சிங்காரச் சென்னை

   அட...அட....சென்னைக்கு யுனெஸ்கொ அங்கீகாரம்... இது பெரிய அங்கீகாரம்.
 யுனெஸ்கொ அங்கீகாரம் வழங்கினாலும் சென்னையால் வளர்ந்த நாம் சென்னைக்கு அங்கீகாரம்....வேண்டாம்...சென்னையின் பல நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறோமா?  வெய்யில், மழை, கொசு, தூசி  என்று பல குற்றங்களை அடுக்கிக் கொண்டே
போவதை நிறுத்திவிட்டு, நாம் வாழ்வதற்கு தகுதியாக சென்னையில் என்ன இருக்கிறது என்று யோசித்தால்  அனேக விஷயங்கள் புலப்படும்.  எனக்கு புலப்பட்ட விஷயங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து  கொள்கிறேன். இதை படித்து விட்டு சென்னைக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்.......  நினைப்பீர்கள். 

சென்னையின் தட்பவெப்பம்:

சென்னையில் வெப்பம் மட்டுமே இருக்கிறது என்று புலம்புகிறவர்களுக்கு... சென்னையில் வெப்பம் அதிகம் தான்.  பன்னிரெண்டு மாதங்களில் ஏதோ இரண்டு மூன்று மாதம் வெப்பம் குறைந்து காணப்பட்டாலும் மற்ற மாதங்களில் வெப்பம் அதிகம் தான்.  கொஞ்சம் புலம்புவதை நிறுத்தி விட்டு யோசிப்போம்.  நமக்கு குளிர் காலம் என்பதே இல்லை.  குளிரில் இருந்தால் தான்  வெய்யிலின் அருமை தெரியும்.  வருடம் முழுவதும் வெப்பம் இருப்பது எவ்வளவு பெரிய வரம் என்பது வெப்பத்தில் வாடுபவர்களுக்கு புரியாது.  அழகாய் உடை அணிந்து ஒரு இடத்திற்கு போய் சேர்வதற்குள் வியர்வை ஆறாய் பெருகி எல்லாவற்றையும் நாசம் செய்கிறது என்று கூறுபவர்களுக்கு...வருடம் முழுவதும் உங்களுக்கு அழகாய் உடை அணிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  வியர்வை பட்டால் துவைத்து வெய்யிலில் மொட மொடவென்று காய வைக்கும் வசதி.....வருடம் முழுவதும் இருக்கிறது.  இந்தியாவில் குளிர் உள்ள மானிலத்தில் இருப்பவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். அழகாய் உடை அணிந்து அதற்கு மேல் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ள வேண்டும்.  வெளியில் ஸ்வெட்டர் போடுவது போதாது என்று வீட்டில் வேறு ஸ்வெட்டர் அணிந்து கொள்ள வேண்டும்.  அதற்கும் மேலாக சிலீர் தண்ணீர். வெப்பமே இல்லாத வெய்யில்.  இங்கு எல்லாம் போய் இருந்து பார்த்தால், சென்னையின் அருமை புரியும்.  அடுத்த முறை வெய்யில் கொளுத்தும் போது அந்த சூரியனை அளவுக்கு அதிகமாக திட்டாமல்  மிதமாய திட்டுங்கள்.  முடிந்தால் நன்றி கூறுங்கள்.

சென்னையின் சூரியோதயம்:

காலையில் ஏழுந்து மளமளவென்று அன்றாட வேலையை துவங்குகிறோமே...என்றேனும் ஒரு நாள் இந்த சூரியோதயத்தின் நேரமும் சூரிய அஸ்தமனத்தின் நேரமும் எத்துணை பாங்காய் அமைந்திருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? அருணாசல் ப்ரதேஷ்ஷில்  "டாங்" என்ற இடத்தில் தான்  இந்தியாவின் முதல் சூரியோதயம்.  எத்தனை மணிக்கு தெரியுமா?  வெய்யில் காலங்களில் காலை நான்கு மணிக்கு.  சென்னையில் காலை நான்கு மணிக்கு சூரியன் உதித்தால்.....டண்டணக்கா.... தான்.  காலை நான்கு மணியில் இருந்து ஒட்டம் துவங்கிவிடும்.  அப்படி இல்லாமல நமக்காக அழகாய் ஐந்தே முக்காலில் இருந்து ஆறு மணிக்குள் வெய்யில் காலங்களில்  சூரியோதயம்.  இந்த டிசம்பர், ஜனவர் ஃபிப்ரவரியில் ஆறிலிருந்து ஆறைக்குள் சூரியோதயம்.  மிகவும் தாமதமாக ஏழரை மணிக்கு உதித்தாலும் கஷ்ட்டம் தான்.  இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவோமே தவிர சுறுசுறுப்பாய் இருக்க மாட்டோம்.  சென்னையை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாய இருப்பதற்கு காரணம் ஒழுங்கான சூரியோதயம் தான்.  அதே "டாங்"கில் குளிர் காலங்களில் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் தெரியுமா?  மாலை நான்கு மணி.  நான்கு முப்பது ஊர் இருட்ட ஆரம்பிக்கும்.  நமக்கும் மாலை நான்கு முப்பதிற்கெல்லாம் ஊர் இருட்டிவிட்டால்.....அண்டை மாநிலங்களில் கூட தான்  சென்னையைப் போல் சூரியோதயமும் அஸ்தமன்மும் இருக்கிறது என்பவர்களுக்கு....அங்கெல்லாம் குளிர் உண்டு.  இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க தோன்றுமே தவிர, சட்டென்று படுக்கையை உதறி தள்ளி விட்டு எழுந்திருக்க முடியாது.  நாம் சுறுசுறுவென்றும், துறுதுறுவென்றும் இருப்பதற்கு காரணம் அந்த சூரியன்.  நாளை காலை எழும் போது, பாங்காய் உதித்து அஸ்தமிக்கும் சூரியனுக்கு சலாம் போடுங்கள்.

டிசம்பர் சீசன்:

இந்தியாவின் பல இடங்கள் குளிரில் இழுத்துப் போர்த்தி தூக்கத்தில் இருக்க, சென்னை மார்கழி மாதத்திற்கு தயாராகும்.   வண்ண வண்ண கோலங்கள்,   திருப்பாவை, திருவெம்பாவை,கூடவே வரும் கிறிஸ்துமஸ்,  பொங்கல், புளியோதரை ப்ரசாதங்கள்....  இது போதாதென்று களை கட்டும் ம்யூசிக் சீசன்.   அடடா.....நம்மைப் போல் டிசம்பர் மாதத்தை யாரும் கொண்டாடுவதில்லை.  டிசம்பர் மாதம் அருகில் வந்து விட்டது.  பெரிய பெரிய கோலங்களைப் பார்க்கும் பொழுது கோலம் போட்டவரை பாராட்டுவதுடன்,  சென்னைக்கும் ஒரு "ஓ" போடுங்கள்.

டிசம்பர் பூக்கள்:

ஏதோ படத்தின் பெயர் என்று நினைத்து விடாதீர்கள்.  நம் ஊரில் மட்டுமே டிசம்பர் மாதத்தில் பூக்கும் பூவின் பெயர்.  லெமூரியா கண்டம் என்று ஒன்று இருந்தது.  இப்பொழுது இல்லை.  அதே போல் நாம் கடைப் பிடித்த பல பழக்க வழக்கங்கள் லெமூரியா கண்டத்தைப் போல் அழிந்து விட்டாலும், சில இன்னும் மிச்சம் இருக்கின்றன.  அதில் ஒன்று தலையில் பூ சூடிக் கொள்வது.  இந்த " டெக்னிக்கலி அட்வாண்ஸ்ண்ட்" ஆன காலத்திலும் பல பெண்கள் பூ வைத்துக் கொள்வதை விரும்புகிறார்கள்.  மல்லியும், ஜாதியும், முல்லையும் காணக் கிடைக்காத டிசம்பர் மாதத்தில், டிசம்பர் பூ பூத்து நம் பெண்களை மகிழ்விக்கிறது.  அதுவும் பள்ளிக்கு செல்லும் குட்டி குட்டி "லட்டு"களின் பின்னலின் தொடக்கத்தில், வைலட் கலரில் எவ்வளவு அழகாய் டிசம்பர் பூக்கள்.   இதை படித்து சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு உங்கள் வேலைகளில் மூழ்கி விடாதீர்கள். டிசம்பர் பூவை பார்க்கும் சமயம்....அதே அதே .....ஒரு "ஓ" போடுங்கள்.



"த க்ரெட் லா ஆஃப் கர்மா" கேள்விப்பட்டிருக்கீர்களா?  வேண்டாம்...ந்யூட்டனின் மூன்றாவது தெரியுமா?...வேண்டாம்....நம் ஊருக்கு வருவோம். "வினை விதைப்பவன் , வினை அறுப்பான்...." நமக்கு மிகவும் தெரிந்த பழமொழி.  "ஊரெல்லாம் தண்ணி, ஒரே வெய்யில், என்ன ட்ராஃபிக், ராத்திரி முழுக்க ஒரே கொசு கடி" என்ற எதிர்மறை வாக்கியங்களை உதிர்த்துக் கொண்டிருந்தால், எல்லாம் எதிர்மறையாக தான் நடக்கும்.  அதை விடுத்து ஒரு நாளில் ஒரு நிமிடமோ ஒரு நொடியோ...சிரித்த முகத்துடன் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சென்னைக்கு  நன்றி சொன்னால்...சொல்லிப் பாருங்கள்....

No comments:

Post a Comment