நீயும், நானுமா கண்ணா !!

"மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே கண்ணா! வெர் ஆர் மை ரிட்டர்ன்ஸ்?"

"ரிட்டர்ன்ஸ்…?"

"நான் உனக்கு எவ்வளவு பண்றேன்.  நீ எனக்கு என்ன பண்ணங்கறது தான் "ரிட்டர்ன்ஸ்"."

"நான் தான் உனக்கு……."

"இதோ பார்.  இது பண்ணிருக்கேன், அது பண்ணிருக்கேனு பேசின கதையே பேசாதே.  வேற ஏதாவது புதுசா சொல்லு.  போன வருஷம் பண்ண முறுக்கு, சீடையேவா இந்த வருஷம் உனக்கு தரேன்.  வருஷா வருஷம் புதுசா பண்ணல.  அதுவும் இதெல்லாம் பண்றது எவ்வளவு கஷ்ட்டம் தெரியுமா உனக்கு?  சாப்ட்டா மட்டும் போதாது.  பண்ணி பாக்கணும்."

"அவ்வளவு தானே. இதோ……"

"தெய்வமே !!!! வேண்டாம்.  நீ கை தூக்கினா, முறுக்கு என்ன உலகமே சுத்தும்.  என் நிலைமைல இருந்து யோசிச்சு பார்.  ஒவ்வொரு வருஷமும் இந்த பட்சணம் பண்றதுக்குள்ள எவ்வளவு டென்ஷன்.   சீடை வெடிக்காம இருக்கணும், வெல்ல சீடை கலையாம இருக்கணும். இந்த முறுக்கு இருக்கு பார்…. முறுக்கு சுத்தறதுக்கு மூணு நாள் பட்டினி கிடக்கணும்னு எங்கம்மா சொல்லிருக்கா.  மூணு நாள் பட்டினி கிடந்து முறுக்கு சுத்த கத்துண்டேன்."

"………….."

"என்ன பாக்கற? ஒ.கே. ஃபைன்.  மூணு நாள் பட்டினி கிடக்கல. எப்படியோ கத்துண்டேன்.  நானும் தெரியாம தான் கேக்கறேன், ஒரு கேசரி, ஒரு பாயசம் அது மாதிரி ஈசியா எதுவும் சாப்ட மாட்டயா?

"கேசரி எனக்கு ரொம்ப பிடிக்குமே.  அதுவும் அவல் கேசரி……"

"ஹலோ, ஹலோ. நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, கேசரிய வேற லிஸ்ட்ல சேக்கற?  பாத்தயா….சொல்ல வந்ததேயே மறந்துட்டேன்.  நான் வருஷா வருஷம் புதுசா புதுசா பட்சணம் பண்ணி தர மாதிரி, நீயும் எனக்கு வருஷா வருஷம் உன் பர்த்டேக்கு எனக்கு எதாவது பண்ணணும் ஆர் எனக்கு ஏதாவது குடுக்கணும்."

"என்ன வேணும்ணு சொல்லு?"

"எனக்கு தெரியாது.  என் கிட்ட என்ன இல்லயோ அத குடு.  "

"அவ்வளவு தானே……"

"இரு. இரு.  உனக்கு கம்யூனிக்கேஷன் ப்ராபளம் இருக்குனு தெரியாம, நான் பாட்டுக்கு என் கிட்ட இல்லாதத குடுனு கேட்டுட்டேன்.   எனக்கு சுகர் இல்ல, கொலஸ்ட்ரால் இல்ல, அதெல்லாம் நீ எனக்கு குடுத்துட்டேனா……"

"இப்படி….."

"இப்படி கூட பண்ணுவேனானு கேக்காத.  நீ என்ன வேணா பண்ணுவ.  ஆனா பண்ண வேண்டியத மட்டும் பண்ணாம விட்டுட்ட……"

"அப்படினா……"

"ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற?  நான் மஹாபாரத போர் பத்தி தான் சொல்றேன்.  நீ நினைச்சுருந்தா இந்த போரே இல்லாம பண்ணிருக்கலாம்.  ஆனா நீ பண்ணலையே.  உனக்கு கீதை சொல்லணும்னு ஆசை.  அதான் இந்த மாதிரி ஒரு பெரிய அநியாயம் பண்ணிட்ட."

"அநியாயமா…"

"பின்ன இல்லையா? அர்ஜூனன யோசிச்சு பார்?"

"அவனுக்கு என்ன ப்ரச்சனை. அவன் கூட தான் நான் இருந்தேனே?"

"அதான் ப்ரச்சனையே.  போரும் வேணாம், எதுவும் வேணாம்னு விட்டு போனவன, கீதைய சொல்லி, விஸ்வரூபத்த காட்டி ப்ரைன் வாஷ் பண்ணி,  அவன் சொந்த பந்தங்களை எதிர்த்து சண்டை போட வைச்சுட்ட.  அர்ஜூனனாவது பரவால்ல.  இந்த சிவாஜி……….ஸாரி, கர்ணன எப்படி படுத்திட்ட?  அவன் கிட்ட போய் ரொம்ப அவசியாம அவன் அம்மா யாரு, அவன் ப்ரதர்ஸ் யாருனு சொல்லணுமா? சொல்லாம இருந்திருக்கலாம் இல்ல.   தெரிஞ்ச நிமிஷம் அவன் எவ்வளவு தவிச்சுருப்பான்? அந்த தவிப்பு உனக்கு தெரியுமா?"

"எனக்கு….."

"உனக்கு கஷ்ட்டமும் தெரியாது, வருத்தமும் தெரியாது, வலியும் தெரியாது.  ஏன்னா எங்கள மாதிரி மனிதர்களுக்கு தான் இந்த வலியெல்லாம்.  நீ கடவுளாச்சே.  உனக்கு ஏது வலி.  மனுஷனா பிறந்து பாத்தா, அப்ப  தெரியும்."

"அதான் ராமனா மனித பிறவி எடுத்தனே."

"யார் இல்லனா?  நீ ராமனா மனித பிறவி எடுத்தாலும் உனக்கு இருக்கற கடவுள் தன்மை கொஞ்சம் கூட குறையலையே.  தசரதன் காட்டுக்கு போனு சொன்னதும், உடனே கிளம்பிட்ட.  கடவுளா இருந்ததனால ஒண்ணும் சொல்லாம கிளம்பிட்ட.  மனுஷனா இருந்தா கிளம்பிருப்பயா?"

"சரி. ஒண்ணு கேக்கறேன்.  உங்கப்பா உன்ன காட்டுக்கு போனு சொன்னா நீ போக மாட்டயா?"

"என்ன? என்ன? என்ன? யார பாத்து?  எங்கப்பாவேயே வா…………எங்கப்பா ஒரு நாளும் சொல்ல மாட்டா."

"சொல்லிட்டானு வைச்சுக்கோ."

"சொல்ல மாட்டங்கறேன்.  திரும்ப, திரும்ப….எங்கப்பா மட்டும் இல்ல எந்த அப்பாவும் பசங்கள காட்டுக்கு போனு சொல்ல மாட்டா.  எங்களுக்கெல்லாம் அன்பு, பாசம்னு ஏதோ இரண்டு நல்ல குணம் இருக்கு.  அதெல்லாம் இருக்கறதனால நாங்க மனுஷர்களா இருக்கோம்.  அதெல்லாம் இல்லாததுனால நீ கடவுளா இருக்க."

"அப்ப எனக்கு அன்பு, பாசம் எல்லாம் இல்லேங்கறயா?"

"இருந்திருந்தா த்ரொளபதி  கூப்ட்டதும் உடனே வந்திருப்ப.  அவ ரெண்டு கைய விட்டுட்டு  அழற வரைக்கும் வெயிட் பண்ணிருந்திருக்க மாட்ட."

"நான்…"

" நீ காப்பாத்துவேனு உனக்கு தெரியும்.  அவளுக்கு தெரியுமா? இல்ல, நானும் தெரியாம தான் கேக்கறேன்.  உனக்கு கைல ஒரு நாள் காயம் பட்டபோது, அவ உடனே புடவைய கிழிச்சு உன் காயத்துல கட்டல?  நீ அழற வரைக்கும் வெயிட் பண்ணிண்டு இருந்தாளா? ஆமாம். நீ எங்க அழ போற? மத்தவங்கள அழ வைக்கறது தான உன் வேலை."

" அடடா.  உன் கண் ஏன் இப்ப கலங்கறது? நீ எதுக்கு  அழற?"

"என்ன பண்றது.  எதுக்கு எடுத்தாலும் சிரிக்கறது உன் இயல்பு, எதுக்கு எடுத்தாலும் அழறது என் இயல்பு."

"நீ அழற அளவுக்கு நான் இப்ப ஒண்ணும் பண்ணல. உன்ன ஒண்ணும் சொல்லக் கூட இல்லையே."

"அதுக்கு தான் அழறேன்.  நான் பாட்டுக்கு இஷ்ட்டத்துக்கு வாய்க்கு வந்தபடி பேசறேன்.  நீ ஒரு வார்த்தை கூட என்ன சொல்லலை. இதுவே வேற யாராவது இருந்திருந்தா….."

"சரி,   என் மேல வேற ஒண்ணும் குற்றம் இல்லையா?"

"இல்ல. நான் உன்ன குற்றம் சொல்ல சொல்ல நீ எனக்கு பண்ணது எல்லாம் ஞாபகம் வருது.  த்ரொளபதி மாதிரி நான் உன்னை கூப்படல.  ஆனா நான் கூப்படாமலே எவ்வளவு தடவை வந்திருக்க? ஒண்ணும் இல்ல. இந்த சீடை வெடிச்சுதே ஒரு நாள். என் முகத்துல வெடிச்சு நான் முகம் முழுக்க தீ காயங்களோட இருந்திருக்கணும் .  ஆனா வெடிக்கற சமயம் என்ன அந்த எடத்துலேந்து ஏதோ காரணம் காட்டி நகத்திட்ட.  வெல்ல சீடை…….பிரிஞ்சு பிரிஞ்சு போச்சு.  என்ன பண்றது, எப்படி பண்றதுனு தவிச்சுப் போய் தலைல கைய வைச்சுண்டு உக்காந்துண்டேன். அப்ப திடீர்னு,  என் ப்ரெண்டு அருணாவோட அம்மா காரணமே இல்லாம வந்து எனக்கு வெல்ல சீடை பண்ண சொல்லிக் குடுத்தா.  இன்னி வரைக்கும் ஒரு நாள் கூட என் வெல்ல சீடை பிரிஞ்சது இல்ல.  ஆபத்துல புடவை கொடுக்கறவன் மட்டும் இல்ல கண்ணன், ஆபத்துல யார் உதவி பண்ணாலும் அது கண்ணன் தான். நீ தான்."

"ஒரு நாளைக்கு உனக்கு ஏதுவும் பண்ணாம  உன்ன கை விட்டுட்டேனா?"

" உனக்கும் எனக்கும் எத்தனை ஜென்மத்து பழக்கம்? நீயா கைவிடுவ ?
 யார் வேணாலும் என்ன கை விடலாம்.  நீ விட மாட்ட.  ஆனா பல சமயங்கள்ல  நீ என்ன கை விட்டுட்டனு தான் நினைச்சுப்பேன். உதாரணத்துக்கு சொல்லணும்னா, கல்யாணம் ஆனதும் பத்து மாசத்துல குழுந்தை எனக்கு பிறக்கல.  அத பத்தி நான் கவலை படலை. என் வீடும் கவலை படலை.  ஆனா இந்த ஊரும் உலகமும் பேசின பேச்சு, ஏச்சு என்ன? ஒரு பெண்மணி என்ன நிறுத்தி ஒரு என்ன கேள்வி கேட்டா தெரியுமா, "உங்க வீட்ல தண்ணி நிறைய இருக்கறதுனால மாச மாசம் குளிக்கறயா?"  கோவம் வந்தது அந்த பெண்மணி மேலயும், உன் மேலயும்.  ஆனா அதுக்கு அப்புறம் யோசிச்சு பார்த்த குழந்தை இல்லாத அந்த ஒரு வருஷம் உன்னை பற்றி எழுதின பாசுரங்கள கத்துக்க முடிஞ்சுது.   அப்ப கத்துக்க ஆரம்பிச்சது இன்னும் கத்துண்டு இருக்கேன்.  உன் மேல் இருந்த ஆசையோட   உன்னை பத்தின பாசுரங்கள் மேல அதிக ஆசை வந்துடுத்து."

"அப்ப என் மேல ஆசை இல்லையா?"

"உன் மேல ஆசை  இல்லாமயா ஶ்ரீ ஜெயந்திக்கு இரவு பகல் பாக்காம பட்சணம் பண்றேன்?  உன் மேல ஆசை இல்லாமலயா உன் கூட வம்பு பண்ணிண்டு இருக்கேன்?"

"சரி.  உனக்கு என்ன "ரிட்டர்ன்ஸ்" வேணும்னு சொல்லு?"

"எப்பவும்  உன்னை கொண்டாடனும். முறுக்கு, சீடை, வெல்ல சீடையோட நீ பிறந்த நாளையும் கொண்டாடனும்.   சரியா?  அகைன்,மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே கண்ணா!!"






6 comments:

  1. ரொம்ப. அருமை சுஜாதா!
    கண்ணன் மேல என்ன உரிமை!
    எத்தனை பாசம்!
    ரொம்ப அனுபவித்து படித்தேன்!
    இதுவும் கண்ணனுக்கு அர்ப்பணம்..

    ReplyDelete
  2. Super Suja, Enjoyed thoroughly with my ashwin.

    ReplyDelete
  3. Your best to date Suja...

    ReplyDelete
  4. Thanks Sarathy. You are the best.

    ReplyDelete