விஸ்வ குரு

 ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தெரியும் அல்லவா உங்களுக்கு?  அவர் சொல்லுவார் , " ஒரு தாய் பறவையானது,  தனது குஞ்சுகள், முட்டையை விட்டு வெளியே வர தயாராகிவிட்டன என்று தெரிந்த பிறகு தான், முட்டைகளை தனது மூக்கால் உடைக்கத் துவங்குமாம், அது வரையிலும் முட்டைகளை அடைக் காத்துக் கொண்டிருக்குமே தவிர, மூக்கால் தட்டி உடைக்க முற்படாதாம்."  அது போல், ஒரு குருவும் சிஷ்யனுக்கு பக்குவம் வரை காத்துக் கொண்டிருப்பாராம்.  சிஷ்யனுக்கு பக்குவம் வந்த பிறகே தன்னை வெளிப்படுத்திக் கொள்வாராம்.  இப்பொழுது தான் நமக்கு எல்லாம் பக்குவம் வந்திரு க்கிறது போல்...அதனால் தான் அந்த "குரு" தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அந்த "குரு"வின் பெயர் திரு. நரேந்திர மோடி.

குரு என்ற சொல்லுக்கு  இருட்டை விலக்குபவர் (இருட்டை விலக்கி, கடவுளை  காண்பிப்பவர்)  என்று பொருள்.  

இருட்டு என்றால் சாதரணாமான இருட்டு அல்ல.  கும்மிருட்டில் இருந்தோம்.  கோவில் இல்லாமல், கூடாரத்தில் ராமரை சேவிக்கும் இருட்டில் இருந்தோம்.  அயோத்தியில், என்ன நடக்கிறது தெரியாத இருட்டில் இருந்தோம். இந்த இருளை எல்லாம் விலக்கி, "ராம் லல்லா" என்ற கடவுளை நமக்கு காண்பித்தவர் நரேந்திர மோடி என்ற குரு.

குரு என்பவர், கடவுளின்  நாமத்தை உபதேசிப்பவர்.  

நரேந்திர மோடி என்ற குரு, நமக்கு உபதேசித்த  நாமம், "ராம நாமம்." அந்த இரண்டு மூன்று நாட்களும்  நாம் அதிகம் சொன்னது,  நாம் அதிகம் கேட்டது  "ராம நாமம்."  செய்திதாள்களிருந்து,தொலைக்காட்சி, சமூக வலை தளம் என எல்லா இடத்திலும் "ராம நாமம்" தான்.    விபீஷண கோஷ்ட்டியான நாம், "ராம நாமம்" சொல்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  ஆனால் ராவண கோஷ்ட்டியினரும் "ராம" நாமத்தை ஏதோ ஒரு வகையில் உச்சரித்தனர் அல்லவா? அதற்கு காரணம்  நரேந்திர மோடி என்ற குரு. 

குரு என்பவர், நமக்குள் பொதிந்து இருக்கும் பக்தியை வெளிக்கொணர்பவர்.

 இந்த "ராம் லல்லா" இருக்கிறாரே, அவர் நமக்கு புதியவர்.  திருப்பதி கோவிந்தனைப் போலவோ, திருவல்லிகேணி பார்த்தசாரதியைப் போலவவோ நமக்கு தெரிந்தவர் அல்ல. ப்ராணப்ரதிஷ்ட்டைக்கு முன் வலைதளங்களில் தான் முதல் முறையாக  "ராம் லல்லா"வைப் பார்த்தோம்.  சரி பார்த்தாச்சு.  அத்துடன் விடுவதானே?  ப்ராண்ப்ரதிஷ்ட்டை நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்தோம். நேரலையை பார்க்க முடியாதவர்கள் அந்த  நிகழ்ச்சியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தோம். எது நம்மை நேரலையை பார்க்கவைத்தது, எது நேரலையைப் பற்றி நினைக்கவைத்தது? திரு நரேந்திர மோடியின் மேல் உள்ள ஆசையா, பொழுது போக்கவா,  ஆங்கிலத்தில் material pleasure என்பார்களே அதற்காகவா?இல்லை...பின் எது?

நம் யூ ட்யூப் சேனல்கள், இதுவரையில்  நிகழ்ச்சிகளையோ அல்லது விளையாட்டு நிகழிச்சிகளையோ தான் போட்டி போட்டுக் கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்து வந்தது. முதல் முறையாக ஒரு ஆன்மிக நிகழ்ச்சியை, பிரபலமாய் இருக்கும் அனைத்து யூ ட்யூப் சேனல்களும்,  போட்டி போட்டுக் கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்திருக்கிறது. அந்த சேனல்கள் பண்த்திற்காக தான் ஒளிபரப்பு செய்தார்கள் என்றாலும் மக்கள் ப்ராணப்ரதிஷ்ட்டையை பார்ப்பார்கள் என்று தெரிந்து தானே போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பினார்கள்.  ஒவ்வொரு சேனலிலும்,  நேரடி பார்வையாளர்களின் எண்ணிக்கை அமோகம்.  (அந்த எண்ணிக்கை பொய்யாக இருக்குமோ என்று நினைத்து, தேடிப் பார்த்து அந்த எண்ணிக்கை உன்மை தான் என்று கண்டு கொண்டேன்).  எது இத்தனை மக்கள் நேரலையை பார்க்கச் செய்தது எது? 

ப்ராணப்ரதிஷ்ட்டை முடிந்த அடுத்த நாளிலிருந்து "ராம் லல்லா"வைப் பார்க்க என்ன கூட்டம்? சரி, "ராம் லல்லா"வைப் பார்ப்பதற்கு தான் கூட்டம், அந்த "ராம் லல்லா"வை செய்த சிற்பி "அருண் யோகிராஜ்" அவர்களைப் பார்ப்பதற்கு என்ன கூட்டம்?  Again, நாம் எல்லாம் film stars, sports stars பின்னால் போகிறவர்கள்.  நம்மை "ராமர் சிலை" வடித்த சிற்பியின் பின் போக செய்தது எது? 

மேலே  கூறப்பட்ட அனைத்து "எது"விற்கும் காரணம் பக்தி. 

பக்தி நமக்குள் இருக்கிறது.  அதாவது நாம் எண்ணிப் பார்க்காத அளவு நம்மூள் பக்தி இருக்கிறது.  அதை முழுவதுமாய் வெளிக் கொணர ஒரு "குரு" தேவை. "ராம் லல்லா" வை நமக்கு காண்பித்து, நம்முள் இருந்த அசாத்திய பக்தியை வெளிக்கொணர்ந்தவர்..நரேந்திர மோடி என்ற குரு. 

இறுதியாக

 ப்ராண்ப்ரதிஷ்ட்டை நடந்த இரவு, திரு ந்ரேந்திரா மோடி, 
அவர் வீட்டில் "ராம் லல்லா"வின்
புகைப்படம் முன் விளக்கேற்றும் காட்சியை காண நேர்ந்தது.  அந்த காட்சியைப் பார்த்த போது, அந்த புகைப்படத்தில் இருந்த தெய்வம் "ராம் லல்லா" வாக எனக்கு தோன்றவில்லை.  "மோடியின் லல்லா" வாக தான் தோன்றியது.  வருடக் கணக்காக "ராம் லல்லா"வை மனதில் நினைத்து ,  "ராம் லல்லா"விற்காக விரதமிருந்து,  "ராம் லல்லா"விற்காக கோவிலாகச் சென்று...அந்த "ராம் லல்லா"விற்கு தாய் தந்தை எல்லாம் திரு நரேந்திர மோடி தான்.  ஆனால், நமக்கு...அவர் குரு.
எப்பேர்பட்ட குரு... உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து, குறைந்தபட்சம் ஒருவரையாவது "ராம் லல்லா"வைப் பற்றி பேச வைத்த  "விஸ்வ குரு."

பின்குறிப்பு::  ஆஞ்சனேயர் "ராம் லல்லா"வை தரிசிக்க வந்தாராம்,  சில்பி "அருண் யோகிராஜ்"  ராம் லல்லா சிலையை வடிவமைக்கும் போது அங்கும் ஆஞ்சனேயர் வந்தாராம், என்றெல்லாம் ஊடகங்களில் படித்துவிட்டு, நாமும் "ராம் லல்லா"வைப் பற்றி எழுதுகிறோம், நம்மை பார்க்கவும் ஆஞ்சனேயர் வருவாரா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆஞ்சனேயர் வரவில்லை.  ஆனால்...ராமரே வந்துவிட்டார்... அதாவது, நான் எழுதியே  நாட்கள் ஆகிவிட்டன.  ஆதலால் இந்த பதிவை எழுதுவதற்கு சிரமப்பட்டேன்.  உண்மையில் எழுதவே முடியவில்லை.  டைப் அடிக்க வேண்டியது,  delete பண்ண வேண்டியது,  டைப் அடிக்க வேண்டியது,  delete பண்ண வேண்டியது,  டைப் அடிக்க வேண்டியது,  delete பண்ண வேண்டியது, எனா இரண்டு நாட்கள் சென்று விட்டன. கடைசியில், "இப்படியே delete பண்ணிக்  கொண்டிருந்தால் வேலைக்க ஆகாது" என்று தெளிந்து, ஏதோ டைப் செய்ய  ஆரம்பித்துவிட்டேன். பதிவை முடித்து, ஒரு முறை படிக்கலாம் என்று ஆரம்பித்தால்...முதல் இரண்டு வார்த்தை...அதாவது இந்த பதிவின் முதல் இரண்டு வார்த்த்தையை கண்டு அசந்து விட்டேன்.  எப்படி அந்த இரண்டு வார்த்தையுடன் இந்த பதிவு ஆரம்பித்தது???  விஸ்வ குருவின் அருள். 




No comments:

Post a Comment