இந்த உதாரணம் சொல்லக்கூடாது என்றாலும்.... “எங்கெல்லாம் ராம நாமம் இருக்கோ அங்கெல்லாம் அனுமார் இருப்பார்” என்பது போல் எங்கெல்லாம் புத்தகங்கள் இருக்கிறதோ (லைப்ரரியோ, புக் ஷாப்போ, புக் ஃபேரோ) அங்கெல்லாம் நான் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அந்த ஆசையின் காரணமாக ஒரு “புக் சேல்”க்கு வாலண்டியர் செய்ய ஒப்புக் கொண்டேன். என்ன ஏது என்ற ஐடியா இல்லாமல் புக் சேல் நடக்கும் இடத்திற்கு சென்றேன். அசந்து போனேன். முப்பதாயிரம் புத்தகங்கள் எல்லா genre விலும். அந்த முப்பதாயிரம் புத்தகங்களையும் genre வாரியாக பிரிக்க வேண்டும். என்னையுன் சேர்த்து எட்டு வாலண்டியர்கள். Genre வாரியாக பிரிக்க தொடங்கினோம். Genre வாரியாக பிரித்ததைவிட நான் படித்தது தான் அதிகம். அங்கிருந்த வாலண்டியர்கள் எல்லாம் என்னை விட வயதானவர்கள். அவர்களுக்கு அந்த கால புத்தகங்கள் எல்லாம் அத்துப்படியாயிருக்க, எனக்கு தெரிந்தது எல்லாம் இந்த கால புத்தகங்கள். அவர்களுக்கு தெரிந்ததை எனக்கு சொல்ல, எனக்கு தெரிந்ததை நான் அவர்களுக்கு சொல்ல...மூன்று மணி நேரம் போனது தெரியவில்லை . மறு நாள் children’s books வயது வாரியாக பிரிக்கும் வேலை. மிகவும் பிடித்தது. பிடித்ததின்ன் காரணமாகவோ என்னவோ கிடுகிடு என முடித்து விட்டேன். அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி எனக்கு நன்றி தெரிவிக்க..நான் சந்தோஷத்தில் திளைக்க...உண்மையான சந்தோஷம். இது போல் என் வாழ்க்கையில் புத்தகங்களுடன் செலவிட்டது கிடையாது. எல்லாம் ஆங்கில புத்தகங்கள். அந்த புத்தகங்களில் நான் படித்தது ஒரு சதவிகிதம். கேள்விபட்ட புத்தகங்கள் முப்பது சதவிகிதம். மீதம் சதவிகிதம் எனக்கு தெரியாத புத்தகங்கள். இருந்தாலும் அந்த புத்தகங்களுக்கு நடுவில் இருப்பது எனக்கு பிடித்திருந்தது. இதுவே ஒரு அறையில் மனிதர்கள் நிறைந்திருக்க...அதில் பாதிக்கும் மேல் எனக்கு தெரியாத நபர்களாய் இருந்தால் தவித்துப் போயிருப்பேன்... சரி விட்ட இடத்திற்கு வருவோம்... புத்தகங்களை பிரித்து முடித்த பிறகு வேறு என்னவெல்லாம் genre இருக்கிறது என்று பார்ப்போம் என சுற்றி வர... foreign language புத்தகங்கள் ஒரு இடத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. அதில் அதிகம் இருந்தது Chinese புத்தகங்கள், அராபிக் புத்த்கங்கள். நம் ஊர் புத்தகங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்த போது ஒரே ஒரு தெலுங்கு புத்தகம் இருந்தது. அதற்கு பக்கத்தில்....தமிழ் புத்தகங்கள்... ஐந்து...அட என, என் வாய், முகம், கண், காது எல்லாம் சிரித்தது. இரண்டு வைரமுத்து கவிதைகள், ஒன்று எஸ். ராமகிருஷ்ணன், ஒன்று திருக்குறள்..கடைசியாக... கடைசியாக....கடைசியாக....சுஜாதாவின் புத்தகம்...”ஶ்ரீரங்கத்து கதைகள்”.... என்னால் நம்ப முடியவில்லை. சந்தோஷம் தாங்கவில்லை. கண்ணில் நீர். இந்த ஊரில்,இந்த இடத்தில் சத்தியமாக நான் சுஜாதாவின் புத்தகத்தை எதிர்பார்க்கவில்லை. அதுவும் என்னிடம் இல்லாத புத்தகம். சுஜாதாவை நான் தான் தேடி செல்வேன். இந்த முறை அவர் என்னை தேடி வந்திருக்கிறார். அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு புக் சேல் உரிமையாளர்களிடம் சென்று... எனக்கு தெரிந்த வரையில் எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி சொல்லிவிட்டு... அந்த புத்தகத்தை வாங்கிக் கொள்வதாக சொன்னேன்... அந்த உரிமையாளர்களில் ஒருவர், “ உன் பேச்சில் இருக்கும் enthusiasm எனக்கு பிடித்திருக்கிறது. வாலண்டியர்கள் ஒன்றிரண்டு புத்தகங்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். நீ இதை எடுத்துக் கொள்,” என்றார். எனக்கு தலை கால் புரியவில்லை. “தாங்க்ஸ் சோ மச்” என்பதோடு நிறுத்திக் கொண்டேன். பெண் தான் அவர்... இந்த ஊரைப் போல் கட்டிப் பிடித்து என் நன்றியை தெரிய படுத்தி இருக்கவேண்டும்.
As you sow, as you reap.
No comments:
Post a Comment