இறுதிச்சுற்று

எப்ப வந்த படத்துக்கு எப்ப விமர்சனம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது?  இருந்தாலும்.....

முதல் சுற்று:

ஒரு புத்தகத்திற்கு அட்டைப் படம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஓரு படத்திற்கு முதல் காட்சி மிகவும் முக்கியம்.  முதல் காட்சி சரியில்லை என்றால் என்னைப் போல் அவசர புத்தி உடையவர்கள் படம் பார்காமலே போவார்கள்.  இந்த படத்திலும் முதல் காட்சி சரியில்லை.  "என்னையா படம் பண்றீங்க?"  ஒரு அலுப்பு தட்டியது.  இந்த படத்தை பார்க்க தான் வேணுமா என்ற கேள்விக்கு மாதவன் நடித்தற்காக பார்ப்போம் என்ற பதில் மனம் தந்தது.

இரண்டாம் சுற்று:

மேலும் அலுப்பு.  மாதவன் பேசுவது பல இடங்களில் புரியவில்லை.  அதற்கும் மேலாக கடற்கரையும், கடற்கரை சார்ந்த இடங்களில் நடக்கும் காட்சிகளும் படம் பார்க்கும் ஆர்வத்தைக் குறைத்தது.  பார்த்த வரையில் போதும் என்று நினைத்த போது தான் திருப்பம் வந்தது ----"ரித்திக்கா சிங்" வாயிலாக.

மூன்றாம் சுற்று:

 ஹன்ஸிகா, காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதி ஹாசன்,த்ரிஷா, நயந்தாரா என்று நடிப்பைத் தவிர  எல்லாவற்றையும் காண்பிக்கும் அழகு பொம்மைகளைப் பார்த்து பார்த்து பழகிப் போன வேளையில், தீயாய் நடித்து, படத்தைப் பார்க்க வைத்தது ரித்திகா சிங்.  நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருந்ததால், சினிமாவில் பாக்ஸராய் நடிப்பது எளிதாக இருந்திருக்கலாம்  என்று கூறிவிடமுடியாது.  பாக்ஸிங் காட்சிகளைத் தவிர பல இடங்களில் ரித்திகா சிங் பின்னி பெடலெடுத்து விட்டார்.  இந்த மாதிரி நடிப்பை ஒரு நடிகையிடமிருந்து பார்த்தது எப்பொழுது என்று நினைவிற்கு வரவில்லை.  அசத்திவிட்டார்.  She has set the bar pretty high.  அடுத்த படத்தில் பொம்மையாக மாறிவிடக் கூடாது.

நான்காம் சுற்று:

"Heroine oriented" படத்தில் நடித்தற்காக மாதவனுக்கு கை கொடுக்க வேண்டும்.  "Amul Baby" மாதவன்,  "Angry Bird"  மாதவனாக முற்றிலும் உருமாறி  கலக்கியிருக்கிறார்.   ஒரு முறையேனும் சிரிக்க மாட்டாரா என்று நினைக்க வைத்துவிட்டார்.  வாழ்க்கையில் உருப்படுவதற்கு  மாதவனைப் போல் ஒரு கோபம் கொண்ட கோச்சர் எல்லோருக்கும் தேவை.

இறுதிச்சுற்று:

எல்லா புகழும் இயக்குனர் சுதாவிற்கே.  பெண் இயக்குனராய் இருந்து கொண்டு பெண்கள் சுதந்திரம், பெண் உரிமை என்று படம் எடுக்காமல் முற்றிலும் மாறுபட்ட "sports" படம் எடுத்ததற்காக இயக்குனருக்கு ஒரு "ஓ".  அதுவும் தவிர "dream song" என்று வெளி நாடுகளுக்கு செல்லாமல், கன்னா பின்னாவென்று நகைச்சுவையை புகுத்தாமல், அனாவசிய சண்டை காட்சிகளை வைத்து கார்களையும், பஸ்களையும் தீக்கிறையாக்காமல் இருந்ததற்காக "ஓ ஓ."  பாடல்கள் மனதில் பதிய வில்லை என்றாலும் படத்துடன் ஒத்து இருந்தது.  பாக்ஸிங் படத்திற்கு ஏற்ப வசனங்களிலும் காட்சிகளிலும் ஆங்காங்கே  "knockout punch".  அதிலும் ராதாரவி..."best punch".

Expecting another great movie from the team real soon!!

No comments:

Post a Comment