என்ன எழுதவது என்றே தெரியவில்லை

உண்மையாக தான் சொல்கிறேன், என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.....சிறுவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் பங்கேற்று தோற்றுப்போன சோகத்தைப் பற்றி எழுதுவதா......... அண்டை வீட்டு இந்திய அன்பருக்கு  இந்தியாவிலிருந்து வந்த கடிதம் ஒன்று, எங்கள் வீட்டிற்கு தவறுதலாக வந்து, அதில் இருந்த இந்திய தபால் தலையைப் பார்த்து நான் சந்தோஷப்பட்டதைப் பற்றி எழுதுவதா.......  ("வால்டர் ஐசக்சன்" என்பவரின்) "ஸ்டீவ் ஜாப்ஸ்" புத்தகத்தைப் படித்து, காதலாகி கண்ணீர் மல்கியதைப் பற்றி எழுதுவதா........ உடலும், மனமும் சேர்ந்து ஒத்துழைக்காத ஒரு தருணத்தில், புத்தகப் பை என்று நினைத்து, காய்கறிகள் நிறைந்த பையை நூலகத்திற்கு எடுத்துச் செல்ல துணிந்து, பின்பு சுதாரித்து,அப்படி எதுவும் ஆகாமல், ஒழுங்கான பையை எடுத்துக் கொண்டு போகும் போது, நூலக மேடையில் புத்தகங்களுக்கு பதிலாக தக்காளியையும், உருளைக்கிழங்கையும் எடுத்து வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து நான் சிரித்த சிரிப்பைப் பற்றி எழுதுவதா............ இந்தியர்கள் ஒன்றாக சங்கமிக்கும் சில இடங்களில், இந்தியப் பெண்மணிகள் தங்கள் பிள்ளைகளின் படிப்பைப் பற்றியும், அப்பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் பல விதக் கலைகளைப் பற்றியும் டாம் டாம் அடிக்கும் போது பொங்கி வரும் என் கோபத்தைப் பற்றி எழுதுவதா ..........சரியாக பள்ளி விடும் நேரம், இடி, மின்னல், மழை, சூறாவளி  என்று வானம் இருள, பிள்ளைகள் வீட்டிற்கு அனுப்பப் படாமல் பள்ளியிலேயே இருக்க, நமக்கு மனம் பதைக்க, இவை எல்லாவற்றிற்கும் காரணமான இயற்கை அன்னை ஏன் கருணை இல்லாமல் இருக்கிறாள் என்று நான் யோசித்ததைப் பற்றி எழுதுவதா............அன்றாடம் நாம் உபயோகிக்கும் "ரப்பர் பண்ட்"ல் வித விதமாக "ப்ரேஸ்லெட்" செய்யும் புதுமையைக் கண்டு பிடித்த யாரோ ஒருவரின்  அறிவுத் திறனை நினைத்து நான் வியந்ததைப்
பற்றி எழுதுவதா.......... இரவு பதினொரு மணிக்கு, என் கணவரையும், குழுந்தைகளையும் கடைக்குள் அனுப்பி விட்டு, நான் வீர தீரத்துடன், காரில் தனியாக உட்கார்ந்திருக்க, யாரோ இருவர் மும்மரமாக பேசிக் கொண்டு வர, அவர்கள் என்னை நோக்கி தான் வருகிறார்கள் என்று நினைத்து, பயந்து விழுந்தடித்துக் கொண்டு கடைக்குள் சென்றதைப் பற்றி எழுதுவதா......."மறைந்திருந்தே பார்க்கும்" என்ற பாடலை ஒரு நாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அதில் வரும் "முகத்தில் நவரசமும்" என்ற வரிகள் தேவையே இல்லாமல் என் மண்டையில் ஒரு மின்னலை ஏற்படுத்த,  நாமும் ஏன்  எழுத்தில் "நவரசத்தை" கொண்டு வரக்கூடாது என்று நினைத்து எழுதியதைப் பற்றி எழுதுவதா........ எதைப் பற்றி எழுதுவது என்றே தெரியவில்லை போங்கள்!!

No comments:

Post a Comment