க்ருஷ்ணரும், சத்தியபாமாவும், நரகாசுரனும்

நாளை மறுநாள் தீபாவளி வரும்.

ஒக்கொரை செய்கையில் மாமியாரின் நினைவு வரும்.

மருந்து கிளறுகையில் பாட்டியின் நினைவு வரும்.

மருதாணி இட்டுக் கொள்கையில் அக்காக்களின் நினைவு வரும்.

உச்சந்தலையில் எண்ணெய் வைக்கையில் அம்மாவின் நினைவு வரும்.

புது துணி உடுத்துகையில் அப்பாவின் நினைவு வரும்.

கோவிலில் ஶ்ரீனிவாசரை சேவிக்கையில் பார்த்தசாரதியின் நினைவு வரும்.

இந்த நினைவுகளுக்கு மத்தியில் தீபாவளிக்கு காரணமான நரகாசுரனின் நினைவு எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும்.

இரணியன் மாண்டான், நாம் பண்டிகை கொண்டாடுவதிவில்லை.

இராவணன் மாண்டான், நாம் புத்தாடை அணிவதில்லை.

கமச, சிசுபாலர்கள் மாண்டார்கள், நாம் பட்டாசு கொளுத்துவதில்லை.

நரகாசுரன் மாண்டான், நாம் புத்தாடை உடுத்து, பட்டாசுக் கொளுத்தி பண்டிகை கொண்டாடுகிறோம்.

இரணியன் மாண்டது நரசிம்மரால்.

இராவணன் மாண்டது இராமரால்.

கம்ச, சிசுபாலர்கள் மாண்டது கிருஷ்ணரால்.

நரகாசுரன் மாண்டது தன் தாயால்.

தாயின் அஸ்த்திரம் கொடிய அரக்கனை மனிதனாய் மாற்றியதோ?

மாறியதின் பயந்தான் புத்தாடையும், எண்ணெய்க் குளியலும், பட்டாசுக் கொளுத்தலுமோ?

யோசிக்கையில் நரகாசுரனும் காரணம் இல்லை, சத்தியபாமாவும் காரணம் இல்லை.


மருந்துப் பொடியிலும், மருதாணிப் பொடியிலும்

மயங்கிக் கிடந்த என் மனதை

நரகாசுரன் பக்கம் திசைத் திருப்பி

ஏதேதோ சிந்தனையில் என்னை ஆட்படுத்தி

இன்று எழுதுவதற்கு நேரம் இல்லை என்று நான் நினைத்திருந்த சமயத்தில்

இதோ என்னை எழுத வைத்தது எவரோ

அவரே தான், நராகாசுரனைப் படைத்து,

மிகச் சாதுர்யமான வரம் ஒன்று அவனை வாங்க வைத்து

அவன் வேண்டிய வரத்தின்படி அவனை அழித்து

நம் தீபாவளிக்குக் காரணமானவர்.

"ஆட்டு வித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா"







No comments:

Post a Comment