அஞ்சரை பெட்டி மனது


மிளகாய், தனியா, சீரகம்....என்று ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத பொருட்கள் அஞ்சரை பெட்டியில் இருந்தாலும், அவை எல்லாம் சேரும் பொழுது குழம்போ, ரசமோ கிடைப்பது போல், என் மனதிலும்( எல்லோர்) மனதிலும் ஒன்றொடொன்று சம்பந்தமில்லாத ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்து, மனதை பல  நேரங்களில் குழம்பு போல் கலக்குகிறது.  சில் நேரங்களில் ரசம் போல் தெளிவாக இருக்கிறது.  அவ்வாறு தோன்றிய சம்பந்தமில்லா எண்ணங்களின் தொகுப்பு இது.

மழையடிக்கும் சிறுபேச்சு, வெயிலடிக்கும் ஒரு பார்வை:

ஆங்கிலத்தில் "posthumous" என்று ஒரு சொல் உண்டு.  "இறந்த பின்" என்று அதற்கு பொருள்.  "posthumously awarded" என்று அடிக்கடி நாம் கேள்விப் பட்டதுண்டு .   "posthumously awarded" போல் நான் என் அப்பாவிடம் "posthumously scared".  நினைவு தெரிந்த வயது முதலாக என் அப்பா காதல் என்பது மிக தவறு என்று சொல்லாமல் சொல்லி வளர்த்திருக்கிறார்.   காதலிக்கப்படுவதும் தவறு, காதல் வயப்படுவதும் தவறு என்று எங்களுக்கு விதித்த ஆணை.  வாழ்க்கையில் கடைப்பிடித்த என் அப்பாவின் ஆணை  எழுத்திலும் வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டது.  சற்றும் எதிர்பாராத விதமாக என் மனதில் தோன்றியது அழகான காதல் கதை.  "அழகான" என்று சொல்லவது தவறு.  "poignant love story" என்பது சரி.  அந்த கதைக்கு வடிவம் கொடுத்து, அதில் வரும் கதாபாத்திரங்களுடன் சில நாட்கள் வாழ்ந்து, மனதில் முழுக்கதையும் (வசனம் உட்பட ..) எழுதி, அதை கம்ப்யூட்டரில் டைப் செய்யும் பொழுது.....என்னால் ஒரு வார்த்தைக் கூட டைப் செய்ய முடியவில்லை.  ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, எத்தனையோ நாட்கள் நானும் முயன்று பார்த்து தோற்று விட்டேன்.  என் மனதை சுற்றி இருக்கும் என் அப்பாவின் லஷ்மண் ரேகா இன்றும் அழியாமல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.  அத்துடன் என் காதல் கதைக்கு விடை கொடுத்து விட்டேன்.  மழையடிக்கும் சிறுபேச்சு, வெயிலடிக்கும் ஒரு பார்வை என் கதையில் இனி இல்லை. 

போறாளே பொன்னுத் தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு:

"கண்ல தண்ணீ டேங்க் வச்சிருக்கயா?" என்று என் வீட்டில் என்னை கேலி செய்யும் அளவிற்கு நான்  அழுவேன்.  தெனாலியில் கமல் அவர்கள் எல்லாவற்றிற்கும் பயப்படுவது போல் நான் எல்லாவற்றிற்கும் அழுவேன்.  அதுவும் இந்தியா செல்லும் பொழுது கணவரை விட்டு செல்வதற்காக அழுவேன்.  இந்தியாவிலிருந்து வரும் பொழுது அம்மாவை விட்டு வருவதற்காக அழுவேன். ஏர்ப்போர்ட்டில் எப்பொழுதும் அழுத கண்ணும், சிவந்த முகமுமாக காட்சி தருவேன்.  இந்த அழுகையினால் பலன்? எப்பொழுதும் யாராவது ஒருவர்/ஒருத்தி தானாய் வந்து என்னுடன் வந்து பேசுவார்கள்.  கடந்த பதினைந்து வருடமாக இது தான் நடந்து கொண்டு இருக்கிறது.  சென்னை ஏர்ப்போர்ட்டில் ஒரு முறை என் கண்ணிலிருந்து வரும் கண்ணீரைப் பார்த்துவிட்டு அந்த டிக்கெட்டிங் நபர் பயந்து விட்டார்.  கவு
ண்டரை விட்டு வெளியே வந்து என் அழுகைக்கான காரணம் கேட்க,  நானும் விளக்கினேன்.  அழும் வேளையில் நான் பொய் சொல்ல மாட்டேன்.  அவரும் அவரின் அக்கா திருமணம் முடிந்து வெளிநாடு போன சமயம், அவர் வீடு எவ்வாறு அழுதது என்று பகிர்ந்து கொண்டார்.  இந்த முறையும் இந்தியா செல்லும் பொழுதும் அங்கிருந்து வரும் பொழுதும் பொல பொலவென்று கண்ணீர் உண்டு.

முறை தான் ஒரு முறை தான் உன்னைப் பார்த்தால் அது வரமே:

இந்தியன் படத்தில் ஒரு வசனம் உண்டு:  "புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல..."  அதே போல் என் அப்பா இந்த உலகத்தில் இல்லை என்று புத்திக்கு தெரிகிறது, மனதிற்கு தெரியவில்லை.  என் அப்பா இருந்த வரை நான் சென்னை செல்லும் பொழுது ஏர்ப்போர்ட்டில் தவறாமல் காத்திருப்பார்.  அவருக்கு என்று ஒரு இடம் இருக்கிறது.  எப்பொழுதும் அங்கே நின்று  கொண்டிருப்பார்.  கஸ்டம்ஸ் முடிந்து, எஸ்கலேட்டரில் இறங்கி, கைப்பைகளை செக்யூரிட்டி செக் செய்து எடுத்துக் கொண்டு,  பெட்டிகளை எடுக்க கன்வேயர் பெல்ட்க்கு போகும் பொழுது, ஏர்ப்போர்ட் வாசலில் காத்திருப்பவர்களைப் பார்க்க முடியும்.  அந்த இடத்தை நான் கடக்கும் பொழுது என் அப்பா கையாட்டுவார்.  இரண்டு வருடங்களுக்கு பின், என் அப்பாவைப் பார்க்கும் பொழுது முன்னமே சொன்னது போல் கண்ணீர் வரும். பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் பொழுது என் அம்மாவும், மாமியாரும், மாமனாரும், மச்சினரும் அங்கு இருந்தாலும் என் அப்பா மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிவார்.  அவருக்கும் பேச முடியாமல் தொண்டை அடைத்து போகும்.  என் அப்பாவின் மறைவிற்கு பிறகு ஒவ்வொரு முறை சென்னை செல்லும் பொழுதும் மனம் இந்த அனுபவம் வேண்டும் என்று துடிக்கும்.  இந்த முறையுக் அதே போல் தான்.  அப்பா இனி இல்லை என்று புத்திக்கு தெரிந்தாலும், மனம் அதை ஏற்க மறுக்கிறது.  M.Kumaran S/o Mahalakshmi என்ற படத்தில் நதியா மறைந்த பின் மீண்டும் வருவது போல், என் அப்பாவும் மீண்டும் வரவேண்டும்.   என் அப்பாவைப் மீண்டும் ஒரு முறை பார்த்தால் அது வரம்.

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்:

மோசம்.  மிகவும் மோசம்.  அதாவது நம் தலைவர்....திரு. ரஜினிகாந்த் அவர்கள் அமெரிக்கா வந்திருக்கிறாராம்.  ஜீலை இரண்டாம் வாரம் இந்தியா திரும்பி செல்கிறாராம்.  அவரை யார் ஜீலை இரண்டாம் வாரம் இந்தியா திரும்ப சொன்னது? என்னுடன் வர வேண்டியது தானே.....போன முறை நான்கு நிமிடத்தில் அவரைத் தொலைத்தேன்.  இந்த முறையும் பக்கத்தில் நெருங்கி வரும் சமயம் தொலைத்து விட்டேன்.  அவரைப் பார்த்து என்ன எதாவது பேச போகிறேனா?  கட்டாயமாக இல்லை.  பின் எதற்காக? நானும் அவரை நேரில் பார்தேன் என்று சொல்வதற்காக.  இதில் நான் மட்டும் ஆசைப் பட்டால் போறாது.  அவரும் சுஜாதாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டால் தான்.........சரி, சரி, உங்கள் கூச்சல் என் காதுகளை வந்தடைந்துவிட்டது.  நானும் அடங்கிவிட்டேன். இருந்தாலும்  மேகம் விடும் தூது, மழை விடும் தூது போல்...இது என் எழுத்து விடும் தூது.  ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் இருக்க ஆசைப் பட்டாலும் நான் வேண்டுவது ஒரு நொடிப் பொழுது.  

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்:

நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு  என் எழுத்தை காசாக்க நினைத்து "எழுத்தாளராக" வேலைப் பார்த்தது.  என் ஆசைக்கு எழுதுவது போய் அவர்கள் சொல்லவதை எழுதி....வேண்டாம். தேவையில்லை.  பத்திரிக்கைகளும் இது போல் தான்.  தொலைக்காட்சி டி.ஆர்.பி. ரேட்டிங்க் போல், பத்திரிக்கைகள் விற்பனை பெறுகுவதற்கு கதை, கட்டூரைகளில் அவர்கள் கைவண்ணத்தைப் புகுத்துவதால்  எழுத்தாளர்களின் அசல் எழுத்துக்கள் அழிக்கப் படுகின்றன . இது எனக்கு மட்டும் நேர்ந்தது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்பொழுது இருக்கும் பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தான் என்று படித்து புரிந்து கொண்டேன். நான் எழுத்தாளாரை மாறிய இடம் என் வலைப்பூ(blog).  இங்கு எழுதுவதை விட வேறு எங்கும் எனக்கு சுகம் இல்லை என்று புரிந்து கொண்டேன்.  எழுதுவது ஒரு வரம் என்றால், இந்த எழுத்தால் கிடைத்த எண்ணிலடங்கா நட்பு மிகப் பெரிய வரம்.  திடீர் திடீர் என்று தெரியாதவர்களிடம் இருந்து வரும் பாராட்டுகள்....என் வாழ்க்கையின் மிகப் பெரிய பொக்கிஷம். "தெரியாதவர்கள்"  பின் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாய் மாறுவது வேறு விஷயம்.  இரு கோடுகள் போல் என் எழுத்து சிறிய கோடு.  அதனால் கிடைத்த நட்பு பெரிய கோடு.  ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் நான் பிறந்தால் இந்த இரு கோடுகளும் என்னுடன் இருக்க வேண்டும்.

இன்னும் பல பல எண்ணங்கள்.  அஞ்சரை பெட்டியில்  மிளகாய், தனியா, சீரகம்....என்று ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத பொருட்கள்  இருந்தாலும், அவை எல்லாம் சேரும் பொழுது குழம்போ, ரசமோ கிடைப்பது போல், என் மனதிலும்( எல்லோர்) மனதிலும் ஒன்றொடொன்று சம்பந்தமில்லாத ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்து, மனதை பல  நேரங்களில் குழம்பு போல் கலக்குகிறது.  சில் நேரங்களில் ரசம் போல் தெளிவாக இருக்கிறது.


No comments:

Post a Comment