நடுவுல கொஞ்சம் ஆள காணும்

நான் காணாமல் போனது எனக்கே தெரியாத போது,  சற்றும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து ஒரு அறிவிப்பு. "சுஜாதா,  உங்களை ஒரு மாதமாக காணவில்லை."  படித்த பின் விழிகள்  விரிந்தது, வாய் சிரித்தது.  அதோடு மனது அதை மறந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அறிவிப்பு. "சுஜாதா, உங்களின் எழுத்துக்காக உங்கள் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நீங்கள் சிறிது காலமாக எழுதவில்லை."  நான் எழுதவில்லை என்பது எனக்குத் தெரியும், என் எழுத்தைப் படிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த கணிணிக்கு எவ்வாறு தெரிந்தது? என்னை எழுத தூண்டு வதற்காக கணிணி பயன்படுத்திய பொய் அம்பை நினைத்து சிரித்தேன்.

நான் ஒன்றும் பிறவி எழுத்தாளன்(ளி) இல்லை.  அதனால் தானோ என்னவோ எழுதுவதற்கு எண்ணிலடங்கா விஷயங்கள் இருப்பினும், எழுத தொடங்கும் போது எல்லாம் மறந்து விடுகிறது.  விஷயங்களை நினைவிற்குக் கொண்டு வந்து அதை எழுத்தில் வடிப்பதற்குள் பெரும்பாடாக இருக்கிறது.   எழுதுவது ஒரு பக்கம் கடினம் என்றால், எழுதவதற்கு நேரம் கிடைப்பது அதை விட மிகக் கடினம்.  ஒரு நாளில், ஒரு மணி நேரம் எழுதவதற்குக் கிடைத்தால் அதிகம்.  அந்த ஒரு மணி நேரத்தில் எழுதுவது  பத்து நிமிடங்கள் தான்.  யோசிப்பது ஐம்பது நிமிடங்கள்.  ஆக ஒரு மணி நேரத்தில் நான்கு வரிகள் எழுதினால் அதிகம்.  எழுதிய  நான்கு வரிகள் என்  திறமையின்மையைப் பறைசாற்றும். இந்த கஷ்ட்டம் எதற்கு. எழுதவே வேண்டாம். வேறு வேலை பாரப்போம் என்றால் அது இயலவில்லை.  ஆடின காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல், எழுதின கையும், யோசிக்கும் மனதும் சும்மா இருப்பதில்லை.  எழுத வேண்டாம் என்று கையைக் கட்டிப் போட்டாலும், எதை எழுதலாம் என்று மனது அலைகிறது.  மனதின் கட்டளைய ஏற்று எழுத ஆரம்பித்தால்….நீங்கள் இந்த பத்தியின் ஆரம்பத்திற்கு மறுபடி செல்ல வேண்டும்.  ஆனால் ஒன்று.  இந்த தடைகளை எல்லாம் மீறி, எழுதி முடித்தால், கிடைக்கும் நிறைவு அலாதியானது.  அந்த அலாதியான் இன்பம் தான் மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது.  சமீபத்தில் ஆங்கில பத்திர்க்கையில் படித்த ஒரு வாசகம் ஒன்று: " Writing is very much like getting a root canal. Painful, daunting, stressful, but great once it’s done." 
இப்படியாக நான் எழுதுவதற்கு திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான்   "உங்களை நடுவுல கொஞ்சம் ஆள காணும்" என்ற  அறிவிப்பு வந்தது.

இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த நேரத்தில், சிறிது காலமாக என் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் வந்து செல்லும் ஒரு இடத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல் வந்தது.  அந்த இடம் "ரிஷிகேஷம்".  போன முறை சென்னையில் இருந்து வரும் போது அள்ளிக் கொண்டு வந்த புத்தகங்களில் ஒன்று, எழுத்தாளர் திரு. பாலகுமாரனின் "மானஸ தேவி".  அந்த கதையின் களம் ரிஷிகேஷம்.  அந்த கதையை படித்து முடித்த பிறகு,  "Eat, Pray, Love"  என்ற ஆங்கில நாவல் படிக்கும் வாய்ப்பு கிடைத்த்து.  அதிலும் ரிஷிகேஷம் வந்து போனது.  கடந்த வாரம் CNN செய்தியாளர் Jessica Ravitz என்பவர் அமெரிக்காவிலிருந்து ரிஷிகேஷத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.  அங்கு தனக்கு ஏற்படும் அனுபவங்களை "பேஸ்புக்" கில் பதிவு செய்து வருகிறார்.  படிப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது.  அதாவது, நமக்கு தெரிந்த ஓர் இடத்தை வேறு ஒருவரின் பார்வையில் படிக்கும் போது, அதுவும் ரிஷிகேஷ் போன்ற ஓர் இடத்தைப் பற்றி படிப்பதற்கு, அதுவும் இங்கு உட்கார்ந்து  கொண்டு, அங்கு நடப்பவற்றைப் படிக்கும் போது, அதிசயம், ஆச்சரியம், ஆனந்தம் எல்லாம் வருகிறது.  அங்கு இருக்கும் துறவிகளைப் பற்றியும், கங்கைக் கரையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியும், மற்றும் பலவற்றைப் பற்றி அவர் எழுதவும், அதற்கு இந்தியர் அல்லாதவர்கள் சிலாகித்து கருத்து எழுதியிருப்பதை படிக்கும் போது, "ஈன்ற பொழுதில்…."என்ற குறள் நினைவிற்கு வருகிறது.  நம் இந்தியாவைப் பற்றி மற்றவர்கள் உயர்வாகக் கூறும்போது, பெரிதாக உவகை பொங்க தான் செய்கிறது.   படிக்க படிக்க, "நடுவில் கொஞ்சம் அங்கு சென்று விட்டு வரலாமா" என்று தோன்றுகிறது.  அத் தொகுப்பைப் பற்றி படிக்க ஆசை இருப்பின், இதோ
https://www.facebook.com/RoamingRavitz

சமீப காலமாக ஒருவரின் மேல் பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கிறேன்.  அவர் இன்று உயிருடன் இல்லை. இருந்தாலும் " posthumous award" போல் இது "posthumous பித்து".  அவர் யார்?அடுத்த பதிவில்….அதுவரையில் "Stay hungry, Think Different"!!

இது போல் எனக்கு நானே முன்னோட்டம் அளித்துக் கொண்டால் தான் உருப்படியாய், ஒழுங்காய் எழுத முடியும்.  அப்படி எழுதினால் தான் "நடுவுல கொஞ்சம் ஆள காணும்" என்ற அறிவிப்பு வராமல் இருக்கும்.


No comments:

Post a Comment