தர்பார் (ரெவ்யூ அல்ல, No review)

உங்கள் ஊரில் தர்பார் என்று வெளியானது என்று எனக்கு தெரியாது, எங்கள் ஊரில் போன புதன் (8th Jan) அன்று வெளியானது.  எனக்கு அன்றே சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை.  ஆனால் என் பெண்ணிற்கு புதனும் வியாழனும் Basketball Game இருந்ததால் இரண்டு நாட்களும் போக இயலவில்லை.  உன் Basketball Gameஐ அடுத்த வாரம் பார்த்துக் கொள், இன்று தர்பார் போகலாம் என்று கெஞ்சியும் கேட்டேன், கொஞ்சியும் கேட்டேன். அவள் மசியவில்லை. 

இதில் என் கணவரும் மகனும் சேர்ந்து கொண்டு  "Basketball Game முக்கியமா, ரஜினி சினிமா முக்கியமா" என்று கேட்க,  நான் "ரஜினி சினிமா தான் முக்கியம்.  அடுத்த வாரம் Game விளையாடலாம். ரஜினி சினிமா first day first show பாக்க முடியுமா" என்று சொல்ல "உன்ன மாதிரி ஒரு அம்மாவ உலகத்துல பாக்க முடியாது"  என்று என்னை வஞ்சப் புகழ்ச்சி செய்தனர்.  எப்படியோ வெள்ளி கிழமை 6:45 ஷோவிற்கு போவதாக முடிவெடுத்து டிக்கெட் புக் செய்தார் என் கணவர்.  

வெள்ளிகிழமை வந்தது.  அன்று காலையிலிருந்து ஒரே பரபரப்பு.    பூரிப்பு.

"6:45க்கு படம் ஆரம்பிக்கறது.  நம்ம ஆறு மணிக்கு எல்லாம் வீட்டுலேந்து கிளம்பணும்.  நீங்க யாரும் ஆறு மணிக்கு கிளம்பல நான் கார் எடுத்துண்டு போயிண்டே இருப்பேன்,"  என்று அறிக்கை விட்டேன்.

என் மகன் என்னை மேலும் கீழும் பார்த்தான்.

"ஆறு மணிக்கு கிளம்பினா 6:10க்கு எல்லாம் தியேட்டர் போயிடுவோம்.   6:45 வரைக்கும் என்ன பண்றது?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது.  நீங்க அங்க ஏதாவது சாப்டணும்னு சொல்வேங்க.  அதுக்கு போய் லைன்ல நிக்கணும்.  அந்த லைன் எவ்ளோ பெரிசா இருக்கும்னு  எல்லாம் தெரியாது.  I don't want to take any risk.  ஆறு மணி it is," என்று சொல்லிவிட்டு அவர்கள் பதிலுக்கு எதிர்பாராமல் வெளியே ஓடிவிட்டேன்.  

மாலை 5:45 ஆனது.  நான் கிளம்பிவிட்டேன்.  என் குடும்பம் கிளம்பவில்லை.  

"உங்க எல்லாருக்கும் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.  மணி 5:45 ஆச்சு. இன்னும் கிளம்பாம உக்காந்துண்டு இருக்கேங்க?"

"அம்மா...." என்று கத்தினான் மகன்.  "You are too much," என்றான் கூடவே.

ஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்...

"டேய், உனக்காக நான் எவ்ளோ பண்றேன்.  எனக்காக ஒரு நாளைக்கு சீக்கிரம் கிளம்பக் கூடாதா?"  

கிளம்பி விட்டான்.  தியேட்டர் உள்ளே நாங்கள் போகும் போது மணி 6:07.   புது தியேட்டர்.  எங்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.  பாப்கார்ன் போன்ற இத்யாதி வகைகள் விற்கும் இடமும் தெரியவில்லை.   அங்கே வேலை செய்பவரைக் கேட்க...."நீங்கள் உள்ளே சென்று உட்காருங்கள்.  அங்கே வந்து ஆர்டர் எடுத்துக் கொள்வோம்," என்றார்.

உள்ளே சென்றோம்.  மணி 6:15. அது முப்பத்தைந்து பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கக் கூடிய box theater.  அருமையாய் இருந்தது.  Reclining seats.  கூடவே சின்னதாக டைனிங் டேபிள்.  அந்த டேபிளில் ஒரு button.  அந்த buttonஐ அழுத்தியதும் அலாவுதீனின் ஜீனி போல் ஒருவர் டக்கென்று வந்து நின்றார்.  எங்களுக்கு வேண்டிய உணவு வகைகளி ஆர்டர் எடுத்துக் கொண்டு மறைந்து விட்டார்.  நாங்கள் சீட்டில் செடில் ஆவதற்குள் உணவு வகைகளுடன் வந்தார்.  அதற்குள் மணி 6:45.  விளக்குகள் ஒவ்வொன்றாய் அணைக்கப்பட, நாங்கள் ரிக்ளைனிங்க் சீட்டில் படுத்துக் கொள்ள (போர்வை மட்டும் இல்லை) படம் ஆரம்பமானது.  

எப்பவும் போல் ரஜினி வரும் முதல் காட்சியில் தியேட்டர்  அதிர்ந்தது.   உடம்பில் சந்தோஷம் பரவியது.  ரஜினி  அவர்கள் அநியாயத்திற்கு இளமையாய் இருந்தார்.  அதுவும் க்ரீம் கலர் ஷர்ட்டில் படு ஸ்மார்ட்டாக இருந்தார்.  அழகான அப்பாவாய், துடிப்பான போலீஸ் ஆஃபிஸராய் துறு துறுவென இருந்தார்.  குறைகள் இருந்தாலும் எனக்கு பெரிதாக தெரியவில்லை.  படம் எப்பொழுது முடியும் என்றும் தோன்றவில்லை.   ஆனால் ரஜினி அவர்கள் இத்துடன் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  தளபதி, பாட்ஷா படங்கள் மூலம் மிகப் பெரிய உயரத்தை அடைந்து விட்டார். இனி அடைவதற்கு வேறு ஒன்றும் இல்லை.  நடிகர் திலகம் சிவாஜி, படையப்பா, தேவர் மகனில் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்கள் ரஜினி அவர்களும் ஏற்றுக் கொள்ளலாம்.  நம்மால் ஒத்துக் கொள்ள் முடியுமா என்று தான் தெரியவில்லை.

படத்தை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, என் கணவர், " ரஜினி இத்தோட நிறுத்திக்கறது தான் நல்லது, " என்றார்

"அட நம்மள மாதிரியே அவரும் நினைக்கறாரே," என்று  நான் சந்தோஷப்பட....."இந்த ரஜினி சினிமா வரும் போது எல்லாம் நீ படுத்தற பாடு தாங்க முடியல. இத்தோட ரஜினி நிறுத்திண்டா நம்ம வீட்டுக்கு நல்லது," என்றார்.

 நான் படுத்திய பாட்டை நினைத்துப் பார்த்தேன்.  மீண்டும் அதே போல் பரபரத்து, பூரித்து, பாடுபடுத்த வேண்டும் போல் தோன்றுகிறது. 

1 comment: