விஸ்வரூபம் தடை- என் எண்ணங்கள்

நாள்தோறும் அடுப்பங்கறையில் அரிசிக்கும், பருப்புக்கும் நடுவில் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும்     பெண்ணாகிய எனக்கு, நல்ல மனம் செயல்படும் போது விஸ்வரூபம் பற்றி எழுந்த எண்ணங்களையும், நல்ல மனம் அல்லாத வேறொன்று செயல்படும்போது எழுந்த எண்ணங்களையும் சொல்லும் பதிவு இது.

நல்ல மனம் நினைப்பது:

"அடடா, ஒரு படம் எடுத்து விட்டு என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  எத்தனை வகையான தடை.  , எழுத்துலகில் அனுபவமில்லாத கத்துக்குட்டியான நானே என் எழுத்தை பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு, அதன் தலைவிதி என்ன, பிரசுரமாகுமா ஆகாதா என்று இராபகலாக துடிக்கும் எனக்கு, திரைப்படத் துரையையே கரைத்துக் குடித்து உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் அந்த மிகப் பெரிய கலைஞனின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று நன்கு உணர முடிகிறது.  அவரின் உழைப்புக்கேற்ற ஊதியமாய் இந்த படம் தடைகளை மீறி வெளிவரவேண்டும்."

நல்ல மனம் அல்லாத ஒன்று நினைப்பது:

" அன்று தசாவதாரம் என்ற படம் எடுத்து, என் போல் கடவுள் மீது பற்றுக் கொண்டவர்களின் மனதைக் கலங்க அடித்தார்.  பல்லாயிரக்கான மக்கள் தினம் வணங்கிடும் தெய்வத்தை,  தன்  விருப்பப்படி  கையாண்டு  மனதைத் தவிக்கவிட்டார்.  அன்று அவர் கைகளில் மாட்டிக் கொண்டு கோவிந்தராஜன் அல்லல் பட்டபோது வாய் மூடி கண்ணீர் உகுத்தோமே தவிர, அந்த படத்தை எதிர்க்கவில்லை, தடை செய்யக் கோரவில்லை.  நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.  தசாவதாரம் என்ற முற்பகல் செயல், பிற்பகலில் விஸ்வரூபமாய் விளைந்திருக்கிறது.  கடவுள் இல்லை என்று சொல்பவர்,  தசாவதாரம், விஸ்வரூபம், ஹே ராம் என்று கடவுளுடன் தொடர்புடைய பெயர்களை தன் படத்துக்கு வைப்பானேன்,  கடவுளை துவம்சம் செய்து நம் மனதை புண் படுத்துவானேன்? விஸ்வரூபம்  வெளிவந்த பிறகாவது, அவரின் மனதால்,சொல்லால், செயலால், மற்றவர்களை காயப்படுத்துவதை தவிர்ப்பார் என்று நம்புவோம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த இரண்டு சம்பவம் பற்றி சொல்ல விரும்புகிறேன்.  முதலாவதாக , ஒரு முஸ்லீம் அன்பரின் கடையில் பொருள் வாங்கிய பிறகு, பணம் கொடுப்பதற்காக என் பையை துழாவிக் கொண்டிருந்த போது, சாலையில் நாதஸ்வர சத்தமும், மேளச் சத்தமும் கேட்டன.  அப்பொழுது அந்த அன்பர், "யம்மா.  உன் சாமி வருதுமா.  பைசா எங்கயும் போகாது.  உன் சாமிய பாத்துட்டு வந்து பணம் குடுமா," என்றார்.  நானும் விழுந்தடித்துக் கொண்டு என் சாமியைப் பார்க்க ஓடினேன்.  என் கண்கள் என் சாமியின் மீது இருந்தாலும், என் காதுகளில் அந்த முஸ்லீம் அன்பரின் சொல்லே ஒலித்துக் கொண்டிருந்தது.  என்னை மதித்து, என் கடவுளை மதித்து, என்னை அனுப்பி வைத்த அந்த அன்பர், அன்று என் நெஞ்சில் "விஸ்வரூபம்" எடுத்தார்.  மற்றொரு சம்பவம்.  தெருவில் வரும் மாடுகளுக்கு பயந்து ஒரு கடைக்குள் ஒதுங்கினேன்.  கடையின் பேர் பலகையைப் பார்த்தால் அது ஒரு முஸ்லீம் அன்பரின் கடை என்று தோன்றியது.  உள்ளே இருந்தவரோ நெற்றியில் இந்து மதச் சின்னங்களை தரித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர்.  அந்த கடைக்கு வருவோர் போவோரிடமும், அடித்த தொலைப் பேசிகளுக்கும் சலிக்காமல் பதில் அளித்துக் கொண்டிருந்தார்:  "கடை முதலாளி தொழுகைக்கு போயிருக்கார்.  இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரரு".  மாடுகள் போன பின்னும் அவரையே வியந்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்தக் கடையின் முதலாளி வந்துவிட்டார்.  " ரொம்ப thanks sir," என்றார்.  அந்த நன்றியைக் காதில் வாங்கிக் கொண்டாரோ, இல்லையோ தெரியவில்லை.  கடையை விட்டுப் போகும் போது, "நாளைக்கும் இதே நேரத்துக்கு தானேடா தொழுகைக்கு போவ, நான் correctஆ  வந்துடறேன்," என்று சொல்லிக் கொண்டே போனார்.  இந்த உலகம் ரோஜாக் கூட்டங்களால் நிறைந்தது.  ரோஜாவைக் காண்பித்தால் பட்டாம்பூச்சிகளும், தேனீக்களும் சிறகடித்து வரும்.

கடைசியாக ஒன்று,  மற்றவர்களின் கடவுளையோ, மதத்தையோ, மொழியையோ குறை கூறுவதறுக்கு நமக்கு அதிகாரம் இல்லை.  கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள், அவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்து தவறு செய்யாமல் இருப்போம். கடவுள் இல்லை என்று நினைப்பவர்கள், நமமைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை, நம்மை நாமே தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்து தவறு செய்யாமல் இருப்போம்.


                                 

Facebook விருதுகள்

 Sun T.V. Sun குடும்பம் விருதுகள் 6 நாளா பார்த்ததின் விளைவு இந்த post.

இந்த விருது கொடுக்கறத பாத்துண்டே இருகக்கும் போது, திடீர்னு மண்டைக்குள்ள
ஒரு flash.  நம்ம கூட யாருக்காவது விருது கொடுத்தா என்ன அப்டினு ஒரு பல்பு .  யாருக்கு கொடுக்கலாம்னு brain strom(இதுக்கெல்லாமா brain strom பண்ணுவாங்க??) பண்ணும் போது, நம்ம facebook மக்களுக்கு கொடுக்கலாமேனு தோணி எழுதினது இது(ரொம்ப முக்கியம்).  இந்த award nomineesல நான் இருக்கலாம், நீங்க இருக்கலாம். உங்க பக்கத்து வீட்டுக்காரர் இருக்கலாம், எதிர் வீட்டு பையன் இருக்கலாம், யார் வேணா இருக்கலாம். முடிஞ்சா சிரிங்க. சிந்திக்க மட்டும் செஞ்சுடாதீங்க.

 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு போலாமா?Shall we??

FACEBOOK விருதுகள்

      
       Facebook விருதுகள் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு:

          "அம்மா, இன்னிக்கு என்ன dinner?"

         "கண்ணா, அம்மாவும், அப்பாவும் facebookலேயே இருந்ததனால 
           இன்னிக்கு dinner  Pizza."

         "ஹையா, இன்னிக்கு pizza"

          உங்கள் இல்லங்களில் pizza பொங்க, பைசா குறைய, 
          பாருங்கள் Facebook.   திங்கள் முதல் ஞாயிறு வரை. 
          காலை முதல் இரவு வரை.

    நிகழ்ச்சி தொடர்கிறது.

Best Hero/Heroine:

              facebook livelyயா இருக்கறதுக்கு காரணமே இவங்க தான்.  தினம்  Status Update, ஒரு ரெண்டு மூணு like, நாலஞ்சு comments, அப்பப்ப photo upload....இப்படி எப்பவுமே Activeஆ இருக்கறதனால they bag this award.

Best Supporting Person:

            ஆண், பெண், மொழி, மதம், சின்னவங்க, பெரியவங்க இந்த மாதிரி எந்த வித்தியாசமும் பாக்காம அவங்க friends என்ன (update) பண்ணாலும் தவறாம "like" போட்டு support பண்றாங்களே, அவங்களுக்கு கட்டாயமா ஒரு Award குடுக்கணும்.  அதான் இந்த Award.

Facebook விருதுகள் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு:

     "அண்ணி, எங்க பக்கத்து வீட்டுல இருக்கற கணவன் மனைவிக்குள்ள சண்டையே வராது,"

      "அதெப்டி?"

      "அவங்க ரெண்டு பேரும் நேர பேசிக்கவே மாட்டாங்க.  இந்த அம்மா
        என்ன சொல்ல நினைச்சாலும் அவங்க கணவரோட Wallல எழுதிடுவாங்க,
       அதே மாதிரி அவரு என்ன சொல்ல நினைச்சாலும் அந்தம்மா Wallல எழுதிடுவாரு."

      "ஆங். இனிமே நாங்களும் Wallலேயே பேசிக்கறோம்."

         சண்டை சச்சரவுகளுக்கு bye சொல்லுங்கள், facebookக்கு Hello சொல்லுங்கள்.        

நிகழ்ச்சி தொடர்கிறது.  


Best Comedian: 

            "Oh!Oh! Paste தீந்து போச்சே, இன்னிக்கு paste வாங்கணும்,"  இப்படி facebookஅ  personal diary மாதிரி நினைச்சு அவங்களோட everyday activitiesஅ record  பண்றவங்களுக்கு இந்த Award.

Best Dubbing Person: 

           "Please Share this,"  இந்த மூணு எழுத்துக்களை பாத்ததும், உடனே share buttonஅ click பண்ணி,  மற்றவங்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு உகந்த Award இது.


Facebook விருதுகள் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு:

     சென்னையில் மிக பிரமாண்டமான showroom "Comment Classics".  உங்கள் அனைத்து வித comment தேவைகளுக்கும் அணுகவும் "Comment Classics".  கண்ணா மேம்பாலம் அருகில். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.


  நிகழ்ச்சி தொடர்கிறது.

Best Villain:

            Let's bypass this.  கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

Best Guest Person:

           எப்பவோ ஒரு தடவை வந்து, status update/photos upload எதுவும் பண்ணாம, மத்தவங்க update/uploadக்கு "like" போட்டு "comment" பண்றவங்களுக்கு இந்த Award.

 கடைசி award போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன Brake:

            பண்டிகைக் கால சிறப்புத் தள்ளுபடி.  எங்களிடம் ஒரு Wall Post வாங்கினால் ஒரு Wall Post இலவசம்.  இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர். அணுகவும். "Wall Post Wonders, Wallajah Road,  Wallparai."


நிகழ்ச்சி தொடர்கிறது.


Special Award:

         Everyday facebookக்கு வருவாங்க.  "like/comment" எதுவும் பண்ணாம, எந்த வம்பு, தும்புலயும் மாட்டிக்காம இருக்கற Silent Spectatorsக்கு இந்த Award.

இத்துடன் "Facebook விருதுகள்" முடிவடைகின்றன.  இத்தனை நேரம் படித்ததற்கு மிக்க நன்றி.
மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது சுஜாதா, சுஜாதா, சுஜாதா.