ஓம் ஶ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்

பல நேரங்களில் திரு.  பாலகுமாரன் அவர்களின் எழுத்து புரிவதில்லை.  சில நேரங்களில் அவரின் எழுத்தைத் தவிர வேறு ஏதும் படிப்பதற்கு பிடிக்கவில்லை.

சென்னையிலிருந்து வரும் பொழுது அள்ளிக் கொண்டு வந்த பொருட்களில் புத்தகங்களும் அடங்கும்.  துணி மணிகளை உடுத்தி மகிழ்ந்தாகிவிட்டது.  உணவுப் பொருட்களை சுவைத்து ரசித்தாகிவிட்டது.  ஆனால் புத்தகங்கள் மட்டும் பிரிக்கப் படாமல் அப்படியே இருந்தன.  காரணம் படித்து விட்டால் மீண்டும் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லை.  ஆன்லைனில் ஆர்டர் செய்து புத்தகங்களை வீட்டிற்கே வரவழைத்து படிக்கும் வசதி இருந்தாலும் என்னவோ அது பிடிக்கவில்லை.  ஹிகின் பாதம்ஸ் போன்ற புத்தகக் கடைகளுக்குச்  சென்று புத்தகங்களைப் பிரித்து, ஏதோ ஒரு பக்கத்தைப் பிரித்து, வாசனையை முகர்ந்து, படித்து, பிடித்து  வாங்கும் சுகம் ஆன்லைனில் கிடைப்பதில்லை.  ஆகையால் கொண்டு வந்த  புத்தகங்களை அவசரப்பட்டு படித்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என்று நினைத்து படிக்க ஆரம்பித்த புத்தகம் "பாலகுமாரனின் பதில்கள்".

ஒரு நாளைக்கு ஒன்று என்று மாத்திரை சாப்பிடுவதுப் போல், ஒரு நாளைக்கு ஒரு பக்கம் மட்டுமே படிப்பது என்று உறுதி பூண்டு ஒவ்வொரு பக்கமாக படித்து வரும் சமயம், அவரின் பதில் ஒன்று மனதில் பதிந்தது.  வாசகி ஒருவரின் கேள்விக்கு பதில் கூறுகையில் "ஓம் ஶ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்" என்ற மந்திரத்தின் சிறப்பைப் பற்றி கூறியிருந்தார்.  அந்த மந்திரமும், அவரின் விளக்கமும் மனதில் சுற்றிக் கொண்டிருக்க, அன்றாட வேலைகள் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தன.

வெய்யில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்த அன்றைய சாயங்கால பொழுதில் என் மகளை அழைத்துக் கொண்டு ஸ்விம்மிங் க்ளாஸிற்கு காரில் சென்று கொண்டிருக்கையில், திடீரென்று மேகம் சூழ்ந்து  மழைக் கொட்டத் தொடங்கியது.  நம் ஊரைப் போல் மெதுவாக தூரலில் ஆரம்பித்து பின் பெருமழையாய் பொழிவது இங்கே கிடையாது.  ஆரம்பமே சட புட வென்று பெருமழை தான்.  காரின் கண்ணாடியில் வெள்ளம் போல் மழை தண்ணீர் வாரி இறைக்க,  என் முன்னே என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.  காரை நிறுத்தவும் வழியில்லை, ஓட்டுவதற்கும் வழி தெரியவில்லை. என்ன பண்ணுவது என்று தெரியவில்லையே என்று மெதுவாக ஊர்ந்து கொண்டே கலங்கிய நேரத்தில்,  இராம மந்திரம் நினைவில் வந்தது.  "ஓம் ஶ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்"  என்று மூன்று முறையோ நான்கு முறையோ தான் கூறியிருப்பேன்…….அந்த அதிசயம் நடந்தது.  "சோ" என கொட்டிய அடை மழை சத்தம் ஏதும் இல்லாமல் சடக் என்று நின்று போனது.  வெய்யில் மீண்டும் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்தது.  அந்த அதிசயத்தை வியந்து கொண்டே,  காரைச் செலுத்துகையில் நடந்த அதிசயத்தை என் அக்காக்களுடன் பகிர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  பகிர்வதற்கு உறவுகள் இருப்பது சுகம் போல் பகிர உதவும் "வாட்ஸ் அப்"ம் ஒரு சுகம் தான்.

மகளை க்ளாஸில் விட்டுவிட்டு,  வெளியே காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், ஃபோனை எடுத்து, வாட்ஸ் அப்பைத் தட்டிய சமயம்,  மிருக மனம் தன் இருப்பைக் காட்டியது.

      "இன்னிக்கு மழை வந்தது.  நான் இராம மந்திரம் சொன்னேன். மழை நின்னு போச்சுனு உங்கக்கா ரெண்டு பேருக்கும் மெஸேஜ் அனுப்பப் போறயா?"

"ஆமாம்."

"போடி லூஸூ.   நீ இராம மந்திரம்  சொல்லாட்டாலும் மழை நின்னுருக்கும். வெதர் டாட் காம் போய் பாரு.  எப்ப மழை வரும், எப்ப நிக்கும்னு கரெக்டா போட்ருக்கும் .  அத விட்டுட்டு நீ சொன்னதனால தான் மழை நின்னு போச்சுனு தத்து பித்துனு ஒளரண்டிருக்காத."

 மெஸேஜ் அனுப்பும் நினைவைக் கைவிட்டு  ஃபோனை உள்ளே வைத்துவிட்டு, கொண்டு வந்திருந்த புத்தகத்தில் மூழ்கினேன்.  கண்கள் வரிகளைப் படித்தாலும், மனம் மழையையும் மந்திரத்தையும் விட்டு வர மறுத்தது.  மீண்டும் மிருக மனம்  உரத்த கர்ஜனையோடு விழித்துக் கொண்டது.

"என்ன ரொம்ப யோசிக்கற?"

"ஒண்ணும் இல்ல."

"ஒண்ணும் இல்லையா.  அப்ப நான் சொல்றத யோசி.  உன் கடவுளப் பத்தி யோசிச்சு பார்.  அவர் ஒரு பம்மாத்து பேர் வழி."

"வாட்?"

"பம்மாத்துனா தெரியாது?  உள்ள ஒண்ணு, வெளியே ஒண்ணு, அதான் பம்மாத்து.  கடவுள்னு வெளில பேரு, உள்ள அவரும் மனுஷன் தான்."

"ஷட் அப்."

"என்ன ஷட் அப் சொல்லி ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.  கொஞ்சம் யோசிச்சு பார்.  ஒரு அம்மாவா உன் பசங்கள எப்படி பாத்துக்கற?  அவங்க பசினு சொல்றதுக்கு முன்னாடி சாப்பாடு போடற,  அவங்க மனசுல நினைக்கறத வாயால சொல்றதுக்குள்ள அவங்க தேவைகள பூர்த்தி பண்ற.  இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.  மொத்தத்துல ஒரு நல்ல அம்மாவா இருக்க.  ஆனா உன் கடவுள் அப்படி இல்லையே.   உன் தியரி படி நீ இராம மந்திரம் சொன்னப்புறம் தான் மழை நின்னுது.  எதுக்கு நீ அந்த மந்திரம் சொல்ற வரைக்கும் கடவுள் வெயிட் பண்ணனும்?   நீ சொல்றதுக்கு முன்னாலயே மழைய நிறுத்தி இருக்க வேண்டியது தானே.  மனுஷங்க மாதிரி அவருக்கும்  ஈகோ.  என் கால்ல வந்து விழுந்தாதான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேங்கறார்.  வெளில நான் எல்லாரையும் காப்பாத்தற கடவுள்னு போர்ட் போட்டுண்டு உள்ள மனுஷங்க மாதிரி யோசிச்சா  அவர் பம்மாத்து பேர்வழியா இல்லையா?"

துணிகளைச் சலவை செய்வதை விட மூளையைச் சலவை செய்வது வெகு சுலபம்.  நன்றாய் சலவை செய்யப்பட்ட மூளை மிருக மனம் சொன்னதை அட்சரம் பிசகாமல் ஏற்றுக் கொண்டது.  போலி டாக்டர் போல், போலி கடவுள் என்று முடிவெடுக்கும் நேரத்தில், மீண்டும் மனதின் ஓரத்தில் ஒரு குரல். அமைதியாய் ஆர்பாட்டம் இல்லாது ஒரு குரல்.

"சுஜா, தப்பா யோசிக்கற."

"இல்ல. இப்ப தான் கரெக்டா யோசிக்கறேன்.  அது என்ன, நான் கேட்டதும் குடுக்க வேண்டியது.  கேக்காமலே கொடுக்கறது  தானே?  நம்மோட தேவைகளை நம்ம கேக்கறதுக்கு முன்னாடியே அவர் செய்துட்டார்னா, யாரும் அவர வணங்க மாட்டாங்க, கோவில்லயும் கூட்டம் வராது அதானே?

"நீ கேக்கலாமலயே, நீ கேக்கறதுக்கு முன்னாடியே உனக்கு நிறைய செஞ்சுருக்கார்.  நல்ல அப்பா, அம்மாவ குடுத்து….."

"ஹலோ, எல்லாருக்கும் அவங்க அவங்க அப்பா, அம்மா நல்லவங்க தான்.  அதனால அவர் நல்ல அப்பா, அம்மாவ அவர் தான் குடுத்தாருங்கறது தான் எல்லாம் பேத்தல்.  அவர் நல்ல கடவுள்னா ஏன் எங்கப்பாவ எங்களை விட்டுப் பிரிச்சார்?  எங்கப்பா இல்லாம நாங்களும், எங்க வீடும் பாழடைஞ்சு போயிடுவோம்னு அவருக்கு தெரியாதா?"

"  உங்கப்பா இருந்திருந்தா அவர் இன்னும் கஷ்டப்பட்டிருப்பார், அவர் கஷ்ட்டப் படறத பாத்து நீங்களும் கஷ்ட்டப் பட்டிருப்பீங்க.  உங்களுக்கு நல்லது தான் பண்ணிருக்கார்.  உங்கப்பாவோட கடைசி நாட்கள யோசிச்சுப் பார்.    நீ என்ன கூப்படற தூரத்துலயா இருக்க?  எங்கயோ கடல் கடந்து எட்டாத தூரத்துல இருக்க.  உன்னை வரவழைச்சு, உங்கப்பாவோட பேச வைச்சு…..இதெல்லாம் நீ கேட்டயா? கேக்காமலே அவர் செய்யல? நல்ல அக்காக்கள் வேணும்னு கேட்டயா, இல்ல நல்ல அத்திம்பேர்கள்….அதுவும் சொந்த பிள்ளையை விட, உங்கப்பா அம்மாவை உயர்வா மதிக்கும்   அத்திம்பேர்கள் வேணும்னு கேட்டயா?  உன் சொந்தங்கள் எல்லாரையும் யோசிச்சுப் பார்.  நீ கேட்டா உனக்கு இத்தனை நல்ல உள்ளங்களைக் கொடுத்து இருக்கார்?

"என் சொந்தங்கள் என் கிட்ட நல்லா தான் இருப்பாங்க.  இதென்ன பெரிய விஷயமா?"

"வேண்டாம். உன் கணவரையும், குழந்தைகளையும் யோசிச்சுப் பார். இந்த மாதிரி நல்ல கணவர் வேணும்னோ,  நல்ல குழந்தைகள் வேணும்னோ நீயா கேட்ட?

"கட்டாயமா நான் கேக்கல.  என் அப்பா, அம்மா கேட்டுருப்பா.  என் அப்பா, அம்மா மட்டும் இல்ல, உலகத்துல இருக்கற எல்லா அப்பா, அம்மாவோட  தன் பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையணும், நல்ல குழந்தைகள் பிறக்கணும்னு நினைக்க மாட்டாங்களா.  இத போய் பெரிசா சொல்ற?"

"ஒத்துக்கறேன்.  எல்லா அம்மா அப்பாவும் நல்ல வாழ்க்கைத் துணை வேணும்னு கேட்டிருபாங்க.  ஆனா நல்ல மாமியார் வேணும், மாமனார் வேணும்னு கேட்டிருக்க மாட்டாங்க.  நீயும் கேட்டிருக்க மாட்ட.  ஆனா நீ கேக்கமாலயே நல்ல மாமியாரும், மாமனாரும், மச்சினரும், நாத்தனாரும் குடுக்கல? அதுக்கும் மேல உன் கணவர் வீட்டு ஒட்டு மொத்த சொந்தங்களை நினைச்சுப் பார்.  இந்த மாதிரி ஒரு நல்ல குடும்பம் வேணும்னு நீயா கேட்ட?

பதில் ஏதும் சொல்லத் தோன்றவில்லை.

"உன் நட்பு வட்டாரத்தை யோசிச்சுப் பார்.  நல்ல நணபர்கள் வேணும்னு நீயா கேட்ட?இதெல்லாம் வேண்டாம் விடு.  அன்னிக்கு திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் ரோடுல, ஒரு கடை வாசல்ல ஒரு போர்ட்ல என்ன எழுதிருந்தது?  நீ கூட நின்னு படிச்சுட்ட வந்த.   மறந்து இருக்க மாட்ட."

"என்ன எழுதியிருந்தது? ஓ…இதான்.  வாய் இருப்பவர்கள் எல்லாம் பாட முடியாது, கால் இருப்பவர்கள் எல்லாம் ஆட முடியாது.  கை இருப்பவர்கள் எல்லாம் எழுத முடியாது."

"கை இருப்பவர்கள் எல்லாம் எழுத முடியாது.  நீ எழுதற.  நீ எழுதணும்னு கடவுள் கிட்ட கேட்டயா.  இல்லையே.  நீ கேக்காமலே, உனக்கு எழுதற ஆற்றல கொடுத்துருக்காரே? அதுவும் நாலு பேர் உன் எழுத்த விரும்பி படிச்சு பாராட்டற அளவுக்கு ஆற்றல் கொடுத்துருக்காரே?    அவங்க பாராட்டலாம் கேக்கும் போது அப்படியே  நீ வானத்துல பறக்கல?  நாலு பேர் என்ன பாராட்டணும்,  நான் அப்படியே வானத்துல சிறகடிச்சு பறக்கணும்னு நீ கேட்டயா?  இல்லையே.  அவரே தான உனக்கு அழகா ஒரு வரம் குடுத்துருக்காரு.  உன் குழந்தைக்கு என்ன எப்ப எப்படி குடுக்கணும்னு தெரியுமோ அதே மாதிரி அவருக்கும் உனக்கு எப்ப எப்ப என்ன குடுக்கணும்னு  தெரியும்."

மனம் பேசினது புரிந்ததா இல்லையா தெரியவில்லை.  வீடு திரும்பும் போது மேகங்களற்ற வானத்தில் அரை வானவில் கண்ணைக் கவர,  "ஓம் ஶ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்" என்று உள்ளே ஓசை கேட்டது. பாலகுமாரன் அவரின் விளக்கம் நினைவில் வந்தது.


பல நேரங்களில் திரு.  பாலகுமாரன் அவர்களின் எழுத்து புரிவதில்லை.  சில நேரங்களில் அவரின் எழுத்தைத் தவிர வேறு ஏதும் படிப்பதற்கு பிடிக்கவில்லை.


     


No comments:

Post a Comment