நானும் விகடனும்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? உங்களுக்கு தெரிந்தது அனேகம் தான் என்றாலும், எனக்கும் விகடனுமக்கும் உண்டான தொடர்பு உங்களுக்கு தெரியுமா? தெரிந்திருந்தாலும் மேலே படிக்கவும்.  எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இப்படி ஆரம்பித்துள்ளேன்.
 உங்களைப் போல் தான் நானும் வாசிக்க தெரிந்த வயதிலிருந்து விகடனைப் பார்த்திருக்கேன்.  விகடன் வாசிக்கும் வயது வந்தது முதல் இன்று வரையிலும் வாசித்து வருகிறேன்.  விகடன் வாசித்து மட்டுமே வந்த என் வாழ்வில் ஒரு மாற்றம்.  விகடனில் என் எழுத்து வரும் என்று கனவிலும் கூட நினைத்ததில்லை. அப்படியிருக்க, முதன் முதன்லாக "என் விகடன்"னில் என் இந்த வலைப்பதிவைப் பற்றிய செய்தி வந்தது.  அதை தொடர்ந்து "அவள்" விகடனிலும், "சினிமா" விகடனிலும் என் கட்டூரை வெளியானது.  விளைவு,  அப்போதைக்கு அப்போது கனவு உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தேன்.  என் கனவு உலகத்தில் நான் சென்னையில் உள்ள விகடன் அலுவலகத்திற்கு செல்வேன்.  அங்கு இருக்கும் எல்லாருடனும் கலந்து பேசி மகிழ்வேன்.  மீண்டும் நிஜத்திற்கு வரும் போது, கனவு என்று நினைவாகுமோ என்று நினைத்துக் கொள்வேன்.

இதே போல் "விகடன்" கனவில் இருக்கும் ஒருவரிடம் வந்து "வரும் ஞாயிறு அன்று உங்கள் ஊருக்கு விகடனின் நிர்வாக இயக்குனரும், ஆனந்த விகடன் ஆசிரியரும் வருகிறார்கள்.  அவர்களை சந்தித்து பேச இது அரிய வாய்ப்பு" என்று சொன்னால், என்ன செய்வார்?  தலையை அடகு வைத்தாகிலும் அவர்களைக் காண செல்வார்.  ஆனால் என்னிடம் வந்து ஒருவர் மேற்படி விஷயத்தை சொன்னதும், நான் விழுந்து அடித்துக் கொண்டு "கட்டாயமாக வருகிறேன்" என்று சொல்லாமல்,  போகாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்குமோ அதை பெருமையாக கூறிக் கொண்டிருந்தேன்.  ஏன் அப்படி செய்தேன் என்று இன்று வரை புரியவில்லை.  மீண்டும் அவர்  என்னைக் கட்டாயபடுத்த, ஒருவழியாக வருவதாக ஒப்புக் கொண்டேன்.

ஞாயிறும் வந்தது.  எனக்கு சந்தோஷமமும்  வந்தது படபடப்பும் வந்தது.  காரணம் அப்பொழுது தான் என் சிறு மூளைக்கு என் கனவு நிஜமாக போகிறது என்று உரைத்தது.  சந்தோஷமும், படபடப்பும் துணை வர அரங்கம் வந்து சேர்ந்தோம்.  இதே போல் விழாக்களில் நான் எப்பொழுதும் அமர விரும்பும் இடம் முதல் அல்லது இரண்டாவது வரிசை. இந்த  வரிசையப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அலறி அடித்துக் கொண்டு ஊருக்கு முன்னதாகவே ஓடும் வழக்கம் எனக்கு உண்டு.    எப்பொழுதும் போல் இந்த முறையும் ஊருக்கு முன்னதாகவே சென்றதால் எல்லா வரிசைகளும் காலியாகவே இருந்தன.  முதல் வரிசை விகடன் குழுவிற்காக ஒதுக்கப் பட, இரண்டாவது வரிசையில் உட்கார்ந்தோம்.  மிக பெரிய அரங்கம் இல்லை.  சிறிய அரங்கம் தான்.  கூட்டமும் அதிகம் இல்லை. ஏனெனில் இந்த விழாவைப் பற்றிய செய்தி பல பேருக்கு சென்றடையவில்லை.  அங்கு வந்திருந்தவர்களுடன் அளவளாவிக் கொண்டிருக்கையில், விகடன் குழுமத்தினர் எந்த ஆரவராமுமின்றி உள்ளே நுழைந்தனர்.

எத்தனையோ முறை விகடன் படித்திருந்தாலும், ஒரு முறை கூட விகடனின் நிர்வாக இயக்குனரையோ, ஆனந்த விகடன் ஆசிரியரையோ புகைப்படத்தில் கூட பார்த்தது கிடையாது.  அப்படி இருக்கையில் அன்று அவர்களை முதன் முதன்லாக பார்த்தபோது பிரமித்துப் போனேன்.  விகடன் என்ற பத்திரிக்கை சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்டுக் கொண்டிருப்பவர் அதன் நிர்வாக இயக்குனர் திரு. ஶ்ரீனிவாசன் பாலசுப்ரமணியன்,  அலட்டலோ, பந்தாவோ, கர்வமோ இல்லாமல் அமைதியாய் இருந்தார்.  அதே போல் ஆனந்த விகடன் ஆசிரியரான திரு. ஆர். கண்ணனும் ஏதோ நம் வீட்டு உறவு போல் இருந்தார். ஒரு படத்தில் வரும் வசனம்  இது "சிலரைப் பார்த்தது பிடிக்கும், சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும்".  இவர்கள் முதல் வகையைச் சார்ந்தவர்கள்.  பார்த்ததும் பிடித்துவிட்டது.  எனக்கு அவர்களைப் பிடித்து ஒன்றும் ஆகப்போவது இல்லை என்றாலும்…. அவர்கள் எங்களுக்கு முன் இருக்கும் வரிசையில் அமர, விதி அதன் விளையாட்டை இனிதே ஆரம்பித்தது.

தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்க, என் மண்டைக்குள் உறங்கிக் கொண்டிருந்த மனசு விழித்துக் கொண்டு அறுவத் தொடங்கியது.

"உனக்கு முன்னாடி தானே அவர் உக்காந்திருக்கார்.  போய் பேசேன்."

"ஐயயோ.  எனக்கு பேசலாம் தெரியாது.  ரேவதி சொல்ற மாதிரி வாய திறந்தா காத்து தான் வரும்."

"முதல்ல வாய திற.  காத்து வருதா, பேச்சு வருதானு அப்புறம் பாப்போம்.  நீ எழுத்து துறைல இருக்க. எழுத்துலகுல கொடி கட்டி பறக்கறவங்க அவங்க.  இந்த சான்ஸ்ஸ விட்டனா அப்புறம் கிடைக்காது."

"பயமா இருக்கே."

"என்ன பயம்.  அந்த எம்.டி. அமைதியே உருவா இருக்காரு.  ஆனந்த விகடன் ஆசிரியர் நம்ம வீட்டு பிள்ளாயாட்டம் இருக்காரு.  இவங்களோட பேசவா உனக்கு பயம்?"

"நான் ரொம்ப ஒவரா வழியறேனு நினைச்சுட்டாங்கனா?"

"வழியற வயசா உனக்கு?"

" என் வயசப் பத்தி இப்ப உன் கிட்ட கேட்டனா?"

"அறிவு இருக்கற யாரும் இந்த மாதிரி ஆப்பர்ட்யூணிட்டய விடமாட்டாங்க?"

"ஹலோ, ஹலோ. முதல்ல வயசாயிடுத்துனு சொன்ன. இப்ப எனக்கு அறிவு இருக்கா இல்லையாங்கறத பத்தி பேசற.  வாட் இஸ் யூர் ப்ராப்ளம்?"

"நான் சொல்றத சொல்லிட்டேன்.  அவங்களோட பேசாட்டாலும் பரவால்ல.  ஒரு ஃபோட்டோவாது எடுத்துக்கோ.  ஃபேஸ்புக்ல போட்டு அசத்தலாம்."

"கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.  பேசவே முடியலையாம்.  இதுல ஃபோட்டோ வேற? இதெல்லாம் ஆவறதில்ல."

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு…."

"முதல்ல வயசாயிடுத்துனு சொன்ன, அப்புறம் அறிவில்லைன, இப்ப மாடுங்கற.  முதல்ல எடத்த காலி பண்ணு.  பேச்சோ, ஃபோட்டோவோ நான் பாத்துக்கறேன்."

 (அந்த நிமிடம் எனக்கு தெரிந்திருக்கவில்லை,  இன்னும் சிறிது நேரத்தில் நான் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள எல்லோரும் பரிந்துரைக்கப் போகிறார்கள் என்று. )

மனசாட்சி மறைந்தது.  மனசாட்சி மறைந்தாலும் அவர்களுடன் உரையாடும் ஆசை மறையவில்லை.  ஆயிரம் தயக்கங்களுக்கு பிறகு,  அவர்களுடன் பேச நான் ஆயுத்தமாகவும், அவர்கள் இருக்கையை விட்டு மேடைக்குச் செல்லவும்….நான் நோந்தே போனேன்.

இந்த நேரத்தில் தான் அந்த சிந்தனை உதித்தது. இவர்களுடன் பேசுவதற்கு தான் தயக்கமாக இருக்கிறது, எல்லோர் முன்னிலையிலும் என் விகடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டால் என்ன?  சுற்றி முற்றி பார்த்தேன்.  மக்கள் அதிகமில்லை.  மைக்கைப் பிடித்து பேசிவிடலாம் என்று முடிவு செய்து, என் கணவரிடமும், எங்களுடன் வந்திருந்த என் பெரு மதிப்பிற்குரிய உறவுகளிடமும், நான் பேசப் போவதாக குண்டைப் போட, அவர்கள் அதிர்ச்சியுற்றார்கள்.  பேச நினைப்பதை ஒரு பேப்பரில் எழுதிக் கொள்ளுமாறு என் கணவர் சொன்னதை  காது கொடுத்து கேட்கவில்லை.  மனதிற்குள்ளே எழுதிக் கொண்டேன்.  நான் பேச நினைத்தால் போதுமா, அதற்கு அனுமதி வேண்டாமா? நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் அனுமதி கேட்க, நேரமின்மை காரணமாக இரண்டு நிமிடங்களே அளித்தார்.  இரண்டு நிமிடங்களில் என்ன பேசுவது என்று திண்டாடி போனேன். மனதிற்குள் எழுதியவைகளை மனதிற்குள்ளேயே எடிட் செய்தேன்.

இந்த நேரத்தில் விகடன் நிர்வாக இயக்குனர் மேடையை விட்டு இறங்கி அங்கு வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்க,  என் உறவு அவரிடம் போய் என்னை பேசுமாறு வற்புறுத்தியது.  அவள் வற்புறுத்தியதின் பேரில் "பக் பக்" இதயத்துடன், அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்
கொண்டது மட்டுமே என் நினைவில் இருக்கிறது.  என்ன பேசினேன் என்பது நினைவில் இல்லை.  பெரிய மனிதர் என்ற அலட்டலோ, கர்வமோ இல்லாமல் அமைதியாய் பேசிய அவருடைய பாங்கில் எல்லாம் மறந்து போனேன்.  இப்படி கூட ஒரு பெரிய மனிதர் இருக்க முடியுமா என்று மயங்கி போனேன்.  மயங்கிய வேளையில், அறிவிப்பு வந்தது.

"இப்பொழுது விகடன் குழுமத்தினருடன் கலந்துரையாடல்.  முதலில் சுஜாதா."

என்று என் பெயர் ஒலிக்க, திடுக்கிட்டேன்.  திடுக்கிட்டது என் பெயருக்காக அல்ல.  கலந்துரையாடல் என்றதற்காக.  கலந்து உரையாடும் அளவிற்கு எல்லாம் நம்மிடம் ஒன்றும் இல்லை என்பது
தெரியாமல் …..என் உரையாடல் மட்டும் தான் என்று நினைத்து மனதிற்குள் எழுதியதை தேட எல்லாம் மறந்து போனது.  கணவர் சொல் கேட்காமல் விட்டோமோ என்று வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில், என் கையில் மைக் கொடுக்கப்பட்டது.

மைக்கைப் பிடித்ததும் என் இதயம் தாறுமாறாய் அடிக்க ஆரம்பித்தது.  இரண்டு பெரிய மனிதர்கள் முன்னே தத்து பித்து என்று உளர போகிறேன் என்று மட்டும் திட்ட வட்டமாய் தெரிந்தது.  பேச ஆரம்பித்தேன்.  என் இதயத்தின் படபடப்பு என் காதுகளை அடைத்ததால்,  என் பேச்சு என் காதில் விழவில்லை.  கொடுத்த மணித்துளிகளில் என் பேச்சை முடிக்க வேண்டுமே என்று நினைத்து எக்ஸ்ப்ரஸ் இரயிலைப் போல நிக்காமல் நிறுத்தாமல் கிடு கிடு வென்று பேசி முடித்தேன்.  மீண்டும் என் இருக்கையில் வந்து உட்காரவும் தான் என் இதயம் சீரும் சிறப்புமாக ஆனது.

நான் சம்பாதித்த நல்ல உள்ளங்கள் எத்துணை என்று, அன்று தெரிய வந்தது.   நான் பேசி முடித்தது என்னைப் பாராட்டியவர்கள் விகடன் குழுமத்தினர் உட்பட,  அனைவருமே நல்ல உள்ளங்கள் தான்.  நான் பேசியது மொத்தம்  நான்கு நிமிடங்களே ஆனாலும்,  அவர்களின் பாராட்டுதல்கள் நான் என்னவோ பெரிய உரை நிகழ்த்தியது போல் என்னை உணர வைத்தது.

ஆனால், நான் பேசிய அழகின் ஒளிப்பதிவை இன்று பார்த்த போது வெட்கம் பிடிங்கித் தின்றது.  தப்பும் தவறுமாய் ஏதோ ஒளறிக் கொட்டியிருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது.   என் பெற்றோரைப் பற்றி கூறிய நான், என் முழு பலமான கணவரைப் பற்றி கூறாமல் விட்டது மிகப் பெரிய தவறாக தோன்றியது.  அடுத்த முறை பேசும் போது……இத்துணை தூரம் என் கைப்பிடித்து மேலே ஏற்றிவிட்ட கடவுள், பாதியிலேயே விட்டுவாரா என்ன?  அடுத்த முறை, கட்டாயமாக, நிச்சயமாக, உங்கள்  எல்லோரைப் பற்றியும் கட்டாயமாக கூறுவேன்.

விழா முடிந்ததும் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆயத்தமாக,  அவர்களுடன் முதல் புகைப்படம் எடுப்பதற்கு எல்லோரும் அழைத்தது என்னை தான்!!!  அதன் ரகசியம் அன்று நான் பேசியதில் இருக்கிறது.

வாழ்வில் சில நிகழ்வுகள்  மனதில் பட்டாம்பூச்சி போல் படபடத்து,  அன்று அலரும் மலர் போல் மனம் எங்கும் மணம் தந்து,  சீறிப் பாயும் நீர்வீழ்ச்சிப் போல் இன்பத்தை வாரி இறைத்து, வானவில் போல் வண்ணங்களைப் பொழிந்து  நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.  விகடனுடன் நான் கழித்த மாலைப் பொழுது இதோ போல் ஒரு பரவசமான பொழுது.

(ஊரில் ஆங்காங்கு மேடை பேச்சில் ஜாலம் புரிபவர்கள் பலர் இருக்க, ஒன்றும் இல்லாத இந்த நான்கு நிமிட பேச்சுக்கா இந்த அளப்பறை என்று நீங்கள் நினைத்தால்…….நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.  நான் சம்பாத்தித்த நல்ல உள்ளங்களில் நீங்களும் அடக்கம்.)








4 comments:

  1. Sujatha! Sooooooo delighted to read this post!
    கனவு மெய்ப்பட வேண்டும்.....உங்கள் கனவு மெய்ப்பட ஆரம்பித்திருக்கிறது.......மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.
    உங்கள் கனவு மேன்மேலும் வளர வாழ்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Thanks for all that encouragement and support Anu.

      Delete
  2. Your energy is contagious Sujatha, well done...சரி, நீங்க எழுதின அந்த article-a கொஞ்சம் share பண்ணுங்க, அதையும் படித்து மகிழ்கிர்றோம்

    ReplyDelete
    Replies
    1. Thanks Vidya. There is no provision to share my articles. வருங்காலத்தில் எழுதினால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!

      Delete