வணக்கம் சென்னை

அஹம், அஹம்…….சென்னை செல்லும் காலம் நெருங்கிடுத்து.  சரி, டிக்கெட்ட புக் பண்ணுவோம்னு பாத்தா,  யானை விலை குதிரை விலை டிக்கெட்டு.  அடடா, இவ்வளவு விலை ஜாஸ்தியா இருக்கே,  சென்னைக்கு எப்படி போறது, போவோமா, மாட்டோமா இப்படி எல்லாம் எனக்கு நானே புலம்பிக் கொண்டு இருக்கும் போது தான், "திருவிளையாடல்" திரு சிவாஜி, திரு நாகேஷ் நகைச்சுவை காட்சி பார்க்க நேர்ந்தது.  அட, தருமி நாகேஷ் புலம்பற மாதிரியே  நானும் புலம்பறேனே, அப்டினு சின்ன பொறி தட்டியதின் விளைவு தான் இந்த பதிவு.

"வணக்கம் சென்னை" தலைப்பபுக்கும் , இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்குத் தெரியுமா,எனக்குத் தெரியலை.  கிடக்குது விடுங்க,  புலம்பலுக்கு போவோம் வாங்க.


"ஐயா, தெய்வமே, சென்னைக்கு போறதுக்கு டிக்கெட் விலை ரெண்டாயிரம் டாலராம்.  உனக்கு காதுல விழுதா நான் பேசறது. உன் காதுல விழாதே. கடவுளே, கடவுளே!"

"அது ரஜினி பட வசனங்க."

"போயா, போயா. உன்னை யாருயா கேட்டா. பாத்தயா, பாத்தயா, நான் உன்ன கூப்பிடும் போது மத்தவங்க தான் பேசறாங்க, நீ பேசமாட்டேங்கறயே.  ஐயோ, ஐயோ.  ஒரு டாலரா, ரெண்டு டாலரா, ரெண்டாயிரம் டாலர்  ஆச்சே. இந்த நேரம் பாத்து கைல பைசா இல்ல. எனக்கில்ல, எனக்கில்ல. நான் சென்னை போபோறதில்ல.  யாருலாமோ போபோறாங்க."

கடவுள் தோன்றுகிறார்.

"பெண்ணே!"

"போங்கண்ணே!"

"நில் பெண்ணே."

"யாருங்க அது?"

"அழைத்தது நான் தான்."

"ஏன் அழைச்சீங்க?யாருங்க நீங்க?"

"ப்ரிட்டீஷ் அர்வேஸ், லுப்தான்சா அர்வேஸ். கத்தார் அர்வேஸ், ஏதிஹாத் அர்வேஸ், எமிரேட்ஸ் அர்வேஸ் போன்ற அனைத்து அர்வேசும் அறிந்தவன் நான்."

"நம்ம ஜாதியா.  சென்னைக்கு போறவரா.  டிக்கெட் புக் பண்ணீட்டீங்களா? தலை முதல் கால் வரைக்கும் தங்கத்துல ஜொலிக்கறத பாத்தா நீங்க வசதியுள்ளவர் மாதிரி தெரியுது."

"நீ என்ன?"

"விட்டேனே அனல் மூச்சு, அதிலிருந்தே தெரியலையா, என் நிலைமை. வேகுதுங்க உள்ள."

"அதனால் தான் ஆண்டவனிடம் முறையிட்டுப் புலம்பிக் கொண்டிருந்தாயோ?"

"ஆமாம்.ஆமாம்.  மனுஷன் கிட்ட சொல்லி ஒரு புண்ணியம் இல்ல. ஆண்டவன் கிட்ட தான் அழுது புலம்பறதுனு முடிவு பண்ணிட்டேன்."

"நீ புலம்பியது என் காதில் விழுந்தது."

"சரி தான். ஒளிஞ்சிருந்து ஒட்டு கேட்டிருப்பீங்க."

"ஒட்டுக் கேட்கும் பழக்கம் எனக்கில்லை அம்மா. நான் உன் எதிரிலேயே இருந்தேன்."

"ஒஹோ, ஒஹோ.  நான் கண்ண மூடி வேண்டிட்டு இருக்கும் போது முன்னாடி வந்து நின்னிருப்பீங்க, நான் பாத்திருக்க மாட்டேன்."

"உண்மை.  கண் மூடித் தனமாக இருப்பவர்களுக்கு நான் தெரிவதில்லை."

"அட, என்னங்க. கடவுள் மாதிரி பேசறீங்க."

"அதுவும் உண்மை. நான் முற்றும் கடந்தவன்."

"கொஞ்சம் போச்சுனா நான் தான் கடவுள் விழுந்து கும்பிடுனுவீங்க போல இருக்கே."

"அதுவும் உண்மை.  கடவுள் உன்னிலும் இருக்கிறார். என்னிலும் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்."

"சாப்டாச்சா?"

"அஹா, அஹா."

"ஏப்பமா! சரிதான்.  நேரத்துக்கு சாப்டறவர் போல இருக்கு.  நின்னு நிம்மதியா பேசிட்டு இருக்கீங்க.  இங்க இனிமே தான் சமையலே பண்ணனும். வரேன்."

"நில். வா இங்கே. சென்னைக்கு போவதற்கு டிக்கெட் உனக்குக் கிடைத்துவிட்டால், உனக்கு சந்தோஷம் தானே?"

"ஐயோ.  அந்த டிக்கெட் மட்டும் எனக்கு கிடைச்சுட்டா, அடுத்த நிமிடம் நான் சென்னைல இருப்பேன்."

"கவலைப்படாதே, அந்த டிக்கெட்டை நான் உனக்குத் தருகிறேன்."

"டிக்கெட்ட நீங்க தரீங்களா.  வேண்டியது தான்.  உங்க டிக்கெட்ட கொண்டு போய் என் டிக்கெட்டுனு சொல்லிக்கவா.  சொந்த டிக்கெட்ல போகும் போதே பாஸ்போர்ட், விசா, செக்ட் லக்கேஜ், கெரி ஆன் லக்கெசுனு கன்னா பின்னா கேள்வி கேக்கறாங்க. எதோ பராவல்லைனு அட்ஜச்ட் பண்ணி போயிட்டு இருக்கேன். அதையும் கெடுக்கலாம்னு பாக்கறீங்களா?"

"பரவாயில்லை."

"திருடலாங்றீங்களா?"

"உனக்கு டிக்கெட் வேண்டுமா, இல்லையா?"

"வேணுமே….  உங்களுக்கு வேண்டாமா?"

"வேண்டாம்."

"சத்தியமா, நிச்சயமா, உண்மையா?"

"எல்லாருக்கும் டிக்கெட் குடுப்பவன் நான். எனக்கேதற்கம்மா டிக்கெட்?"

"என்னது, என்னது?"

"அந்த டிக்கெட்டின் மேல் எனக்கு பற்றில்லை. நீ எடுத்துக் கொள் என்றேன்."

"யோவ், இப்ப புரிஞ்சுதுயா.  புதுசா ட்ராவல் ஏஜென்சி ஆரம்மிசுருக்க.  உன் டிக்கெட்ட நீயே எடுத்துட்டு போனா, எப்படி உதைப்பாங்களோ, என்ன பண்ணுவாங்களோனு பயந்து  டிக்கெட்ட என் கிட்ட தள்ற இல்ல?சரி, இந்த டிக்கெட்ட பாத்து என்ன ப்ளேனுக்குள்ள விட்டாங்கனா  ஒண்ணும் இல்ல. கன்னத்துல ரெண்டு விட்டாங்கனா?

"என்னிடம் வா. நான் பார்த்துக் கொள்கிறேன்."

"கன்னம் எப்படி வீங்கிருக்குனா?"

"அஹா,அஹா….."

"நான் மறுபடி உங்கள எங்க பார்க்கலாம்?"

"எங்கும் பார்க்கலாம்."

"தெரு தெருவா சுத்தறவர் போல இருக்கு.  ஆமா, சென்னைய பத்தி உனக்குத் தெரியுமாயா?"

"சென்னையைப் பற்றிய என் புலமையை பரீட்சித்துப் பாரேன், உனக்குத் திறமை இருந்தால்."

"என்னது,என்னது, என் கிட்டயே மோத பாக்கறயா? என் திறமைய பத்தி உனக்குத் தெரியாது. தயாராஇரு."

"கேள்விகளை நீ கேட்கிறாயா, அல்லது நான் கேட்கட்டுமா?"

"ஆ…நீ கேக்காத, நான் கேக்கறேன். எனக்கு கேக்க தான் தெரியும்."

"கேள்."

"சற்றுப் பொறும்."

"கேள்"

"பிரிக்க முடியாதது என்னவோ?"

"சென்னை கடற்கரையும், சிலைகளும்."

"பிரியக் கூடாதது?

"மெரினா பீச்சும், சுண்டலும்."

"சேர்ந்தே இருப்பது?"

"ரங்கனாதன் ஸ்ட்ரீட்டும், கும்பலும்."

"சேராமல் இருப்பது?"

"பஸ் ஸ்டாப்பும், பஸ்ஸூம்."

"செய்யக்கூடாதது?"

"பாண்டி பசாரில் பார்க்கிங்."

"செய்யவேண்டியது?"

"லஸ் கார்னரில் ஷாப்பிங்."

"கேட்கக் கூடாதது?"

"கண்டக்டரிடம் சில்லறை."

"கேட்க வேண்டியது?"

"மெட்ராஸ் பாஷை."

"நகைகளுக்கு உகந்தது?"

"ஜி.ஆர்.டி."

"ஆடை அணிகலன்களுக்கு?"

"ஐந்து மாடி குமரன்."

"பாத்திரங்களுக்கு?"

"ரத்னா ஸ்டோர்ஸ்."

"புத்தகங்களுக்கு?"

"ஹிகின் பாதம்ஸ்."

"காபிக்கு?"

"அடையார் ஆனந்த பவன்."

"மினி மீல்ஸ்க்கு?"

"ஹோட்டல் சரவண பவன்."

"இனிப்பிற்கு?"

"கிருஷ்ணா ஸ்வீட்ஸ்."

"காரத்திற்கு?"

"க்ராண்டு ஸ்வீட்ஸ்."

"ட்ரெயினுக்கு?"

"சென்ட்ரல்."

"பஸ்ஸிற்கு?"

"கோயம்பேடு."

"ப்ளேனிற்கு?"

"மீனம்பாக்கம்."

"சென்னை செல்வதற்கு?"

"நீ."

"டிக்கெட்டிற்கு?"

"நான்."

தெய்வமே!!



4 comments:

  1. wow manni... kalakkals... cinema-ku dialogue writer-a poidalam!

    ReplyDelete
  2. wow... Kalakkals! cinema dialogue writer-a poidalam!

    ReplyDelete
  3. As usual super suja? Eppo vare? Ticket kidachudha?!!!

    ReplyDelete