மனைவி அமைவதெல்லாம்




 காசி மாநகரத்தின்  சாலையில் அந்த இளைஞன் வேக வேகமாய் நடந்து கொண்டிருந்தான்.  காசி மாநகரத்திற்கு உள்ளே வருவோரும், காசி மாநகரத்தை விட்டு வெளியே செல்வோரும் உபயோகிக்கும் சாலை ஆதலால்,வருவோரும் போவோருமாக அந்த சாலை  பரபரப்புடன் இருந்தது.  அந்த இளைஞன் அண்ணாந்து சூரியனைப் பார்த்தான்.  சூரியன்  மேற்கு திக்கை  நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.  இருட்டுவதற்குள் ஊர் போய் சேர வேண்டும் என்று நினைத்தான்.  

(கதை போக்கிற்காக ஸ்மஸ்கிருத உரையாடல்கள், தமிழில்)

 எதிரே நடந்து வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர், "ஐயா..." என்று வெகு மரியாதையுடன் அவனை அழைத்தார். 

அந்த இளைஞன் நடையை நிறுத்தினான்.  முதியவரைப் பார்த்தான்.

"உங்களை விட வயதில் மிகச் சிறியவனான என்னையா ஐயா என்று அழைத்தீர்கள்?'' 

அந்த முதியவர் அந்த இளைஞனைப் பார்த்தார்.   நெற்றியில் சிவப்பு நிறத்தில் பெரிய குங்குமுப் பொட்டு.  அடர்ந்த தலைமுடி  நெற்றியிலிருந்து பின்பக்கம் நோக்கி செனறு, காதில் உள்ள குண்டலங்கள் அருகில் முடிந்தது.  மார்பில் அணிந்திருந்த மேலாடையின் கீழ் முத்து மாலைகள். இடுப்பில் வெள்ளை நிற  கச்சம்.  வலது கையில் ஓலைச் சுருள். முகத்தில் அசாத்திய ஒளி.

"தாங்கள் வயதில் சிறியவரனாலும், உங்கள் முகத்தில் ஒளிரும் சுடர் தாங்கள் கற்றுத் தேர்ந்தவர் என்று சொல்லுகிறது..."

அந்த இளைஞன் தலை குனிந்து வணங்கினான்.

"நாளை இங்கே காசியில் நடைபெறும் வித்வத் சதஸிற்கு எல்லா ஊரிலிருந்து வித்வான்கள் வந்த வண்ணம் இருக்க,  மெத்த படித்தவரான தாங்கள் அந்த சதஸில் கலந்து கொள்ளாமல் , ஊரை விட்டுச் செல்கிறீர்களே?" என்றார் முதியவர்.

" இந்த ஊரில் என் வேலை முடிந்துவிட்டது.  என் மனைவியைக் காண வேண்டும் ஐயா. என் ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறேன்"

"மெத்த படித்த ஒருவர் சதஸில் கலந்து கொள்ளாமல் மனைவியை காண விரைகிறார் என்றால், மனைவியின் மீது..." என்று நிறுத்தினார் முதியவர்.

இளைஞன் சிரித்தான்.

"ஒன்றும் தெரியாத முட்டாளை இருந்த என் மேல் கோபம் கொண்டாள். அவள் கோபத்திலிருந்து தப்பிக்க   இறையிடம் தஞ்சம் புகுந்தேன்.  ஞானம் பெற்றேன்.  அவள் என் மீது கோபம் கொள்ள வில்லை என்றால்,  இன்றும் முட்டாளய் தான் இருந்திருப்பேன். அவளிடம் சென்று நான் கற்ற அனைத்தையும்  கூற வேண்டும்.  இருள் சூழ்வதற்கு முன் என் ஊரை அடைய வேண்டும்.  மற்றொரு சந்தர்ப்பம் தாங்களைக் காண நேர்ந்தால், மகிழ்வேன்."

கைகுவித்து தலை வணங்கிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் நடையைத் தொடர்ந்தான்.

இருள் மெல்ல கவிந்து நட்சத்திரங்கள் கண்ணிற்கு புலப்படும் நேரம், அந்த இளைஞன் தன் வீட்டை அடைந்தான்.  கதவு மூடியிருக்க, கைகளால் மெல்ல கதவைத் தட்டினான்.

"யார் அது?"  என்று பெண் குரல் வந்தது.

வெகு நாட்களுக்கு பிறகு தன் மனைவியின் குரல் கேட்டு அந்த இளைஞன் மகிழ்ந்தான்.

"தேவி, கதவை திற," என்றான்.

கணவரின் குரலை அடையாளம் கண்டு கொண்டாள் அந்த பெண்.   ஒரு ஓட்டகத்தின் பெயரைக் கூட ஒழுங்காய் சொல்லத் தெரியாத தன் கணவனா , "தேவி கதவை திற" என்று கூறுகிறார் என்று வியந்து போனாள்.   கதவை திறக்க நினைத்தாள்.  பின் மாற்றிக் கொண்டாள்.  இவருக்கு வேறு ஏதாவது தெரியுமா என்று சோதிக்க்  நினைத்தாள்.   கதவிற்கு பின்னால் நின்றுகொண்டு " இப்பொழுது ஏதேனும் விசேஷமாய் கற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டாள்

(அவள் கேட்டது ஸமஸ்கிருதத்தில் , "அஸ்தி கஸ்சித் வாக்விசேஷ?" என்று வரும்.)

அஸ்தி, கஸ்சித், வாக்விசேஷ என்று அவள் கூறிய மூன்று வார்த்தைகள் அவனுள் புகுந்து ஏதோ செய்தன.   கண்களை மூடிக் கொண்டான்.  இரண்டு நொடிப் பொழுதுகள் யோசித்தான்.  மெல்ல கண்ணை திறந்தான்.  

மனைவி கூறிய முதல் வார்த்தை, அஸ்தி.  அந்த வார்த்தையை உபயோகித்து "அஸ்தி உத்தரஸ்யாம் திஷி..." என்று தொடங்கி முருகப் பெருமான் பிறந்த கதையை காவியமாக பாடினான்.  அது பின்னர் "குமாரசம்பவம்" என்று புகழ்ப்பெற்றது.

மனைவி கூறிய இரண்டாவது வார்த்தை, கஸ்சித்.  "கஸ்சித் காந்தா நியாயம்..."  என்று தொடங்கி ஒரு யக்‌ஷன் தன் மனைவிக்காக மேகத்தை தூது விட்டதை பற்றி பாடினான் .  அது "மேகதூதம்" என்று பெருமை பெற்று விளங்கியது.

மனைவி கூறிய மூன்றாவது வார்த்தை, வாக்விசேஷ.  அதில் வாக் என்ற முதல் இரண்டு வார்த்தையை எடுத்துக் கொண்டு , " வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தெள..." என்று  சிவ-சக்தியை வணங்கிவிட்டு, ராமர் பிறந்த சூரிய வம்சத்தை காவியமாக பாடினான் அது "ரகுவம்சம்" என்று புகழ்ப்பெற்றது.

காசி மா நகரத்தின் வீதிகளில் வேக வேகமாய் நடந்த இளைஞன் காளிதாசன்.


No comments:

Post a Comment