சீதையின் தீபாவளி

அயோத்தியா நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது.  சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.  வீடுகளில் வித விதமாய் ஏற்றிய தீபங்களால் அந்த இரவு நேரத்திலும் அயோத்தியா ஒளிமயமாய் திகழ்ந்தது.  வண்ண வண்ண நறுமணப்  பொடிகளும், மலர்களும் வீதியெங்கும் தூவப்பட்டிருந்தன.   ராமரின் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்று  தெரியும் அயோத்தியாவின் அலங்காரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் சீதை.   குளிர் காற்று வீச மழை வருமோ என்று நினைத்து,  நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தாள். நிலவு இல்லாத கருப்பு வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.   பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்க திரும்பினாள்.  ராமர் நின்று கொண்டிருந்தார்.

"இந்த இரவு பொழுதில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் சீதா?"

கண்களை அகல் விரித்து ராமனைப் பார்த்தாள் சீதா.   மரவுரி இல்லை. ஜடை இல்லை.   பட்டாபிஷேகம் முடிந்த ராமர் கம்பீரமாய் இருந்தார்.

"அயோத்தியாவின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன், ஸ்வாமி."

"இத்தனை காலம் காட்டில் இருந்த நாம்  அயோத்தியா நகர மக்களுக்கு என்ன செய்தோம், எதுவுமே செய்யவலில்லை." ராமரின் குரல் தழுதழுத்தது.  "இருந்தாலும் நம்மை வரவேற்பதற்காக இரவு பகலாக  நகரத்தை அலங்காரம் செய்து ,  நமக்காக வழி நெடுகிலும் காத்திருந்து....

சீதை சிரித்தாள்.

"அயோத்தியா நகரில் இருக்கும் பாதி பேர்  ராமரைப் போல் தனக்கு ஒரு பிள்ளை இருக்க மாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள். மீதம் இருப்பவர்கள் உங்களையே தங்கள் பிள்ளையாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.  அப்படி இருக்கையில் உங்களை வரவேற்பது அவர்களுக்கு சுகம் ஸ்வாமி.  அன்றியும், சேர்ந்து இருக்கும் போது இருக்கும் சந்தோஷத்தைவிட, பிரிந்து விட்டு சேரும் போது கிடைக்கும் சந்தோஷம் அதிகம் ஸ்வாமி.  பதினான்கு ஆண்டுகள்....

"சீதா..."ராமர் இடைமறித்தார்.  "இராவணன் உன்னை தூக்கிச் சென்றதால் பத்து மாதங்கள் பிரிந்து இருந்தோம்.  மீண்டும் நாம் சேரும் போது இத்தகைய சந்தோஷத்தை உனக்கு நான் தரவில்லையே சீதா."

அவளும் நோக்கினாள்.  அண்ணலும் நோக்கினான்.

"விபீஷணா, ராவணன் மாண்டான்.  அசோக வனத்தில் இருக்கும் சீதையை அழைத்து வா.  என்னைக் காணாத சோகத்தில் அவள் துவண்டிருப்பாள்.  ரம்பை, மேனகை, ஊரிவசி ஆகியோரைக் கொண்டு சீதாவிற்கு மஞ்சனமாட்டி, ஆபரணங்கள் பூட்டி  அழைத்து வா."

 ஆடை ஆபரணங்கள் அணிந்த சீதா ராமனைக் கண்டவுடன் மெய் சிலிர்த்தாள்.  ஓடிச் சென்று ராமரின் காலடியில் விழுந்து வணங்கினாள்.  தன் காலில் விழுந்த சீதையைக் கண்டு சீதாராமன் பதறினார். உள்ளம் வெடித்தார்.  கண் கலங்கினார். மறு நொடியில் ராஜாராமனாய் மாறி சீதையை சீறினார்.

"இத்தனை காலம் ராவணின் அசோகவனத்தில் நீ எவ்வாறு இருந்தாய் என்று எனக்கு தெரியாது.  ஆதலினால் இனி  உன்னை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.  இங்கே என் எதிரே நிற்காமல் உன் விருப்பம் போல் நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்."

ராமரின் வார்த்தைகள் முள் போல் தைக்க சீதை கண் கலங்கினாள்.  லஷ்மணனைப் பார்த்து கை தொழுதாள்.

"லஷ்மணா, இந்த கடுஞ் சொற்களைக் கேட்ட பின் நான் உயிர் வாழ விரும்பவில்லை.  எனக்காக தீ முட்டு ."

லஷ்மணன் கண்ணீருடன் ராமரை நோக்கினான். ராமர் வாய் திறவாமல் நிற்க, ராமரின் மன நிலையப் புரிந்து கொண்டு தீ முட்டினான்.

 லஷ்மணன் இட்ட தீ பற்றி எரியத் தொடங்கியது. ராமரை வலம் வந்தாள் சீதை.  தீயை நோக்கி நடந்தாள்.  உலகம் கிடுகிடுத்தது.  அக்னி தேவனை மனதில் வேண்டினாள் சீதா.  தீயில் புகுமுன் ராமனைப் திரும்பிப் பார்த்தாள்.

அண்ணலும் நோக்கினான்.  அவளும் நோக்கினாள்.

அரண்மனையின் மேல் மாடத்திலிருந்த ராமர் கண் கலங்கினார.

"சீதா, என்னை மன்னித்து...."

"ஸ்வாமி...." சீதை இடைமறிதாள்.  "சீதாராமனின் அன்பால்,  ராஜாராமன் கூறிய கடுஞ் சொற்கள், கறைந்து மறைந்து மறந்து விட்டன.  மறந்து  போன ஒன்றைப் பற்றி இப்பொழுது பேசுவது எதற்காக?"

ராமர் தலை குனிந்து நிற்க , சீதை ராமரின் கைகளை ஆறுதலாய் பிடித்தாள்.

"இந்த அயோத்தியா நகரத்தை பாருங்கள் ஸ்வாமி.  உங்களின் வருகையால் ஒளிமயமாய் திகழ்கிறது.  இதே போல் என் மனமும் ஒளி மயமாய் ஆனது, ஒருவரின் வருகையால்...." சீதை நிறுத்தினாள்.

ராமர்  புன்னகைத்தார். "யாரது சீதா?"

"அனுமான்...." சீதை நிறுத்தினாள்.  மேலே பேச முடியாமல், தொண்டை அடைத்தது.  கண்களில் கண்ணீர் மறைத்தது.  அவள் பேசட்டும் என்று ராமர் காத்திருந்தார்.

"அசோக வனத்தில் யாருமற்று தனிமையில் இருந்தேன்.  ராவணன் வந்து வார்த்தைகளால் என்னைக் கொன்று விட்டுச் செல்வான்.  ராவணனின் ராணியாக நான் இருக்க வேண்டும் என்று அரக்கியர்கள் ஓயாது துன்புறுத்துவார்கள்.  இந்த துன்புறுத்தல்களின் இடையின் ஒரு நாள் அனுமான் வந்தார்......"  சீதை நிறுத்தினாள்.   அனுமானை நினைத்துக் கொண்டாள்.  முகம் ப்ரகாசித்தது.

"நம் கதையை கூறினார்.  இருண்ட கிடந்த என் மனதில் தீபங்கள் ஏற்றப்பட்டன.  என்னை சிறை மீட்பதற்காக ஆயுத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்ன போது, என் மனதில் தோரணங்கள் தோன்றின.  கடைசியாக, உங்களின் கனையாழியைக் காட்டியபோது.... ஸ்வாமி...என் மனதில் மத்தாப்புக்களும் வாண வேடிக்கைகளும் தோன்றி மறைந்தன."

ராமர் முகம் மலர்ந்தார்.

"அனுமான் இல்லாமல் நாம் இல்லை.
பட்டாபிஷேகம் நடைபெற்ற போது  இதை நீ கூறியிருக்க வேண்டும் சீதை.."

"அப்பொழுது தெரியவில்லை. இந்த அயோத்தியா  நகரத்தின் அலங்காரங்களைப் பார்த்த பின் தோன்றியது. உங்கள் வரவால் அயோத்தியா மகிழ்ச்சியுற்றது.  அனுமானின் வரவால் என் மனம் மகிழ்ச்சியுற்றது.  வருடத்திற்கொரு முறை உங்களின் வரவை இந்த உலகம் கொண்டாடும்.  அனுமனின் வரவை என்றுமே என் மனம் நன்றியுடன் கொண்டாடும்."

கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.   அயோத்தியா நகரைப் பார்த்தாள்.  அயோத்தியா நகரம் விழா கோலம் பூண்டிருந்தது.No comments:

Post a Comment