யாம் பெறும் சன்மானம்

அது ஒரு சின்ன நகரம்.  அந்த நகரத்தில் கண்ணனின் கோவில் ஒன்று இருந்தது.  ஒரு மாலை வேளையில் அந்த கோவிலை நோக்கி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.  நெற்றியில் திருமண் காப்பு, அரையில் பஞ்சகச்சம், வலது கையில் கைத்தடி.  அவரின் இடது கை, அவருடன் வரும் சிறுமியின் கைகளைப் பற்றியிருந்தது.  அந்த சிறுமிக்கு பத்து, பன்னிரெண்டு வயது இருக்கலாம்.  அந்த முதியவரின்  பேத்தி அவள்.  அவளுடைய அப்பா தாத்தாவுடன் துணையாக கோவிலுக்கு செல் என்று  பணிக்க, அப்பாவின் வார்த்தையை மீற முடியாமல், தோழிகளுடன்  விளையாடுவதை துறந்து இதோ கோவிலுக்கு வந்திருக்கிறாள்.  தாத்தவுடன் கோவிலுக்குள் நுழைய, கோவிலை விட்டு வெளியே செல்பவரைப் பார்த்து, "எப்பொழுது இது போல் நாமும் கோவிலை விட்டு வெளியே வருவோம்" என்று அவள் மனம் ஏங்கிற்று.  அங்கே கோவிலுக்குள் ஒரு மண்டப்த்தில் சிலர் திவ்ய ப்ரபந்தம் சேவித்துக் கொண்டிருக்க,  அவளின் தாத்தாவும் அவர்களுடன் சென்று கலந்து கொண்டார்.  அவளும் தாத்தாவின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். இனி அரை மணி  நேரமோ, ஒரு மணி நேரமோ, அவர்கள் முடிக்கும் வரை இங்கு அமர்ந்திருக்க வேண்டும். அவளுக்கு அழகை பொத்துக் கொண்டு வந்தது.  அங்கே எழிலாய் வீற்றிருக்கும் கண்ணனைப் பார்க்காமல், கோவிலை விட்டு வெளியே செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இது ஒரு நாள் கூத்து அல்ல.  பல நாள் அவள் தாத்தாவுடன் கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது.  ஆனால் ஒரு நாளும் அவள் பார்வை கண்ணன் மேல் படவில்லை.

காலம் கடந்தது.  அவள் திருமண வயதை அடைந்தாள்.  அவள் பெற்றோர்கள் நல்ல கணவனாய் பார்த்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.  கணவனோ கண்ணனின் மேல் அபார பக்தி கொண்டவர்.  கிடைக்கும் நேரத்தில் கோவிலுக்கு போவார் இல்லை என்றால் கண்ணன் பற்றிய சொற்பொழிவு கேட்க போவார்.  அது அவளுக்கு போவதில்லை. திருமணமான புதிதில் மனைவியுடன் காலம் கழிக்காமல் கதை என்ன வேண்டியிருக்கிறது என்று அவர் போவதை தடுத்தாள்.  அவளுடன் சண்டையிட்டு அவர் தன் விருப்பத்திற்கேற்ப நடந்திருந்தால், இன்று அவள் நிலமை மோசமடைந்திருக்கும்.  அவ்வாறு இல்லாமல்,  அவர் அவளின் சொல் கேட்டு கதைகளுக்கு போவதை நிறுத்திக் கொண்டார்.  அவளும் சந்தோஷமாக காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

அவள் ஆடும் ஆட்டதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், அவள் ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தார்.  அவர் முடிவு செய்த வேளையில் அவள் சூலுற்றாள்.  அவள் சந்தோஷத்தில் திளைப்பதற்குள், கரு கலைந்தது.  மரணத்தை தொட்டுவிட்டு வந்தாள்.  புனர் ஜென்மம் எடுத்து ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் கருவுற்றாள்.  இந்த முறை ஏதும் விபரீதம் நடந்து விட கூடாது என்று தவித்தாள்.  தவித்த வேளையில் கண்ணனை நினைத்தாள். கோவிலுக்கு சென்றாள்.   தன் கணவனை சொற்பொழிவுகளுக்கு செல்ல கூடாது என்று தடுத்த அவள், இதே போல் ஒரு மார்கழி மாதத்தில், கண்ணனைப் பற்றிய சொற்பொழிவு நடக்கும் அரங்கத்திற்கு சென்றாள். முப்பது நாட்கள் விடாமல் கண்ணன் கதைகளை கேட்டாள். ஆண் குழந்தையைப் பெற்றாள்.  கதைகள் கேட்டதன் பயனாக கண்ணனை உணர்ந்தாள்.  அவளாய்  தேடி சென்றிருந்தாலும் கண்ணனை உணர்ந்திருக்க மாட்டாள்.  இது அவனாக பார்த்து அவளுக்கு அளித்த சன்மானம்.  மிகப் பெரிய சன்மானம்.

இன்று காலை "திருப்பாவை" பாடலை பாடியபோது, அவள் பெற்ற சன்மானத்தின் கதை அவள் மனதில் ஒடியது.  கண்ணனை நினைத்து கை கூவித்தாள். அடுத்த இரண்டு நொடியில் அமெரிக்க அதிபரை பற்றி படிக்க சென்றுவிட்டாள்.   பின்னர் அவள் மனம் கவர்ந்த தலைவரைப் பற்றிய செய்தி வர, அதை படித்தாள். இப்படியாக கண்ண்னை விட்டு தாவி, தாவிச் சென்று எங்கேங்கோ சுற்றினாலும், கண்ணனிடமே திரும்பி வருவாள். அவள் வராவிட்டாலும் அவன் வரவழைத்துக் கொள்வான்.


1 comment:

  1. தாத்தாவுடன் வலுக் கட்டாயமாக சென்று கோவிலில் திவ்ய ப்ரபந்தம் காதில் விழுந்த பாக்கியமோ அல்லது மார்கழியில் முப்பது நாட்களும் திருப்பாவை கேட்ட பலனோ, மாயக் கண்ணன் அவளுக்கு ஒரு கண்ணனை கொடுத்து கண்ணன் பாலே அவள் கவனத்தை ஈர்க்கச் செய்தான். நல்ல கதை

    ReplyDelete