உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல

"Autumn is a second spring when every leaf is a flower," என்றார் எழுத்தாளர் Albert Camus.  இலைகள் வண்ணம் மாறி ஊரே அழகாய இருக்கும்  இலையுதிர் காலத்தின் ஒரு நாள் மாலைப் பொழுது.  பள்ளிக்கூடத்தின் பார்க்கிங் லாட்டில் என் பெண்ணின் வருகைக்காக காத்திருந்த சமயம்.  அவள் வருவதற்கு மேலும் இருபது  நிமிடங்கள் ஆகும் என்று அறிந்தபின், அந்த பள்ளியின் பக்கத்தில் இருந்த பூங்காவில் கொஞ்சம் நடை பயில்வோம் என்று சென்றேன்... என்னை மறந்தேன்.  அந்த பூங்காவில் இருந்த மரங்களின் இலைகள் வாரித் தெளித்த மஞ்சள், சிகப்பு, ப்ரொளன், ஆரஞ்சு வண்ணங்கள்.....அப்பப்பா.... அழகை விவரிக்க எனக்கு தெரியவில்லை.  இதில் மரங்களின் நடுவே கண்ணாமூச்சி ஆடும் சூரியன் வேறு.  இந்த அழகை ரசித்துக் கொண்டே நடைபயில்வோம் என்று காதில் earphone மாட்டிக்ட்டிக் கொண்டு நடந்தால்....அந்த earphone வழியே வந்த பாடல், " உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல...." இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்( ஒரு முறை கூட பார்த்ததில்லை. பார்க்கவும் மாட்டேன்) ஏனோ அன்று கேட்கும் போது  மனதை ஏதோ செய்தது. கண்ணுக்கு ஏதிரே இருக்கும் இயற்கை அழகை விட உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று  நினைக்கையில் ....

எட்டிப் பார்த்த கடவுளை "நீதான் உசந்தவ்ன்னு எல்லாருக்கும் தெரியும்.  கொஞ்சம் விலகி நில்..மற்றவர்களைப் பற்றியும் என்னை யோசிக்க விடு" என்று தள்ளிவைத்து விட்டு யோசிக்கும் பொழுது முதலில் தோன்றியது.....

அப்பா:  ஆயிரம் கட்டுப்பாடுகள், ஆயிரம் விதிகள் என்று எக்கச்சக்க கண்டிப்புடன் வளர்த்திருந்தாலும், என் அப்பா இருக்கும் காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி என் அப்பாவைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

அம்மா:  அப்பா இருக்கும் வரை அம்மாவின் அருமை தெரியவில்லை. இப்பொழுது அம்மாவின் அருமையைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. எங்கே தான் வருத்தப்ட்டால்   பெண்களும் வருத்தப்படுவார்களே என்று  தன் வருத்தத்தை காண்பிக்காமல் சிரித்த முகத்துடன் இருக்கும் என் அம்மாவைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்...

கணவர்:  ஏகத்துக்கு பொறுமை.  கோவம் என்றால் கிலோ என்ன விலை என்று உயர் குணங்களை கொண்டவருக்கு  நான் தகுதியாவனள் தானா என்று.  அப்பொழுதைக்கு அப்பொழுது தோன்றும்  என்னைப் போல் அவரும் பொறுமையற்று, கோவம் மிகுந்தவராய் இருந்திருந்தால் குடும்பம் கஷ்ட்டப்பட்டிருக்கும்.  என் குடும்பம் இன்று நன்றாய் இருப்பதற்கு காரணமான என் கணவரை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

குழந்தைகள்: இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு  "மை மாம் இஸ் த பெஸ்ட்" என்று என்னைக் கட்டிக் கொள்ளும் போது இந்த குழந்தைகளை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

மாமியார் மாமனார்:  எனக்கு கருச்சிதைவு ஆன நேரத்தில் ஏதோ காரணத்தினால் என் அம்மா என்னுடன் மருத்துவமனையில் இருக்க முடியாமல் போக, என்னுடன் இருந்து இரவு முழுவதும் விழித்திருந்து என்னை கவனித்துப் பார்த்துக் கொண்டது என் மாமியார்....  சமையல் அறைக்குள் போக முடியாத அந்த மூன்று நாட்களில் ஒரு நாள் என் மாமியார் ஏதோ அவசர காரியமாக வெளியே சென்று விட, தான் சாப்பிடாமல், நான் பசித்து களைத்து இருப்பேன் என்று எனக்கு உணவு பரிமாறிவிட்டு பின் தான் உண்டார் என் மாமனார்.  இவர்களைத் விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

என் குடும்பம்: என் அக்காக்களும், அவர்களின் கணவரும். குழந்தைகளும், மாமாக்களும், மாமிக்களும், சித்தியும், பெரியப்பாவும்,அவர்களின் செல்வங்களும், அவர்களின் வாழ்க்கை துணையும் இல்லாமல் என்னால் வாழவே முடியாது.  இவர்களை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

என் கணவரின் குடும்பம்:  நான் நல்லவளாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் குடும்பம் என்னிடம் நன்றாக தான் இருக்கும்.   ஆனால் என் கணவரின் குடும்பம்.. நாத்தனாரும், மச்சினரும், மாமாக்களும், மாமிக்களும், சித்திகளும், அத்தைகளும், அவர்களின் செல்வங்களும்,  அவர்களின் வாழ்க்கை துணையும்
என்னிடத்தில் உயிராய் இருப்பது பெரிய வரம்.  இவர்களை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

தோழிகள்:  நான் ஒன்றும் நல்ல பெண் கிடையாது.  மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசிக்காமல் மனதில் இருப்பதை அப்படியே கோவத்துடன் கொட்டிவிடுவது என் இயல்பு. என் கோவத்தை சகித்துக் கொண்டு என்னை விட்டு போகாமல் என்னுடன் இருக்கும் என் தோழிகளைத் விட இந்த  உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்.....

நண்பர்கள்:  போன மாதாத்தில் உலகம் me too me too  என்று அலறிக் கொண்டிருக்க.... வேண்டியதற்கும் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் அள்ளித் தரும் என்  நண்பர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.  அவர்கள் மூலம் நான் கண்டது ஆண்களின் உலகத்தை.  பெண்களின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.  வம்பு தும்பு இல்லாமல், கோவத்தை carry forward செய்யாமல் அந்த கணத்துடன் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஏதும் நடக்காதது போல் இருக்கும் வித்தையை கண்டேன்.  பெண்கள் கூட்டத்தில் ஒரு ஆணின் மனோபாவத்துடன் இருக்கும் ஆற்றலை கற்று வருகிறேன். இந்த ஆற்றலைக் கற்று தந்த நண்பர்களை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்லை என்று தோன்றினாலும்....

வாசகர்கள்:  என்னைப் பொறுத்த வரை எழுதுவது மிகவும் கடினம்.   இல்லாததில் இருந்து ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும்.  பல நேரங்களில் எழுதுவதையே விட்டு விடலாமா என்று கூட தோன்றியது உண்டு.  அப்படி துவண்டு போகும் நேரத்தில் என்னை தூக்கி நிறுத்துவது என் வாசகர்களாகிய நீங்கள்.  உங்களில் பல பேரை எனக்கு தெரியாது.  ஆனாலும் என் எழுத்தைப் படித்து அவ்வப்பொழுது உங்கள் பாராட்டுகளை குறுஞ்செய்திகளாய் அனுப்பி...என் எழுத்தை எனக்கு உணரச் செய்த உங்களை விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்றும் இல்லை.

என் கூற்றை ஒத்துக் கொள்வது போல் காற்று வீச "சர சர" என இலைகள் பறந்து கீழே விழுந்தன.


No comments:

Post a Comment