சாந்தி,சாந்தி....

இந்த வெள்ளிகிழமை சனிக்கிழமை வந்தாலே கறிகாய்கள் வாங்க வேண்டும் என்று மண்டைக்குள் நண்டு பிராண்டும்.  வேறு கிழமைகளில் வாங்குவதற்கு நண்டு பிராண்டாதா என்று சந்தேகம் கொள்பவர்களுக்கு,  வெள்ளிகிழமை சனிக்கிழமைகளில் மட்டுமே எங்கள் வீட்டில் அருகில் இருக்கும் கடைகளில் கறிகாய்கள் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.  உங்கள் சந்தேகத்தை தீர்த்தது என் பாக்யம். இனி கதைக்கு வருவோம். 

 நேற்று வெள்ளிகிழமை நண்டு பிராண்ட, பையை தூக்கிக் கொண்டு இந்தியன் க்ராஸரி சென்றேன். க.பருப்பு, து.பருப்பு, உ.பருப்பு, து.பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், உப்பு,ப புளி இவைகளை வாங்காமல்  வேறு  ப்ரொவிஷன்சை வாங்கி விட்டு, கறிகாய்கள் இருக்கும் பக்கம் வந்தேன்.  கத்தரிக்காயை ஆராய்ந்து வாங்கிக் கொண்டிருக்கையில் என் பின்னால்  ஒரு இந்திய குடும்பம் கசமுச என்று எதோ அவர்கள் பாஷையில் பேச, கத்தரிக்காயை ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டு  அவர்களை கவனித்தேன். சற்று வயதான கணவன், மனைவி, மற்றும் அவர்களின் பெண்.  அந்த பெண் காலேஜ் செல்லும் வயதில் தோற்றமளித்தாள்.  நான் மேலும் ஆராய்வதற்குள் அவர்கள் வேறு பக்கம் நகர்ந்து விட்டனர்.  நானும் கத்தரிக்காயிலிருந்து வெண்டைக்காய்க்கு நகர்ந்து விட்டேன்.  வெண்டைக்காயை வாங்கி முடித்து பாவக்காய்க்கு வருகையில் மீண்டும் என் பின்னால் கசமுசா சத்தம்.  அதே குடும்பம்.  அந்த பெண்ணின் தந்தை என்னை நோக்கி வர, அந்த  பெண் "டாட் டாட்" என்று மெல்லிய கூச்சலிட்டது.  தந்தை பெண்ணிடம் சென்று ஏதோ பேசிவிட்டு வருவதற்குள், நான் பில் பண்ணுவதற்கு வரிசையில் நின்றேன்.  அந்த தந்தை மீண்டும் என்னை நோக்கி வந்தார்.  "டாட்" என்று கூப்பிட்டு விட்டு அந்த பெண் கடையை விட்டு வெளியே சென்று விட்டது.  என்னை நோக்கி அவர் வந்தார். பார்ப்பதற்கு என் பெரியப்பா போல் உயரமாக, தலை நரைத்து, கண்ணாடி அணிந்து, கம்பீரமாக இருந்தார்.  என்னைப் பார்த்து கை கூவித்தார்.  நிச்சயமாக, சத்தியமாக எதற்காக என்னைப் பார்த்து கைகூவித்தார் என்று  புரியவில்லை.  அவரையே "பே" என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது "ஆர் யூ மலையாளம்..." என்று ஆரம்பித்தவரை பாதியில் தடுத்தேன்.  நிற்க:  என்னைப் பார்த்து "நீங்க மலையாளியா" அல்லது "நீங்க நார்த் இந்தியனா..." என்று கேட்டால் மூக்குக் மேல் கோவம் வரும்.  ஒரு சுத்த தமிழ்ப் பெண்ணைப் பார்த்து இதே போல் கேள்வி கேட்டால் மூக்குக் மேல் கோவம் என்ன, எல்லாம் தான் வரும்.  இனி படிக்க:  "ஆர் யூ மலையாளம்...." என்று ஆரம்பித்தவரை பாதியில் தடுத்து விட்டு " ஐ அம் நாட் அ மலையாளி " என்று கோவமாக சொல்ல நினைத்தேன். 

 என் பெரியப்பாவைப் போல் இருந்ததால் கோவத்தை காற்றில் பறக்கவிட்டு "ஐ அம் நாட் அ மலையாளி " என்று சாதரணமாக சொன்னேன்.  அடுத்த கேள்வி வந்தது அவரிடமிருந்து.  "இன் மலையாளம் மூவிஸ்....." என்று ஆரம்பித்தவரை மீண்டும் தடுத்தேன்.    "ஐ டோண்ட் நோ எனிதிங் அபொளட் மலையாளம் மூவிஸ்," என்றேன் சாதாரணமாக.  பில் பண்ணுவதற்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன்.  என் சொந்தமில்லாத பெரியப்பா என்னை விடுவதாக இல்லை.  அடுத்து அவர் கேட்ட  கேள்வியில் எல்லாம்  மாறியது.  "பை எனி சான்ஸ் ஆர் யூ மலையாளம் அக்ட்ரஸ் சாந்தி க்ருஷ்ணா? இஃப் சோ கேன் ஐ கெட் அன் ஆட்டோகிராஃப்....?" ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கா ஆயிட்டேன்.  அடுத்த நிமிடம் இடம், பொருள், ஏவல் மறந்து வாய் விட்டு சிரித்தேன்.  

பில் பண்ணிக் கொண்டிருந்த அந்த ஹிந்தி சிப்பந்தி என்  சிரிப்பை பார்த்து ஷாக் ஆனது இந்த கதைக்கு தேவையில்லாத விஷயம்.  ஒரு வழியாக சிரித்து முடித்து நிதானத்திற்கு வந்து என் சொந்தமில்லாத பெரியப்பாவிடம் "ஐ யூஸ்ட் டூ கெட் தட் எ லாட்.  பட் ஐம் நாட் சாந்தி க்ருஷ்ணா,"  என்றேன்.   அவர் சிரித்து தலையாட்டி விட்டு சென்றுவிட்டார்.  இந்த கேள்விக்கு பயந்து தான் அவர் பெண் வெளியே போய் விட்டது போல்.   பில்லிங்கை முடித்து விட்டு கிளம்புகையில் என் மனதில் சாந்தி க்ருஷ்ணா வந்து உட்கார்ந்து கொண்டார்.  சென்னையில் இருக்கும் வரை பல பேர், சாந்தி க்ருஷ்ணா ஜாடையில் நான் இருப்பதாக கூறியதுண்டு.  காலேஜ் நாட்களில், கஞ்சி போட்ட காட்டன் சாரியும், கண்ணாடியும் அணிந்த என் ந்யூமரிக்கல் அனாலிஸிஸ் ப்ரொஃப்ஸர் என்னை சாந்தி க்ருஷ்ணா என்று  தான் அழைப்பார்.  அந்த நினைவுகளுடனே காரில் ஏறினேன்.  வீட்டிற்கு சென்றேன்.  அடுத்த வெள்ளிகிழமை நண்டு பிராண்டுவதற்காக காத்திருந்தேன் என்று இந்த கதையை இத்துடன் முடித்திருக்கலாம்.  நினைத்தது எல்லாம் நடந்து விட்டால்......

 வீட்டிற்கு வந்து, க்ராஸரி பேக்குகளை தூக்கிப் போட்டேன்.  ஹாண்ட் பேக்கை திறந்து ஃபோனை எடுத்து சாந்தி க்ருஷ்ணாவை கூகுளில் தேடலாம் என்று நினைக்கையில்.....உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா..."அவசரத்தில் கையை விட்டால் அண்டாவுக்குள் கூடக் கை நுழையாது". அதே போல் அவசரத்தில் என் கை ஹாண்ட்பேக்கிற்குள் நுழையவில்லை.  ஹாண்ட் பேக்கை அப்படியே போட்டுவிட்டு, லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொள்கையில், வந்தான் என் மகன்.  

"அம்மா, கடையிலேந்து என்ன வாங்கிண்டு வந்த?" 

"கத்திரிக்காய்...." . லேப்டாப்பில் பாஸ்வேர்ட் அடித்தேன்.

"அம்மா...." கத்தல்.

"வாட் டி ட் யூ பை ஃபார் மீ?" மகள்

"பாவக்காய்...."கூகுளில் சாந்தி க்ருஷ்ணா அடித்தேன்.

"ஆர் யூ சீரியஸ்?" 

"ஐ ம் வெரி சீரியஸ். பி க்வைட் போத் ஆஃப் யூ," என்று கத்தின கத்தலில் ரெண்டும் காணாமல் போனது.

கூகுளில் வந்த சாந்தி க்ருஷ்ணா ஃபோட்டோவைப் பார்த்து அதிர்ந்தேன்.  சற்று குண்டாய், புஸ் புஸ் கன்னங்களுடன், பன்னீர் புஷ்பங்களில் ஒல்லியாய் பார்த்த சாந்தி க்ருஷ்ணாவா இது என்று வியக்க....சாரி அதிர்ச்சி அடைய வைத்தார்.
 நான் என்னவோ என் சொந்தமில்லாத பெரியப்பா என்னை சாந்தி க்ருஷ்ணா என்று சொன்னவுடன், அந்த காலத்தில் இருந்தது போலவே இப்பொழுதும் இருக்கிறேன் என்று புளகாங்கிதம் அடைந்தேனே.  அவர் எந்த சாந்தி க்ருஷ்ணாவை சொன்னார் என்று தெரியவில்லையே.  புஸ் புஸ் சாந்தி க்ருஷ்ணாவா, பன்னீர் புஷ்பங்கள் சாந்தி க்ருஷ்ணாவா? சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்து விட்டாரே?  இனி என் சொந்தமில்லாத பெரியப்பாவை கண்டு என் சந்தேகத்தை தீர்க்கும் வரை என் மனதில் சாந்தி இல்லை..



1 comment:

  1. Supperrrr. U actually resemble her. By the way what did u buy for Yaamu n Chinthu.... Hope not katrikai n pavakai

    ReplyDelete