விஸ்வ குரு

 ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தெரியும் அல்லவா உங்களுக்கு?  அவர் சொல்லுவார் , " ஒரு தாய் பறவையானது,  தனது குஞ்சுகள், முட்டையை விட்டு வெளியே வர தயாராகிவிட்டன என்று தெரிந்த பிறகு தான், முட்டைகளை தனது மூக்கால் உடைக்கத் துவங்குமாம், அது வரையிலும் முட்டைகளை அடைக் காத்துக் கொண்டிருக்குமே தவிர, மூக்கால் தட்டி உடைக்க முற்படாதாம்."  அது போல், ஒரு குருவும் சிஷ்யனுக்கு பக்குவம் வரை காத்துக் கொண்டிருப்பாராம்.  சிஷ்யனுக்கு பக்குவம் வந்த பிறகே தன்னை வெளிப்படுத்திக் கொள்வாராம்.  இப்பொழுது தான் நமக்கு எல்லாம் பக்குவம் வந்திரு க்கிறது போல்...அதனால் தான் அந்த "குரு" தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அந்த "குரு"வின் பெயர் திரு. நரேந்திர மோடி.

குரு என்ற சொல்லுக்கு  இருட்டை விலக்குபவர் (இருட்டை விலக்கி, கடவுளை  காண்பிப்பவர்)  என்று பொருள்.  

இருட்டு என்றால் சாதரணாமான இருட்டு அல்ல.  கும்மிருட்டில் இருந்தோம்.  கோவில் இல்லாமல், கூடாரத்தில் ராமரை சேவிக்கும் இருட்டில் இருந்தோம்.  அயோத்தியில், என்ன நடக்கிறது தெரியாத இருட்டில் இருந்தோம். இந்த இருளை எல்லாம் விலக்கி, "ராம் லல்லா" என்ற கடவுளை நமக்கு காண்பித்தவர் நரேந்திர மோடி என்ற குரு.

குரு என்பவர், கடவுளின்  நாமத்தை உபதேசிப்பவர்.  

நரேந்திர மோடி என்ற குரு, நமக்கு உபதேசித்த  நாமம், "ராம நாமம்." அந்த இரண்டு மூன்று நாட்களும்  நாம் அதிகம் சொன்னது,  நாம் அதிகம் கேட்டது  "ராம நாமம்."  செய்திதாள்களிருந்து,தொலைக்காட்சி, சமூக வலை தளம் என எல்லா இடத்திலும் "ராம நாமம்" தான்.    விபீஷண கோஷ்ட்டியான நாம், "ராம நாமம்" சொல்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  ஆனால் ராவண கோஷ்ட்டியினரும் "ராம" நாமத்தை ஏதோ ஒரு வகையில் உச்சரித்தனர் அல்லவா? அதற்கு காரணம்  நரேந்திர மோடி என்ற குரு. 

குரு என்பவர், நமக்குள் பொதிந்து இருக்கும் பக்தியை வெளிக்கொணர்பவர்.

 இந்த "ராம் லல்லா" இருக்கிறாரே, அவர் நமக்கு புதியவர்.  திருப்பதி கோவிந்தனைப் போலவோ, திருவல்லிகேணி பார்த்தசாரதியைப் போலவவோ நமக்கு தெரிந்தவர் அல்ல. ப்ராணப்ரதிஷ்ட்டைக்கு முன் வலைதளங்களில் தான் முதல் முறையாக  "ராம் லல்லா"வைப் பார்த்தோம்.  சரி பார்த்தாச்சு.  அத்துடன் விடுவதானே?  ப்ராண்ப்ரதிஷ்ட்டை நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்தோம். நேரலையை பார்க்க முடியாதவர்கள் அந்த  நிகழ்ச்சியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தோம். எது நம்மை நேரலையை பார்க்கவைத்தது, எது நேரலையைப் பற்றி நினைக்கவைத்தது? திரு நரேந்திர மோடியின் மேல் உள்ள ஆசையா, பொழுது போக்கவா,  ஆங்கிலத்தில் material pleasure என்பார்களே அதற்காகவா?இல்லை...பின் எது?

நம் யூ ட்யூப் சேனல்கள், இதுவரையில்  நிகழ்ச்சிகளையோ அல்லது விளையாட்டு நிகழிச்சிகளையோ தான் போட்டி போட்டுக் கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்து வந்தது. முதல் முறையாக ஒரு ஆன்மிக நிகழ்ச்சியை, பிரபலமாய் இருக்கும் அனைத்து யூ ட்யூப் சேனல்களும்,  போட்டி போட்டுக் கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்திருக்கிறது. அந்த சேனல்கள் பண்த்திற்காக தான் ஒளிபரப்பு செய்தார்கள் என்றாலும் மக்கள் ப்ராணப்ரதிஷ்ட்டையை பார்ப்பார்கள் என்று தெரிந்து தானே போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பினார்கள்.  ஒவ்வொரு சேனலிலும்,  நேரடி பார்வையாளர்களின் எண்ணிக்கை அமோகம்.  (அந்த எண்ணிக்கை பொய்யாக இருக்குமோ என்று நினைத்து, தேடிப் பார்த்து அந்த எண்ணிக்கை உன்மை தான் என்று கண்டு கொண்டேன்).  எது இத்தனை மக்கள் நேரலையை பார்க்கச் செய்தது எது? 

ப்ராணப்ரதிஷ்ட்டை முடிந்த அடுத்த நாளிலிருந்து "ராம் லல்லா"வைப் பார்க்க என்ன கூட்டம்? சரி, "ராம் லல்லா"வைப் பார்ப்பதற்கு தான் கூட்டம், அந்த "ராம் லல்லா"வை செய்த சிற்பி "அருண் யோகிராஜ்" அவர்களைப் பார்ப்பதற்கு என்ன கூட்டம்?  Again, நாம் எல்லாம் film stars, sports stars பின்னால் போகிறவர்கள்.  நம்மை "ராமர் சிலை" வடித்த சிற்பியின் பின் போக செய்தது எது? 

மேலே  கூறப்பட்ட அனைத்து "எது"விற்கும் காரணம் பக்தி. 

பக்தி நமக்குள் இருக்கிறது.  அதாவது நாம் எண்ணிப் பார்க்காத அளவு நம்மூள் பக்தி இருக்கிறது.  அதை முழுவதுமாய் வெளிக் கொணர ஒரு "குரு" தேவை. "ராம் லல்லா" வை நமக்கு காண்பித்து, நம்முள் இருந்த அசாத்திய பக்தியை வெளிக்கொணர்ந்தவர்..நரேந்திர மோடி என்ற குரு. 

இறுதியாக

 ப்ராண்ப்ரதிஷ்ட்டை நடந்த இரவு, திரு ந்ரேந்திரா மோடி, 
அவர் வீட்டில் "ராம் லல்லா"வின்
புகைப்படம் முன் விளக்கேற்றும் காட்சியை காண நேர்ந்தது.  அந்த காட்சியைப் பார்த்த போது, அந்த புகைப்படத்தில் இருந்த தெய்வம் "ராம் லல்லா" வாக எனக்கு தோன்றவில்லை.  "மோடியின் லல்லா" வாக தான் தோன்றியது.  வருடக் கணக்காக "ராம் லல்லா"வை மனதில் நினைத்து ,  "ராம் லல்லா"விற்காக விரதமிருந்து,  "ராம் லல்லா"விற்காக கோவிலாகச் சென்று...அந்த "ராம் லல்லா"விற்கு தாய் தந்தை எல்லாம் திரு நரேந்திர மோடி தான்.  ஆனால், நமக்கு...அவர் குரு.
எப்பேர்பட்ட குரு... உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து, குறைந்தபட்சம் ஒருவரையாவது "ராம் லல்லா"வைப் பற்றி பேச வைத்த  "விஸ்வ குரு."

பின்குறிப்பு::  ஆஞ்சனேயர் "ராம் லல்லா"வை தரிசிக்க வந்தாராம்,  சில்பி "அருண் யோகிராஜ்"  ராம் லல்லா சிலையை வடிவமைக்கும் போது அங்கும் ஆஞ்சனேயர் வந்தாராம், என்றெல்லாம் ஊடகங்களில் படித்துவிட்டு, நாமும் "ராம் லல்லா"வைப் பற்றி எழுதுகிறோம், நம்மை பார்க்கவும் ஆஞ்சனேயர் வருவாரா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆஞ்சனேயர் வரவில்லை.  ஆனால்...ராமரே வந்துவிட்டார்... அதாவது, நான் எழுதியே  நாட்கள் ஆகிவிட்டன.  ஆதலால் இந்த பதிவை எழுதுவதற்கு சிரமப்பட்டேன்.  உண்மையில் எழுதவே முடியவில்லை.  டைப் அடிக்க வேண்டியது,  delete பண்ண வேண்டியது,  டைப் அடிக்க வேண்டியது,  delete பண்ண வேண்டியது,  டைப் அடிக்க வேண்டியது,  delete பண்ண வேண்டியது, எனா இரண்டு நாட்கள் சென்று விட்டன. கடைசியில், "இப்படியே delete பண்ணிக்  கொண்டிருந்தால் வேலைக்க ஆகாது" என்று தெளிந்து, ஏதோ டைப் செய்ய  ஆரம்பித்துவிட்டேன். பதிவை முடித்து, ஒரு முறை படிக்கலாம் என்று ஆரம்பித்தால்...முதல் இரண்டு வார்த்தை...அதாவது இந்த பதிவின் முதல் இரண்டு வார்த்த்தையை கண்டு அசந்து விட்டேன்.  எப்படி அந்த இரண்டு வார்த்தையுடன் இந்த பதிவு ஆரம்பித்தது???  விஸ்வ குருவின் அருள். 




நாமம் நல்ல நாமம்


ஶ்ரீ ராம நவமி முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டன.  ஶ்ரீ ராம நவமி அன்று தோன்றிய சிந்தனை இது.  இதை எழுத்தில் வடிக்க இத்தனை நாள்.  உலகத்தின் முதல் சுறுசுறுப்பான பெண்மணி நான் தான்.  

என் சிந்தனைக்கு வருவோம். 

வழக்கம் போல் ஶ்ரீ ராம நவமி அன்று பானகம், நீர் மோர், வடை பருப்பு நிவேதனம் செய்தாகி விட்டது. இதில் நடுவில், சென்னையில் இருக்கும் என் அம்மா தொலைபேசி வழியாக , "வேற எதுவும் ஸ்வீட் இல்லையா?" என்றாள். அமெரிக்காவில் இருக்கும் நான், தொலைபேசி வழியாக,  "ஏம்மா சும்மா இழுத்துவிடற.  ராம நவமிக்கு ஒண்ணும் ஸ்வீட் எல்லாம் பண்ண மாட்டோம்," என்றேன்.  "ஸ்வீட்" ஏதாவது பண்ணால் நான் என்ன குறைந்து விடுவேனா?  குறைந்து எல்லாம் போக மாட்டேன்.  ஸ்வீட் பண்ணலாமா என்ற  நினைப்பு  எட்டி கூட பார்க்கவில்லை.  மனதில் அந்த சிந்தனை வட்டமடித்துக் கொண்டிருந்தது. 

சிந்தனை என்னவென்றால்...ராமரின் பிறந்த நாளைக்கு பெரிதாய் ஒன்றும் இல்லை. ஆனால் கிருஷ்ணரின் பிறந்த நாளைக்கு... கோலாகலமான கொண்டாட்டம், வீடு நிறைய பட்சணம்...இருந்தாலும் கிருஷ்ணர் பாவம் . 

அவர் பிறந்தது முதல் போராட்டம் தான்.  பிறந்ததே சிறைச்சாலையில். கைக் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே அரக்கரர்களால் பிரச்சனை.  பெரிய வயதில் அர்ஜூனக்காக தேர் ஓட்டி முக்கத்தில் அம்பு காயங்கள்.  அதே அர்ஜூனனுக்காகவும்(நமக்காகவும்) தொண்டை தண்ணீர் வற்ற கீதை. இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். எத்தனை அவர் செய்தாலும்...நாம் என்ன செய்கிறோம்..."ஶ்ரீ ராம ஜயம்" என்று தான் எழுதுகிறோம். "ஶ்ரீ கிருஷ்ணா ஜயம்"  என்று எழுதுகிறோமா?

ராமர் மட்டும் தான் போர் புரிந்து ஜெயித்தாரா? கிருஷ்ணர் ஜெயிக்கவில்லையா?  எத்தனை பெரிய மகாபாரத போர்...வில், அம்பு கையில் ஏந்தி அவர் போர் புரியவில்லை. ஆனாலும் பாண்டவர்கள் போரில் ஜெயித்தது கிருஷ்ணரால் தானே?  ஏன் "ஶ்ரீ கிருஷ்ண ஜயம்" இல்லை?

இவ்வுளவு ஏன்?  மகாபாரதப் போரின் போது பீஷ்மரால் பாண்டவர்களுக்கு உபதேசிக்கப்படது "ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்."  ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அன்றாடம் சொல்வதற்கு எளிய வழி யாது என்று பார்வதி தேவி, சிவபெருமானை கேட்டதற்கு, சிவபெருமான் "ஶ்ரீ ராம ராம ராமேதி" என்று ராம நாமம் பேசும் ஸ்லோகத்தை தான் உபதேசித்தாரே தவிர, கிருஷ்ண நாமம் பேசும் ஸ்லோகத்தை உபதேசிக்கவில்லை.  இத்தனைக்கும் அந்த மஹாபாரதப் போரின் நாயகன்"ஶ்ரீ கிருஷ்ணர்."

கபீர் தாசர் தொடங்கி, ஸ்வாமி ராமதாஸ், நீம் கரோலி பாபா, யோகி ராம்சூரத் குமார் போன்ற பல யோகிகள் கடைபிடித்தது ராம நாமத்தை தான்.  மேலும் அகண்ட ராம நாமம் தான் இருக்கிறதே தவிர, அகண்ட கிருஷ்ணா நாமம் இருப்பதாக தெரியவில்லை.  அதே போல் ராம  நாமத்தின் மகிமை தான் பரவலாக பேசப் படுகிறதே தவிர, கிருஷ்ண நாமத்தின் மகிமை பேசப்படுவதாக தெரியவில்லை. நம் மனதை கொள்ளை கொண்டவர் கிருஷ்ணராக இருந்தாலும், ராம நாமமே எங்கும் பேசப்படுகிறது. வட இந்தியாவிலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது "ராம் ராம்" என்று தான் சொல்கிறார்கள். காரணம்...

என்னைப் பொறுத்தவரை ராம நாமம் எங்கும் பரவியதன் காரணம் "ஆஞ்சனேயர்." ஆஞ்சனேயரின் ராம பக்தியைப் பற்றி நான் என்ன சொல்லுவது? உள்ளத்தில் ராமர், சொல்லில் ராமர், செயலும் ராமருக்காக.  ஆஞ்சனேயர் என்ற அற்புத பக்தரால், ராம நாமம் எங்கும் பரவியிருக்கிறது.

கிருஷ்ணருக்கு... கோபிகைகள் இருந்தார்கள்.  பஞ்ச பாண்டவர்கள் இருந்தார்கள். இன்னும் நிறைய பக்தர்கள் இருந்தார்கள்.  ஆனாலும் ஆஞ்சனேயர் போல் ஒரு பக்தர் இருந்ததாக தெரியவில்லை.  ஏனெனில் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறாரே "வாசுதேவனே இங்கு எல்லாம் என்று சொல்பவர்கள் அரிது அர்ஜூனா." (வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப).  


யோசித்து யோசித்து பார்த்ததில், கிருஷ்ணர்,  பிறந்தது முதல், வைக்குந்தம் செல்லும் வரை யாருடனும் அதிக நாள் இருக்கவில்லை.  பிறந்தவுடன் பெற்றோர்களை விட்டு பிரிந்தார்.  பின்பு கோபிகைகளை விட்டு பிரிந்து மதுரா வந்தார்.  பின்பு அங்கிருந்து துவாரகை சென்றார்.  துவாரகாவிலிருந்து பிராபாஸபட்டினத்திற்கு சென்றார்.  அங்கே வேடனின் அம்பு காலில் தைக்கப் பெற்று, வைகுந்ததிற்கு சென்றார்.  அவர் பிறந்த  போதும் கொண்டாட ஆளில்லை.  உயிர் பிரிந்த தருணத்திலும் அழுவதற்கு ஆள் இல்லை.   ஒரு யோகி போல் இருந்திருக்கிறார்.  அதனால் தானோ என்னவோ கீதையின் ஒவ்வொரு அத்தியாமும் "யோகம்" என்று அழைக்கப்படுகிறோ என்னவோ.  யோகியாய் இருந்தவர் கீதை உரைக்கையில்  கீதாசாரியனாய், ஜகத்குருவாய் ஆனார்.  குரு என்பவர் இறைவனிடம் நம்மை இட்டுச் செல்பவர். தன் பெருமையை பேசாதவர்.  அதனால் தான், கீதாசாரியனும் இறைவனான "ராம நாம"த்தை  எங்கும் பரவவிட்டு,  ஆச்சாரியனான "கிருஷ்ண நாம"த்தை  குறைத்துக் கொண்டாரோ? 

கிருஷ்ணரைப் போல்  உயர்ந்த ஜகத்குரு இல்லை.
ஆஞ்சனேயரைப் போல் உயரந்த சீடர் இல்லை.
ராம நாமத்தைப் போல் உயர்ந்த நாமம் இல்லை.

என் சிந்தனை இங்கு முற்று பெற்றது.  

ஶ்ரீ ராம நவமி அன்று தோன்றிய சிந்தனை இது.  இதை எழுத்தில் வடிக்க இத்தனை நாள்.  உலகத்தின் முதல் சுறுசுறுப்பான பெண்மணி நான் தான்.  









அந்தர்யாமி



"அந்தர்யாமி" - இந்த சொல்லுக்கு "உள்ளே உறைபவன்"  என்று எனக்கே தெரியும் போது, உங்களுக்கும் தெரியும்.  

இந்த "அந்தர்யாமி" என்ற சொல்லை நிறைய இடத்தில் படித்திருக்கிறேன். பலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்.  ஆனால் அந்த அந்தர்யாமியே "நான் அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று சொன்னதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்.  

அவர்  மஹாபாரத போரின் நடுவில், அர்ஜூனனிடம் "எல்லாவற்றுக்குள்ளும் நான் அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று சொன்னார்.  அவர் அப்பொழுது கூறியதை இப்பொழுது தான் நான் தெரிந்து கொண்டேன்.

அன்றும் எப்பொழுதும் போல் சமையல் செய்து கொண்டிருந்தேன்.  காதுகளில் headphones  மாட்டிக் கொண்டு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் பகவத் கீதை உபன்யாசம் யூ ட்யூப்பில் இருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சமையல் என்ற கடினமான வேலையை, மிகக் கடினமான வேலையை, சுலபமாக்க இது போல் எதாவது கேட்பது என் வழக்கம்.  அவர் சொல்வது எல்லாம் என் மண்டையில் ஏறாது. ஏதோ ஏறின வரையில் புண்ணியம் என்று கேட்கிறேன். அதுவும் தவிர பகவத் கீதை" யை உட்கார்ந்து கேட்கும் அளவிற்கு எனக்கு பொறுமை கிடையாது.  நான் ஒரு தனிப் பிறவி.  அதனால் தான் சமையல் செய்து கொண்டே...

எங்கே விட்டேன்.  ஆங்...சமையல் செய்து கொண்டே பகவத் கீதை கேட்டுக் கொண்டிருந்தேன்.  திடீரென்று ஶ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி அவர்கள் "எல்லாவற்றுக்குள்ளும் நான் அந்தர்யாமியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணன் சொன்னதை நாம் பதினைந்தாவது அத்தியாயம் பதினைந்தாவது ஸ்லோகத்தில் பார்த்தோமே..." என்றார்.  அது போல் ஒரு ஸ்லோகத்தை எனக்கே கேட்ட நினைவே இல்லை.  யூ ட்யூப்பில் பதினைந்தாவது அத்தியாயம் பதினைந்தாவது ஸ்லோகத்தை தேடிக் கண்டு பிடித்து, அந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை ஶ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி சொல்லக் கேட்டு, பிரமித்து போனேன்.  எப்பேற்பட்ட ஸ்லோகம் அது. ஆனால் வெளியில் தெரியவில்லை.  பகவத் கீதை என்றாலே "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய..." ஸ்லோகமும் "அனன்யாஸ் சிந்தயந்தோ மாம்" என்ற ஸ்லோகமும் தான் உடனே  நினைவில் வரும்.  Thanks to B.R. Chopra "யதா யதா ஹி தர்மஸ்ய" ஸ்லோகமும் நினைவில் வரும்.  ஆனால் "பதினைந்தாவது அத்தியாயத்தில்" இருக்கும் "பதினைந்தாவது ஸ்லோகம்..." அது என்ன ஸ்லோகம் தெரியுமா...

"ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்ட்டோ
 மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞானம் அபோஹனம் ச
வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத வித் ஏவ சாஹம்"

(என்னை  கவர்ந்த)முதல் வரியின் கருத்து : அனைத்து ஜீவராசிகளுடைய ஹ்ருதய கமலத்திலே, நான், நன்கு வீற்றிருக்கிறேன். 
இரண்டாவது வரியின் கருத்து :  எல்லாருடைய ஹ்ருத்ய கமலத்தில் நான் வீற்றிருப்பதால், யாருக்கு ஏது ஞாபகம் வருகிறதோ அது என்னால் தான். ஒன்றைப் பற்றிய ஞானம் முதல் முறையாக யாருக்கு ஏற்படுகிறதோ அதுவும் என்னால் தான்.  யாருக்கு மறதி ஏற்படுகிறதோ அதுவும் என்னால் தான். 
மூன்றாவது  வரியின்  கருத்து:  அனைத்து வேதங்களாலும் நானே சொல்லப்படுகிறேன்.
நான்காவது வரியின் கருத்து: வேதத்தில் சொல்லப்படும் பலன்களை அளிப்பவனும் நானே, வேதத்தை அறிந்திருப்பவனும் நானே.
(ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசத்திலிருந்து)

கிருஷ்ணரே தான் இருக்கும் இடத்தை இந்த ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.   நம் இதயத்தில் இருக்கிறார்.  இல்லை இல்லை. ஹ்ருதய கமலத்தில் இருக்கிறார்.  இதயத்திற்கு ஏன் ஹ்ருதய கமலம் என்ற பெயர் தெரியுமா? கமலம் என்றால் உங்களுக்கு தெரியுமே....தாமரை.   நம் இதயம் தலைகீழே பிடிக்கப்பட்ட தாமரை போல்  இருக்கும் என்று உபநிஷத்து கூறுகிறது.  இதயம் என்றாலே ஹார்ட்டின்(💗) தான் நினைவில் வருகிறது.  நானும் நம் இதயம்  💗போல் இருக்கும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்பொழுது அப்படி இல்லை என்று தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு  என்ன செய்தேன் தெரியுமா? நம் உடம்பில், இதயம் எங்கிருக்கிறது...அதாவது இதயத்தின் exact location எது என்று குகூளில் தேடினேன்.   அப்பொழுது இரவு மணி பத்து.  இதயத்தின் லொகேஷனை தேடப் போய் ஒரே சைன்ஸ் வார்த்தைகளாய் படித்து, தூக்கத்திற்கு ஆட்பட்டேன்.  மறு நாள் காலை அதிசயம் ஒன்று  நிகழந்தது.  "Sri M" தனது வீடியோ ஒன்றில் ப "HE lives in the heart, which is 10 inches from our navel" என்றார். நான் மலைத்து போனேன்.  நான் இதயத்தை தேடியது "Sri M" க்கு எப்படி தெரிய வந்தது? ஆக, நம் நாபியிலிருந்து பத்து அங்குலம் தூரத்தில், இதயம் இருக்கிறது என்று கண்டு கொண்டேன்.   

ஒரு பக்கம், உலகளந்த பெருமாளாக , மண்ணிலிருந்து விண் வரை நெடிதுயர்ந்து நிற்கிறார்.   மற்றொரு பக்கம், நம் இதயத்தில் சின்னஞ்சிறு வடிவில் உரைகிறார்.  "எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று சொன்னாரே தவிர,  நான் உலகளந்தேன், மீனாய் பிறந்தேன், வராகமாய் பிறந்தேன் என்று அவர் சொல்லவில்லை.  ஆனால் நமக்கு...சாரி....எனக்கு மீனாய் பிறந்ததும், வராகமாய் பிறந்ததும் தான் தெரிகிறேதே தவிர, மனதில் இருப்பவரை தெரிந்து கொள்ள முடியவில்லை. 

"அந்தர்யாமி" என்ற  "உள்ளே உறைபவன்"  எனக்கு...ஸாரி...நமக்கு அவரைக் காட்டிக் கொடுக்க வேண்டும் .

புகுந்த வீடு, பிறந்த வீடு

 


தலைப்பைப் பார்த்துவிட்டு நான் என் புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் பற்றி எழுத போகிறேன் என்று நீங்கள் நினைத்தால்...அதற்கு நான் பொறுப்பல்ல👀 👀   

நான் எழுதி கிழித்துவிட்டேன், அடுத்தது பேசிக் கிழிப்போம் என்று தீர்மானித்து, Toastmaster இல்  சேர்ந்திருக்கிறேன்.  (எழுத்து - பிறந்த வீடு; பேச்சு - புகுந்த வீடு😎).  டோஸ்ட்மாஸ்டரில் சேர வேறு ஒரு காரணமும் உள்ளது.   எனக்குக் கோர்வையாக பேச வராது.  அதுவும் தவிர, அடுத்த நிமிடம் உலகம் அழிந்துவிடுவது போல் வேக வேகமாக பேசுவேன்.  இது எல்லாவற்றையும் சரி செய்வதற்கு தான் Toastmaster இல் சேர்ந்திருக்கிறேன்.  Toastmaster இல் Prepared speeches and table topics(improptu speech) என்ற பகுதிகள் இருக்கிறது.  அதில் table topics என்பது கொடுத்த தலைப்பிற்கு இரண்டு நிமிடங்களுக்குள் பேசவேண்டும்.  அதை ஓருவர் மதிப்பீடு செய்து நம் குறை நிறைகளை கூறுவர்.  ஆனால் நான் பேசுவதை மட்டும் மதிப்பீடு செய்யவே முடியாது.  ஏனெனில் நான் தான் கண் இமைக்கும் நேரத்திற்குள் பேசி முடித்து விடுவேனே.... நான் என்ன பேசினேன் என்பதை அவர்களால் கிரஹிக்கக் கூட முடியாது.   நானும் நிதானமாக பேச முயற்சிக்கிறேன் முடியவில்லை.  

Prepared speechesஇல் முதல் speech ice breaker speech.  என்னைப் பற்றி  நான்கு நிமிடங்களிலிருந்து ஆறு நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.   பக் பக் இதயத்துடன் பேசி முடித்து விட்டேன்.  இரண்டாவது speechக்கு எதைப் பற்றி பேசுவது என்று தெரியாமல் திண்டாடி, கடைசியில் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த ஒன்றைப் பற்றி பேசினேன்.  அந்த மிகவும் மிகவும் மிகவும் பிடித்த ஒன்று.....காஃபி😍   ஐந்து நிமிடஙளிலிருந்து ஏழு நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.  அதே பக் பக் இதயத்துடன் பேசி முடித்து...பாராட்டுதல்களையும் பெற்றேன்.  அந்த பாராட்டில் மிக முக்கியமானது  "we can tell you are a writer" என்று ஒருவர் சொன்னது.   என் பேச்சைக் கேட்டு என்னை எழுத்தாளார் என்று அங்கீகரித்தது எனக்கு ஏனோ மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.  மற்றபடி  நான் பேசியது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது.  என்னைப் பாராட்டியவர்களை நான் மதிக்க தவறியது போல் இருக்கும்.  நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.  இது zoomஇல்  நடைப்பெற்றதால் computerஐ பார்த்து பேசிக் கொண்டிருக்கிறேன்.  


பிறந்த வீட்டைப் பற்றி பார்ப்போம்.  Amazon Kindleஇல் இதுவரை மூன்று புத்தகங்கள் பப்ளிஷ் செய்திருக்கிறேன். 

  1. சுஜாதாவைப் பற்றி சுஜாதா
  2. கதைகள் பத்து
  3. சிந்தனை செய்யாதே மனமே  
என் புத்தகங்களைப் படித்த அனைவருக்கும் என் நன்றி.  மிக முக்கியமாக ஐந்து ஸ்டார் கொடுத்தவர்களுக்கு  நன்றி 😊 ஒரு ஸ்டார் கொடுத்தவருக்கும் நன்றி 😊 என் புத்தகத்தைப் படித்தாரல்லவா....அதற்கு நான் நன்றி கடமைப் பட்டிருக்கிறேன்.  

என் புத்தகதைப் படிக்கப் பெற்றதால், ஊக்குவிக்கப் பெற்று, மற்றும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறேன்.  புத்தகத்தின் பெயர் "ராமா, கிருஷ்ணா, விட்டலா"

வழக்கம் போல் Whatsappல் ஒரு forward message படிக்க நேர்ந்தது.  வழக்கம் போல் படித்ததும் உடனே மறந்து விட்டேன்.  ஆனால் சிறிது நாட்களுக்கு பிறகு அந்த forward message மீண்டும் என் நினைவில் வந்தது.  அந்த messageஇல் குறிப்பிட்டிருந்த மிக உயர்ந்த மனிதர்களைப் பற்றி internerஇல் தேடினேன்,  தேடியதன் விளைவு இந்த புத்தகம்.

Whatsappஇனால் ஒரு புத்தகம் வெளியிடுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.   Whatsappஇன் பயனை கண்டு கொண்டேன்.  Whatsappஇல் நேரம் செலவழித்தால் என் புகுந்த வீடும் பிறந்த் வீடும் சிறப்பாய் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்😇  நன்றி. வணக்கம். 








மனைவி அமைவதெல்லாம்




 காசி மாநகரத்தின்  சாலையில் அந்த இளைஞன் வேக வேகமாய் நடந்து கொண்டிருந்தான்.  காசி மாநகரத்திற்கு உள்ளே வருவோரும், காசி மாநகரத்தை விட்டு வெளியே செல்வோரும் உபயோகிக்கும் சாலை ஆதலால்,வருவோரும் போவோருமாக அந்த சாலை  பரபரப்புடன் இருந்தது.  அந்த இளைஞன் அண்ணாந்து சூரியனைப் பார்த்தான்.  சூரியன்  மேற்கு திக்கை  நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.  இருட்டுவதற்குள் ஊர் போய் சேர வேண்டும் என்று நினைத்தான்.  

(கதை போக்கிற்காக ஸ்மஸ்கிருத உரையாடல்கள், தமிழில்)

 எதிரே நடந்து வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர், "ஐயா..." என்று வெகு மரியாதையுடன் அவனை அழைத்தார். 

அந்த இளைஞன் நடையை நிறுத்தினான்.  முதியவரைப் பார்த்தான்.

"உங்களை விட வயதில் மிகச் சிறியவனான என்னையா ஐயா என்று அழைத்தீர்கள்?'' 

அந்த முதியவர் அந்த இளைஞனைப் பார்த்தார்.   நெற்றியில் சிவப்பு நிறத்தில் பெரிய குங்குமுப் பொட்டு.  அடர்ந்த தலைமுடி  நெற்றியிலிருந்து பின்பக்கம் நோக்கி செனறு, காதில் உள்ள குண்டலங்கள் அருகில் முடிந்தது.  மார்பில் அணிந்திருந்த மேலாடையின் கீழ் முத்து மாலைகள். இடுப்பில் வெள்ளை நிற  கச்சம்.  வலது கையில் ஓலைச் சுருள். முகத்தில் அசாத்திய ஒளி.

"தாங்கள் வயதில் சிறியவரனாலும், உங்கள் முகத்தில் ஒளிரும் சுடர் தாங்கள் கற்றுத் தேர்ந்தவர் என்று சொல்லுகிறது..."

அந்த இளைஞன் தலை குனிந்து வணங்கினான்.

"நாளை இங்கே காசியில் நடைபெறும் வித்வத் சதஸிற்கு எல்லா ஊரிலிருந்து வித்வான்கள் வந்த வண்ணம் இருக்க,  மெத்த படித்தவரான தாங்கள் அந்த சதஸில் கலந்து கொள்ளாமல் , ஊரை விட்டுச் செல்கிறீர்களே?" என்றார் முதியவர்.

" இந்த ஊரில் என் வேலை முடிந்துவிட்டது.  என் மனைவியைக் காண வேண்டும் ஐயா. என் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறேன்"

"மெத்த படித்த ஒருவர் சதஸில் கலந்து கொள்ளாமல் மனைவியை காண விரைகிறார் என்றால், மனைவியின் மீது..." என்று நிறுத்தினார் முதியவர்.

இளைஞன் சிரித்தான்.

"ஒன்றும் தெரியாத முட்டாளை இருந்த என் மேல் கோபம் கொண்டாள். அவள் கோபத்திலிருந்து தப்பிக்க   இறையிடம் தஞ்சம் புகுந்தேன்.  ஞானம் பெற்றேன்.  அவள் என் மீது கோபம் கொள்ள வில்லை என்றால்,  இன்றும் முட்டாளய் தான் இருந்திருப்பேன். அவளிடம் சென்று நான் கற்ற அனைத்தையும்  கூற வேண்டும்.  இருள் சூழ்வதற்கு முன் என் ஊரை அடைய வேண்டும்.  மற்றொரு சந்தர்ப்பம் தாங்களைக் காண நேர்ந்தால், மகிழ்வேன்."

கைகுவித்து தலை வணங்கிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் நடையைத் தொடர்ந்தான்.

இருள் மெல்ல கவிந்து நட்சத்திரங்கள் கண்ணிற்கு புலப்படும் நேரம், அந்த இளைஞன் தன் வீட்டை அடைந்தான்.  கதவு மூடியிருக்க, கைகளால் மெல்ல கதவைத் தட்டினான்.

"யார் அது?"  என்று பெண் குரல் வந்தது.

வெகு நாட்களுக்கு பிறகு தன் மனைவியின் குரல் கேட்டு அந்த இளைஞன் மகிழ்ந்தான்.

"தேவி, கதவை திற," என்றான்.

கணவரின் குரலை அடையாளம் கண்டு கொண்டாள் அந்த பெண்.   ஒரு ஓட்டகத்தின் பெயரைக் கூட ஒழுங்காய் சொல்லத் தெரியாத தன் கணவனா , "தேவி கதவை திற" என்று கூறுகிறார் என்று வியந்து போனாள்.   கதவை திறக்க நினைத்தாள்.  பின் மாற்றிக் கொண்டாள்.  இவருக்கு வேறு ஏதாவது தெரியுமா என்று சோதிக்க்  நினைத்தாள்.   கதவிற்கு பின்னால் நின்றுகொண்டு " இப்பொழுது ஏதேனும் விசேஷமாய் கற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டாள்

(அவள் கேட்டது ஸமஸ்கிருதத்தில் , "அஸ்தி கஸ்சித் வாக்விசேஷ?" என்று வரும்.)

அஸ்தி, கஸ்சித், வாக்விசேஷ என்று அவள் கூறிய மூன்று வார்த்தைகள் அவனுள் புகுந்து ஏதோ செய்தன.   கண்களை மூடிக் கொண்டான்.  இரண்டு நொடிப் பொழுதுகள் யோசித்தான்.  மெல்ல கண்ணை திறந்தான்.  

மனைவி கூறிய முதல் வார்த்தை, அஸ்தி.  அந்த வார்த்தையை உபயோகித்து "அஸ்தி உத்தரஸ்யாம் திஷி..." என்று தொடங்கி முருகப் பெருமான் பிறந்த கதையை காவியமாக பாடினான்.  அது பின்னர் "குமாரசம்பவம்" என்று புகழ்ப்பெற்றது.

மனைவி கூறிய இரண்டாவது வார்த்தை, கஸ்சித்.  "கஸ்சித் காந்தா நியாயம்..."  என்று தொடங்கி ஒரு யக்‌ஷன் தன் மனைவிக்காக மேகத்தை தூது விட்டதை பற்றி பாடினான் .  அது "மேகதூதம்" என்று பெருமை பெற்று விளங்கியது.

மனைவி கூறிய மூன்றாவது வார்த்தை, வாக்விசேஷ.  அதில் வாக் என்ற முதல் இரண்டு வார்த்தையை எடுத்துக் கொண்டு , " வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தெள..." என்று  சிவ-சக்தியை வணங்கிவிட்டு, ராமர் பிறந்த சூரிய வம்சத்தை காவியமாக பாடினான் அது "ரகுவம்சம்" என்று புகழ்ப்பெற்றது.

காசி மா நகரத்தின் வீதிகளில் வேக வேகமாய் நடந்த இளைஞன் காளிதாசன்.