அந்தர்யாமி



"அந்தர்யாமி" - இந்த சொல்லுக்கு "உள்ளே உறைபவன்"  என்று எனக்கே தெரியும் போது, உங்களுக்கும் தெரியும்.  

இந்த "அந்தர்யாமி" என்ற சொல்லை நிறைய இடத்தில் படித்திருக்கிறேன். பலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்.  ஆனால் அந்த அந்தர்யாமியே "நான் அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று சொன்னதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்.  

அவர்  மஹாபாரத போரின் நடுவில், அர்ஜூனனிடம் "எல்லாவற்றுக்குள்ளும் நான் அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று சொன்னார்.  அவர் அப்பொழுது கூறியதை இப்பொழுது தான் நான் தெரிந்து கொண்டேன்.

அன்றும் எப்பொழுதும் போல் சமையல் செய்து கொண்டிருந்தேன்.  காதுகளில் headphones  மாட்டிக் கொண்டு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் பகவத் கீதை உபன்யாசம் யூ ட்யூப்பில் இருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சமையல் என்ற கடினமான வேலையை, மிகக் கடினமான வேலையை, சுலபமாக்க இது போல் எதாவது கேட்பது என் வழக்கம்.  அவர் சொல்வது எல்லாம் என் மண்டையில் ஏறாது. ஏதோ ஏறின வரையில் புண்ணியம் என்று கேட்கிறேன். அதுவும் தவிர பகவத் கீதை" யை உட்கார்ந்து கேட்கும் அளவிற்கு எனக்கு பொறுமை கிடையாது.  நான் ஒரு தனிப் பிறவி.  அதனால் தான் சமையல் செய்து கொண்டே...

எங்கே விட்டேன்.  ஆங்...சமையல் செய்து கொண்டே பகவத் கீதை கேட்டுக் கொண்டிருந்தேன்.  திடீரென்று ஶ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி அவர்கள் "எல்லாவற்றுக்குள்ளும் நான் அந்தர்யாமியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணன் சொன்னதை நாம் பதினைந்தாவது அத்தியாயம் பதினைந்தாவது ஸ்லோகத்தில் பார்த்தோமே..." என்றார்.  அது போல் ஒரு ஸ்லோகத்தை எனக்கே கேட்ட நினைவே இல்லை.  யூ ட்யூப்பில் பதினைந்தாவது அத்தியாயம் பதினைந்தாவது ஸ்லோகத்தை தேடிக் கண்டு பிடித்து, அந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை ஶ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி சொல்லக் கேட்டு, பிரமித்து போனேன்.  எப்பேற்பட்ட ஸ்லோகம் அது. ஆனால் வெளியில் தெரியவில்லை.  பகவத் கீதை என்றாலே "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய..." ஸ்லோகமும் "அனன்யாஸ் சிந்தயந்தோ மாம்" என்ற ஸ்லோகமும் தான் உடனே  நினைவில் வரும்.  Thanks to B.R. Chopra "யதா யதா ஹி தர்மஸ்ய" ஸ்லோகமும் நினைவில் வரும்.  ஆனால் "பதினைந்தாவது அத்தியாயத்தில்" இருக்கும் "பதினைந்தாவது ஸ்லோகம்..." அது என்ன ஸ்லோகம் தெரியுமா...

"ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்ட்டோ
 மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞானம் அபோஹனம் ச
வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத வித் ஏவ சாஹம்"

(என்னை  கவர்ந்த)முதல் வரியின் கருத்து : அனைத்து ஜீவராசிகளுடைய ஹ்ருதய கமலத்திலே, நான், நன்கு வீற்றிருக்கிறேன். 
இரண்டாவது வரியின் கருத்து :  எல்லாருடைய ஹ்ருத்ய கமலத்தில் நான் வீற்றிருப்பதால், யாருக்கு ஏது ஞாபகம் வருகிறதோ அது என்னால் தான். ஒன்றைப் பற்றிய ஞானம் முதல் முறையாக யாருக்கு ஏற்படுகிறதோ அதுவும் என்னால் தான்.  யாருக்கு மறதி ஏற்படுகிறதோ அதுவும் என்னால் தான். 
மூன்றாவது  வரியின்  கருத்து:  அனைத்து வேதங்களாலும் நானே சொல்லப்படுகிறேன்.
நான்காவது வரியின் கருத்து: வேதத்தில் சொல்லப்படும் பலன்களை அளிப்பவனும் நானே, வேதத்தை அறிந்திருப்பவனும் நானே.
(ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசத்திலிருந்து)

கிருஷ்ணரே தான் இருக்கும் இடத்தை இந்த ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.   நம் இதயத்தில் இருக்கிறார்.  இல்லை இல்லை. ஹ்ருதய கமலத்தில் இருக்கிறார்.  இதயத்திற்கு ஏன் ஹ்ருதய கமலம் என்ற பெயர் தெரியுமா? கமலம் என்றால் உங்களுக்கு தெரியுமே....தாமரை.   நம் இதயம் தலைகீழே பிடிக்கப்பட்ட தாமரை போல்  இருக்கும் என்று உபநிஷத்து கூறுகிறது.  இதயம் என்றாலே ஹார்ட்டின்(💗) தான் நினைவில் வருகிறது.  நானும் நம் இதயம்  💗போல் இருக்கும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்பொழுது அப்படி இல்லை என்று தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு  என்ன செய்தேன் தெரியுமா? நம் உடம்பில், இதயம் எங்கிருக்கிறது...அதாவது இதயத்தின் exact location எது என்று குகூளில் தேடினேன்.   அப்பொழுது இரவு மணி பத்து.  இதயத்தின் லொகேஷனை தேடப் போய் ஒரே சைன்ஸ் வார்த்தைகளாய் படித்து, தூக்கத்திற்கு ஆட்பட்டேன்.  மறு நாள் காலை அதிசயம் ஒன்று  நிகழந்தது.  "Sri M" தனது வீடியோ ஒன்றில் ப "HE lives in the heart, which is 10 inches from our navel" என்றார். நான் மலைத்து போனேன்.  நான் இதயத்தை தேடியது "Sri M" க்கு எப்படி தெரிய வந்தது? ஆக, நம் நாபியிலிருந்து பத்து அங்குலம் தூரத்தில், இதயம் இருக்கிறது என்று கண்டு கொண்டேன்.   

ஒரு பக்கம், உலகளந்த பெருமாளாக , மண்ணிலிருந்து விண் வரை நெடிதுயர்ந்து நிற்கிறார்.   மற்றொரு பக்கம், நம் இதயத்தில் சின்னஞ்சிறு வடிவில் உரைகிறார்.  "எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று சொன்னாரே தவிர,  நான் உலகளந்தேன், மீனாய் பிறந்தேன், வராகமாய் பிறந்தேன் என்று அவர் சொல்லவில்லை.  ஆனால் நமக்கு...சாரி....எனக்கு மீனாய் பிறந்ததும், வராகமாய் பிறந்ததும் தான் தெரிகிறேதே தவிர, மனதில் இருப்பவரை தெரிந்து கொள்ள முடியவில்லை. 

"அந்தர்யாமி" என்ற  "உள்ளே உறைபவன்"  எனக்கு...ஸாரி...நமக்கு அவரைக் காட்டிக் கொடுக்க வேண்டும் .

No comments:

Post a Comment