நாமம் நல்ல நாமம்


ஶ்ரீ ராம நவமி முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டன.  ஶ்ரீ ராம நவமி அன்று தோன்றிய சிந்தனை இது.  இதை எழுத்தில் வடிக்க இத்தனை நாள்.  உலகத்தின் முதல் சுறுசுறுப்பான பெண்மணி நான் தான்.  

என் சிந்தனைக்கு வருவோம். 

வழக்கம் போல் ஶ்ரீ ராம நவமி அன்று பானகம், நீர் மோர், வடை பருப்பு நிவேதனம் செய்தாகி விட்டது. இதில் நடுவில், சென்னையில் இருக்கும் என் அம்மா தொலைபேசி வழியாக , "வேற எதுவும் ஸ்வீட் இல்லையா?" என்றாள். அமெரிக்காவில் இருக்கும் நான், தொலைபேசி வழியாக,  "ஏம்மா சும்மா இழுத்துவிடற.  ராம நவமிக்கு ஒண்ணும் ஸ்வீட் எல்லாம் பண்ண மாட்டோம்," என்றேன்.  "ஸ்வீட்" ஏதாவது பண்ணால் நான் என்ன குறைந்து விடுவேனா?  குறைந்து எல்லாம் போக மாட்டேன்.  ஸ்வீட் பண்ணலாமா என்ற  நினைப்பு  எட்டி கூட பார்க்கவில்லை.  மனதில் அந்த சிந்தனை வட்டமடித்துக் கொண்டிருந்தது. 

சிந்தனை என்னவென்றால்...ராமரின் பிறந்த நாளைக்கு பெரிதாய் ஒன்றும் இல்லை. ஆனால் கிருஷ்ணரின் பிறந்த நாளைக்கு... கோலாகலமான கொண்டாட்டம், வீடு நிறைய பட்சணம்...இருந்தாலும் கிருஷ்ணர் பாவம் . 

அவர் பிறந்தது முதல் போராட்டம் தான்.  பிறந்ததே சிறைச்சாலையில். கைக் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே அரக்கரர்களால் பிரச்சனை.  பெரிய வயதில் அர்ஜூனக்காக தேர் ஓட்டி முக்கத்தில் அம்பு காயங்கள்.  அதே அர்ஜூனனுக்காகவும்(நமக்காகவும்) தொண்டை தண்ணீர் வற்ற கீதை. இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். எத்தனை அவர் செய்தாலும்...நாம் என்ன செய்கிறோம்..."ஶ்ரீ ராம ஜயம்" என்று தான் எழுதுகிறோம். "ஶ்ரீ கிருஷ்ணா ஜயம்"  என்று எழுதுகிறோமா?

ராமர் மட்டும் தான் போர் புரிந்து ஜெயித்தாரா? கிருஷ்ணர் ஜெயிக்கவில்லையா?  எத்தனை பெரிய மகாபாரத போர்...வில், அம்பு கையில் ஏந்தி அவர் போர் புரியவில்லை. ஆனாலும் பாண்டவர்கள் போரில் ஜெயித்தது கிருஷ்ணரால் தானே?  ஏன் "ஶ்ரீ கிருஷ்ண ஜயம்" இல்லை?

இவ்வுளவு ஏன்?  மகாபாரதப் போரின் போது பீஷ்மரால் பாண்டவர்களுக்கு உபதேசிக்கப்படது "ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்."  ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அன்றாடம் சொல்வதற்கு எளிய வழி யாது என்று பார்வதி தேவி, சிவபெருமானை கேட்டதற்கு, சிவபெருமான் "ஶ்ரீ ராம ராம ராமேதி" என்று ராம நாமம் பேசும் ஸ்லோகத்தை தான் உபதேசித்தாரே தவிர, கிருஷ்ண நாமம் பேசும் ஸ்லோகத்தை உபதேசிக்கவில்லை.  இத்தனைக்கும் அந்த மஹாபாரதப் போரின் நாயகன்"ஶ்ரீ கிருஷ்ணர்."

கபீர் தாசர் தொடங்கி, ஸ்வாமி ராமதாஸ், நீம் கரோலி பாபா, யோகி ராம்சூரத் குமார் போன்ற பல யோகிகள் கடைபிடித்தது ராம நாமத்தை தான்.  மேலும் அகண்ட ராம நாமம் தான் இருக்கிறதே தவிர, அகண்ட கிருஷ்ணா நாமம் இருப்பதாக தெரியவில்லை.  அதே போல் ராம  நாமத்தின் மகிமை தான் பரவலாக பேசப் படுகிறதே தவிர, கிருஷ்ண நாமத்தின் மகிமை பேசப்படுவதாக தெரியவில்லை. நம் மனதை கொள்ளை கொண்டவர் கிருஷ்ணராக இருந்தாலும், ராம நாமமே எங்கும் பேசப்படுகிறது. வட இந்தியாவிலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது "ராம் ராம்" என்று தான் சொல்கிறார்கள். காரணம்...

என்னைப் பொறுத்தவரை ராம நாமம் எங்கும் பரவியதன் காரணம் "ஆஞ்சனேயர்." ஆஞ்சனேயரின் ராம பக்தியைப் பற்றி நான் என்ன சொல்லுவது? உள்ளத்தில் ராமர், சொல்லில் ராமர், செயலும் ராமருக்காக.  ஆஞ்சனேயர் என்ற அற்புத பக்தரால், ராம நாமம் எங்கும் பரவியிருக்கிறது.

கிருஷ்ணருக்கு... கோபிகைகள் இருந்தார்கள்.  பஞ்ச பாண்டவர்கள் இருந்தார்கள். இன்னும் நிறைய பக்தர்கள் இருந்தார்கள்.  ஆனாலும் ஆஞ்சனேயர் போல் ஒரு பக்தர் இருந்ததாக தெரியவில்லை.  ஏனெனில் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறாரே "வாசுதேவனே இங்கு எல்லாம் என்று சொல்பவர்கள் அரிது அர்ஜூனா." (வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப).  


யோசித்து யோசித்து பார்த்ததில், கிருஷ்ணர்,  பிறந்தது முதல், வைக்குந்தம் செல்லும் வரை யாருடனும் அதிக நாள் இருக்கவில்லை.  பிறந்தவுடன் பெற்றோர்களை விட்டு பிரிந்தார்.  பின்பு கோபிகைகளை விட்டு பிரிந்து மதுரா வந்தார்.  பின்பு அங்கிருந்து துவாரகை சென்றார்.  துவாரகாவிலிருந்து பிராபாஸபட்டினத்திற்கு சென்றார்.  அங்கே வேடனின் அம்பு காலில் தைக்கப் பெற்று, வைகுந்ததிற்கு சென்றார்.  அவர் பிறந்த  போதும் கொண்டாட ஆளில்லை.  உயிர் பிரிந்த தருணத்திலும் அழுவதற்கு ஆள் இல்லை.   ஒரு யோகி போல் இருந்திருக்கிறார்.  அதனால் தானோ என்னவோ கீதையின் ஒவ்வொரு அத்தியாமும் "யோகம்" என்று அழைக்கப்படுகிறோ என்னவோ.  யோகியாய் இருந்தவர் கீதை உரைக்கையில்  கீதாசாரியனாய், ஜகத்குருவாய் ஆனார்.  குரு என்பவர் இறைவனிடம் நம்மை இட்டுச் செல்பவர். தன் பெருமையை பேசாதவர்.  அதனால் தான், கீதாசாரியனும் இறைவனான "ராம நாம"த்தை  எங்கும் பரவவிட்டு,  ஆச்சாரியனான "கிருஷ்ண நாம"த்தை  குறைத்துக் கொண்டாரோ? 

கிருஷ்ணரைப் போல்  உயர்ந்த ஜகத்குரு இல்லை.
ஆஞ்சனேயரைப் போல் உயரந்த சீடர் இல்லை.
ராம நாமத்தைப் போல் உயர்ந்த நாமம் இல்லை.

என் சிந்தனை இங்கு முற்று பெற்றது.  

ஶ்ரீ ராம நவமி அன்று தோன்றிய சிந்தனை இது.  இதை எழுத்தில் வடிக்க இத்தனை நாள்.  உலகத்தின் முதல் சுறுசுறுப்பான பெண்மணி நான் தான்.  









1 comment: