அன்னையர் தினம் என்றுமே...

நம் முக நூல் இருக்கிறதே...அதான் facebook....அது அவ்வப்பொழுது "You have a memory to look back on today " என்ற ஒரு notification தரும்.  இன்று காலையும் அது போல் ஒரு "மெம்மரி நோட்டீஸ்" தந்தது.  என்ன என்று ஒரு உள்ளே போய் பார்த்தால், "நீங்கள் இதே நாளில் போன ஜென்மத்தில் மகத நாட்டு மன்னராக இருந்தீர்கள், அதற்கு முன் ஜென்மத்தில் இதே நாளில்  விதர்ப்ப நாட்டின் விதூஷியாக  இருந்தீர்கள்...." என்றெல்லாம்  நினைவுறுத்தவில்லை.  எதை நினைவில் கொண்டு வந்தது என்றால்.....நான் மூன்று வருடங்களுக்கு முன் facebookல்"மதர்ஸ் டே"க்காக எழுதிய கவிதையை/உரையை...ஏதோ ஒன்றை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.  அது நான் எழுதியது தான் என்றாலும் நான் எழுதியது போல் இல்லை.  இது போல் எல்லாம் கூட நான் எழுதியிருக்கிறேனா என்று என்னையே நான் கேள்விக் கேட்டுக் கொண்டேன்.  எப்பொழுதும் வேலே செய்யாத மூளை vacationக்கு சென்ற சமயத்தில், எப்பொழுதோ ஒரு முறை வேலை செய்யும் மூளை சைக்கிள் gapஇல் உள்ளே புகுந்திருக்க வேண்டும்.  அது சரி, அது facebookலேயே இருந்திருக்கலாமே, எதற்கு இப்பொழுது blogல் என்றால், எழுத்தாளர் சுஜாதா அவர்கள் blogஐ கல்வெட்டுகளுகளோடு ஒப்பிடலாம்  என்றும் 2104ல் கூட யாரோ ஒருவர் இந்த வலைப்பதிவுகளைப் படித்துக் கொண்டிருப்பார் என்றும் கூறியிருக்கிறார்.  அதற்காக 2104ல் யாரோ ஒருவர் இந்தப் பதிவைப் படிப்பார்கள் என்ற கற்பனை இல்லை....ஒரு பத்து இருபது பேராவது படிப்பார்கள் என்ற அபரிமிதமான கற்பனைஇருக்கிறது.... இதோ என் கல்வெட்டு.....



அன்னையர் தினம் என்றுமே...

இறைவன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்று
தாயைப் படைத்தான்.

தாய் தோள் சாய்க்க துணை தேவை என்று
தந்தையைப் படைத்தான்.

தாயும் தந்தையும் சந்தோஷத்தில் திளைக்க 
குழந்தை செல்வத்தைப் படைத்தான்.

செல்வத்தை அள்ளி கொஞ்சிக் குதூகலிக்க 
பாட்டி, தாத்தாவைப் படைத்தான்.

இது என் வீட்டு பிள்ளையடா இருமாப்புக் கொள்ள 
அத்தையைப் படைத்தான்.

வெளியே,தெருவே, உலகத்தைக் காட்ட 
மாமாவைப் படைத்தான்.

இரண்டாம் தாயாய் கண்ணில் வைத்து காப்பதற்கு
சித்தியைப் படைத்தான்.

அக்கம் பக்கம் ஓடி,ஆடி விளையாடுவதற்கு 
நண்பர்களைப் படைத்தான்.

அறிவு புகட்டி நல்லொழுக்கத்தைக் கற்பிக்க 
ஆசிரியரைப் படைத்தான்.

முன்னேற்றப் பாதையில் கைப்பிடித்துக் கூட நடப்பதற்கு 
வாழ்க்கைத் துணையைப் படைத்தான்.

துணையுடன் களித்து, இன்புற்று, களைத்து, நிலைக்கு வந்த பின்
ஞானத்தை அளித்தான்.

ஞானம் கண்ட (வளர்ந்த) குழந்தை தந்தையிடம் ஓடிச்சென்று
நெஞ்சு விம்ம நின்றது.

தந்தை கால், தாய் முக்கால் என்ற தந்தை சொல் கேட்டு
தாயிடம் கண்ணீர் வழிய கைக்கூப்பியது.

உடல் சோர்வோ, மன நோவோ, பிசியோ, பிணியோ
தாயின் வயிறு பிசைந்தது.

கருவுற்றது முதல் தினமும் பிசைந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment