஆங்கிலத்தால் பிராந்திய மொழி பேசுவதோ எழுதுவதோ படிப்பதோ மெல்ல மெல்ல குறைந்து போகுமே தவிர, ஹிந்தியால் எந்த கேடும் வராது. 

சில மாதங்களுக்கு முன்  "நீயா நானா"வில்.....யாருக்குத் தமிழ் நன்றாக தெரியும் என்ற ஒரு எபிசோட்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒரு பக்கம், தமிழ் நாட்டில்  வாழ்ந்து கொண்டிருக்கும் (ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்ட) வட இந்தியர்கள் மறு பக்கம்.  திருக்குறளும், ஐம்பெரும்காப்பியங்களும், பாரதியார் பாடல்களும் என வட இந்தியர்கள் தமிழ் காவியங்களை சிலாதித்துக் கொண்டிருக்க, நம் தமிழர்களுக்கு அதில் ஒன்று கூட தெரியவில்லை...ஹிந்தி கற்காமலேயே தமிழ் மறைந்து கொண்டு தானே இருக்கிறது.

தாய் மொழியைத் தவிர வேறு மொழிகள் கற்பதால் குழந்தைகளுக்கு அறிவுத் திறன் மேம்படுமாம்.  நம்மை போல் வயதானவர்கள்....மன்னிக்கவும்....என்னைப் போல் வயதானவர்கள்
 வேறு மொழிகள் கற்றால்....அல்சைமரிலிருந்து தப்பிக்கலாமாம்.  இதெல்லாம் நம் தமிழ் அரசியல் வாதிகளுக்கு தெரிந்து இருக்காது..........இல்லை....இல்லை....தெரிந்திருக்கும்....அதனால் தான் அவர்கள் நடத்தும் பள்ளியில் மட்டும் ஹிந்தி கற்றுக் கொடுத்து அவர்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்கிறார்கள்....

இத்துடன் முடிக்க நினைக்கையில் அடுத்த அறையில் இருந்த் என் மகளிடம் இருந்து ஒரு ஐமெசேஜ்  வந்தது..

"mein alaadeen philm dekhana chaahata hoon"

நாம் ஹிந்தியைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் இந்த பெண் ஹிந்தி எப்படி.....ஹிந்தியே தெரியாதே அவளுக்கு என்று நினைத்து

"என்னடி இது?" என்று இருந்த இடத்திலிருந்து கத்த...தமிழில் கத்த....

அது  அங்கிருந்து மீண்டும் மெஸேஜ் தட்டிற்று.

"mein hindi seekhana chaahata hoon.  I'm using google translate to learn Hindi"

நாம் ஒன்று நினைத்தால்,  நம் நினைப்பை போலவே சம்பவங்கள் ஏற்பட்டால் அதற்கு பெயர்
"Law of Attractionஆ?"  எனக்கு தெரியவில்லை.




No comments:

Post a Comment