காந்தி பீச்



சூரியன் விடை பெறும் மாலை வேளை. சென்னை கடற்கரை எப்பொழதும் போல் சத்தத்துடனும், மணத்துடனும் இருந்தது. கலங்கரை விளக்கம் தாண்டி, காந்தி சிலையை நோக்கி அனன்யா நடந்து வந்து கொண்டிருந்தாள். காந்தி சிலை அருகே வரும் போது அனன்யாவின் ஃபோன் அடித்தது. இடது தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேகிலிருந்து ஃபோனை அனன்யா தேடி எடுப்பதற்குள்...அவளைப் பற்றி அவசர அவசரமாய் சில வரிகள்.

ஆரஞ்சு வண்ணத்தில் கருப்பு பூக்கள் இரைத்த குர்த்தி அணிந்து, கழுத்து வரை இருந்த கூந்தலை போனி டைல் போட்டு, நெற்றியில் சிறியதாய் மிகச் சிறியதாய் ப்ரெளன் நிற பொட்டு வைத்திருந்த அனன்யா, அமெரிக்காவில் இரண்டாம் ஆண்டு பயாலஜி படிக்கிறாள். அவள் அண்ணன் அங்கு வேலை பார்க்கிறான். அவள் அண்ணனுடன் விடுமுறைக்காக சென்னை வந்திருக்கிறாள். அவள் பெற்றோர்கள் சென்னையில் பிறந்து, படித்து, திருமணம் புரிந்து, குழந்தைகள் பிறந்த பின், அமெரிக்கா சென்று...அனன்யா ஃபோனை எடுத்து விட்டாள். அதில் உள்ள எண்களைப் பார்த்தாள். தெரியாத நம்பராய் இருக்கிறதே என்று நினைத்தபடி "ஹலோ" என்றாள்.


"......." அந்த பக்கம்.


"ஆர் யூ ஸீர்யஸ்?"


நடந்து கொண்டிருந்தவள் நின்றாள்.


"...."


" ஐமெசேஜ் இங்க வொர்க் பண்ணாது....வெயிட்...அம்மா வாட்ஸ்ப்லயும் அனுப்பினா..." என்று சொல்லிவிட்டு காதில் இருந்த ஃபோனை எடுத்து, வாட்ஸப்பை தேடித் தட்டி (சுண்டல் வாங்கிக்கா என்ற சிறுவனிடம் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு) அவள் அம்மா அனுப்பிய மெசேஜ்க்குள் சென்று, கட்டை விரலால் ஸ்கீரினைக் கீழே தள்ளி அந்த மெசேஜைக் கண்டு பிடித்தாள். ஆங்கிலத்தில் இருந்ததை படிக்க ஆரம்பித்தாள்.


"நைலான் கயிறு, இருள் வரும் நேரம், கொலை உதிர் காலம், ஃபோர்ட்டின் நாட்கள், திண்டும்...தீண்டும் இன்பம், ஒடாதே, இதன் பெயரும் கொலை….ஊப்ஸ்....லாஸ்ட் டூ தமிழ்ல எழுதிருக்கா."


"....."


"உனக்கு தமிழ் படிக்கத் தெரியும்னு அனுப்பிருக்கா. நீ இவ்ளோ ரெஸ்பான்ஸிபிலா ஃபோன 

வீட்டுல விட்டுட்டு வருவனு அம்மாக்கு தெரியாது அண்ட் எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. "


"..."


"நோ வே. என்னால அங்க கடைக்கு வர முடியாது. மாமா எனக்காக பார்த்தசாரதி கோவில்க்கு வரேன்னு சொல்லிருக்கா. நான் அங்க போகணும். "

ஹிந்தியில் பேசியபடிப பெண்கள் இருவர் அவளைக் கடந்து சென்றார்கள்.


"..."


"நோ. டோண்ட் டூ தட். இங்க யாருகிட்டயாவது கேக்கறேன். பத்து நிமிஷத்துல கூப்புடு."


ஃபோனை கையில் வைத்தக் கொண்டு யாரைக் கேட்கலாம்... நடந்த படியே நோட்டம் விட்டாள். ஜோடியாய் இருப்பவர்களைக் கேட்கலாமா இல்லை குழந்தைகளின் பின் ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களைக் கேட்கலாமா என்று யோசித்தாள். சாலையில் சென்று கொண்டிருந்த காலி ஆட்டோ அவள் பக்கத்தில் வந்து நிற்க, வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு நடந்தாள். அவள் எதிரே சற்றே வயதான ஆணும் பெண்ணும் நடந்து வருவதைக் கண்டாள். எட்ட நடந்து அவர்களை அடைந்தாள்.


"எக்ஸ்க்யூஸ்மி மேம், எக்ஸ்க்யூஸ்மி ஸார்... " என்றாள்.


நடந்து வந்து கொண்டிருந்த அவர்கள் நின்றார்கள். மேம் பச்சை சேலை அணிந்து சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்து கூந்தலை கொண்டையாக்கி இருந்திருந்தார். ஸார் நீலத்தில் வெள்ளை கோடு போட்ட சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தார்.


"மேம், எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. எனக்காக தமிழ்ல எழுதிருக்கறத படிச்சு சொல்வேங்களா?" என்றாள்.


"மேம்" என்றழைக்கப்பட்ட அந்த பெண்மணி "சரி" என்பது போல் தலையாட்ட, அனன்யா ஃபோனில் இருந்த மெசேஜைக் காண்பித்தாள்.


"கணையாழியின் மறுபக்கம், சிறுகதை எழுதுவது எப்படி," மேம் படித்தார்.


"தாங்க்ஸ் சோ மச் மேம். நான் இங்கிலிஷ்ல டைப் பண்ணிக்கறேன்..க...ணை...ஆழி..." என்று சொல்லிய படியே ஆங்கிலத்தில் டைப் செய்து கொண்டாள்.


"சிறுகதை எழுதுவது எப்படி, கணையாழியின் மறுபக்கம் இதெல்லாம் சுஜாதா..." என்று ஆரம்பித்த "ஸார்" ரை அனன்யா தடுத்தாள்.


"உங்களுக்கும் ரைட்டர் சுஜாதாவை தெரியுமா...எங்கப்பா அவரோட பிக் ஃபேன்." இந்த மனிதரை எங்கோ பார்த்தது பார்த்தது போல் இருக்கிறதே, ஶ்ரீதர் பெரியப்பா போல் இருக்கிறாரோ என்று நினைத்தாள்.


"நல்லா தமிழ் பேசறீங்க. தமிழ் படிக்கத் தெரியாதா?" ஸார்.


அனன்யா சிரித்தாள்.


"எனக்கு தெரியாது. நான் அமெரிக்கால இருக்கேன். எங்கண்ணா அங்க தமிழ் ஸ்கூல் போய் தமிழ் கத்துண்டான். நானும் போனேன். தமிழ் க்ராமர் ரொம்ப கஷ்ட்டமா இருந்தது. எனக்கு இண்ட்ரஸ்ட் போயிடுத்து. அதனால தமிழ் ஸ்கூல் போறது ஸ்டாப் பண்ணிட்டேன். எங்கம்மா சொன்னா, தமிழ் க்ளாஸ் போலனா, வீட்டுல ஃபுல் அண்ட் ஃபுல் தமிழ் பேசணும். அதனால தமிழ் நல்லா பேச வரும்."


"தமிழ் உங்க லங்வேஜ். அது எழுத படிக்கத் தெரியலைனு டோண்ட் யூ ஃபீல் பட்?" ஸார்.


" நோ. தமிழ்ல எழுதறதுக்கு எனக்கு ஆப்பர்ட்யூனிட்டி எதுவும் இல்ல. அதனால அது பத்தி கவலை இல்ல. இப்ப எல்லாத்துக்குமே இங்கிலிஷ் டெக்ஸ்ட் இருக்கே. தெலுகு தெரியாமலே தியாகராஜா கிருத்திஸ் பாடறா மாதிரி, தமிழ் தெரியாமலே தமிழ் கத்துக்கலாம். ஒரு வேளை எங்கப்பா பெரிய ரைட்டரா...சுஜாதா மாதிரி பெரிய ரைட்டரா இருந்தா தமிழ் படிக்கக் கத்துண்டு இருக்கலாம்...தெரியல.”


ஒரு நடுத்தர வயதுள்ள ஆண், தட்டு நிறைய குட்டி குட்டி அலுமினிய கோனில் ( cone) ஏதோ விற்றபடி அவர்க்ளைக் கடந்து செல்ல, அந்த கோனில் என்ன இருக்கிறது என்று யோசித்தாள்.


“அப்ப உங்களுக்கும் சுஜாதா பத்தி தெரியும்," ஸார்.


"நாட் மச். எனக்கு தெரிஞ்சது எல்லாம், சுஜாதா அவர் வைஃப்வோட நேம். அவரோட ரியல் நேம் ரங்கராஜன். எங்கப்பாகிட்ட நான் ஒரு தடவை கேட்டேன், இவ்ளோ சுஜாதா ஃபேனடிக்கா இருக்கயே, , எனக்கு சுஜாதானு பேர் வைச்சுருக்கறது தானேனு, அப்பா சொன்னா சுஜாதானு பேர் வைச்சுட்டு உன்ன எப்படி திட்றது."


அவர்கள் இருவரும் சிரித்தார்கள்.


"எங்கப்பா சொல்லுவா, சுஜாதா புக்ஸ் எல்லாம் படிக்கறதுக்காகவாது தமிழ் படிக்க கத்துக்கோனு...ஆனா எனக்கு புக் படிக்கற ஹபிட் இல்ல. வேற வழியில்லாம ஹை ஸ்கூல் ரீடிங்காக ஜேன் ஆஸ்ட்டின், ஷேக்ஸ்பியர், ஹார்ப்பர் லீ எல்லாம் படிச்சேன்..."


"எல்லாம் பெரிய ஆத்தர் ஆச்சே..."


"யா... இந்த ஆத்தர் புக்ஸ் எல்லாம் படினு எங்கப்பாகிட்ட சொன்னேன் , சுஜாதா தவிர வேற எதுவும் படிக்க மாட்டேனு சொல்லிட்டா. எங்கப்பா கிட்ட நிறைய சுஜாதா புக்ஸ் இருக்கு. எங்க வீட்டுக்கு வந்த அப்பாவோட ஃப்ரெண்ட் சுஜாதா புக்ஸ் கொஞ்சம் எடுத்துண்டு போனா. குடுக்கவே இல்ல. அப்பா அந்த புக்ஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்றானுட்டு, எங்கம்மா லிஸ்ட் கொடுத்து புக்ஸ் எல்லாம் வாங்கிண்டு வர சொன்னா. அதுல தான் ரெண்டு தமிழ்ல இருந்தது."


பூ வாங்கிக்கம்மா என்ற ஒரு பூக்காரியிடம் மேம் வேண்டாம் என்று தலையசைக்க, சார் "சிறுகதை எழுதுவது எப்படி இருந்ததே லிஸ்ட்ல? உங்கப்பா ரைட்டிங்ல இண்ட்ரஸ்ட் உண்டா? " என்று கேட்ட்டர்.


" முன்னாடி எழுதிண்டு இருந்தா. ப்ளாக்லாம் வைச்சுண்டு இருந்தா. இப்ப எழுதறதில்ல. அப்பா சொல்லுவா சுஜாதா சார் இஸ் ஏ ஜீனியஸ், ஶ்ரீரங்கம், பெங்களூர் எங்க இருந்தாலும் எழுதுவார். எனக்கு ஐஸ்லேண்ட் போனா தான் எழுத வரும்..."


"ஐஸ்லேண்ட்..."


"ஐஸ்லேண்ட்ல எல்லாரும் எழுதுவாளாம், ஏன்னா அந்த ஊர் எல்லாரையும் எழுத வைக்குமாம் , ஆல்சோ கவர்மெண்ட், ரைட்டர்ஸ்க்கு கிராண்ட் குடுக்குமாம். "


"நோபல் ப்ரைஸ் வின்னர் ஹேல்டோர் லேக்ஸ்னஸ் ஐஸ்லேண்ட் தானே."


"எனக்கு தெரியாது...ஆனா செஸ் ப்ளேயர் பாபி ஃபிஷ்ஷர் ஐஸ்லேண்ட்ல இருந்தார்னு தெரியும்."


"பாபி ஃபிஷ்ஷர் பத்தி கூட சுஜாதா ஒரு ஸ்டோரில மென்ஷன் பண்ணிருக்காரே."


அனன்யா முகம் மலர சிரித்தாள்.


"நீங்களும் எங்கப்பா மாதிரியே எதுக்கு எடுத்தாலும் சுஜாதா சுஜாதா சொல்றேங்க."


"மே ஐ ஆஸ்க் யூ ஏ கெவிஸ்டிண்?"


"அஃப்கோர்ஸ்...".


"ஜென்ரலா வெளியூர்லேந்து வர பசங்க ரொம்ப பேசாம கொஞ்சம் ஷையா இருப்பாங்க. ஒரு வார்த்தை பேசறதே அதிகம். பட் யூ ஆர் நாட் லைக் தட்..."


அனன்யா சிரித்தாள்.


"நானும் அப்படி தான் இருந்தேன். ரொம்ப பேச மாட்டேன். ரெண்டு வருஷம் ஒரு ஹாஸ்பிட்டல்ல வாலண்டியர் பண்ணேன். அங்க எல்லாரோடையும் நிறைய பேசி பேசி, இப்ப ரொம்ப பேசறேன். ஆல்சோ உங்கள இதுக்கு முன்னாடி எங்கயோ பாத்த மாதிரி இருக்கு. எங்க பாத்திருக்கேனு என்னால...." என்று சொல்லும் போது அனன்யாவின் கையில் இருந்த ஃபோன் அடித்தது.


"ஒன் மினிட்" என்று சொல்லிவிட்டு ஃபோனை எடுத்தாள். "ஃவைவ் மினிட்ஸ்ல திரும்ப கூப்டறயா?" என்றாள். அந்த பக்கம் ஏதோ சொல்ல, "ஒகே" சொல்லிவிட்டு ஃபோனை அணைத்தாள்.


" ஐ ஹேவ் டூ கோ," என்று இருவரையும் பார்த்து சொன்னாள்.


" எங்கப்பா கிட்ட, உன்ன மாதிரியே இன்னொரு சுஜாதா ஃபேன் பாத்தேன்னு சொல்றேன். பை தி வே, ஐ'ம் அனன்யா," என்றாள். கை குடுப்பதா வேண்டாமா என்று யோசித்து கைக் கொடுக்காமல் விட்டாள்.


"நைஸ் மீட்டுங் யூ அனன்யா," என்றார் சார். பக்கத்திலிருந்த "மேம்"மை சுட்டிக்காட்டி, "ஷீ இஸ் மை வைஃப் சுஜாதா அண்ட் ஐம் ரங்கராஜன்..." என்றார்.

-----------------------------------------------------------------------------------------------------

(சுஜாதா நிஜத்தில் வரப் போவதில்லை. கதையில் வரலாம் இல்லையா? லாக்டவுனில் சுஜாதா அவர்களின் கதைகள் படித்து படித்து, பைத்தியம் பிடித்து, அவரை மிஸ் பண்ணி விட்டோமே என்று வருத்தத்தில் இருந்த போது, ஜெஃப்ரி ஆர்ச்சரின் "வேஸ்டட் ஹவர்" படிக்க நேர்ந்தது. (இங்கிலிஷ் லிட்ரெட்ச்சர் படிக்கும் காலேஜ் பெண் ஒரு தாத்தாவை சந்திப்பாள். அந்த பெண் கேட்கும் கேள்விகளுக்கு தாத்தா தன் கதையை சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் ஒரு திருப்பத்தை தருவார்). அந்த கதையினால் உந்தப்பட்டு இந்த கதை வந்தது. பாபி ஃபிஷ்ஷரைப் பற்றி நான் எழுதும் போது சுஜாதா சிறுகதையில் ஃபிஷ்ஷர் வந்தது எல்லாம் நினைவில் இல்லை. இத்தனைக்கும் ஃபிஷ்ஷர் இடம் பெற்ற சிறுகதையை பல தடவை படித்திருக்கிறேன். கதையை முடித்து அடுத்த நாள் "மஹாபலி" படிக்கும் போது ஃபிஷ்ஷர் வந்து என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டார். இந்த கதை எழுதும் போது நானே சுஜாதா அவர்களுடன் பேசியது போல் ஒரு பிரம்மை. எழுதி முடித்தவுடன் ஐயோ சுஜாதாவுடன் நம் சந்திப்பு முற்றுப் பெற்றுவிட்டதே என்று வருத்தம் இருந்தது,இருந்து கொண்டிருக்கிறது).

No comments:

Post a Comment