ஒரு மகள் தன்னை உடையேன்


ஆயர் தம் கொழுந்து பாம்பணையில் படுத்து இருந்தது.  வெண்ணெய் உண்ட வாயில் இன்று முறுவல் அதிகம் பூத்திருந்தது.  அந்த முறுவலின் எதிரொலி செவ்வரி ஒடிய கண்களில் தெரிந்தது.  திருமேனியில் சாற்றிய மாலையின் புஷ்பங்கள்  நறுமணத்தை வீசியதோடு, பச்சை, சிகப்பு, மஞ்சள், வெள்ளை என்று தங்கள் வண்ணங்களை அந்த கருவறையின் சுவற்றில் இறைத்துக் கொண்டிருந்தன.  வலமும் இடமுமாக அந்த கருவறையின் வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு விளக்குகளின் சுடர்கள், நடக்கவிருக்கும் வைபவத்தை நினைத்து மகிழ்ச்சியில் மெள்ளமாக ஆடிக்கொண்டிருந்தன.  அந்த சுடர்களின் ஒளியில் ஆணும், பெண்ணுமாக இரு உருவங்கள் கருவறைக்கு அப்பால், அரங்கனை நோக்கி கை தொழுத வண்ணம்  நின்று கொண்டிருப்பது தெரிந்தது.  

அந்த பெண் அரங்கனின் உலகளந்த திருவடியின் பக்கம் நின்றிருந்தாள்.  அவள் முற்றும் மணக்கோலத்தில் இருந்தாள்.  அவள் மனதின் மகிழ்ச்சி வெள்ளம் முகத்தை வந்தடைந்திருந்தது.  அவள் இடக் கையில் அமர்ந்திருந்த கிளி ஒன்று சற்று நேரத்திற்கு ஒரு முறை “கோவிந்தா, கோவிந்தா” என்று உயரப் பறந்துவிட்டு மீண்டும் அவள் தோளில் வந்தமர்ந்தது.


அந்த பெண்னின் தந்தை அரங்கனின் திருக்கை பக்கம் நின்றிருந்தார். 
பெரியாழ்வார் என்ற  திருநாமமுடைய அந்த பெரியவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் சாயல் தெரிந்தது.  அந்த சாயலின் ஊடே ஒரு சோகமும் தெரிந்தது.  அரங்கனின் மேலிருந்த தன் பார்வையை விலக்கி மெல்ல முகம் திருப்பி தன் மகளை நோக்கினார். அந்தத் திருமகளே தம் மகளாய் வந்ததை நினைத்து உள்ளம் மாய்ந்து போனார்.

ஆனால்,அன்று துளசிச் செடியின் அருகில் அவளைக் குழந்தையாய்  கண்டபோது, அவள் திருமகள் என்று அவர் நினைக்கவில்லை.  மகளாய் நினைத்து வாரி அணைத்துக் கொண்டார்.   கண்ணன் கதைகளை மீண்டும் மீண்டும் அவள் கூறக்கேட்டபோது தன் மகளும் தன்னைப் போலவே கண்ணனின் மீது பற்றுக் கொண்டிருக்கிறாள் என்று மகிழ்ந்து, வாஞ்சையாய் அவளுக்கு கண்ணன் அமுது ஊட்டினார்.

அவனுக்கு உகந்த மாலையை அவள் அணிந்தபோது, உள்ளமும் உடம்பும் பதற அவளைக் கடிந்து கொண்டார். கோதையாய் இருந்தவள் ஆண்டாளை மாறிய போது மகளுக்கு இப்படி ஒரு பேரு வாய்த்ததே என்று அகமகிழ்ந்தார்.  வாரணம் ஆயிரம் சூழக் கண்ணனைக் கைப்பிடித்த கனவை அவள் கூறியபோது, அவள் கண்ணன் என்னும் பெரும் தெய்வத்தால் பீடிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டார். “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்,” என்று அவள் கூறியபோது மகளுக்கு நல்ல துணை வாய்க்க வேண்டுமே என்று கவலைப்பட்டார்.  கண்ணனைக் கைப்பிடிப்பதற்காக முப்பது நாட்கள் அவள் பாவை நோன்பு நோற்றபோது, மகளுக்காக கண்ணனிடம் முறையிட்டார்.  அவர் கனவில் வந்த அரங்கன் அவளைக் கைப்பற்றுவேன் என்று உரைத்தபோது தான், தன் மகளாய் வந்திருப்பது திருமகள் என்று உணர்ந்து கொண்டார்.   மணமகள் கோலத்தில் அவள் வந்து நின்றபோது, உலகத்தை படைத்து, இடந்து, உண்டு, உமிழ்ந்து, ஆண்டுகொண்டிருப்பவனை ஆள்பவள் தன் மகள் என்று புரிந்துகொண்டார்.   

இதோ, அவள் அரங்கனை நோக்கி மெல்ல ஓர் அடி எடுத்து வைக்க, அவள் வந்த வேலையை முடித்து தம்மை விட்டு விலகும் நாள் என்று தெரிந்து நெஞ்சு பிசைந்தார். அவள் இரண்டாம் அடி எடுத்து வைக்க

உலகத்தின் மற்ற மகள் போல் அல்லாமல் இனி என்றுமே தன்னைக் காணவரமாட்டாள் என்ற உண்மை உணர்ந்தார். மூன்றாம் அடி எடுத்து வைக்க,அரங்கன் அவளைக் கைக்கொள்ளவேண்டுமே என்று கவலைக் கொண்டார். அவள் நான்காம் அடி எடுத்து வைக்க, “அரங்கா, என் பெண்ணை ஏற்றுக் கொள்,” என்று மனதில் கதறினார்.  அடுத்த அடியில் அவள் அரங்கனின்  திருவடியை அடைய, இனி அரங்கன் செய்யப் போவது என்ன என்று அவர் மனம் படபடத்த சமயம், அவரின் மகளான கோதை மாயமாய் மறைந்தாள்.


அவர் செய்வதறியாது திகைத்தார்.  கண்களில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் மடமடவென்று வடிந்தோடியது. உடம்பு தளர்ந்தது. கால்கள் தள்ளாடியது.  அருகில் இருந்த சுவரைப் பிடித்தபடி மெல்ல கீழே அமர்ந்தார்.  கண்களில் நீர் மறைக்க அரங்கனை நோக்கினார்.  என்றோ அவர் எழுதிய பாடல் ஒன்று அவர் நினைவில் வந்தது.


 “ஒரு மகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
   திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்.”


--------------------------------


ஆண்டாளின் கதை பல முறை கேட்ட கதை தான் என்றாலும், என் எழுத்துக்களில் வடித்திட ஒரு சின்ன ஆசை. இங்கொன்றும் அங்கொன்றும் தெரிந்த ஆழ்வார்களின் பாசுரங்கள் துணை கொண்டு எழுதியதால், என்னுடைய எழுத்து இங்கு மிகக் குறைவு. இதில் குற்றம், குறை, தப்பு, தவறு இருக்கலாம். அதற்கு முற்றிலும் காரணம் நானே என்று நான் பழி ஏற்றுக் கொண்டாலும், என்னை எழுத வைத்த பெரியாழ்வாரின் பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் இதில் பங்கு உண்டு!!! எங்களின் இந்த கூட்டு முயற்சி இன்றும், என்றும், என்றென்றும் தொடர வேண்டும் என்பது என் பெரிய ஆசை.

இந்த கதைக்கு தன் பங்கு ஏதாவது வேண்டும் என்று கூறி என் பெண் வரைந்தது தான் அந்த கிளி.
No comments:

Post a Comment