கையளவு நெஞ்சத்திலே....

கடலளவு ஆசை இருக்கவில்லை.  கடுகளவு ஆசைகள் தான் இருந்தன.  இந்த கடுகுளவு ஆசைகளுக்காக நான் கடவுளடன் நடத்திய பேச்சு வார்த்தைகளின் சாராம்சம் இது.  இது முழுதும் உண்மையே, கற்பனைக்கு இங்கே இடமில்லை.

மனிதர்களோடு மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த என்னை, கடவுளோடு வாதம் செய்வதற்கு தூண்டியது ஒரு புத்தகம். அது  அமரர் கல்கியின் "சிவகாமியின் சபதம்".  ஏதோ படித்தோமா, மகேந்திர வர்ம பல்லவர், நரசிம்ம வர்ம பல்லவர்களோட சிறிது நாள் வாழ்நதோமா, சிவகாமியின் நாட்டியத்தை ரசித்தோமா என்று  இல்லாமல், அந்த கதை  நடந்த மாமல்லபுரத்திற்கு உடனே சென்று  அந்த சிற்பங்களுக்கு நடுவில்  உட்கார்ந்து "சிவகாமியின் சபதம்" படிக்க வேண்டும் என்ற பேராசை மனதில்
எழுந்தது.  ஆசை நிறைவேறவில்லை.     நிறைவேறாத ஆசைக்கு யார் மீது குற்றம் சுமத்தலாம் என்று தேடிய போது, கண்ணுக்குத் தெரிந்த மனிதர்கள் யார் மீதும் குற்றம் சாட்டமுடியவில்லை.  ஆதலால், என் கண்களுக்குப் புலப்படாமல்  இருக்கும் அந்த ஒருவர் மீது குற்றத்தைச் சுமத்தினேன்.   "ஏன் கடவுளே, எத்தனை வருடங்கள் சென்னையில்  இருந்தேன். எத்தனை முறை மஹாபலிபுரம் சென்றிருக்கிறேன்.  அப்போதேல்லாம்  இந்த புத்தகத்தை  படிப்பதற்கு  கொடுக்கவில்லை.  சரி, அது தான் போகட்டும்.  விடுமுறைக்கு சென்னை சென்ற சமயத்திலாவது கொடுத்திருக்கலாம். அப்பொழுதும் நீ கொடுக்கவில்லை.  இப்பொழுது நினைத்தால் மாமல்லபுரத்திற்கு செல்ல முடியாத தூரத்தில் இருக்கும்போது, இந்த புத்தகத்தைப் படிக்க வைத்தாயே, உனக்குப் பொல்லாத்தனம் தானே? ஏன், என் அக்கம் பக்கம் இருக்கும் ஊரில் நடைப்பெற்ற கதைகளைக் கொடுத்தால் நான் படிக்க மாட்டேனா? கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு உனக்கு இல்லை.  இருந்திருந்தால்...."  என்று குற்றப் பத்திரிக்கை வாசித்து முடித்த சில நாட்களில், சென்னையில்
இருந்து ஒரு  புத்தகத்தைப் படிக்க சொல்லி ஒரு பரிந்துரை வந்தது.  பரிந்துரைத்தது நான் மிகவும் மதிக்கும் ஒருவர்.  அவர் பரிந்துரைத்ததின்  காரணம் அந்த புத்தகத்தின் கதைக் களம் (என் ஊரிலிருந்து கூப்பிடு தூரத்தில்
உள்ள) Washington D.C.  பரிந்துரைத்த புத்தகம் "The Lost Symbol".
 அறநூறுக்கும் மேற்பட்ட  பக்கங்களைக் கொண்ட மிக தடிமனான புத்தகம். இவ்வளவு பெரிய புத்தகத்தைப் படித்து முடிக்க  நேரம் ஏது என்ற கேள்விக் குறியுடன் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய நான்,  கிடைத்த நேரத்தில் எல்லாம் இந்த புத்தகத்தில் மூழ்கிப் போனேன்.   Capitol Hill லில் தொடங்கிய கதை Washington D.C.யையே ஒரு சுற்று சுற்றி வந்தது. புத்தகத்தின் சில இடங்கள் புரியாவிட்டாலும், படிக்க படிக்க பிரமித்துப் போனேன்.  அடடா கதையின் களம் நமக்கு மிக மிக அருகில் என்று மகிழ்ந்தேன்.  கடவுளிடம் சமர்ப்பித்தக் குற்றப் பத்திரிக்கை எனக்கு அப்பொழுது நினைவில் வரவில்லை.  ஒரு வெறியோடு அந்த புத்தகத்தை படித்து முடித்து, இந்த புத்தகத்தைப் பரிந்துரைத்த அவருக்கு நன்றி கூறி முடித்த பிறகு, மெல்ல என் குற்றப் பத்திரிக்கை நினைவிற்கு வந்தது.  நான் ஆசைப்பட்டது போலவே எனக்கு வெகு அருகில் நடந்த கதை ஒன்று கிடைத்தது.  இன்னும் சொல்லப் போனால் மாமல்லபுரத்திற்கு சென்றதோடு,
Washington D.C. க்கு சென்றது அதிகம்.  மாமல்லபுரத்து சிற்பங்களைப் பார்த்ததோடு,   Capitol Hillஐ பார்த்த முறை அதிகம்.   இவையெல்லாம் நினைவிற்கு வர மொளனமாகக் கடவுளுக்கு நன்றி சொன்னேன்.  அன்று நிறைவேறா ஆசைக்காக வாய் கிழியப் பேசிய நான், இன்று நிறைவேறிய ஆசைக்கு வாய் திறக்க முடியாமல் திண்டாடிப் போனேன்.

அடுத்த முறை கடவுளிடம் பேசியதற்குக் காரணம் எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்கள்.  எங்கேயோ சுற்றிக் கொண்டிருந்த மனது ஒரு நாள் அவரின் கதைகள் மேல் வந்து அமர்ந்தது.  சமீப காலமாக அவருடைய பெரும்பாலான  கதைகளில் அவர் ஆழ் நிலை தியானத்திற்குள் செல்வதைப் பற்றி எழுதி வருகிறார்.  புரிவதுப் போல் இருந்தாலும்,  ஒன்றும் புரியவில்லை என்பது தான் நிஜம்.  அவ்வாறு புரியாத ஒரு பொழுதில் கடவுளை பேச்சுவார்த்தைக்கு இழுத்தேன்.  " திரு.  பாலகுமாரன் அவர்கள் தியானத்தைப் பற்றி என்னவெலாமோ எழுதுகிறார்.  ஒண்ணும் புரியவில்லை.  தியானம் பண்ணுவதற்கு சுத்தமாக ஆசை இல்லாவிட்டாலும், முதுகுத் தண்டிலிருந்து என்னவோ கிளம்பும் என்கிறாரே,  அது என்னவென்று தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.  இதைப் பற்றி ஆங்கிலத்தில்((எனது வலது பக்க வீட்டுக்காரர் ஷேக்ஸ்பியர், இடது பக்க வீட்டுக்காரர் கீட்ஸ்!!...சில சமயங்களில் தமிழை விட ஆங்கிலத்தில் உணர்வுகள் சுலபமாக புரிகிறது.   "Thanks So Much"ல் உள்ள உணர்வு, "நன்றி"யில் இல்லையோ என்பது என் எண்ணம்)) யாராவது எளிமையாக எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை.  உனக்குத் தெரிந்தால் எனக்கு சொல்."  அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நான் எல்லாம் மறந்து போனேன்.  சிறிது நாட்கள் கழித்து "Eat, Pray, Love" என்ற புத்தகம் என் கைக்குக் கிடைத்தது.   ( இத்தாலி, இந்தியா, மற்றும் இந்தொனேசியா  ஆகிய நாடுகளில் தனது ஆன்மிகத் தேடுதலைப் பற்றி கூறியிருக்கிறார் ஆசிரியர் .)இத்தாலியில் ஆரம்பித்தது புத்தகம்.  இத்தாலியைப் பற்றி நிறையக் குறிப்புகள் இருந்தாலும் படிப்பதற்கு விறு விறு என்று இல்லை.  அதிலும் பல சமயங்களில் உணவைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக இருந்தது.  சமைப்பதே பெரிய வேலை என்று கருதும் எனக்கு, உணவுகளைப் பற்றிப் படிப்பதில் ஆர்வமே இல்லை.  இந்தப் புத்தகம் படித்தது போதும் என்று நினைத்த வேளையில், ஆசிரியர் இந்தியாவில் தனது குருவின் ஆசிரமத்தை வந்தடைந்திருந்தார். அந்த குரு யார் என்ற குறிப்பு அந்த புத்தகத்தில் சொல்ல வில்லை.  ஆதலால்  அவர் யார் என்று கண்டுபிடிக்கும் மிக முக்கிய பணியில் இறங்கினேன்.  பின் ஏன் இறங்கினேன் என்று வருத்தப்பட்டேன். அந்த குருவைப் பற்றிய செய்திகள் நன்றாக இல்லை.  இப்படிப்பட்ட குருவின் ஆசிரமத்தில் ஆசிரியருக்குக் கிடைத்த அனுபவங்கள் உண்மையா, பொய்யா தெரியவில்லையே, மேலே படிக்க வேண்டுமா, வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.  சரி, எதற்கும் படித்து வைப்போம் என்று தொடர்ந்தேன்.  நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில், எளிய ஆங்கிலத்தில், நான்கே வரிகளில், குண்டலினி சக்தியானது முதுகுத் தண்டிலிருந்துப் புறப்பட்டு எவ்வாறு தலையின் உச்சியை அடைகிறது என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.  பிரமித்துப் போனேன், குண்டலினி சக்தியை நினைத்து அல்ல, கேட்டதும் கொடுத்தவனை நினைத்து.  Thanks So Much, உமாச்சி.

கடைசியாக, ஒரு வாரத்திற்கு முன்,  என்னை உலுக்கிய சம்பவம். நான் வந்துக் கொண்டிருந்த பாதையில் உள்ள கதவுகள் மூடப்பட்டன.  அந்த கதவுகள் விரைவில் திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  மூடிய கதவுகளுக்குப் பின் இருப்பது, காடோ, பாலைவனமோ, சோலைவனமோ, எனக்கு அதைப் பற்றி கவலை இருக்கவில்லை.  கதவுகள் திறந்தால் போதும் என்ற நிலையில் இருந்தேன்.  ஒரு நாள் போயிற்று, இரண்டு நாள் ஆயிற்று. கதவுகள் திறப்பதற்கான அறிகுறி சிறிதும் இல்லை.  கடவுளை ஒத்தாசைக்கு அழைத்தேன்.  "கடவுளே, இந்த கதவுகள் தற்காலிகமாகத் தான் மூடப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். உன் உதவியன்றி இந்தக் கதவுகள் திறக்காது என்று நம்புகிறேன்.  இந்தக் கதவுகளை திறந்து விடு," என்று வேண்டினேன்.   மூன்று நாள் ஆயிற்று, நான்கு நாள் ஆயிற்று ஒன்றும் சந்தடியே இல்லை.  ஐந்தாவது நாள் என் வாசலில் கதவுகள் திறப்பதற்கான பல வழிமுறைகள் வந்தன.  "கடவுளே, என் வாசலில் இருக்கும் யுக்திகளை நான் பயன்படுத்தினால் அந்தக் கதவுகள் திறக்கலாம், திறக்காமல் போகலாம்.  அந்தக் கதவுகள் உன்னால் திறக்கப் படவேண்டும் என்பதே என் ஆசை.  அதுவும் தவிர, அந்த யுக்திகளினால் அந்தக் கதவுகள் திறந்தால், உன்னை நம்பி வந்த என்னை ஏமாற்றி விட்டாய் என்று உனக்கு தான் அவப் பெயர் வந்து சேரும்.  அந்தப் பெயர் உனக்குத் தேவையா? தயவு செய்து  கதவுகளை திறந்துவிடு."  மூச்சில்லை,பேச்சில்லை.  ஆறாம் நாள் வந்தது.  என் பொறுமை முற்றும் தொலைந்துப் போய்விட்டது.  "கடவுளே, பொய்யா மொழிப் புலவர் கூறியிருக்கிறார்

              தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
              மெய்வருத்தக் கூலி தரும்.

ஆகையால், நாளைய தினம்  கடைசி நாள்.  நாளை இரவுக்குள்  நீ திறக்கவில்லை என்றால் என் முயற்சியால் நானே திறந்து கொள்கிறேன்." ஏழாம் நாள் காலை.  ஒன்றும் நடக்கவில்லை.  மதியம். எதுவும் ஆகவில்லை.  இரவும் வந்தது.  கதவுகள் அப்படியே இருந்தது.  கனத்த மனத்துடன் மெல்லக் கதவுகள் நோக்கிச் சென்றேன்.  கதவுகளை திறக்க கையை உயர்த்திய சமயம், மெல்லிய ஓசையுடன் கதவுகள் திறந்துக் கொண்டன.   நடந்ததை நம்ப முடியாமல்  மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன். திறந்த கதவுகளுக்குப் பின்னால் இருந்த வனத்தில் ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தது.  அந்த ரோஜாச் செடியின் அருகில் தண்ணீர் நிறைந்த அடுக்கு ஒன்று காணப்பட்டது.  அந்தத் தண்ணீரை எடுத்து ஊற்றிய பின் நடந்தது தான் அதிசயம். நிமிடத்தில் அந்த வனம் முழுக்க ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின். இந்த அதிசயத்தை, இந்த அன்பை என்னால் ஏற்க முடியவில்லை.  பாலைவனமோ, முட்கள் நிறைந்த காடோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த எனக்கு, ரோஜா வனம் மிகப் பெரிய பரிசு.

இத்துடன் என் ஆசைகள் முற்றுப் பெறவில்லை.  நாளை மீண்டும் எனக்கு ஆசைகள் துளிர்க்கலாம்.  அந்த ஆசைகளைக் குறித்து நான் இறைவனிடம் பேசுவேனா, நிச்சயம் இல்லை.  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

         நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டாவிட்டாலும்
         சாமி கேக்கும் மச்சான்.

No comments:

Post a Comment