(விகடகவி பத்திரிக்கையில் எழுத்தாளை சுஜாதா பிறந்த நாளையொட்டி நான் எழுதியது)
சுஜாதாவைப் பற்றி ஜி.சுஜாதா..!
சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை.....எப்பொழுதும் போல் திருப்பதி ஶ்ரீநிவாஸரைப் பார்த்து "திருமலையில் மீனாகவோ,செண்பக மரமாகவோ, தூணாகவோ, படியாகவோ பிறந்து உன் பவள வாய் காண்பேனே" என்று குலசேகர ஆழ்வாரின் பாசுரத்தைப் பாடி முடித்த அடுத்த நொடி....அந்த எண்ணம் உதித்தது.....
எங்கோ ஒரு இடத்திற்குச் சென்றிருந்த போது.....அந்த இடத்தில் ஏதேனும் ஒன்று ஆவனே என்று நினைத்தேனே.....அது எங்கே.....திருப்பதியிலா? திருப்பதியில் ஏதேனும் ஒன்றாய் பிறக்க வேண்டும் என்பது நிரந்தரமாய் இருக்கும் ஆசை தான்....இருந்தாலும் திருப்பதியில் தோன்றவில்லையே..... "ஏதேனும் ஒன்று ஆவேனே..." எங்கே தோன்றிற்று...எங்கே தோன்றிற்று.....என்று மண்டையை உடைத்துக் கொண்டதில்.....எந்த இடம் என்று நினைவில் வந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருந்த போது...(நிற்க.... வெளியூரில் இருக்கிறேன்....கடைசியாக புத்தகக் கண்காட்சிக்கு சென்றது...1999இல்.) அங்கிருக்கும் புத்தக ஸ்டால்களை எல்லாம் நோட்டம் விட்டு வந்து கொண்டிருந்த போது...கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலின் வெளியே.... எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பேனர்(banner) மாட்டப் பட்டிருந்தது...பெரிய பேனர்..... சுஜாதா அவர்களே அங்கு நின்று கொண்டிருப்பது போல் ஒரு தோற்றம்.....அந்த பேனரைப் பார்த்து நவரசங்களுக்கு உள்ளாகி...அந்த பேனருடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு.....அந்த ஸ்டாலின் உள்ளே சென்றால்....எங்கெங்கு காணினும் சுஜாதா அவர்களின் புத்தகங்கள்(வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களும் இருந்தன)...ஒரே இடத்தில் அவரின் புத்தகங்கள் அனைத்தையும் பார்த்ததும்....மூச்சும் பேச்சும் நின்று போய் விட்டது......மூச்சும் பேச்சும் மீண்டும் வந்த போது அந்த ஸ்டாலில் கூட்டம் கூடிவிட்டது....சொல்லி வைத்தாற் போல் அங்கு வந்திருந்தவர்கள் சுஜாதா அவர்களின் புத்தகங்களை தான் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.....இந்த புத்தகக் கடலில் நான் படிக்காத சுஜாதா அவர்களின் புத்தகங்களை வாங்கிக் கொண்டு பில் போடலாம் என்று ஹாண்ட் பேக்கை திறந்து பணம் எடுக்கையில்...."பில் போட்டா, வந்த வேலை முடிஞ்சுதுனு இந்த கடைய விட்டு போணுமே....சுஜாதா அவர்களை விட்டு போக மனசில்லையே....." என்று நினைத்து பில் போடுவதை தள்ளி வைத்த போது தான்....கிழக்கு பதிப்பகத்தின் சேல்ஸ் மானேஜர் வந்தார். அந்த மனிதர் ஒரு ஆச்சரியம்......இதற்கு முன் அவரை நான் பார்த்தது கிடையாது...இருந்தாலும் என்னுடன் மிகவும் தன்மையாகவும், இனிமையாகவும் உரையாடினார்...சுஜாதா அவர்களைப் பற்றி நிறைய விஷயங்களைக் கூறினார்......ஏற்கனவே அந்த இடத்தை விட்டு போக மனமில்லை....இதில் சுஜாதாவைப் பற்றி விஷயங்களை வேறு அவர் சொல்ல.....அப்பொழுது தான் நினைத்தேன்...."இந்த ஸ்டால்ல ஒரு மேஜையாகவோ, நாற்காலியாகவோ அல்லது வேறு ஏதேனுமாக இருந்தால்....சுஜாதா அவர்களின் புத்தகங்களோடு இருக்கலாம்.....சுஜாதா அவர்களைப் பற்றி பிறர் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்....."
அன்று உதித்த எண்ணம் போன வாரம் மீண்டும் நினைவில் வந்தது......பெருமாளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்...."பெருமாளே, குலசேகர ஆழ்வார் உன்னைப் பத்தி பாடினா....நான் வேற எங்கயோ அந்த பாட்டு மாதிரி ஏதோ ஒளறிண்டு இருக்கேன்...என்னை மன்னிச்சுடு...." மன்னிப்பு கேட்டு விட்டு வேறு பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கும் போது மீண்டும்.....
இந்த முறை "கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்" என்று நம்மாழ்வாரின் பாசுரம். பெருமாளை விட்டுப் பிரிந்ததால் நம்மாழ்வாரால் உறங்க முடியவில்லை....பெருமாளாளை விட்டு தரிக்க முடியாமையால்......கண்ணில் நீர் ஆறாய் பெருகிறது. நம்மாழ்வாரின் பிரிவாற்றைமையை அழகாய் சொல்லும் பாசுரம்.... பாசுரத்தை சொல்லிமுடித்த அடுத்த வினாடி...என் பொல்லா மனம் வேறு என்னவோ யோசித்தது....
சுஜாதா அவர்கள் மறைந்து பதினொரு வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தும் கூட அவர் பிரிவால் வாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன்....சுஜாதா என்ற பெயரைக் கேட்டதுமே கண்ணில் நீர் வரும் ரசிகர்களையும், அவர் இல்லாமல் வாடும் ரசிகர்களையும், எப்பொழுதும் அவர் நினைவாகவே இருப்பவர்களயும் நான் பார்த்திருக்கிறேன். அப்படி இருப்பவர்களைப் பார்த்ததால் தானோ என்னவோ, நம்மாழ்வாரின் பாசுரம் எனக்கு சுஜாதாவின் ரசிகர்களை நினைவூட்டியது.
இருந்தாலும் நம்மாழ்வாரின் பாசுரத்தை சேவித்துக் கொண்டிருந்த போது வேறு நினைவில் மூழ்கியதற்கு பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வேறு பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கும் போது மீண்டும்....
இந்த முறை "வாடினேன் வாடி வருந்தினேன்..." திருமங்கையாழ்வாரின் பாசுரம்.
துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்சாரத்திலே பிறந்து, கூடாதவர்களுடம் கூடி, பெரும் துயர் பட்டு, கடைசியில் நாராயாணா என்னும் நாமத்தைக் கண்டு கொண்டேன்....என்று திருமங்கையாழ்வார் நிலையை உணர்த்தும் பாசுரம். அந்த என் பொல்லா மனம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து எதையோ அசை போடத் துவங்கியது.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் வேறு எழுத்தாளர் ஒருவர் கதையைப் படித்துவிட்டு, ஏன் படித்தோம் என்று தலையில் அடித்துக் கொண்டு, ஒரு நாள் முழுவதும் கோவப்பட்டு/துயரப்பட்டு.....மீண்டும் சுஜாதா அவர்களைப் படித்தபின் தான் உயிர் திரும்பியது...என் செய்கை ஏனோ அந்த சமயத்தில் திருமங்கையாழ்வாரின் "வாடினேன் வாடி வருந்தினேன்" பாசுரம் தான் நினைவில் வந்தது.
பெருமாளிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்...."பெருமாளே மன்னிச்சுடு. நான் ஒவ்வொரு பாசுரம் சேவிக்கும் போதும் வேறு ஏதோ நினைவுகள் வந்துண்டே இருக்கு...இனிமேலாவது உன்னைப் பத்தி நினைவும் மட்டும் இருக்கும் படியா பாத்துக்கோ" என்று வேண்டிக் கொண்டபின்.....வேறு நினைவுகளுக்கு போகாமல் ஒழுங்காய் பாசுரம் சேவித்தாலும்....
சுஜாதா அவர்கள் இப்பொழுது எங்கிருப்பார்?
"திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்" என்று பெருமாளை சேவித்துக் கொண்டிருப்பாரா இல்லை அவருக்குப் பிடித்த ஶ்ரீரங்கத்தில் ஏதேனும் ஒன்றாய் பிறந்திருப்பாரா? என்ற சிந்தனை ஒடிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment