கடந்து போன வருடத்தைப் பற்றி எழுதும் எண்ணம் ஏதும் இருக்கவில்லை.....ஒரு பள்ளியைப் பார்க்கும் வரை. அந்த பள்ளி...அந்த பள்ளி.... நீயா நானா நடந்த பள்ளி....திரு. கோபியிடமிருந்து "பல்பு" வாங்கிய பள்ளி. இப்பொழுது நினைத்தாலும் முகத்தில் அசடு வழிகிறது......இன்னும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்.....
சோகம்: போன வருடம் என் கதையோ/கட்டூரையோ தமிழ் நாட்டில் உள்ள எந்த பத்திரிக்கையிலும் வெளியாகவில்லை. “சித்தி" அவள் விகடனுக்கு அனுப்பி அதில் பிரசுரமாகாவில்லை. இது போல் இன்னும் மூன்று நான்கு பதிவுகள் பிரசுரமாகவில்லை. பிரசுரமானாலும் பிரச்சனை தான். எடிட் செய்கிறேன் பேர்வழி என்று என் எழுத்தை சிதைத்து விட்டார்கள் என்று புலம்பி தள்ளியிருப்பேன். இருந்தாலும் நம் எழுத்தை பத்திரிக்கையில் பார்க்கும் போது வரும் இன்பம்….எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும். ஒன்றும் பிரசுரமாகவில்லையே என்று நினைத்து அழுது கொண்டிருக்கும் போது தான்……
மகிழ்ச்சி: உங்களுக்கு மதன் தெரியுமா? நம் விகடன் மதன்...அவர் “விகடகவி'” என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருக்கிறார். விகடகவி டிஜிட்டல் வார பத்திரிக்கை. சென்ற வார விகடகவி இதழில் என் கதை “மடி" பிரசுரமாகி என்னை திக்குமுக்காட வைத்தது. நான் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு இது. அதுவும் மதன் அவர்களின் பத்திரிக்கையில் கதை வெளிவருவது எல்லாம் பெரிய விஷயம். தலை கால் புரியவில்லை. இப்படி தலை கால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கும் போது தான்….
அறிவுரை: எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்களின் புத்தாண்டு செய்தி கேட்க நேர்ந்தது. எதற்கும் ஆராவராம் கொள்ளாமல் அமைதியா இருப்பது தான் சிறந்தது என்று அதில் அவர் கூறியிருக்கிறார். அதன் படி இனி நானும் அமைதி காக்க முடிவு செய்துள்ளேன். அதனால் இனி எங்கு என் கதை வெளி வந்தாலும்...வந்தாலும் என்ன….வரும். வரும் நேரத்தில் ஆராவரம் கொள்ளப் போவதுமில்லை. யாரிடமும் கூறப் போவதும் இல்லை. எழுதுவது என்பது ஆசை. அதை பலர் புகழக் கேட்பது போதை. அந்த போதையில் இருந்து வெளிவர வேண்டும். ஆனால் வெளியே வர முடியாத போதை ஒன்று உண்டு. அது….
காஃபி: காஃபி என்று ஒன்று இல்லாவிட்டால் எனக்கு விடியலே இல்லை. 2017-ல் தான் மிக சிறந்த காஃபியைக் கண்டு கொண்டேன். மன்னார்குடி கோவில் அருகில் ஒரு சின்னஞ்சிறு ஹோட்டல் இருக்கிறது. அங்கு கிடைக்கும் காஃபியைப் போல் நான் வேறு எங்கும் குடித்ததில்லை. விடியற்காலை அந்த ஹோட்டலில் எங்களைத் தவிர யாரும் இல்லை. அங்கு உட்கார்ந்து குடிப்பதற்கு மேஜை நாற்காலி கிடையாது. இரண்டு மூன்று மேஜைகள் மட்டுமே இருந்தன. இந்த ஹோட்டலில் காஃபி எப்படி இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், மிகச் சிறிய டம்ளர் டபராவில் ஆவி பறந்து, வாசனை ஊரைத் தூக்க, அடர் ப்ரொளன் நிறத்தில், காஃபி வந்தது. மனதைக் கவர்ந்தது. முதல் சொட்டு நாக்கில் பட்டவுடன் உலகம் மறைந்து, சுவர்க்கம் தெரிந்தது. “உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல…” என்ற பாடல் தோன்றியது. இந்த காஃபி முடிந்து போய் விடக் கூடாதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது காஃபி காலியாயிற்று. இன்னும் ஒரு டம்ளர், இன்னும் ஒரு டம்ளர்...மூன்று டம்ளர்கள் குடித்து முடித்த பிறகும் ஆசை அடங்கவில்லை. ரொம்ப குடித்து ஏதாவது ஏடாகுடம் ஆகிவிடப் போகிறதே என்று நினைத்து அடங்கிவிட்டேன். ஆனால் வேறு ஒரு ஏடாகுடம்…..
ஏடாகுடம்: தீபாவளிக்கு முதல் நாள். உலகத்திற்கு தீபாவளி நல்வாழ்த்துகள் கூறுவோம்(நான் வாழ்த்து கூறவில்லை என்றால், உலகம் தீபாவளி கொண்டாடாது பாருங்கள்) என்று facebookஐ திறந்தால், அவரஅவர்கள் “me too”, “me too”, என்று வண்ணத்திலும், கருப்பு வெள்ளையிலும் எழுதியிருந்தார்கள். இந்த facebookக்கிற்கு ஏதோ ஆகிவிட்டது, Happy Deepavaliஐ தான் “me too” என்று கூறிப்பிட சொல்கிறது போல் என்று நினைத்து, நானும் அழகாய் வண்ணத்தில் “Wish you and your family a Happy Me too…”என்று அடித்துவிட்டு, post பண்ணப் போகும் சமயத்தில் என் தோழி ஒருத்தியின் விரிவான “me too” பதிவைப் படித்துவிட்டு அதிர்ந்து போய்விட்டேன். நான் மட்டும் “Wish you and your family a Happy Me too…” என்று போட்டிருந்தால் என் மானம் மரியாதை எல்லாம் கப்பலேறி போயிருக்கும். யூஸ்லெஸ் facebook என்று facebookஐ திட்டினாலும், இந்த வருடம் வேறு ஒரு book என் நெஞ்சைத் தொட்டது…..
புத்தகம்: எனக்கு சொந்தமில்லாத நான்கு பேர்களின் மரணத்திற்கு நான் உடைந்து போயிருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா, ஸ்டீவ் ஜாப்ஸ், ஜெயலலிதா….கடைசியாக இருக்கும் அந்த நான்காவது நபர் ஒரு fictional character. “A man called Ove” என்ற புத்தகத்தில் வருபவர். ஏனோ அவர் என் தாத்தாவை நினைவிற்கு கொண்டு வந்தார். அந்த கதை போகும் போக்கில் அவர் இறக்கப் போகிறார் என்பது தெரியும். ஆனாலும அவரின் இறப்பு என்னை அழ வைத்தது. இரண்டு மூன்று நாட்கள் அந்த கதையை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை. ஒரு புத்தகம் என்னை அழவைத்தது என்றால், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்னை உணர வைத்தது. அது….
பிக் பாஸ்: நமக்குள்…..நமக்குள் என்று எதற்கு உங்களை இழுப்பது…. எனக்குள் இருக்கும் கெட்ட குணங்கள் அனைத்தும் participantsஆக பிக் பாஸில் உலா வந்தது. அவ்வப்பொழுது தலை தூக்கும் கெட்ட குணங்ளுக்கு ஜீல, காயத்ரி என்று பெயர் வைத்துக் கொண்டு அந்த குணங்களை திருத்திக் கொண்டாலும், எனக்கு பிக் பாஸ் பிடித்ததற்கான காரணம் இதோ…..
திரைப்படம்: எத்தனையோ நல்ல படங்கள் இருக்க, தாங்கமுடியவில்லை என்று பல பேர் கூறிய தமிழ் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அது….”வேலையில்லா பட்டதாரி-2”. வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் படம் பார்க்கும் போது கட்டாயமாக தூங்கி விடுவேன். போன ஆண்டில் “V.I.P-2” மட்டுமே நான் தூங்காமல் பார்த்த ஒரே படம். அப்படி தூங்கிய ஒரு நேரத்தில் பாட்டு ஒன்றை என்னை எழுப்பிவிட்டது…..
பாடல்: தூங்கிப் போன என்னை தட்டி எழுப்பிய பாடல். காற்று வெளியிடை படத்தில் வரும் “நல்லை, அல்லை…. படம் எப்படி எனறு எனக்கு தெரியாது. ஆனால இந்த பாடல் மிக அருமை. இன்னொறு பாடல் , எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தின் “மறுவார்த்தைப் பேசாதே….” மறுவார்த்தை என்ன, இனி மிகவும் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். அப்பொழுது தானே என் ஆசை நிறைவேறும்…
சொல்வதை தெளிவாக சொல்லாமல் குழப்புகிறார் என்று பகவத் கீதை பக்கமே போகாமல் இருந்த என்னை, அதன் பக்கம் போக வைத்தது திரு. சோவின் பகவத் கீதையின் உரை. பாரதியாரின் உரையை வைத்து தான் திரு. சோ விளக்குகிறார். அந்த உரை தெள்ளத் தெளிவாய் மனதில் பதிகிறது. பதிந்ததால் வந்த வினை...என்றேனும் ஒரு நாள் பகவத் கீதையை எளிதாய் எல்லோருக்கும் புரியும்படி எழுதவேண்டும் என்று ஆசை துளிர்விட்டிருக்கிறது. அந்த ஆசை பட்டுப் போய் விடுமா, செடியாய் துளிர்க்குமா……
கடந்த ஆண்டைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். ஆண்டுகள் மாறினாலும் மாறாமல் இருப்பது கிழக்கே உதித்து மேற்கே மறையும் சூரியன், நீலக் கடல், தமிழ் சீரியல்கள்……
Happy 2018
No comments:
Post a Comment