ஒபாமாவும்....

"சுஜாதா, அமெரிக்காவில் உங்கள் வீடு எங்கு இருக்கிறது?"

"வாஷிங்டன் டி.சி.யிலிருந்து கூப்பிடு தூரத்தில்."

"அடிக்கடி வாஷிங்டன் டி.சி. சென்றிருப்பீர்களோ?"

"அடிக்கடி என்று சொல்லவதற்கில்லை.  ஆனால் பல முறை சென்றிருக்கிறேன்."

"வாஷிங்டன் டி.சியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?"

"செர்ரி ப்ளாஸம் பார்ப்பதற்காக முதல் முதலாய வாஷிங்டன் டி.சி. சென்றோம்.  அந்த செர்ரி மரங்களை வேடிக்கை பார்த்தபடியே நாங்கள் நடந்து கொண்டிருக்க, திடீரென்று தூரத்தில் ஒரு கட்டிடம் என் கண்ணில் பட்டது.  கண்ணில் பட்ட முதல் நொடியிலேயே மனதிலும் பட்டது.  அன்று முதல் இன்று வரை அந்த கட்டிடம் என்னை வியப்பில் ஆழ்த்துவதில் தவறில்லை.  பலமுறை இரவிலும், பகலிலும் அந்த கட்டிடத்தைப் பார்த்திருக்கிறேன்.   முதன் முதலில் பார்த்தபொழுது எப்படி என்னை வியப்பில் ஆழ்த்தியதோ அதே போல் ஒவ்வொரு முறையும் வியப்பில் ஆழ்த்தும்.  அதையும்  தவிர முக்கியமான விஷயம், வரலாற்று பக்கமே தலை வைத்து படுக்காத என்னை, வரலாற்றின் மேல் காதல் கொள்ள வைத்தது அந்த கட்டிடம்.  எதற்காக, எப்படி இந்த கட்டிடத்தை கட்டினார்கள் என்று படிக்க தொடங்கி, அமெரிக்காவின் வரலாற்றை ஏனோ தானோ என்று படித்துவிட்டு, இன்று இந்தியாவின் வரலாற்றை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.  அந்த கட்டிடம்......"U.S. Capitol."

"வெள்ளை மாளிகையைப் பற்றி....?"

"அமெரிக்கா வந்த புதிதில் வெள்ளை மாளிகையைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அப்பொழுது அதிபர் புஷ் ஆட்சியில் இருந்தார்.  அன்று வெள்ளை மாளிகை என்னை பெரிதாய் ஈர்க்கவில்லை.   அதிபர் ஒபாமா ஆட்சிக்கு வந்ததும் வாஷிங்டன் டி.சியின் மேல் இருந்த காதல் பன்மடங்காயிற்று."

"அதிபர் ஒபாமா வந்த பிறகு வெள்ளை மாளிகை சென்றிரீர்களா?"

"இல்லை.  உள்ளே செல்லவில்லை.  ஆனால் பலமுறை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன்.  அப்பொழுது எல்லாம் நமக்கு பிடித்த ஒருவர் உள்ளே இருக்கிறார் என்று தோன்றும்.   வெள்ளை மாளிகையின் அருகே ஒரு பெரிய புல்வெளி ஒன்று உண்டு.  அங்கு உட்கார்ந்து சாப்பிடுவதற்கு என்று பிக்னின் டேபிள்(கள்) உள்ளன.   வீட்டிலிருந்து புளியோதரையும், தயிர் சாதமும், ஊறுகாயும் எடுத்துக் கொண்டு, அந்த டேபிள்களில் உட்கார்ந்து கொண்டு வெள்ளை மாளிகையைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது ஒரு சந்தோஷம்."

"U.S. Capitol உள் சென்றிருக்கிறீர்களா?

"U.S. Capitol. ஏரோப்ளேன் போல்.  வெளியிலிருந்து பார்க்கும் இன்பத்தைப் போல் உள்ளே அவ்வளவு இன்பம் இருக்காது.   U.S. Capitol முன்பு ஒரு பெரிய மைதானம் இருக்கிறது.  குழந்தைகளுடன் விளையாடலாம்.  நடை பயிலலாம்.  எலும்மிச்சம்பழ சாதமும், உருளைக் கிழங்கு ரோஸ்ட்டும் சாப்பிடலாம்.  அங்கு சதா சர்வ காலமும் ஹெலிகாப்ட்டர்கள் சுற்றிக் கொண்டே இருக்கும்.  கருப்பு, நீலம், பச்சை, சிகப்பு என பல வண்ணங்களில் ஹெலிகாப்ட்டர்கள் இருக்கும்.  அதை பார்க்கும்பொழுது எல்லாம் இதற்குள் அதிபர் ஒபாமா இருப்பாரா என்று பலமுறை நான் நினைத்ததுண்டு."

"அதிபர் ஒபாமா மேல் அப்படி என்ன ஈர்ப்பு?  அவர் உங்களுக்கு என்ன நல்லது செய்தார்?"

"அவர் நல்லது செய்தாரா என்று எனக்கு தெரியாது.  தீயது ஏதும் செய்யவில்லை.  எனக்கு யானை மிகவும் பிடிக்கும். யானை எனக்கு என்ன செய்தது?  கடல் அலை பிடிக்கும். அலை எனக்கு என்ன செய்தது? யாரைப் பார்க்கும் போது என் மனம் பூத்துக் குலுங்குகிறதோ,  அவர் எனக்கு ஏதாவது செய்து தான் ஆக வேண்டும் என்றில்லை.  ஒபாமாவை நான் அதிபராய் பார்த்த நாட்கள் குறைவு.  நல்ல கணவராய், நல்ல தந்தையாய் பார்த்த நாட்கள் தான் அதிகம்."

"அவர் நல்ல கணவராய் இருப்பதில் உங்களுக்கு என்ன லாபம்?"

"பெண்களை மதிப்பவரால் மட்டுமே நல்ல கணவராய் இருக்க முடியும்.  பெண்களை அவர் மதித்தால், பெண்களும் அவரை மதித்தார்கள்.  ஆட்சியில்  பெண்ணகளால் தொல்லை இல்லை.  அவ்வாறு அல்லாமல் பெண்களைப் பற்றி வாய்க்க்கு வந்தபடி பேசுபவர் ஆட்சி.......ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இனி சிரித்த முகத்துடன் இருக்கும் அதிபரும் இல்லை, மக்களும் இல்லை."

"மிஷல் ஒபாமா பற்றி....."

"நானும் என் பெண்ணும் மிஷல் ஒபாமாவின் பரம விசிறி.  என்ன படிப்பு, என்ன உடை, என்ன பேச்சு....அவரைப் பார்த்த பின் தான் நாம் படிக்காமல் போனோமே என்று எண்ணி வருத்தப்பட்டிருக்கிறேன்.  அதிபரின் மனைவி என்று பொம்மை போல் இல்லாமல், தன்னால் இயன்ற நன்மையை செய்திருக்கிறார்.  என் மீது அவரின் தாக்கம் எவ்வளவு என்றால் சில நாட்கள் முன் என் மகளிடன் என்னையும் அறியாமல் ஒன்று கூறினேன்.  "பெண்ணே ஒழுங்கா சாப்பிடு.  இனிமே நல்லது எது என்று சொல்வதற்கு மிஷல் ஒபாமா கிடையாது." நான் சொல்லி முடித்த பின் எங்கள் இருவர் கண்களும் கலங்கியது உண்மை. ஒபாமாவின் வெற்றிக்கு முழு முதல் காரணம் மிஷல் ஒபாமா தான்.  நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணம்."

"நேற்று inauguration பார்த்தீர்களா?"

"ஒபாமாவும், மிஷல் ஒபாமாவும் இருக்கும் வரை பார்த்தேன். அவர்கள் பறந்து போன பிறகு எல்லாம் போனது.  எதையும் பார்ப்பதற்கு mood இல்லை."

"சுஜாதா,  இந்த பதிவை ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாமே?"

"சிரிப்புக்கும். கிண்டலுக்கும் ஆங்கிலம் உதவும்.  மனதை சொல்வதற்கு என் தாய்மொழியைத் தவிர வேறு ஏதும் உதவாது."

"கீழே இருக்கும் வீடியோவிலும் தமிழ் பாட்டு தான் உபயோகிதிருக்கிறீர்கள்?"

"ஆம். அந்த பாட்டில் நான் ஊறி திளைத்திருக்கிறேன்.  எந்த ஆங்கில பாட்டிலும் அது போன்று வார்த்தைகள் இல்லை."

"வாஷிங்டன் டி.சி. போவீர்களா?"

"போவேன்.  U.S. Capitol. பார்க்க போவேன்."

"வெள்ளை மாளிகை...."

"இனிஅது வெறும் மாளிகை. "










1 comment:

  1. Suja, such a wonderful post. You have captured the sentiments of many women. President Obama and first lady Michelle Obama have set a such high moral standard that's hard to match. Thank you for the post.
    I will miss them dearly.
    Anu

    ReplyDelete