வர்ஜினியா அடையார் ஆனந்த பவனுக்கு ஒரு பயணம்😎

அடையார் ஆனந்த பவன் சென்று வந்ததைப் பற்றி எல்லாம் யாராவது எழுதுவார்களா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.  திரும்பிய பக்கமெல்லாம் அடையார் ஆனந்த பவன் இருக்கும் ஊரில் நாங்கள் இல்லை.  யார் செய்த புண்ணியமோ... இத்தனை வருடங்களுக்கு பிறகு.........எங்களுக்கு பக்கத்தில்...முப்பது  மைல் தொலைவில்.....பக்கத்து மாகாணத்தில்....அடையார் ஆனந்த பவன் திறக்கப்பட்டிருக்கிறது.  திறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனாலும், போக முடியவில்லை.  காரணம்....கூட்டம்....கூட்டம்....லஞ்ச்சோ, டின்னரோ....எதற்கு போனாலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும் என்று செய்தி காதில் விழ....இரண்டு மணி நேரம் காத்திருப்பதற்கு மனம் ஒப்பவில்லை.

இப்படி இருக்கையில் தான்... பக்கத்தில் வசிக்கும் (வேற்று மொழி பேசும்)குடும்ப நண்பர்களுடன்  ஆலோசனை நடத்தினோம்.  இரவு  ஏழு மணிக்குள் சென்று விட்டால், கூட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வோம் என்று முடிவெடுத்தோம்.  அதன்படி ஜனவரி மாதம், வெள்ளிக்கிழமை அடுத்து வரும் சனிக்கிழமை நல்ல நட்சத்திரம், நல்ல திதி, நல்ல யோகம் கூடிய சுபதினத்தில், மாலை  ஐந்தே முக்காலுக்கு மணி சுப லக்னத்தில்....நாங்கள் அனைவரும் அடையார் ஆனந்த பவனுக்கு கிளம்பினோம்.

 நாற்பத்தைந்து  நிமிடங்கள் பிரயாணம் செய்து அ.ஆ. பவனை இனிதே அடைந்தோம்.   கூட்டம் இல்லை.   எங்களுக்கு இடம் கிடைத்து உட்கார்ந்த ஐந்தே நிமிடங்களில் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது.  ஏதோ  நாள்,  நட்சத்திரம் பார்த்து கிளம்பியதில் நாங்கள் தப்பித்தோம்.

அங்கிருந்த மெனு கார்டை எடுத்து பக்கம் புரட்டி பார்த்ததும்.... என் கண்கள் இமைக்க மறுத்தன...என் இதயம் துடிக்க மறந்தது...என் காதுகளில் ஆயிரம் வீணையின் இன்ப நாதம்...மொத்தத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை சந்தோஷம், பூரிப்பு....ஏன்? மட்டர் பனீர், பாவ் பாஜி, பிசி பேளா, கொங்குரா பப்பூ, கடாய் பிண்டி, பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் என்று இந்த ஊர்  இந்திய ரெஸ்டாரெண்டு மெனு கார்டுகளில் படித்து படித்து, நொந்து நூடுல்ஸ் ஆன நேரத்தில்......எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு, சுண்டைக்காய் வத்தல் குழம்பு, வடை கறி, கொத்து பரொட்டா, சில்லி பரோட்டா, ஆப்பம்....என்று அ.ஆ.பவன் மெனு கார்ட்டில் படித்தால்.....உச்சி முதல் உள்ளங்கால் வரை பூரித்து தான் போகும்.  என்ன தான் பாரத விலாஸ் போல் "எல்லா மக்களும் என் உறவு, எல்லா மொழியும் என் பேச்சு"  என்று  வாழ்ந்த்தாலும் "குழம்பு" என்ற வார்த்தையை பார்த்தவுடன்.....ஆயிரம் வீணை சத்தம் கேட்டது உண்மை...

அந்த மெனு கார்டையே நான் பார்த்துக் கொண்டிருக்க வேற்று மொழி பேசும் என் தோழி, "சுஜாதா வாட் இஸ் சில்லி பரோட்டா?" என்றாள்.  ரைட் question to a wrong person.  "சில்லி பரோட்டா இஸ், மைதா சப்பாத்தி layered வித் க்ரீன் சில்லீஸ் , ரெட் சில்லீஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ்." அத்தனை சில்லியைக் கேட்டதும் அவள் பயந்து விட்டாள்.  பின் போனால் போகட்டும் என்று சில்லி பரோட்டாவின் உண்மை தத்துவத்தை விளக்கினேன்.  அவளுக்கு மட்டும் அல்ல...எங்களுடன் வந்தவர்கள் வேற்று மொழி பேசுபவர்கள் ஆதலால் அந்த மெனு கார்டில் உள்ள தமிழ் உணவுகளைப் பற்றி விளக்கி சொன்னதில்  நானும் என் கணவரும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டோம்.

ஒரு வழியாக ஆர்டர் செய்து உணவு வகைகள் வரத் தொடங்கின. அன்று அடையார் ஆனந்த பவனில்  எங்கள் உணவு வரும்போது இப்படி  தான் இருந்தோம்....




ஆஹா...ஓஹோ என்ற ருசி இல்லாவிட்டாலும், உணவு வகைகள் நன்றாகவே இருந்தன.  அதை எடுத்து வந்தவர் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு இருந்திருக்கலாம்.  திருவிழாக் கூட்டம் போல் மக்கள் திரண்டு வந்தால், முகத்தில் சிரிப்பு காணாமல் தான் போகும்.

பேசிக் கொண்டே ருசித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்ததை அறிந்த கொண்ட ஹோட்டல் ஊழியர் எங்கள் டேபிளை வேறு யாருக்கோ allocate செய்ய, நாங்கள்  எழுந்து கொள்வதற்குள், அவர்கள் எங்கள் பின்னால் வந்து நின்று கொண்டு விட்டார்கள்.  அடையார் ஆனந்த பவன் மற்றும் இங்கு புதிதல்ல, இது போல் பின்னால் வந்து நிற்கும் மக்களும் புதிது.

அந்த திருவிழாக் கூட்டத்தில் நாங்கள் பதினொரும் பேரும் அகப்பட்டு அ.ஆ.பவனை விட்டு வெளியில் வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. 

சாப்பிட்ட உணவின் ருசி வாயிலிருந்து மறையவில்லை....அடுத்த சுபயோக சுப தினத்தை பற்றி யோசிக்கத் தொடங்கி....ஹி...ஹி.....

சென்னையில் இருந்தால் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு பவனிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இங்கிருந்தால் அடிக்கடி தடுக்கி விழ முடியாது.  அப்படி தடுக்கி விழுந்து, அதைப் பற்றி எழுதாமல் இருந்தால்...அதுவும் பருப்பு உருண்டை குழம்பை மெனு கார்டில் பார்த்து நான் எழுதாமல் இருந்தால்....அடுத்த முறை எனக்கு பருப்பு உருண்டை குழம்பு கிடைக்காது😱

No comments:

Post a Comment