சென்னை புத்தகத் திருவிழா

“ஆடி ஆடி ஃப்ண்டாஸ்டிக் ஆடி” என்று ஆடி தடபுடலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது சென்னையில்.  டி.வி.யை திறந்தால் இந்த கடையில் ஆடி தள்ளுபடி, அந்த கடையில் ஆடி தள்ளுபடி என்று எக்கசக்கமாக விளம்பரம்.  ஆனால் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தககத் திருவிழாவைப் பற்றி  விளம்பரம் ஏதுவும் டி.வி.யில் நான் காணவில்லை.  துணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், புத்தகங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற எண்ணத்துடன், ராயப்பேட்டை வை.ஏம்.சி.ஏ. திடலில் நடக்கும் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றேன். இதற்கு  முன்னர் எப்பொழுது சென்னை புத்தகத் திருவிழாவிற்க் சென்றேன் என்று நினைவில் இல்லை.  ஆனால் பள்ளியில் படிக்கும் பொழது,  புத்தக விழாவின் தொடக்க தினத்தில்,(ரிப்பப்ளிக் டே பரேட் போல்) ராதாகிருஷ்ணண் சாலையில், கரகம் ஆடியது நினைவில் இருக்கிறது.   சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் மேடை  அருகே நடனமாடிக் கொண்டு வரும் பொழுது அந்த கரகம் தலையிலிருந்து கீழே விழுந்ததும் நினைவில் நன்றாகவே இருக்கிறது.  அந்த நினைவுகளுடன்  அந்த திடலில் நுழைந்ததும், சென்னை புத்தகத் திருவிழா பேனரைப் பா
ர்த்ததும் என் காதில் ஆயிரம் வீனையின் ஒலி கேட்டது.  பறவைகள் படபடத்தன.  அருவிகள் நீரை வார்த்தன.  வலது காலை எடுத்து வைத்து அரங்கத்திற்குள் நுழைந்தேன்.  மலைத்துப் போனேன். நூற்றிஐம்பதிற்கும் மேல் பதிப்பகங்கள் பங்கு கொண்டிருந்தன.  எந்த அரங்கத்திற்குள் முதலில் போவது என்று குழம்பிப் போனேன். வரிசையாக செல்வதா, இல்லை நமக்கு தெரிந்த பதிப்பகங்களுக்கு செல்வதா என்ற மனது நடத்திய பட்டிமன்றத்தில் "வரிசையாக செல்வதே” வென்றது.  முதலில் “போதிவனம்” என்ற பதிப்பகம்.  உள்ளே சென்றவுடன் கண்ணில் பட்டது “சுஜாதா”வின் புத்தகங்கள்.  ஏதோ காணாததைக் கண்டது போல் மனம் முழுவதும் உவகை.  இத்தனைக்கும் அந்த புத்தகங்களில் பாதி என்னிடம் இருக்கிறது. திருவிழாவை முழுவதுமாக பார்த்துவிட்டு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்வோம் என்று வெளியில் வந்தால் பக்கத்து அரங்கில் “பொன்னியின் செல்வன்” ஐந்து பாகங்களும் ஒரே புத்தகமாய் வண்ணத்தில் ஒவியங்களுடன் இருந்தது.  அந்த புத்தகத்தை தூக்கி தூக்கி படிப்பதற்கு முடியுமா என்ற யோசனையில் திரும்பினால்…அட
…..நம் விகடன் பிரசுரம். உள்ளே சென்றால் அவள் விகடனும், அவள் கிச்சனும்  நிறைந்திருந்தன.  அங்கு இருந்தவர் அவள் விகடனைப் பற்றி எனக்கு சொல்ல, “எனக்கே அவள் விகடனைப் பற்றியா….” என்று நினைத்தேன்.  அந்த அரங்கிற்கு பக்கத்தில் நம் லேனா தமிழ்வாணனின் மணிமேகலைப் ப்ரசுரம்.  இதே போல் பல பதிப்பகங்கள்.  கிழக்கு பதிப்பகத்தில் சுஜாதாவின் புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன.   “திருமகள் நிலையத்தில்” தான் எனக்கு ஞானம் பிறந்தது.  அந்த அரங்கத்தின் ஒரு பாதி பாலகுமாரனின் புத்தகங்கள்.  அப்பப்பா……ஒவ்வொரு புத்தகத்திலும் அவரின் முகம்.    ஒவ்வொரு புத்தகம் எழுதுவதற்கும் அவர் எடுத்துக் கொண்ட கால அவகாசம் எவ்வளவு என்று தெரியவில்லை.  ஆனால் அத்தனையிலும் நான் கண்டது அவரின் அயராது உழைப்பு.  எழுத்தின் மேல் தீரா காதல் இருந்தால் மட்டும் இருந்தால் போதாது, உழைக்கவும் வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன்.  இதே போல் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை என்று எழுதாமல் தினம் தினம் எழுதவேண்டும்.  அயராது உழைக்க வேண்டும்.  அப்படி உழைத்தால் என் புத்தகமும் ஒரு நாள் இந்த புத்தகத் திருவிழாவில் இடம்பெறலாம் என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.  கடைசியாக உயிர்மை பதிப்பகம் சென்றேன்.  உயிர்மை பதிப்பகத்தில் தான் சுஜாதாவின் அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  ”  அந்த அரங்கத்தில் நான் படித்திராத சுஜாதாவின் புத்தகங்கள் நிரம்பி இருந்தன.  எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியாமல் திண்டாடிப் போனேன்.  ஒரு வழியாக சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்து, சிறிது தூரம் நடப்பதற்குள்…யாரையோ விட்டு பிரிந்த மாதிரி ஒரு உணர்வு.  மீண்டும் அந்த பதிப்பகத்திற்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.  நேரமின்மை காரணமாக செல்ல முடியாமல் போனது.  அமெரிக்காவில் எங்கள் ஊரில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வாலண்டியராக பங்கேற்று,  புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வருபவர்களுக்கு பல வகைகளில் உதவி புரிவதுண்டு.  அதே போல் சென்னை புத்தகத் திருவிழாவிலும் ஏதோ ஒரு விதத்தில் பங்கு கொள்ள ஆசை….ஆசை நிறைவேறினால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  

Comments

 1. மகிழ்ச்சி...

  சென்னையில் இருக்கும்போது ஒவ்வொரு வருடமும் தவறாமல் புத்தக கண்காட்சி திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்வோம்..

  தற்போது அலுவல் நிமித்தம் ஸ்வீடனில் வசித்து வருவதால், கடந்த இருமுறை நடைபெற்ற விழாவை miss செய்துவிட்டோம்...

  உங்கள் பார்வையில் நல்ல புத்தகங்கள் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்..
  "சித்தி-சுஜாதா" அவர்களே...

  ReplyDelete

Post a Comment