டிசம்பர் 6

பல வருடங்களுக்கு முன்னால்......  டிசம்பர் ஐந்து.  நள்ளிரவு.   அன்று அமாவாசை.  இருள் எங்கும் படர்ந்து இருந்தது. சென்னையின் புகழ்ப்பெற்ற  அந்த  நெடுஞ்சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை.. சாலையோர விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக "மினுக்"கிக் கொண்டிருந்தது.  அந்த  நெடுஞ்சாலையில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று இருந்தது.  அந்த நள்ளிரவு நேரத்தில் ஊரே அமைதியில் முழ்கியிருக்க, அந்த  மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ அறையிலிருந்து  "குவா குவா" என்ற  குழந்தையின் அலறல் கேட்டது.  அது ஒரு பெண் குழந்தை.

அந்தப் பெண் குழந்தையை பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார்கள்.  அந்த குழந்தையும் கண்ணும் காதும் மூக்கும் வாயுமாய் வளர்ந்து பள்ளி செல்லும் சிறுமியானது.  அந்த சிறுமியை உரிய நேரத்தில் பள்ளியில் சேர்த்தார்கள்.   மூன்றாம் வகுப்பு வரை ஒழுங்காய் சென்ற அந்த சிறுமியின் வாழ்க்கை....நான்காம் வகுப்பில் திசை மாறியது.  அந்த  சிறுமி நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, சிறுமியின் உயிர்த்தோழி ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்....அந்த உயிர்த்தோழி சிறுமியை விட பத்து நாட்களே பெரியவள்....இங்கு தான் புயல் வீசத் துவங்கியது.....பத்து நாட்களே பெரியவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, சிறுமி எப்படி நான்காம் வகுப்பு படிக்கலாம் என்று பெற்றோர்கள்  நினைத்தனர். மேலும் அவர்கள் ஆராய்ச்சி செய்ததில்  அந்த சிறுமி பிறந்த அதே வருடத்தில் பிறந்தவர்களில் பலர்  அந்த சமயம் ஐந்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தனர்.  பெற்றோர்கள் வருத்தப் பட்டனர். ஐந்தாம் வகுப்பு படிக்கவேண்டிய பெண்ணை நான்காம் வகுப்பில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்....இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.  அவள் வயதுக்கு உண்டான படிப்பை அவளுக்குக் கொடுக்க வேண்டும்...இதற்கு ஒரே வழி....நான்காம் வகுப்பு முடிந்து ஐந்தாம் வகுப்பு செல்லாமல்...ஆறாம் வகுப்பில் அவளை சேர்ப்பது என்று முடிவு செய்தனர்.  இதற்கு அந்த நாட்களில் double promotion என்று பெயர்.   ஆறாம் வகுப்பு இருக்கும் பள்ளியில் பெற்றோர்கள் சென்று விசாரித்த போது...அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அந்த சிறுமியின் birth certificateஐ பார்க்க வேண்டும் என்று கேட்க....பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தனர்.  பீரோவில் birth certificateஐ தேடினர்...தேடினர்...தேடினர்....ஒரு வழியாக அந்த birth certificate கிடைத்தது....கிடைத்த போது தான் தெரிந்தது....அந்தச் சிறுமி பிறந்த நேரம் 12:55 a.m.  டிசம்பர் ஐந்து நள்ளிரவு 12:55 என்றால்....அது அடுத்த நாள்....டிசம்பர் ஆறு......

அது நாள் வரையில் டிசம்பர் ஐந்து என்று நினைத்து பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த அந்த சிறுமி வேதனைப்பட்டாள், வருத்தப்பட்டாள், துக்கப்பட்டாள், துயரப்பட்டாள்....என்று நீங்கள் நினைத்தால்....அப்படி ஏதும் அவள் படவில்லை...டிசம்பர் ஐந்து இல்லை என்றால் டிசம்பர் ஆறு என்று தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்...ஆனால் அவள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நிகழந்தது....அந்த சிறுமிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்காமலேயே ஆறாம் வகுப்பில் இடம் கிடைத்தது.....தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.....அந்தப் பூக்களில் எத்தனை percentage வெள்ளை நிறப் பூக்கள் என்று அந்த சிறுமியைக் கேட்டிருந்தால்....அவளுக்கு பதில் தெரிந்திருக்காது.... ஏனெனில் ஐந்தாம் வகுப்பில் தான் percentage கணக்கு சொல்லி தரப்பட்டது... சிறுமி ஐந்தாம் வகுப்பு படிக்காமல் விட்டதால் percentage கணக்கிடத் தெரியவில்லை...கற்றுக் கொள்ளவும் அவள் முயலவில்லை...அந்த சிறுமி வளர்ந்து கல்லூரி படிக்கும் வயதை எட்டினாள்.....percentage கணக்கிடத் தெரியாமலேயே B.Sc. Maths  பாஸ் செய்தாள்.  பின் M.Sc. Maths முதல் வருடம் மட்டும் படித்தாள்....அப்பொழுதும் percentage கணக்கிடக் கற்றுக் கொள்ளவில்லை...படித்துக் கொண்டிருக்கும் வேளையில் வேலைக் கிடைத்தது...percentage கணக்கிடத் தெரியாமலேயே வேலைக்குச் சென்றாள்.....பின்  அவளுக்குத் திருமணம் நிகழ்ந்தது....கடவுள் அனுக்கிரஹத்தில் அவள் கணவர் ஐந்தாம் வகுப்பு படித்தவராக இருந்தார்...அவள் குழந்தைகளுக்கு percentage கணக்கிட அவர் உதவி புரிந்தார்....அவளுக்கும் கற்றுக் கொடுத்துப் பார்த்தார்.....அவள் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை....அவள் வாழ்க்கை percentage கணக்கிடத் தெரியாமலேயே கழிந்தது....கழிந்துக் கொண்டிருக்கிறது....அவள் இனி percentage கணக்கிடக் கற்றுக் கொள்வாளா இல்லையா.......அது இறைவனுக்கு மட்டுமே தெரியும்...

 percentage கணக்கிடத் தெரியாத அந்த தாய், percentage கணக்கிடத் தெரியாமலேயே B.Sc. Maths படித்து பாஸ் செய்த அந்த பெண், ஐந்தாம் வகுப்பு படிக்காத அந்தச் சிறுமி, டிசம்பர் மாத அமாவாசை இரவில் பிறந்த அந்தக் குழந்தை, நான்காம் வகுப்பு வரை டிசம்பர் ஐந்தாம் தேதியும், ஆறாம் வகுப்பு முதல் டிசம்பர் ஆறாம் தேதி பிறந்த நாள் கொண்டாடி வரும் அவள்......நான் நான் நானே தான்!!

எனக்குத் தெரியாதவை எக்கச்சக்கம்....இதில் percentageம் அடக்கம்.....!!



No comments:

Post a Comment