ஜீவா டைரக்டர் திரு.சுசீந்தரனுக்கு ஒரு கடிதம்

திரு சுசீந்தரன் அவர்களுக்கு,

வணக்கம்.  தங்களின் படமான  "ஜீவா"  பார்க்கும் மிகப் பெரிய பேறு கிடைத்தது.  படத்தைப் பார்த்த பின் நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.  மேலும் இருள் படர்ந்து இருக்கும் எங்கள் "கம்யூனிட்டி"க்கு ஓளி கொடுத்துள்ளீர்கள்.  அன்னிய தேசத்தில் வசிக்கும் நாங்கள்,  இந்தியாவிற்கே திரும்பி விடலாம் என்று பல முறை பெட்டி படுக்கைகளை தயார் செய்தது உண்டு.  அந்த சமயங்களில் எல்லாம் எங்களை இந்தியாவிற்கு குடிபெயர செய்யாமல் தடுப்பது, அங்கு இருக்கும் "ரிசர்வேஷன் சிஸ்டம்".   "Forward Caste" இல் பிறந்ததனால் எங்கு சென்றா
லும் எங்களுக்கு தடா தான்.  பள்ளி, கல்லூரி, வேலை எல்லாவற்றிலும் எங்களுக்கு இடம் இல்லை.  இப்படி இருக்கும் போது இந்தியா சென்று நாம் என்ன செய்வது, நம் பிள்ளைகள் என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்கள் படம் எங்களுக்கு வழிகாட்டியுள்ளது.  "கிரிக்கெட்" என்று ஒரு விளையாட்டு இருக்கிறது என்றும், அந்த துறையில் "Reservation System" இன்னும் வரவில்லை என்றும், அங்கு எங்களைப் போன்றவர்களுக்கு இடம் இன்னும் இருக்கிறது என்றும் தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.  இனி நாங்கள் இந்தியா வந்தால் எங்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்று ஆணித்தரமாக சொல்லியுள்ளீர்கள்.  இதை தவிர வேறு என்ன எங்களுக்கு வேண்டும்?

 மிக முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேனே.  பல லட்சங்கள் செலவழித்து உபனயனம் செய்து,  காயத்ரி மந்திரம் சொல்வதால் வரும் நன்மையும், சந்தியாவந்தனம் செய்வதால் வரும் நன்மைகளையும் பற்றி தான் பிள்ளைகளுக்குக் கூறிக் கொண்டிருந்தோம் இது நாள் வரை.  ஆனால் உங்கள் படத்தைப் பார்த்த பிறகு தான் பூணூலின் மகத்துவம் தெரிகிறது.  முதுகைத் தடவிப் பார்த்து வாய்ப்பு கொடுக்கும் இடங்களில் பூணூல் அணிவதினால் வரும் நன்மை புரிகிறது..  இனி யாரேனும் "பூணூல் அணிவதினால் என்ன நன்மை" என்று எங்களைக் கேட்டால், திரு. சுசீந்திரன் இயக்கிய "ஜீவா" படம் பாருங்கள் என்று  உங்கள் படத்தை பரிந்துரை செய்வேன்.

ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன்.  எங்களை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் எதுவும் செய்ய மாட்டோம், காலில் போட்டு மிதித்தாலும் எதுவும் செய்ய மாட்டோம்.  ஏனென்றால் வம்பு சண்டைக்கும் போக மாட்டோம், வரும் சண்டையையும் தவிர்த்து விடுவோம்.  இதோ இங்கு நான் பதித்திருக்கும் கருத்துக்களுக்குக் கூட எனக்கு தான் கண்டனம் வருமே ஒழிய தங்களுக்கு ஏதுவும் ஆகாது.  அட, நான் என்ன பைத்தியம் போல் உளறிக் கொண்டிருக்கிறேன்.  கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையா? சமீப காலமாக,  திரைப்படங்களை திரை இடுவதற்கு  எவ்வளவு பிரச்சனைகள்.  ஆனால் ஒரு "கம்யூனிட்டியை"ப் பற்றி குறை கூறியிருந்தாலும், உங்கள் படம் எந்த பிரச்சனையுமின்றி திரையிடப்பட்டதிலிருந்து தெரியவில்லையா, நாங்கள் யார் என்று?

கடைசியாக, உங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  தகுதி இருந்தும், திறமை இருந்தும் எண்ணற்ற இடங்களில் "forward caste" என்ற ஓரே காரணத்தினால் எங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.  அவற்றை எல்லாம் படம் பிடித்துக் காட்டி எதிர்மறை எண்ணங்களை உருவாக்காமல், மிக அழகாக எங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது என்று காட்டியுள்ளீர்கள்.  எங்களுக்கு தன்னம்பிக்கை ஒளி காட்டிய உங்களுக்கு நன்றிகள் பல கோடி.


No comments:

Post a Comment