மெரினாவும்.....

"சுஜாதா, சென்னையில் உங்கள் வீடு எங்கு இருக்கிறது?"

"மெரினாவிலிருந்து கல்லெறி தூரம்."

"அடிக்கடி மெரினாவிற்கு சென்றிருப்பீர்களோ?

"அடிக்கடி சென்றதாய் நினைவு இல்லை.  ஆனால் சிறுவயதில் பலமுறை சென்றிருக்கிறேன்."

"மெரினாவைப் பற்றி உங்கள் நினைவுகளை சொல்ல முடியுமா?"

"எங்கள் வீட்டிலிருந்து கடற்கரை சாலைக்கு வந்தால் இருப்பது விவேகானந்தர் பீச்சு.  விவேகானந்தர் நினைவு இல்லம் இருப்பதால விவேகானந்தர் பீச்சு. அதிலிருந்து வலது பக்கம் ரெடியோ பீச்சு.   சென்னை வானொலி நிலையம் இருந்ததால் ரெடியோ பீச் என்று பெயர் காரணம் வந்தது.  கலங்கரை விளக்கம், காந்தி சிலை எல்லாம் ரெடியோ பீச்சில் இருக்கிறது. இடது பக்கம் மெரினா பீச்சு.  அதையும் தாண்டி போனால் கல்லறை பீச்சு. "

"ஆக, கலங்கரை விளக்கம் இருக்கும் ரெடியோ பீச்சில் தான் கூட்டம் அதிகம் இருக்குமோ?"

"இல்லை. கலங்கரை விளக்கம் முன்பு செயல்பாட்டில் இல்லை.  பூட்டிக் கிடந்தது. மெரினாவில் தான் கூட்டம் அதிகம்.  முன்பு மெரினாவின் மணல் வெளியில் கடைகள் இருந்தன.  அந்த கடைகளுக்கு ஆகவே மெரீனாவில் கூட்டம் வரும்.  அந்த கடைகளைப் பார்ப்பதே தனி சந்தோஷம்.   தலைக்கு போட்டுக் க்ளிப்பிலிருந்து துணி உலர்த்தும் க்ளிப் முதற்கொண்டு எல்லா விதமான பொருட்களும் அங்கு கிடைக்கும்.  பின் அந்த கடைகள் அகற்றப்பட்டன."

"ஏன்?"

"கடற்கரையை மாசுபடுத்துவதால் அந்த கடைகள் அகற்றப்பட்டன.  இப்பொழுது அங்கு சிலைகள் இருக்கின்றன. ஆங்....இன்னொன்று சொல்ல மறந்து போனேனே....அங்கு கடற்கரை மணல்களில் ஊற்றுக் கிணறுகள் இருக்கும்.  தண்ணீர் பஞ்ச நாட்களில் அந்த கிணறுகள் தான் தண்ணீர் தந்தன.  கடல் தான் தண்ணீர் உப்பாய் இருக்க, அந்த கடலிலிருந்து சற்று தொலைவில் இருந்த இந்த கிணறுகளில் தண்ணீர் பளிங்கு போல் இருப்பதுடன் கற்கண்டாய் இனிக்கும்.  அதெல்லாம் ஒரு காலம்."

"கடைசியாய் எப்பொழுது மெரினாவிற்கு சென்றீர்கள்?"

"நினைவில் இல்லை.  ஆனால் இப்பொழுது போக வேண்டும் போல் இருக்கிறது.  அங்கு சென்று ஜல்லிக்கட்டிற்காக மத வேறுபாடின்றி இணைந்திருக்கும் இளைஞர்களை காண வேண்டும் என்ற ஆவல் உள்ளது."

"நீங்கள் இப்பொழுது சென்னையில் இருந்தால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பீர்களா?"

"தெரியவில்லை. கலந்து கொள்ளாவிட்டாலும், சென்று கண்டு விட்டு வந்திருப்பேன்.  வந்தபின் உணர்ச்சி குவியலாய் இருந்திருப்பேன்.  அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்திருப்பேன்.  என் வாழ்வில் இது போல் ஒரு எழுச்சியை பார்ததில்லை என்று மகிழ்ந்து இருப்பேன்."

"அங்கு அவரவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, நீங்கள் வெறும் சென்றிருப்பேன், கண்டிருப்பேன், மகிழ்ந்திருப்பேன் என்று சொல்வது உங்களுக்கே அழகாய் இருக்கிறதா?"

"அழகாய் தான் இல்லை.  என்ன செய்வது? இருப்பது எங்கேயோ.  என்னால் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், இந்த அரசு ஒன்று செய்ய வேண்டும்.  அரசர் காலத்தில் கல்வெட்டு எழுப்பினாற் போல் இப்பொழுது இந்த மெரினாவில் ஒரு கல்வெட்டு எழுப்ப வேண்டும்.  2017 ஆம் ஆண்டு, தை மாதத்தில் ஏறு தழவதல்  விளையாட்டை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இங்கு இளைஞர்களின் அமைதிப் போராட்டம் நடந்தது என்று அந்த கல்வெட்டில் பதிக்க வேண்டும்.  வருங்காலம் அதை உணர வேண்டும்."

"பாரதியார் பாடலில் வரும் வாய்ச்சொல்லில் வீரர் நீங்கள் தான் போல் இருக்கிறது?"

"இருக்கலாம்."

"நீங்கள் கூறியது போல் அப்படி ஒரு வேளை அங்கு கல்வெட்டு எடுத்தால், கட்டாயமாக அந்த கல்வெட்டுடன் ஒரு செல்ஃபி எடுத்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன், சரி தானே?"

"தெரியாது.  இப்பொழுது இருக்கும் மன நிலையில் செல்ஃபி பற்றி சிந்திக்க முடியவில்லை."

"ஏன்?"

"எனக்கு இன்னொரு வீடு இருக்கிறது......"


                                                                                              .......தொடரும்.







1 comment: