ஹேப்பி வேலண்டைண்ஸ் டே





"கண்ணம்மா, எழுந்துரு. ஸ்கூல்க்கு போணும். மணி ஆச்சு பாரு." தூங்கும் ஏழு வயது மகளை தட்டி எழுப்பினேன்.

அமெரிக்காவின் ஃபிப்ரவரி மாதக் குளிரில், படுக்கையைப் பார்த்தால்  இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கலாம் போல் தான் இருந்தது.

"டென் மோர் மினிட்ஸ் அம்மா,"  பத்து விரலை விரித்துக் காட்டிவிட்டு புரண்டு படுத்தாள்.

"சரி.  தூங்கு.  உங்க ஸ்கூல்க்கு போன் பண்ணி, நீ இன்னிக்கு வேலண்டைன்ஸ் டே பார்ட்டிக்கு வரலைனு சொல்லிடறேன்."  ஆடற மாட்டை ஆடி கறக்கணும்.

தூக்கத்தை உதறி துள்ளி எழுந்தாள் என் சின்ன கண்மணி.

"ஹேப்பி வேலண்டைன்ஸ் டே, அம்மா." பச்சக் என்று என் கன்னத்தில் ஒரு முத்தம். "ஐ லவ் யூ சோ மச்."

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

"ஐ லவ் யூ டூ,  குட்டி பாப்பா." இப்பொழுது பச்சக் என்று அவள் கன்னத்தில் நான் முத்தமிட்டேன்.

"நீ ஸ்கூல் பார்ட்டிக்கு வரயா?"

"ஸாரி, லட்டு.  அண்ணாவ போய் ஸ்கூல்லேந்து கூட்டிண்டு வரணும் இல்லையா?"  அவள் முகம் வாடியது.  "ஐ ப்ராமிஸ். நெக்ஸ்ட் யியர் கட்டாயமா வரேன்."

" அட்லீஸ்ட் வேலண்டைன் குக்கீஸாவது பண்றயா?"  அவள் குரலில் ஆதங்கம்.

"நீ ஸ்கூல்லேந்து வரும் போது குக்கீஸ் ரெடியா இருக்கும், ஒ.கே?"

அவள் முகம் மலர்ந்து, புன்னகை அறும்பியது.

"அப்பா எங்க?"

"அப்பா ஆபிஸ் போய் அரை நூற்றாண்டாச்சு."

"வாட்?"

"நத்திங்."

அவளைக் கிளப்புவதில் நான் ஈடுபட்டிருந்தாலும், என் மனம் எங்கோ ஒடிக் கொண்டிருந்தது.  என்ன தான் நாம் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுவதில்லை என்றாலும், "ஹேப்பி வேலண்டைன்ஸ டே" என்று அவர் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.  தங்கம் வேண்டாம், வைரம் வேண்டாம், ஒரு ஒற்றை ரோஜா போதும்.  ஒண்ணும் கிடையாது.  சதா சர்வ காலமும்  மீட்டிங், மீட்டிங், மீட்டிங்.

ஒரு வழியாக அவளைக் கிளப்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு,  அதிகாலையில் தொடங்கிய சமையலை முடித்து விட்டு சிறிது உட்காரலாம் என்று நினைத்த போது "வேலண்டைன் குக்கீஸ்" மணி அடித்தது. கம்ப்யூட்டரை திறந்து, குகூளில் "எக்லெஸ் வேலண்டைன் குக்கீஸ்" தேடி, சுலபமாய் ஒரு செய்முறையைக் கண்டு பிடித்தால், வீட்டில் தேவையான பொருட்கள் இல்லை. கணவர்  மத்தியானம் சாப்பிட வரும் போது தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்லலாமா என்று யோசித்து...பி மாற்றிக் கொண்டேன்.  ஓவ்வொரு பொருளுக்கும் அவரிடமிருந்து மெசேஜ் வரும்....அந்த மெசேஜ்களுக்கு பதில் சொல்வதற்குள் நாமே போய் வாங்கி வந்து விடலாம் என்று நினைத்து காரை எடுத்தேன்.

கார் சூப்பர் மார்க்கெட்டை வந்தடைந்தது.  ஷாப்பிங் கார்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு , வலது கால் எடுத்து வைத்து கடைக்குள் நுழைந்தேன்.  நுழைந்தவுடன், விற்பனைக்காக வைக்கப்பட்ட  ரோஜா மலர் கொத்துக்கள் "ஹேப்பி வேலண்டைண்ஸ் டே" என்று பரை சாற்றின்.  ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த பலூன்களில் "லவ் இஸ் இன் த அர்", "ஷர் யூர் லவ்" போன்ற வார்த்தைகள் தெரிந்தன.

பார்த்தது போதும், வந்த வேலையை கவனிப்போம் என்று கையில் உள்ள லிஸ்ட்டைக் கவனித்தேன். மனம் மீண்டும் எங்கயோ சென்றது.  வேலண்டைன்ஸ் டே என்பது காதலிப்பவர்களுக்கு மட்டும் இல்லை.   நேசிக்கும் எல்லாருக்கும் நம் அன்பை தெரியப் படுத்தலாம் என்று நினைத்தேன்.  அடுத்த  நொடியில், பையைத் துழாவி போனை எடுத்தேன்.  தாயைச் சிறந்த கோவில் இல்லை, அம்மாவிற்கு  "ஹேப்பி வேலண்டைண்ஸ் டே" சொல்வோம் என்று நம்பரைத் தட்டினேன்.

"இந்த தடத்தில் உள்ள எண்கள் உபயோகத்தில் உள்ளன……." மெஷினின் குரல்.  மாமியாருக்கு போன் போடுவோம்.  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால், கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.  அந்த வரத்தைக் கொடுத்த அன்னைக்கு இன்று "ஹேப்பி வேலண்டைண்ஸ் டே" சொல்வோம் என்று நம்பரைத் தட்டினேன்.

ட்ரிங், ட்ரிங் அங்கு போன் அடித்தது.

"ஹலோ!" மாமியாரின் குரல்.

"ஹேப்பி வேலண்டைண்ஸ் டே, " சொல்ல நினைத்தேன், வார்த்தை வரவில்லை.  தயக்கம். எதனால் தயக்கம், தெரியவில்லை.

"ஹலோ!" மீண்டும் மாமியாரின் குரல்.

"ஹலோ!நான் மீரா பேசறேன் . இந்த பீன்ஸ் பருப்பு உசிலி ஒழுங்காவே வர மாட்டேங்கறதே?"  தலையில் அடித்துக் கொண்டேன்.

மாமியாருடன் பேசிவிட்டு   மீண்டும் என் அம்மாவை தொடர்பு கொண்டேன்.

ட்ரிங், ட்ரிங்  போன் அடித்தது.

"ஹலோ!" அம்மாவின் குரல்.

"அம்மா!"   ஹேப்பி வேலண்டைண்ஸ் டே சொல்ல தயாரானேன்.

"ஒரு நிமிஷம் இருடி.  கை அலம்பிண்டு வந்துடறேன்.  அப்பாட்ட பேசிண்டு இரு."

(போம்மா போ. நல்லா இரு)

அப்பாக்கு ஹேப்பி வேலண்டைண்ஸ் டேவா.  சான்சே இல்லை.

அப்பாவிடம் பேசி முடித்த பின் அம்மா மீண்டும் வந்தாள்.

"இன்னிக்கு உங்க ஊரல  வேலண்டைண்ஸ் டேவாமே" என்று ஆரம்பித்து, எந்த ஊரில்  எல்லாம் வேலண்டைண்ஸ் டே கொண்டாடுகிறார்கள் என்று பட்டியலிட்டாள். என் சுருதி முற்றிலும் குறைந்தது.

"நீ ரொம்ப ஓவரா நியூஸ் பாக்கற. வை ஃபோனை." என்றேன் கடுப்பை மறைத்துக் கொண்டு.

 வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு காரில் ஏறினேன்.

கார் சிறிது தூரம் செல்வதற்குள், ஃபோனில் மெசேஜ் சத்தம்.  ஃபோன் ஹேண்ட் பாக்கிற்குள் இருந்தது. ஹேண்ட் பாகைத் திறந்து போனை எடுத்து பார்க்கும் நிலையில் நான் இல்லை.  மேலும் எனக்கு தெரியும்.  இது அவரிடமிருந்து தான் வந்திருக்கிறது என்று.  ஒன்று  சாப்பிட வருகிறேன் என்று அனுப்பி இருப்பார், இல்லை சாப்பிட்டு முடித்து ஆஃபிஸிற்கு கிளம்புகிறேன் என்றிருப்பார்.  பிறகு பார்த்துக் கொள்லலாம் என்று விட்டு விட்டேன்.

வீட்டின் கதவு திறக்கவும், பசியில் வயிறு கத்தவும் சரியாய் இருந்தது.  உண்டு முடித்த பின் "குக்கீஸை" பார்போம் என்று கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு, கையை அலம்பிக் கொண்டு, டைனிங் டேபிளை அடைந்தேன்.   அவர் சாப்பிட்டு விட்டு சென்ற அடையாளங்கள் தெரிந்தன. சாதத்தைப் போட்டு, நெய் இட்டு, குழும்பு ஊற்றி பிசைந்தேன்.  கைகளில் சூடு தெரிந்தது.  வைத்திருந்த உணவு பாத்திரத்தை எல்லாம் தொட்டுப் பார்த்தேன்.  எல்லாம் சூடாக இருந்தது.  அதிகாலையில் செய்த உணவு, இவ்வளவு நேரம் சுடுமா? இவர் சுட வைத்திருப்பாரோ? இருக்காதே.  இருக்கும் அவசரத்தில் சாப்பிட்டதே பெரியது.  இதில் சுட வைப்பதற்கெல்லாம் ஏது இடம்? என்ன அதிசயம் இது.

போன் மெஸேஜ் ஞாபகம் வர, இடது கையால் பையைத் திறந்து, போனை எடுத்தேன்.  அவரின் செய்தி சிரித்துக் கொண்டிருந்தது.

"சாப்பிட்டு விட்டேன்.  உனக்காக உணவை சூடு செய்திருக்கிறேன்."

அப்பொழுது தான்,  இரண்டு நாட்களுக்கு முன் இரவு உணவு உண்ணும் போது நடந்த உரையாடல் நினைவில் வந்தது.

"சுடச்சுட  சாதம் சாப்ட்டு எத்தனை நாளாச்சு.  சமையல்ல பண்ணி, பண்ண இடத்தெல்லாம் க்ளீன் பண்ணி, பசங்களுக்குப் சாப்பாடு போட்டு, நம்ம சாப்டறதுக்குள்ள சாப்பாடு ஆறியே போயிடறது.  என்னிக்கு தான் சூடா சாப்டப் போறேனோ தெரியலை."

"நீயே சுட பண்ணி சாப்டறாதானே."

"நோ தாங்க்ஸ்.  அது எக்ஸ்ட்ரா வேலை."

அன்று சொன்னதின் விளைவு, இன்று சுடச்சுட உணவு.

காரணம் புரிந்ததும் வாய் சிரித்தது. மனம் "தேங்க்ஸ்" என்றது.

 இடது கை மெசேஜ் தட்டியது. "ஹேப்பி வேலண்டைண்ஸ் டே."


( "இன் அ மீட்டிங்" என்று வந்த பதில், இந்த கதைக்கு தேவையற்றது.)












1 comment:

  1. கண்ணம்மாவை எழுப்பியதில் தொடங்கிய பரபரப்பும் ஏக்கமும் வாய் சிரித்தவரை அப்படியே உங்கள் எழுத்தில் இருக்கிறது! கடைசிவரியில் சட்டென பிரேக் அடிக்கும் அந்த 'சுஜாதா'த்தனம் உங்கள் எழுத்துக்கும் இருக்கிறது.. வாழ்த்துகள்!

    ReplyDelete