காக்கா கூட்டம்

ஏனோ தெரியவில்லை, மழை தூறும் நாட்களில் மட்டும், காக்கைகள் கூட்டம் கூட்டமாய் எங்கள் வீட்டின் முன் இருக்கும் புல்வெளியில் கூடிவிடும்.  அதுவும் அண்டங்காக்கைகள்.  தனக்கான உணவைத் தேடி, கொத்தித் தின்று கொண்டிருக்கும் காக்கைகள், மனிதர்கள் யாரேனும் அந்த பாதையில் வந்தால் கூட்டமாய் பறந்து சென்று விடும்.  மனித நடமாட்டம் ஓய்ந்த பிறகு மீண்டும் கூட்டமாய் பறந்து வந்து, கீழ் அமர்ந்து இறையைத் தேடத் தொடங்கும்.

டிசம்பர் ஆறு அன்றும் மழை தூறிக் கொண்டிருக்க, என் வீட்டின் முன்னே அண்டங்காக்கைகள் கூட்டம்.  அன்று கோடிக்கணக்கான மக்களின் மனதில் குடிகொண்டிருந்த சோகமும், துயரமும் என் மனதிலும் குடிகொண்டிருந்தது.  ஏதோ வேலையாய் வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வர, பார்க்கிங் லாட்டிலிருந்து என் வீடு வரை செல்லும் பாதையில் அண்டங்காக்கைகள் அழகாய் அணி வகுத்திருந்தன.  காரை விட்டு நான் இறங்கி நடக்கவும்,  எல்லா காக்கைகளும் மொத்தமாக பறந்து செல்ல, ஒன்றே ஒன்று மட்டும் பறக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது.  பார்க்கிங் லாட்டிலிருந்து சுமார் ஐம்பது அடி தொலைவில் உள்ள என் வீட்டை நோக்கி நடக்க, அந்த ஒற்றை காகம் என்னைப் பின் தொடர்ந்தது.  முழுவதும் கருப்பாய், பெரிதாய் என்னைப் பின் தொடரும் காக்கையைக் கண்டு பயந்த நான் ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைந்தேன்.  வீட்டிற்குள் வந்த அடுத்த வினாடி காக்கை பயம் மறைந்து போனது.  முதல்வரின் நினைவு மனதில் வந்து உட்கார்ந்து கொண்டது.

கடைசி நாளன்று பச்சையும் சிகப்பும் கலந்த பட்டுப் புடவை அவருக்கு அழகாய் இருந்தது.  எனக்குத் தெரிந்து சமீபத்தில் அவரை பட்டுப் புடவையில் பார்த்ததாய் நினைவில்லை.  எப்பொழுதும் டிசையன்கள் இல்லாத வெறும் புடவை.   வண்ணங்கள் மாறினாலும் அவரின் எந்த புடவையிலும் டிசையன்கள் இருந்ததில்லை.  மிகுந்த ஏழ்மையில் இருக்கும் பெண்மணிகள் கூட திருமணங்களுக்கு செல்கையில் தங்கள் வசதிகேற்ப பொய் பட்டோ நிஜ பட்டோ அணியும் போது நம் முதல்வர் மட்டும் (வளர்ப்பு மகன் திருமணத்திற்கு பிறகு) பட்டுப் புடவை அணிந்ததில்லை.  என்ன வைராக்கியமோ?  ஆடம்பரமாய் நகைகள் வேண்டாம்.  ஆனால் எளிமையாய் மெல்லிய கரை கொண்ட பட்டுப் புடவை அணிந்திருக்கலாம்.  இங்கு எல்லோரும் எத்தனையோ காரணங்களுக்காக வருத்த பட்டுக் கொண்டிருக்க, பட்டுப் புடவைப் பற்றி உனக்கு கவலையா என்று நீங்கள் கேட்கலாம்.  டிசம்பர் ஆறு வரை அவர் பட்டுப் புடவை அணியாததைப் பற்றி ஒரு எண்ணமும் இருந்ததில்லை. ஆனால் அந்த பச்சைப் பட்டுப் புடவை மனதை உருக்கிவிட்டது.

பச்சைப் பட்டுப் புடவை மட்டும் என் மனதை உருக்கவில்லை.  அன்று அவரைச் சுற்றி அவரின் ஒரு உறவு கூட இருக்கவில்லை.  பல மைல்களுக்கு அப்பால் எத்தனையோ மனிதர்கள் அவருக்காகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க, அவர் பக்கத்தில் இருந்த ஒருவரின் முகத்திலும் கண்ணீர் இல்லை.  சகல வித அரசு மரியாதைகளுடன் அவருக்கு விடை கொடுத்தாலும்,  அவர் பிறந்த இனத்திற்கேற்ப அவருக்கு விடைகொடுக்கப் படவில்லை.  எல்லா மதத்திலும், எல்லாக் குலத்திலும் இறுதி யாத்திரைக்கு என்று சில வரைமுறைகள் உள்ளது போல், அவருடைய குலத்தில் சொல்லப்பட்ட வரைமுறைகளைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.  சில பல காரணங்களினால் கடைபிடிக்க முடியாமல் போய் விட்டது.  இந்த இறுதி நாளுடன் அவர் வாழ்வு முடிந்துவிட்டது.  இனி ஒரு வருடம் கழித்து அவர் துயில் கொண்ட இடத்திற்கு, நாட்டின் பெரிய மனிதர்கள் வருகை தந்து மாலை அணிவிப்பார்கள்.   இதில் உனக்கு என்ன கவலை என்கிறீர்களா?  தெரியவில்லை.  ஆனால் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது "சக்தி"யோ, "பக்தி" யோ , ஏதோ ஒரு புத்தகத்தில் "காக்கைகளுக்கு அன்னம் இட்டால் இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு நன்மை பயக்கும்" என்று படித்தது நினைவில் வந்தது.

என் பின் தொடர்ந்த காக்கையின் நினைவு மீண்டும் வந்தது.  வெளியே எட்டிப் பார்த்ததில் காக்கை கூட்டம் இன்னும் இருந்தது.  அதில் என்னைப் பின் தொடர்ந்த காக்கை ஏது என்று தெரியவில்லை.  முதல்வர் என் முன்னோரா? இல்லை.  இந்த காக்கைகளுக்குச் சாதம் வைக்கலாமா ? தெரியவில்லை.  வைத்தாலும் அது அவருக்குப் போய் சேருமா? தெரியவில்லை.  இது என் செய்கைகளுக்கு அப்பாற்பட்ட விஷயம்.  ஆனால் என்னால் செய்ய முடிய விஷயம் ஒன்று இருந்தது. அது இறைவனிடம் இறைஞ்சுவது....முடிந்தால் அவருக்கு மறுபிறவி கொடு என்று இறைஞ்சுவது. இறைஞ்சினேன்.

மறுபிறவி உண்டா இல்லையா என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.  ஆனால் அவர் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு.  அப்பா,அம்மா, உடன்பிறந்தோர், கணவன், குழந்தை என்று மறுபிறவியிலாவது அவர் பெரிய குடும்பத்தில் வாழந்து,  பல நிறத்தில் பட்டுப் புடவைகள் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற  ஆசை உண்டு.   பிறந்ததிலிருந்து, பிரியும் வரை இந்தக் காக்கை கூட்டம் போல் தன் கூட்டத்துடன் அவர் வாழவேண்டும்.