காலா

(சினிமா பாக்கறதுக்குள்ள ரெவ்யூ எங்க, ரெவ்யூ எங்கனு அன்புத் தொல்லை பண்ணவங்களே... I like that anbu thollai.  Keep it coming)

எனக்கு குலோப் ஜாமூன் மிகவும் பிடிக்கும்.  அந்த குலோப் ஜாமூனை பீங்கான் கப்பிலோ, எவர்சில்வர் கப்பிலோ, கண்ணாடி கப்பிலோ சாப்பிட்டாலும் குலோப் ஜாமூன் அதே சுவையில் தான் இருக்கும்.  ஆனால் இந்த ஃபில்ட்டர் காஃபி இருக்கிறது பாருங்கள், அதை டபரா டம்ப்ளரில் மட்டுமே குடிப்பேன்.  பீங்கான் கப்பில் குடித்தால் காஃபியை சுவைக்கவே முடியாது என்பது எண்ணம்.  எதற்கு இந்த உதாரணங்கள் என்றால்........மற்ற நடிகர்கள் எல்லோரும் குலோப் ஜாமுன்ன் போல்...யார் இயக்கினாலும் பெரிய வித்தியாசம் தெரியப் போவதில்லை.  ஆனால் ரஜினி என்பவர் ஃபில்ட்டர் காஃபி போல்.  சங்கர், மணிரத்னம், ரவிகுமார் போன்ற இயக்குனர்கள் மட்டுமே இயக்க வேண்டும்...ரஞ்சித் போல் இயக்குனர்கள்,  ரஜினிகாந்தை ராவணன் ஆக்கிவிடுகிறார்கள்.

அதாவது காலாவை ராவணனுடன் ஒப்பிடுகிறார்.  ராவணன் என்றால் நினைவில் வருவது அவர் சீதையை கவர்ந்து சென்றது....அதே போல் காலா என்ன ஏதாவது பெண்ணை கடத்திச் சென்று சிறையில் அடைத்து வைக்கிறாரா என்ன?  ஏதோ புதுமை புகுத்துகிறேன் என்ற போர்வையில் ராவணனை நல்லவன் போல் சித்தரித்து.....எங்களுக்கும் கொஞ்சம் ஆன்மிகமும், இதிகாசங்களும் தெரியும்......ராமனோடு காலாவை ஓப்பிட வேண்டாம்...ராவணனோடு ஒப்பிடாமல் இருக்கலாம் இல்லையா?

இன்று காலை ஒரு வாட்ஸப் மெசெஜ்.  அதில் "தளபதி" யோடு காலாவை ஒப்பிட்டிருந்தார்கள்.   Really?  ஏதோ நான் எழுதுகிறேன் என்பதற்காக என்னை எழுத்தாளர் சுஜாதாவோடு  ஒப்பிட முடியுமா? தளபதியில் கடைசியில் ஒரு காட்சியில் வில்லனின் துப்பாக்கி சூடால் ரஜினி கொல்லப் பட்டாரா,  மம்மூட்டி கொல்லப் பட்டாரா என்பது ஒரு நொடி தெரியாது.  தியேட்டரில் கனத்த மெளனம்.  என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் தோழி ரஜினிகாந்த் தான்  கொல்லப்பட்டு விட்டார் என்று அழத் தொடங்கிவிட்டாள்....ஆனால் கொல்லப்பட்டது மம்மூட்டி என்று தெரிந்தவுடன் தியேட்டரே உடைந்து போகும் அளவிற்கு கைத் தட்டல்.....நான் ரசித்த காட்சிகளில் அதுவும் ஒன்று.  ஒரு நொடியில் பார்ப்பவரை பதைக்க வைத்திருப்பார் மணிரத்னம்....காலாவிலும் ரஜினி கொல்லப் படுவது போல் ஒரு காட்சி உள்ளது.  ஒன்றும் மனம் பதைக்கவில்லை.  இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து ரஜினிக்கு ஒன்றும் ஆகாதது போல் காட்சி.  ரஜினி என்பவர்   "larger than life"  காரெக்டர்.  அவர் கொல்லப்படுவது போன்ற காட்சி  கனமான காட்சியாக்கப் பட்டிருக்கவேண்டும்.  காலாவில் கனம் இல்லை ...காட்சி மட்டும் தான் இருக்கிறது.


அடுத்தது வில்லன்.   அவர் தானுண்டு தன் கொடுமை செயல்கள் உண்டு என்று ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.  காலா தட்டிக் கேட்கிறாரே தவிர வில்லனை எதிர்த்து உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லை.  இதே போல் பல இடங்களில் ரஜினியை வீணடித்திருக்கிறார் ரஞ்சித்.   Show and tell என்ற ஆங்கில வாசகத்தின் படி ரஞ்சித் பல இடங்களில் காட்சிகளை பேசியிருக்கிறார்.  காமிக்கவில்லை....

பாடல் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை.  படம் ரொம்ப நீ......ளம்.   எப்பொழுது முடியும்  என்ற  நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டோம்.....கையில் ரிமொட் இருந்திருந்தால் forward செய்து முடிவைப் பார்த்துவிடலாம் என்ற அளவுக்கு இழு...ப....றி.

பாட்ஷாவோ, படையப்பாவோ, தளபதியோ, ரஜினியைத் தவிர யார் நடித்திருந்தாலும் நன்றாய் இருந்திருக்காது.  காலா அப்படி இல்லை.  தனுஷோ, விஜயோ, விக்ரமோ யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம்.  ரஜினிக்கான ஸ்பெஷாலிட்டி ஒன்றும் இதில் இல்லை.

ரஜினிகாந்த் அருமையான நடிகர்.   ஓவர் ஆக்ட்  செய்யாமல் தன் பாத்திரத்தை உணர்ந்து நடிப்பவர்.  அவரை சூப்பர் ஸ்டார் ஆக ஆக்கிவிட்டு அவரிடமிருந்த நடிப்பைப் பறித்து விட்டோம்.  ஆனால் கபாலியிலும் சரி, காலாவிலும் சரி, ரஜினிகாந்து நடிப்பதற்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்திருகிறார் ரஞ்சித்.  காலாவிலும் அருமையாய் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.  முன்னாள் காதலியுடன் பேசும் போதும், மனைவியிடம் பேசும் போது சரி....அமைதியாய்  நடித்திருக்கிறார்.  ஹிந்தியும், மராட்டியும்  ஸ்டைலாய் பேசுகிறார்.  கதா நாயகிகளோடு ஒட்டி நடிக்காமல் கண்ணியமாக நடித்திருக்கிறார்.  தன் வயதிற்கேற்ற நரையுடன் அம்சமாய் இருக்கிறார்.   நல்ல வேளையாக Flash back காட்சிகளில் அவரை இளமையாகக் காட்டி, கதா நாயகியுடன் டூயட் பாடுவது போன்று காட்சிகள் ஏதும் இல்லை....அதற்காக ரஞ்சித்திற்கு ஒரு சபாஷ்.

இரண்டு கதாநாயகிகளையும் (ஆடை குறைப்பு செய்யாமல்) அழகாய் காட்டியதற்காக ரஞ்சித்திற்கு hats off....அதுவும் ஈஸ்வரி ராவ் கலக்கியிருக்கிறார்.   ஈஸ்வரி ராவ் இருக்கும் வரையில் காலாவில் கலகலப்பு இருந்தது.....அந்த நார்த் இந்திய்ன் ஹீரோயினை அறிமுகப் படுத்தும் போது...."போச்சு போ..எந்த பாடல் காட்சியில் இந்த பெண்ணை பயன் படுத்தப் போகிறாரோ..." என்று மனம்  நொந்தது என்னவோ நிஜம்....ஆனால் அது போல் எந்த பாடல் காட்சியும் இல்லை...

பாடல்கள் தான் நன்றாக இல்லையே தவிர Background Music கலக்கல்.  அதுவும் காலாவின் BGM மை விட வில்லனுக்கு உண்டான BGM  தெறி .....மேலும் பல இடங்களில் BGM மிக அருமை.....

சமுத்திரக்கனி குடியும் கையுமாக இருந்தாலும் நன்றாய் நடித்திருக்கிறார்.  புயலாய் வரும் அந்த பெண்ணும் புயலாய் நடித்திருக்கிறது.  

இத்தனை நிறைகள் இருந்தாலும், ...

ரஜினிகாந்த படமாக இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், ரஞ்சித் படம் என்பதால் இரண்டாம் முறை  பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.





No comments:

Post a Comment