அத்தி வரதர் வைபவம் (என் மனதில்)

சென்னை செல்வதற்கு டிக்கெட் புக் செய்தபோது, அத்தி வரதரை சேவிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை.
இந்தியாவின் பிறமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் அத்தி வரதரைப் பற்றியும், அவரை எப்படி சேவிப்பது என்று விசாரித்த போதும்,  எனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேனே தவிர, அத்தி வரதரை சேவிக்கும் எண்ணம் இல்லை.
சென்னை சென்றதும் அங்கிருப்பவர்கள் அத்தி வரதரை சேவித்து வந்த கதையை சொன்ன போதும் அத்தி வரதரை சேவிக்கும் எண்ணம் இல்லை.
அத்தி வரதரைப் பக்கத்தில் சென்று சேவிக்கும் வாய்ப்பு கிடைத்து அது வேறு காரணத்திற்காக தவற விட்ட போதும் கூட அவரைச் சேவிக்கவில்லையே என்ற வருத்தம் இல்லை.
வெளியில், கடைத் தெருவில், தொலைப்பேசியில், நேரில் என பலரும் "அத்தி வரதரை சேவித்து விட்டாயா?" என்று கேட்ட போதும் அவரை சேவிக்கும் எண்ணம் இல்லை.
திருப்பதி பாலாஜியை வரிசையில் நின்று சேவித்த போதும், அத்தி வரதரை சேவிக்கும் எண்ணம் இல்லை.

என் பெண்ணால்  நிலைமை மாறியது.

அடுத்த முறை அத்தி வரதர் வரும் போது நாம் குடும்பமாய் அவரை சென்று சேவிக்க முடியாது, ஆதலால் இந்த முறை கட்டாயமாக சேவித்தே தீர வேண்டும் என்று அவள் பிடிவாதம் பிடிக்க...வேறு  வழியில்லாமல் அத்தி வரதரை சேவிக்கச் சென்றோம்.

அங்கு நிரம்பி வழியும் கூட்டத்தைக் கண்ட போது மலைத்துப் போய் அப்படியே திரும்பி விடலாமா என்று நினைத்தேனே தவிர....அத்தி வரதரை சேவிக்கும் எண்ணம் அப்பொழுதும் வரவில்லை.

என் அக்காவின் வற்புறத்திலனால் அங்கிருந்த கடை ஒன்றில் அத்தி வரதருக்கு மஞ்சள் நிற வஸ்த்திரம் ஒன்று வாங்கிக் கொண்டு , அந்தக் கூட்டக் கடலில்   நிற்கும் போது கூட .....இந்தக் கூட்டத்தில் சென்று அவரை சேவிக்க வேண்டுமா என்ற கேள்வியே இருந்தது.

எப்படியோ அந்த கூட்டம் நகர்ந்து...அத்தி வரதரை  நெருங்கிய் போது....எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் திருப்பதி பாலாஜியை எப்படி சேவிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தது நினைவில் வந்தது.

(பெருமாளை மனதில் வாங்கிக் கொள்.  சேவித்த பின் யாரிடமும் பேசாமல், எங்கேயாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து அந்த பெருமாளை மீண்டும் மீண்டும் மனதில் நினைத்துப் பார்.  அவர் என்றும் மனதில் இருப்பார்.)

அதன் படி கிடைத்த ஒரு நிமிடத்தில் அத்தி வரதரை சேவித்து, யாரிடமும் பேசாமல் அந்த வரிசையில் இருந்து நகர்ந்து அவரை மனதில் மீண்டும் மீண்டும் கொணர்ந்து....மனதின் ஒரு ஓரத்தில் சின்னதாய் குடி புகுந்தார்.

அடுத்த நாள்,  (என் அக்காவினால்) நாங்கள் அளித்த மஞ்சள் வஸ்த்திரத்தை அணிந்து அழகாய் அவர் அழகாய் காட்சி அளித்த போது.....மனதில் இன்னும் கொஞ்சம் பெரிதானார்.


நயந்தாராவிற்கு சிறப்பு சேவை அளித்த போது....."நான் எல்லாம் எத்தனை நாளா பெருமாள் சேவிச்சுண்டு இருக்கேன்.  ஆழ்வார் பாசுரங்கள் தினம் பாடிண்டு இருக்கேன்.  எங்களுக்கெல்லாம் பக்க்த்துல சேவை கிடையாது.  இந்த நயந்தாரா என்ன பண்ணிட்டானு இப்படி பக்கத்துல் கூட்டு சேவை கொடுக்கற....." என்று உரிமையாய் திட்டும் அளவிற்கு பாதி மனதை ஆட்கொண்டார்.

நேற்று முழுவதும்  "நம்ம பசங்க வெகேஷன்க்கு வந்துட்டு போறா மாதிரி இவரும் திரும்பி போறாரே..இப்படி எந்த பெருமாளையாவது  கோவில விட்டு குளத்துக்கு  அனுப்புவோமா......" என்று துடிக்க வைத்து மனம் முழுவதும் நிரம்பிவிட்டார்.

இன்று காலை என் கணவர் வாட்ஸப்பைத் திறக்க அதில் ஶ்ரீ ரங்க நாதரின் பாட்டு ஒன்று ஒலிக்க
"அவா அவா இங்க அத்தி வரதரப் பத்தி பேசிண்டு இருக்கா.  இப்ப ரங்க நாதர் ரொம்ப முக்கியமா....அத்தி வரதர தவிர வேற எந்த பெருமாளையும் பத்தி யோசிக்கக் கூட முடியுமா...."
என்று என் மனம் ஏதோ புலம்பிக் கொண்டிருக்க.....

அத்தி வரதரை சேவிக்கும் எண்ணம் அறவே இல்லாமல் இருந்து, அத்தி வரதரை தவிர வேறு தெய்வம் உண்டா என்று என்னை நினைக்க் வைத்தது யார்?

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்தபின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்!* திருவே என் ஆருயிரே*


No comments:

Post a Comment