
என்ன மனம் இது? எழுத்தாளார் பாலகுமாரன் மறைந்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது....இன்னும் மனம் நிலைக்கு வரவில்லை. ஏதோ ஒரு வேதனை உள்ளே சுழன்று கொண்டிருக்கிறது. திடீர், திடீரென்று கண்கள் குளமாகிறது. இதெல்லாம் மிகையான நடிப்போ, இந்த சோகத்தையும், நடிப்பையும் விட்டு வெளியே வரவெண்டுமென்று நினைத்து வாட்ஸப்பிலோ, facebook லேயோ ஏதாவது ஹாஸ்யத்துடன் எழுதினால் "அவர் போய் இன்னும் பதிமுணு நாள் ஆகலை....அதுக்குள்ள உனக்கு என்ன சிரிப்பு வேண்டிருக்கு," என்று உள்ளே ஒரு குரல் கேட்கிறது. பதிமூன்று நாட்கள் துக்கம் காக்கும் அளவுக்கு எனக்கும் அவருக்கும் ஒன்றும் பெரிய தொடர்பில்லை. சொல்லப் போனால் சுஜாதாவின் பழைய நாவல்களைத் தேடி தேடி படிக்கும் நான், பாலகுமாரன் அவர்களின் அந்தக் கால நாவல்களை....எந்த நாவல்களினால் அவர் புகழ்ப் பெற்றாரோ அந்த நாவல்கள் கைகளில் கிடைத்தாலும் படிக்க மாட்டேன். அந்த புகழ்ப் பெற்ற நாவல்கள் நான் பள்ளி செல்லும் காலங்களில் விகடனிலும் , குமுதத்திலும் வெளிவந்த தொடர்கதைகள். பள்ளி செல்லும் காலங்களில் பாலகுமாரன் கதைகள் படிப்பதற்கு வீட்டில் தடையாதலால் அந்த கதைகள் (மெர்க்குரி பூக்கள், கரையோர முதலைகள், அகல்யா, பயணிகள் கவனிக்கவும்....மற்றும் பல) எல்லாம் படித்ததில்லை. ஒரு வழியாக எதுவும் படிக்கும் வயதிற்கு வந்தபோது அவர் ஆன்மிகத்திற்குள் வந்துவிட்டார். அவரைப் பற்றிக் கொண்டது அப்பொழுது தான். எங்கோ தூரத்தில் இருந்த இராமனுஜரை, "காதல் அரங்கம்" என்ற நாவலின் மூலம் என் பக்கத்தில் முதலில் கொண்டு வந்தது பாலகுமாரன் அவர்கள் தான். அதே போல் கடவுளை விட குரு என்பவர் தான் மிக முக்கியம் என்று உணர்ந்ததும் அவர் எழுத்துக்களால் தான். எல்லாவற்றையும் விட உடல் வேறு ஆத்மா வேறு என்று தெள்ளத் தெளிவாய் உணர்த்தியவரும் பாலகுமாரன் அவர்கள் தான். கடவுளைப் பற்றி பேசும் உபன்யாசங்கள் "தியரி" போல் என்றால், பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்கள் "ப்ராக்டிக்கலஸ்" போல். கண் முன்னே கொண்டு வந்து இப்படி தான் செய்ய வேண்டும் என்று காட்டிக் கொடுத்துவிடும். இவ்வாறு அழகாய் கற்றுக் கொடுத்தது எல்லாம் பல சமயங்களில் மறந்து போய் அவர் மேல் அவ்வப்பொழுது கோபம் வரும். "வத்தக் குழம்பு" சாப்பிடாதே என்பார் facebookஇல்.." நம்மள வத்தக் குழம்பு சாப்டாதனு சொல்றதுக்கு இவர் யாரு...இவரை follow பண்ணுவதை நிறுத்திக் கொள்வோம்" என்று நிறுத்திவிட்டு....அடுத்த நாள் அவர் பக்கத்தைச் சென்று பார்த்தால்
"
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே"
என்ற ஆழ்வாரின் பாடலை statusஆக போட்டிருப்பார். அடடா...மனம் பொங்கும். மீண்டும் follow.....சில நாட்கள் கழித்து "சினிமா பாடல்களோ, கர்னாடக பாடல்களோ எதை கேட்டாலும் மனம் பிசகும். ஆதலால் பாடல்கள் கேட்காமல் இருப்பது உத்தமம்" என்றிருப்பார். "பாட்டு கேக்காம இருக்க முடியுமா...இவருக்கு வேற வேலை இல்லை..." என்று மீண்டும் unfollow. இரண்டொரு நாட்களில் அவர் பக்கத்தைச் சென்று பார்த்தால் "தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்...." என்ற ஆழ்வார் பாடல் ஸ்டேட்டசாக....மீண்டும் follow. உண்மையில் இப்பொழுது நான் அவரை follow செய்கிறேனா unfollow செய்கிறேனா என்று தெரியாது....ஆனால் தினமும் facebookஐ திறந்துவுடன் அவர் பக்கத்திற்குச் சென்று "இன்று என்ன சொல்லியிருக்கிறார்" என்று பார்ப்பதை பழக்கமாகக் கொண்டுவிட்டேன். அவர் இருந்து போதும் பார்த்தேன். அவர் இல்லாத இன்றும் பார்த்தேன். யோசித்தால் அவர் சொல்வதற்கு இனி மிச்சம் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. கதை, கட்டூரை மட்டும் எழுதாமல், சுவாசப் பயிற்சி, குருவை அடைவது எப்படி, நம்மை நாம் அறிவது எப்படி, கடவுளை கண்டு கொள்வது எப்படி என பல விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரின் யூ ட்யூப் பேச்சுக்களும் இந்த விஷயங்களை தான் சுற்றி சுற்றி வருகின்றன. இவற்றையெல்லாம் நம்க்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற தேவையே இல்லை...இருந்தாலும் நமக்காக படாத பாடு பட்டிருக்கிறார். இனி இது போல் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை. பாலகுமாரன் அவர்களோடு எழுத்தின் ஒரு பெரிய அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி யாரருடைய எழுத்துக்களைப் படிப்பது என்று தாபம் ஒரு பக்கம் இருந்தாலும்....எழுத்தாளருக்கும் மேல் வேறு ஏது ஒன்றாக அவர் இருந்திருக்கிறார். அதனால் தான் வேதனை சுழன்று கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment