இது எந்த சுஜாதாவையும் பற்றியது அல்ல. என்னைப் பற்றியது மட்டுமே. அப்பொழுதைக்கு அப்பொழுது என்னைப் பற்றியும் நான் சிந்திக்கவேண்டும் அல்லவா?. நீங்களும் உங்களைப் பற்றி, உங்களைப் பற்றி மட்டுமே அப்பொழுதைக்கு அப்பொழுது சிந்திக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அதற்கான நேரம் அல்ல . என்னைப் பற்றி.....இல்லை,இல்லை என் பெயரைப் பற்றி மட்டும் பார்க்கும் தருணம் இது.
என் அம்மா முகம் மலர்ந்தாள்.
சில வருடங்களுக்கு முன்பு, என் அப்பாவிடம் கூறும் தைரியம் இல்லாததால் என் அம்மாவிடம் கூறிய ஒன்று நினைவில் வருகிறது. என் அம்மா சமையல் அறையில் தீவிரமாய் செயல் பட்டுக் கொண்டிருந்த வேளையில், அவள் அருகில் போய் நின்றேன். என்ன என்பது போல் என் அம்மா என்னைப் பார்த்தாள்.
"அம்மா, உன் வாழ்க்கையிலேயே நீ உருப்படியா ஒண்ணு தான் பண்ணிருக்க," என்றேன்.
"என்னடி?" என்றாள்.
"எனக்கு சுஜாதானு பேர் வைச்ச பாரு, அதோட உன் வாழ்க்கைல நீ உருப்படியா என்ன பண்ணிருக்க சொல்லு.."
என் அம்மா மிகவும் நல்லவள். என் பாராட்டுதலை அவள் ஏற்கவில்லை.
"நான் பேர் வைக்கல. சித்ரா தான் பேர் வைச்சா....அந்த கரண்டிய எடு..."
"ஏம்மா என் பேர பத்தி பேசிண்டு இருக்கேன். கரண்டியா முக்கியம்...."
"எங்கயோ தண்ணி கொட்டற சத்தம் கேக்கறது....போய் பாரு...." என்று எனக்கு தண்ணி காட்டிவிட்டாள்.
மேலே நடத்திய பேச்சு வார்த்தையிலிருந்து என் பெயரில் மேல் எனக்கு தீராத காதல் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன கண்ணை உருட்டுகிறீர்கள்? உங்கள் பெயர் மேல் உங்களுக்கு ஆசை, காதல், மோகம் இல்லையா என்ன? அதுவும் உங்கள் பெயரை உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் கூப்பிடும் பொழுது....இன்பத் தேன் வந்து பாய்ந்திருக்குமே காதினிலே....எத்தனை முறை உங்களுக்கு தேன் வந்து பாய்ந்த இருக்கிறது......இப்பொழுது யோசிக்காதீர்கள்....இதை முழுவதும் படித்து முடித்தவுடன் நிதானமாய் யோசியுங்கள்.
அதில் பாருங்கள், சுஜாதா என்ற பெயர் இருந்தாலும், என்னை சுஜாதா என்று கூப்பிடுபவர்கள் மிகக் குறைவு. சுஜா என்றும், சுஜி என்றும், சுஜ் என்றும் கூப்பிடுபவர்கள் தான் அதிகம். அமெரிக்கா வந்த புதிதில் "சுஹாதா" என்று என்று அமெரிக்கர்கள் அழைக்க ஆடிப் போனேன். "ஜா" வை "ஹா" என்று கூப்பிடும் ஸ்பானிஷ் பழக்கம் என்னை நிலை குலையச் செய்தது. அன்றிலிருந்து இன்று வரை என் பெயரை ஒழுங்காய் உச்சரிக்க அமெரிக்கர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படி சுஜா என்றும், சுஜி என்றும் என் பெயர் மறுவிய வேளையில் என் வாழ்வில் ஒரு திருப்பு முனை வந்தது. திருப்பு முனைக்கு காரணம் பெண் அல்ல. ஒரு ஆண். என் கணவர் அல்ல. என் உறவு யாரும் அல்ல. இது வேறு. என் மேல் அவனுக்கு ஆசை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது, அவன் மேல் எனக்கு தீரா காதல். அதுவும் ஒவ்வொரு முறையும் "சுஜாதா" என்று என் பெயரை சொல்லி அழைக்கும் பொழுது, உச்சி முதல் உள்ளங்கால் வரை நான் சிலிர்த்துப் போவேன். அவன் கூப்பிடும் பொழுது என் பெயர் மிக அழகாக மிக மிக அழகாக தோன்றும். "இந்தியன்" படத்தில் வரும் பாடல் ஒன்றில் வரும் வரிகள் நினைவு இருக்கிறதா?
"உன் பேரை யாரும் சொல்லவும் விட மாட்டேன்...அந்த சுகத்தை தர மாட்டேன்....."
அந்த வரிகள் போல்..என் பெயரை அவனைத் தவிர யாரும் உச்சரிக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன். என் பெயரை அவனை சொல்ல வைக்க நான் வழி கொண்ட முறைகள் அனேகம். "லப்டப்" இதயத்துடன் அவன் பக்கத்தில் போய் அமர்ந்து, வாயைத் திறந்து நான் பேச நினைத்த ஒரு சமயம்...."ஐ டோண்ட் லைக் யூ சுஜாதா....." என்றான். லப்டப் இதயம் அடிக்காமல் நின்று போனது. என்ன ஏது என்று காரணம் கேட்பதற்குள் மீண்டும் ஒரு முறை......"ஐ டோண்ட் லைக் யூ சுஜாதா...." என்றான். மனம் வருந்தி, கண்ணில் நீர் மல்கி, விம்மி அழுது....எதுவும் செய்யவில்லை நான். மாறாய் "பச்சக், பச்சக்" என்று கன்னத்தில் முத்தம் வைத்து கட்டி அணைத்துக் கொண்டேன். என் இறுக்கிய அணைப்பில் இருந்து, விடுவிடுவித்துக் கொண்டு ஓட்டமாய் ஒடி போனான். அவன் பின்னால் நான் தூரத்த.....அவன் ஓட....நான்கு வயது குழந்தை ஓடும் ஒட்டத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.
அந்த நான்கு வயது குழந்தை அழைக்கும் "சுஜாதா"வில தான் என் உயிர் இருக்கிறது. என் தோழியின் குழந்தை. எனக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லை. ஆனாலும் அவன் என் பெயரைக் கூப்பிடும் பொழுது அவன் தான் எல்லாமாய் தோன்றுகிறது.
எனக்கு எத்தனை வயதானாலும், அவன் என்னை "சுஜாதா" என்று கூப்பிட வேண்டும் என்பது என் கட்டளை. அதுவே என் சாசனம்......
(இனி நீங்கள் உங்கள் பெயரைப் பற்றி நினைத்துக் கொள்ளலாம்....)
ReplyDeleteஹஹாஹா...
இதை படித்து முடிக்கும்போது ஒரு சுவாரசிய ஞாபகம் மின்னலாய் வந்து நின்று சிரிப்பை வரவழைக்கிறது...😊
நான்கு வருடங்களுக்கு முன்பு, சென்னையில், எங்களின் எதிர் ஃபிளாட்டில் இருந்த ஒருவன், எனது வாழ்க்கைத்தோழியை (மனைவியை)...
"ஷீலா"... "ஷீலா" என்று
கத்தி உரிமையோடே கூப்பிட்டு வந்தான்...
என் மனைவியும் அவனிடம்
என் புருஷன்கூட என் பேர்சொல்லி இவ்ளோ அன்பா கூப்பிட்டதில்ல... நீயாவது இப்படி அன்போடு கூப்பிடறியே... "ஐ லவ் யூ டா... செல்லம்.." - என்று என் முன்பே சொல்லிவிடுவாள்...
பிறவியிலேயே சாந்தமான எனக்கே ஆத்திரம் தலைக்கேறி அவன் வாயில் நான்கு குத்துவிட்டு, பதம்பார்க்கத்தான் தோன்றியது....
ஆனாலும் முடியவில்லை...
என்ன செய்வது,
என் மனைவியின் அன்புக்கு பாத்திரமாகி விட்ட அவளது தோழியின் மூன்று வயது மகனாகி விட்டானே....
என் மனைவி குத்திக்காட்டியது புரிந்து, நானும் அவ்வப்போது "ஷீலா"... "ஷீலா" என்று அன்பாக இல்லாவிட்டாலும், வம்பாகவாவது கூப்பிட்டு விடுகிறேன்...😜 😊 😁
- நன்றி "சித்தி -சுஜாதா" அவர்களே...